TNPSC Thervupettagam

குடியரசாகட்டும் உள்ளாட்சி நிர்வாகங்கள்

August 20 , 2024 146 days 176 0

குடியரசாகட்டும் உள்ளாட்சி நிர்வாகங்கள்

  • மக்கள் நலனில் ஓர் அரசு அக்கறை செலுத்து​கிறதா, மக்களுக்குத் தேவையான திட்டங்​களைக் கொண்டு​வரு​கிறதா என்பதைப் பொறுத்​துதான் அது நல்லாட்சியா இல்லையா என்பதை முடிவுசெய்​கிறோம். ஜனநாயக வழிமுறையில் நமது ஆட்சி​யாளர்​களைத் தீர்மானிக்கும் மக்களின் கைகளில்தான் இதைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பும் இருக்​கிறது.
  • பொறுப்புடன் செயல்​படும்​போதுதான் மக்கள் அதிகாரம் பெற்றவர்களாக மாறுவார்கள். அதன் பிறகு மக்களாட்​சிக்குத் தேவையான ‘பொது​மக்கள் விழிப்பு’ (Public Vigilance) அவர்களுக்கு வந்து​விடும். அப்போது மக்கள் அரசாங்​கத்தைக் கண்காணிப்​பார்கள், சுதந்​திரமாக முடிவெடுப்​பார்கள். அப்போதுதான் நேர்மையான ஆட்சி நடைபெறும். நிர்வாகம் சிறக்​கும்.

மாற்றம் நிகழாதது ஏன்?

  • நம் சமூகத்தை மாற்றிச் செயல்பட வைக்க உருவாக்​கப்​பட்​டதுதான் புதிய உள்ளாட்சி அரசாங்கம். இங்குதான் மக்களை அறிவார்ந்த மேம்பாட்டுச் செயல்​பாடு​களில் பங்கேற்க வைத்து, ஒரு சுயசார்​புமிக்க வாழ்க்கையைக் கட்டமைக்க வாய்ப்​புக்களை உருவாக்​கியது மத்திய அரசு.
  • இவ்வளவு ஆற்றலை​யும், சக்தி​யையும் பெற்ற உள்ளாட்சி அரசாங்​கத்தைக் கடந்த முப்பது ஆண்டு​களில் ஒரு சடங்காகவும் ஒரு சம்பிர​தாய​மாகவும் நடத்த முடிந்ததே தவிர, அடிப்படை மாற்றங்​களைக் கிராம மக்களின் வாழ்க்கையில் கொண்டு​வர​வில்லை என்பதை அரசாங்கமே தன் அறிக்கை​களில் ஒப்புக்​கொள்​கிறது.
  • இதன் காரணத்தை ஆய்ந்து பார்த்தால் ஓர் உண்மை வெளிப்​படும். இவ்வளவு ஆற்றல் பொதிந்த உள்ளாட்சியை மக்கள் பங்கேற்றுத் தங்களின் மேம்பாட்​டுக்குப் பயன்படுத்​திக்​கொள்ளத் தேவையான புரிதலைப் பஞ்சா​யத்துத் தலைவர்​களால் உருவாக்க முடிய​வில்லை.
  • அதற்குக் காரணம் அந்தப் புரிதல் உள்ளாட்சித் தலைவர்​களுக்கு இல்லாமல் இருப்​பது​தான். வாழ்க்கைக்குத் தேவையான அடிப்​படைப் பிரச்​சினை​களைப் பற்றிப் புரிந்​து​கொண்டு, அவற்றைப் பற்றி மக்களிடம் விழிப்பு​ணர்வை ஏற்படுத்தத் தேவையான நிபுணத்து​வத்தை வளர்த்​துக்​கொண்டு மக்களுடன் இணைந்து செயல்​படும் ஒரு பொறுப்பு​மிக்க தலைமை தேவை.
  • இந்தியக் கிராமங்​களைப் புனரமைத்து அவை ஒவ்வொன்​றையும் ஒரு குட்டிக் குடியரசாக உருவாக்க வேண்டு​மென்​றால், அது அந்தந்தக் கிராமத்து மக்களால் மட்டுமே முடியும். அத்துடன் மத்திய, மாநில அரசுகளால் தொட முடியாத மக்கள் குழுக்​களைத் தொட்டு அவர்களின் மேம்பாட்​டுக்​காகச் செயல்பட வேண்டியதே இந்தப் புதிய பஞ்சா​யத்து அரசாங்கத்தின் அடிப்​படைப் பணி.
  • இந்த அரசாங்கம் விளிம்​புநிலை மக்களை அதிகாரமிக்​கவர்களாக இந்த அரசாங்​கத்​துக்குள் கொண்டு​வரு​கிறது. பெண்களுக்​கும், ஒடுக்​கப்​பட்​ட​வர்​களுக்கும் எல்லாப் பதவிகளிலும் இடஒதுக்கீடு வழங்க இது வகைசெய்​கிறது. இவர்கள் இந்த அரசாங்க அமைப்​புக்குள் பொறுப்​பாளர்களாக வரும்போது பெண்களும், ஒடுக்​கப்​பட்​ட​வர்​களும் சந்தித்துவந்த பிரச்​சினைகள் தீர்க்​கப்பட வாய்ப்பு உருவாகிறது.

பஞ்சா​யத்துத் தலைவரின் கடமைகள்:

  • குறிப்பாக, ஒவ்வொரு கிராமப் பஞ்சா​யத்தும் தங்களின் மேம்பாட்​டுக்கான ஒரு கனவுத் திட்டத்தை மக்கள் பங்கேற்போடு உருவாக்க வேண்டும் என்பதை அரசமைப்புச் சட்டம் வலியுறுத்​தி​யுள்ளது. கிராம மேம்பாட்டுப் பணிகளில் மக்களைப் பொறுப்​பெடுக்க வைக்கத் தயார் செய்யும் பணியில் தேவையான விழிப்பு​ணர்​வையும் அறிவையும் மக்களிடம் அந்தத் தலைவர் உருவாக்கு​வார்.
  • அரசு தரும் பணத்துக்காக அவர் காத்திருக்க மாட்டார். அரசு தரும் பணத்தைச் செலவழிப்​பதைப் பணியாகப் பார்க்க மாட்டார். மக்கள் பயனாளி​யாகத் தங்களைப் பாவிக்​காமல் கிராம மேம்பாட்டில் பங்காளி​யாக​வும், பங்கு​தா​ரராகவும் பொறுப்​பெடுக்கும் மனநிலை​யுடன் செயல்படத் தேவையான மனோபாவத்தையே அவர் உருவாக்கு​வார். மக்கள் தங்கள் தலைவி​தியைத் தாங்களே தீர்மானித்​துக்​கொள்ளும் மனநிலை​யையும் உருவாக்கு​வார்.
  • கிராமசபையை ஒரு சடங்காக நடத்தாமல் அதை ஒரு விவாத ஜனநாயகத்தை முன்னெடுக்கும் மாமன்றமாக மாற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து, நம் மக்களாட்சி பங்கேற்பு மக்களாட்சி என்ற மாற்றத்தைக் கொண்டு​வரு​வார். அரசமைப்புச் சட்டம் வலியுறுத்திய மக்கள் பங்கேற்பு கிராமத் திட்டத்தை அறிவியல்​பூர்வமாக உருவாக்க மக்களிடம் ஒரு விழிப்பு​ணர்​வையும் பார்வையையும் உருவாக்கி ஒரு உன்னத கிராமத் திட்டத்தை உருவாக்கு​வார். மாநில அரசுகளின் 17 துறைகளையும் அதை நிறைவேற்றச் செய்திடு​வார்.
  • இந்தத் திட்ட​மிடு​தலுக்கான புள்ளி​விவரங்​களைச் சேகரிக்க அருகில் உள்ள உயர் கல்வி நிறுவனத்தை அணுகி, மத்திய அரசாங்​கத்தின் உயர் கல்வி நிறுவனத்​துக்கு உருவாக்​கப்பட்ட ‘உன்னத் பாரத்’ திட்டத்தை நடைமுறைப்​படுத்தத் தேவையான புரிந்​துணர்வு ஒப்பந்​தத்தை உருவாக்கிச் செயல்பட வைப்பார்.
  • அப்படிப் புள்ளி​விவரம் சேகரிக்​கும்போது கிராமத்தில் வசிக்கும் குடும்​பங்​களின் பொருளாதார நிலை, கிராமத்தில் உள்ள வளங்கள், கட்டமைப்பு வசதிகள் ஆகிய அனைத்​தையும் சேகரித்து அந்தக் கிராமம் பொருளாதார வளர்ச்​சி​யில், குடும்ப மேம்பாட்டில் எந்த நிலையில் உள்ளது என்பதை மக்களுக்குப் படம்பிடித்துக் காட்டு​வார்.
  • அதன் மூலம், உன்னத மாதிரிக் கிராமத்தை உருவாக்க மக்களிடம் கருத்​தரங்கம் நடத்திக் கருத்து​களை​யும், தேவைகளையும் சேகரித்து அவர்​களுடன் ஒருங்​கிணைத்து ஐந்தாண்​டுக்கான செயல் திட்டத்தை உருவாக்கு​வார். அதற்குக் கிராமசபையில் மக்களின் ஒப்பு​தலைப் பெற்று ஒரு சட்டபூர்வமான திட்டத்தை உருவாக்கு​வார்.

வழிகாட்டும் தலைமை:

  • இந்தத் திட்டம் வெறும் கட்டிடங்​களை​யும், சாலைகளையும் உருவாக்கும் திட்டமாக மட்டுமல்லாது, பொருளாதார மேம்பாட்​டுக்​கும், சமூக மேம்பாட்​டுக்​கும், இயற்கை வள மேம்பாட்​டுக்​கும், சமூக நீதிக்​கும், வறுமை ஒழிப்​புக்கும் வழிவகுப்பதாக இருக்​கும். இந்தப் பணிகளை அவர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த வார்டு உறுப்​பினர்கள், நிலைக்குழு உறுப்​பினர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்தச் சமூகக் குழுக்​களும் இணைந்து மக்களுடன் கைகோத்து ஒரு கோயில் தேரை இழுப்​பதுபோல் செய்து​காட்டு​வார்கள்.
  • ஒரு குட்டிக் குடியரசை ஒவ்வொரு பஞ்சா​யத்​திலும் உருவாக்கக் கிராம மேம்பாட்​டுக்கான புத்தகங்களை வாசித்து, அதை எப்படிச் சட்டப்படி நடத்துவது என்பதைப் புரிந்​து​கொண்டு மக்களுக்கு வழிகாட்டக் குழுவாகச் செயல்பட ஆரம்பித்​தால், மக்களுக்கு வழிகாட்டும் தலைமையாக மாற முடியும். அதுதான் இன்று நமக்குத் தேவை. அந்தத் தலை​மைதான் ​மாற்றுத் தலைமை. அது​தான் இன்​றைக்​குத் தேவையான வழி​காட்​டும் தலைமை.

நன்றி: இந்து தமிழ் திசை (20 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories