TNPSC Thervupettagam

குடியுரிமைச் சட்டத் திருத்தம்: ஏன் இந்த அச்சம்?

December 23 , 2019 1851 days 1480 0
  • குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரானவர்களை ‘அவர்களின் ஆடைகளே அடையாளம் காட்டிவிடும்’ என்று தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி. அதற்கு அடுத்த நாளே, ‘இந்தியர்கள் யாரும் இந்தச் சட்டத்துக்காக வருத்தப்படுவதற்கு எதுவுமில்லை’ என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார்.
  • இந்தியர்கள், குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைப் பற்றி பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று அரசாங்கம் கூறுவதைக் கவனமாகப் பரிசீலிக்காமல் அப்படியே புறந்தள்ளுவது சரியானது அல்ல. இந்தச் சட்டத் திருத்தத்தைப் பற்றிய விமர்சனங்களும்கூட அது குடியுரிமைக்கான அனுகூலங்களை அளிக்கிறது என்பதை மறுக்க முடியாது.
  • இச்சட்டத் திருத்தம் யாரிடமிருந்தும் எந்த உரிமையையும் பறிக்கவில்லை; ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசத்தில் தொடர்ந்து தொந்தரவுகளுக்கு ஆளாகிவரும் மதச் சிறுபான்மையினர் குடியுரிமையைப் பெறுவதற்கான சலுகைகளையே அளிக்கிறது.
  • ஆனால், நிச்சயமாக இந்தச் சட்டத் திருத்தம் அவ்வாறான சலுகையை மேற்கண்ட நாடுகளில் தொந்தரவுக்கு ஆளாகிவரும் அஹமதியாக்கள் அல்லது ஷியாக்களுக்கு அளிக்கவில்லை. தொந்தரவுகளை அனுபவிக்கும் இந்தியர் அல்லாதவர்களில் முஸ்லிம்கள் மீது மட்டுமே பாகுபாடு காட்டப்பட்டிருக்கிறது.
  • இவ்விஷயத்தில் இந்தியர்கள் அல்லது இந்திய முஸ்லிம்களுக்கு என்ன தொடர்பு இருக்கிறது? உள் துறை அமைச்சர் அமித் ஷா பல தடவை சுட்டிக்காட்டியிருப்பதுபோல, குடியுரிமைச் சட்டத் திருத்தத்தில் முஸ்லிம்களைப் பற்றி குறிப்பிடப்படவே இல்லை. அப்படியிருக்கும்போது இந்தச் சட்டத் திருத்தம் இந்திய முஸ்லிம்களைக் குறிவைத்து இயற்றப்பட்டதாக ஏன் சொல்ல வேண்டும்?

குடிமக்கள் பதிவேட்டுக்காகவே திருத்தம்

  • இதற்கான பதிலுக்கு, உள் துறை அமைச்சரின் பதில்களைத் தாண்டி நாம் வேறு எதையும் பார்க்க வேண்டியதில்லை. அமித் ஷா தொடர்ந்து இரண்டு விஷயங்களை அழுத்தம் கொடுத்துப் பேசிவருகிறார். ஒன்று, அஸ்ஸாமில் மேற்கொள்ளப்பட்டுவரும் தேசிய குடிமக்கள் பதிவேட்டு நடைமுறையை இந்தியக் குடிமக்களுக்கான தேசியப் பதிவேடு என்ற பெயரில் நாடு முழுவதற்கும் அவர் விரிவுபடுத்தப்போகிறார்.
  • இரண்டாவதாக, அது எந்த வரிசையில் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது என்பது முக்கியமானது. அவர் முதலில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தையும், அதன் பிறகு இந்தியக் குடிமக்களுக்கான தேசியப் பதிவேட்டையும் நடைமுறைப்படுத்தப்போகிறார்.
  • சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்ஸிக்கள் அனைவருடைய குடியுரிமையையும் பாதுகாத்து அதை உறுதிப்படுத்தும் பாதுகாப்பு வலையாக இந்தக் குடியுரிமைச் சட்டத் திருத்தம் இருக்கும். அஸ்ஸாமின் தேசிய குடியுரிமைப் பதிவேட்டில் சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் என்று வகைப்படுத்தப்பட்ட லட்சக்கணக்கான இந்துக்கள் மட்டுமின்றி, இந்தியக் குடிமக்களுக்கான தேசியப் பதிவேடு நடைமுறைக்கு வந்தால், நாடு முழுவதும் அந்நியர்கள் என வகைப்படுத்த வாய்ப்புள்ளவர்களுக்கும் அது பாதுகாப்பை அளிக்கும்.
  • அவர்கள் அனைவரது குடியுரிமையும் முதலில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின் வாயிலாகப் பாதுகாக்கப்படும். முஸ்லிம் அல்லாதவர்கள் அனைவருக்கும் குடியுரிமை தொடர்பாகத் தேவைப்படும் ஆவணங்கள் அளிக்கப்படும்.
  • அதன் பிறகே, இந்தியக் குடிமக்களுக்கான தேசியப் பதிவேடு நடைமுறைப்படுத்தப்படும். குடிமக்கள் பதிவேடு தேவையில்லை என்றால், குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எந்தத் தேவையும் இருக்காது.
  • குடிமக்கள் பதிவேட்டின் நோக்கமே இந்தியாவில் வசிப்பவர்களைக் குடிமக்கள் என்றும், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்றும் இரண்டு வகையினராகப் பிரிப்பதுதான்.
  • குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின் நோக்கமோ, குடிமக்கள் பதிவேடு நடைமுறைக்கு வருவதற்கு முன்பே குடியுரிமைச் சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்படாத முஸ்லிம்களைத் தவிர்த்து மற்ற இந்தியர்கள் அனைவரின் குடியுரிமையையும் முன்கூட்டியே பாதுகாப்பதாகும்.

விடுவிப்பின் அச்சுறுத்தல்

  • இது எளிமையான கணக்குதான். குடிமக்கள் பதிவேட்டில் விடுபடலுக்கான வாய்ப்பின் மூலமாக அனைத்து மதப் பிரிவினரையுமே அச்சுறுத்தலின் கீழ் கொண்டுவருதல் (இந்துக்கள், பௌத்தர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள், பார்ஸிக்கள்).
  • அடுத்து, குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின் கீழ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள மதப் பிரிவினரை மட்டும் அதிலிருந்து மேலெடுத்தல் (இந்துக்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள், பார்ஸிக்கள்). கடைசியில், முஸ்லிம்கள் மட்டுமே எஞ்சியிருப்பார்கள்.
  • குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின் வாயிலாக இந்திய அரசின் சட்டபூர்வமான ‘தயாள குண’த்திலிருந்து அவர்கள் மட்டுமே விலக்கி வைக்கப்பட்டிருப்பார்கள். அப்புறம், குடிமக்கள் பதிவேடு என்ற வலையை விரித்தால் போதும், மூச்சுத்திணறிக்கொண்டிருக்கும் மீன்கள் நிறைய அகப்படும்.
  • குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிரான தீவிரப் பேராட்டங்களால் புரியாமல் தவிக்கும் ஒவ்வொரு இந்தியருக்கும் அவர்களது சில எளிய கேள்விகளுக்கு இந்த நாடு பதில் சொல்ல வேண்டியிருக்கிறது: எப்போது என்ன நிகழும்; இந்தியாவில் வசிக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்ஸிக்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோர் குடியுரிமைப் பதிவேட்டிலிருந்து விடுபட்டாலும் அவர்களுக்குக் குடியுரிமைச் சட்டத் திருத்தம் குடியுரிமையைப் பெற்றுத்தந்துவிடும் என்றால் அதற்கு நன்றி சொல்வோம்.
  • முஸ்லிம்கள் மட்டுமே குடியுரிமையற்றவர்களாக எஞ்சுவார்களா? நாடற்ற இந்த மக்கள், தடுப்பு முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்களா அல்லது, முஸ்லிம் அல்லாதவர்கள் முக்கியப் பதவிகளில் அங்கம் வகிக்கும் நாட்டில் அவர்கள் கீழான நிலைக்குத் தள்ளப்படுவார்களா?
  • குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று அரசு அறிவித்தாலும்கூட, இந்தச் சட்டத்தின் மிக முக்கியமான அம்சமே இந்த நாட்டின் சமூக நல்லிணக்கத்துக்கு ஓர் அச்சுறுத்தல்தான்.
  • வெறுப்பைக் கக்கும் பேச்சுகளுக்கு அது மிகப் பெரும் காரணமாக இருக்கிறது. இனப்படுகொலைத் தடுப்பு நடவடிக்கைகளில் உலகின் முன்னணி வல்லுநர்களாக விளங்குபவர்கள், வெறுப்பான பேச்சுகளையே இனப்படுகொலைகளுக்கான முதன்மையான அறிகுறியாகக் கருதுகிறார்கள்.
  • வெறுப்புகளை உண்டாக்கும் பேச்சுகளைத் தடுப்பதற்கான சிறப்பு ஆலோகராக ஐநா பொதுச்செயலாளரிடம் பணியாற்றும் அடாமா டியங், இந்த மாதம் இனப்படுகொலைத் தடுப்பு நாளையொட்டிப் பேசியபோது “யூத இனப்படுகொலைகள் விஷ வாயுக் கூடங்களிலிருந்து தொடங்கவில்லை. வெறுப்பான பேச்சுகளின் வழியே வெகுகாலத்துக்கு முன்பே அது தொடங்கிவிட்டது” என்று கூறியிருக்கிறார்.
  • ஒரு அரசியல் கருவியாக, குடியுரிமைச் சட்டத் திருத்தம் - குடிமக்கள் பதிவேடு இரண்டும் வெறுப்பான பேச்சை, குறிப்பாகத் தேர்தல் நேரத்திலாவது உருவாக்கப் போதுமானவை.
  • ஒரு நிர்வாகக் கருவியாக, இனப்படுகொலைகளுக்கான சூழ்ச்சிகளுக்கு எதிரான அரசமைப்புச் சட்டப் பாதுகாப்புகளை அவை பலவீனப்படுத்தவும் செய்யும்.

விலக்கிவைத்த முன்னுதாரணங்கள்

  • இப்படிக் குடியுரிமையிலிருந்து விலக்கி வைக்கும் சட்டங்கள் இயற்றப்பட்டதற்கும், கடைசியில் அவை எங்கு போய் முடிந்தன என்பதற்கும் ஏகப்பட்ட வரலாற்று முன்னுதாரணங்கள் உண்டு.
  • 1935-ன் ‘ரெய்ச் குடியுரிமைச் சட்டம்’ ஜெர்மானிய யூதர்களின் குடியுரிமையைப் பறித்தது. அதைத் தொடர்ந்து என்ன நடந்தது என்பது எல்லோருக்குமே தெரியும்.
  • மியான்மரில், 1982-ன் ‘குடியுரிமைச் சட்டம்’, அராகன் பிராந்தியத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ரோஹிங்கியா முஸ்லிம்களை நாடற்றவர்களாக ஆக்கியது. சர்வதேச நீதிமன்றத்தின் முன் மியான்மர் இப்போது இனப்படுகொலைக் குற்றச்சாட்டை எதிர்கொண்டிருக்கிறது.
  • இந்திய அரசு, ‘எந்தவொரு இந்தியரும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள்’ என்று அளிக்கும் உத்தரவாதங்கள் வரவேற்கப்பட வேண்டியவை. ஆனால், குடியுரிமைச் சட்டத் திருத்தம் - குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றின் பிரிவுகள், முஸ்லிம்களை ஏதோ ஒருவகையில் இந்தியர்கள் என்பதிலிருந்து தடுத்து வைக்கும் என்ற எண்ணத்தால்தான் அதற்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
  • ஒருவேளை அவர்கள் தங்களது குடியுரிமையை இழந்தால், அரசும் வழக்கம்போலவே எந்தவொரு இந்தியரும் தங்களது குடியுரிமையை இழக்கவில்லை என்றே சொல்லிக்கொண்டிருக்கும். யார் இந்தியர் என்பதையும், யாரெல்லாம் இல்லை என்பதையும் அரசுதானே முடிவுசெய்கிறது!

நன்றி: இந்து தமிழ் திசை (23-12-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories