- இந்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக அரசு நிறைவேற்றியிருக்கும் தீர்மானம் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். அவையில் அதிமுகவினர் இல்லாத சூழலில் பாஜக இதற்குக் கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்ய, ஏனைய கட்சியினர் ஆதரவோடு ஒருமனதாக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
- முன்னதாக, 2019-ல் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்பட்டபோதே நாடாளுமன்றத்தில் திமுக அதைக் கடுமையாக எதிர்த்தது. அப்போதே இந்தச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து அன்றைய அதிமுக அரசானது சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக வலியுறுத்தியது. 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில் இந்தச் சட்டத் திருத்தத்துக்கு எதிரான நிலைப்பாட்டையும் அறிவித்திருந்தது. முன்பு எதிர்க்கட்சியாக இருந்து செய்ய முடியாததை இப்போது ஆளுங்கட்சியாகச் செய்திருக்கிறது.
- தமிழ்நாடு அரசு ஏன் இந்தச் சட்டத் திருத்தத்தை எதிர்க்கிறது என்பதற்கான காரணங்களைத் தெளிவாகத் தன்னுடைய உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரையறுத்திருக்கிறார். “குடியுரிமை என்பது ஒவ்வொரு மனிதனின் சட்டபூர்வ உரிமை. இந்திய நிலப்பரப்புக்குள் தங்கள் இருப்பிடத்தைக் கொண்ட அனைவருக்கும் குடியுரிமை வழங்க வேண்டும்.
- அரசமைப்பின்படி இந்திய நிலப்பரப்புக்குள் எந்த நபருக்கும் சட்டப்படியான சமத்துவம், பாதுகாப்பு அம்சங்களை அரசு மறுக்க முடியாது. 1955 குடியுரிமைச் சட்டப்படி குடியுரிமை பெற மதம் ஒரு அடிப்படையாக இல்லை. ஆனால், தற்போது ஒன்றிய அரசு கொண்டுவந்திருக்கும் சட்டத் திருத்தத்தில் மதம் ஒரு அடிப்படையாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டமானது இந்நாட்டு அரசை மதச்சார்பற்ற அரசு என்கிறது. இதன்படி, மதத்தை அடிப்படையாகக் கொண்டு எந்தச் சட்டத்தையும் கொண்டுவர முடியாது. அதனால்தான், இந்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டியுள்ளது.”
- அடிப்படையாக இந்தச் சட்டம் ஏன் எதிர்க்கப்பட வேண்டியது என்பதைக் குறிப்பிடுவதோடு மதத்தை அன்றி, பிராந்திய அடிப்படையிலும் இந்தச் சட்டத்தின் பாகுபாட்டை முதல்வர் ஸ்டாலின் காட்டியிருக்கிறார். “பாகிஸ்தான், வங்க தேசம், ஆஃப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து 2014 டிசம்பருக்கு முன்பு இந்தியாவுக்குள் புலம்பெயர்ந்து குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்தச் சட்டம் குடியுரிமை வழங்க வழிவகுக்கிறது. முஸ்லிம்கள் இதில் திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டுள்ளனர். அகதிகளாக வருபவர்களை சக மனிதர்களாகப் பார்க்க வேண்டும்.
- மதரீதியிலோ, இனரீதியிலோ, எந்த நாட்டிலிருந்து வருபவர்கள் என்கிறரீதியிலோ அவர்களைப் பிரித்துப் பார்க்கக் கூடாது என்பதுதான் சரியான பார்வையாக இருக்க முடியும். அரசியல்ரீதியான பாகுபாட்டை, சட்டரீதியான பாகுபாடாக உறுதிப்படுத்துவது மிக மிகத் தவறானது. அதிலும் குறிப்பாக, இலங்கைத் தமிழர்கள் இந்தச் சட்டத்தின் மூலம் வஞ்சிக்கப்படுகின்றனர். இலங்கையைச் சேர்ந்தவர்கள் வருவதற்கான தடை அவர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம். இதனாலும் இந்தச் சட்டத்தை எதிர்க்கிறோம்.”
- இந்தியா எனும் கருத்தை, இந்தியா எனும் அமைப்பை ‘பன்மைத்துவம்’ எனும் பண்பாக உள்வாங்கிய எவரும் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்ப்பதற்கான காரணத்தை முதல்வர் ஸ்டாலின் தீர்க்கமாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த உரையிலேயே கூறப்பட்டிருக்கிறபடி குடியுரிமைச் சட்டத் திருத்தமானது இந்தியாவின் அரசமைப்புச் சட்ட அடிப்படைக் கட்டமைப்புக்கே எதிரானது. இணைந்து வாழும் மக்களைப் பிளப்பது. இந்தச் சட்டத் திருத்தம் ரத்துசெய்யப்பட வேண்டும். மேலும், இந்தச் சட்டத்தின் நீட்சியாக, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு தயாரிக்கும் பணியையும், அதன் அடிப்படையில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணியையும் ஒன்றிய அரசு முழுவதுமாகக் கைவிட வேண்டும்.
- தமிழ்நாடு இந்தச் சட்டத் திருத்தத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் ஆறாவது மாநிலமாக அமைந்திருக்கிறது. முன்னதாக கேரளம், பஞ்சாப், வங்கம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இதே போன்ற கோரிக்கையுடன் இந்தச் சட்டத் திருத்தத்துக்கு எதிராகத் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கின்றன.
- மேலும், தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணிக்கு எதிராகவும் பிஹார், ஆந்திர பிரதேசம், ஒடிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் பேசியிருக்கின்றன. இந்த வெளிப்பாடுகளையெல்லாம் இந்திய வரலாற்றில் ஒன்றிய – மாநில உறவில் முக்கியமான அத்தியாயமாகக் காணும் பார்வையை நாம் பெற வேண்டும். குடியுரிமையானது ஒன்றிய அரசின் அதிகாரத்துக்குள் வருவதால் மாநிலங்களுக்கு அதில் தலையிட அதிகாரமோ உரிமையோ இல்லை என்ற பார்வை ஏற்கெனவே உள்ள வரையறைகளின்படி சரியாக இருக்கலாம்; தார்மீகரீதியாக அது பொருத்தமானதாக இருக்க முடியாது.
- குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக ஏராளமான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. இதனிடையே உச்ச நீதிமன்றமானது மாநிலங்கள் இப்படித் தீர்மானம் நிறைவேற்றுவதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், ‘மாநிலங்கள் தங்கள் வரையறைக்கு வெளியே சட்டத்தை நிறைவேற்றிவிடவில்லை. மாறாக, இந்தத் தீர்மானத்தின் வழி தம் பார்வையை, கருத்தைத் தெரிவிக்கின்றன.
- அப்படிக் கூற அவற்றுக்கு உரிமை உண்டு’ என்று கூறியதை அரசியல் தளத்தில் மேலும் விஸ்தரித்து முன்னெடுக்க வேண்டிய கடமை நம்முடைய அரசியலர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் உண்டு. தேவைகள் கண்டுபிடிப்புகளுக்குத் தாயாக மட்டும் இருப்பதில்லை. அவையே புதிய வரையறைகளுக்கான அடிப்படையாகவும் வரலாறு முழுவதும் அமைந்திருக்கின்றன. அமெரிக்க அரசமைப்பில் இப்படித்தான் மாநிலங்களுக்கான உரிமைகள் விஸ்தீரணம் அடைந்தன என்பதை நாம் மறந்திட முடியாது.
- குடியுரிமைச் சட்டத் திருத்தமானது இந்தியாவின் ஒற்றுமைக்குக் கேடு என்பதால் அதைத் திரும்பப் பெற வேண்டும் என்பதைத் தமிழ்நாடு சட்டமன்றம் உரக்கக் கூறும் தருணத்தில் அந்தக் குரலோடு நாமும் இணைந்து உரக்கக் குரல்கொடுக்கிறோம். கூடவே, மாநிலங்களால் ஆன இந்தியா தன்னுடைய குடியுரிமையைத் தீர்மானிப்பதிலும் மாநிலங்களுக்கு இடமளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
நன்றி: அருஞ்சொல் (01 – 10 – 2021)