TNPSC Thervupettagam

குடும்பம் என்பது அன்பும் கருணையும்

May 10 , 2023 613 days 494 0
  • இப்பொழுது நம் உச்சநீதிமன்றம் ஓரினச் சேர்க்கை திருமணம் சட்டப்படி செல்லுமா என்ற வழக்கை கேட்டுக்கொண்டிருக்கிறது. நம் சட்டம் என்ன சொல்கிறது என்று இங்கு நான் ஆராயப் போவதில்லை; அரசின் நிலை குறித்தும் விவாதம் செய்யப் போவதில்லை.
  • இந்த விஷயத்தில் இன்னொரு முக்கியமான கட்சிக்காரர்கள் உள்ளனர். அது அந்த ஜோடிகளின் பெற்றோரும் குடும்பமும். இதைப் பற்றி நான் யோசித்தபோது குடும்பம் என்றால் எது என்ற கேள்வி எழுந்தது. அது பற்றிதான் இந்தப் பகிர்தல்.
  • "அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு' என்ற பாட்டு நமக்குத் தெரியும். எல்லா மொழிகளிலும் இது போல இருக்கும். சற்றே வயதானவர்களுக்கு நிரோத் விளம்பரம் நினைவிருக்கலாம். அது ஒரு கருத்தடை சாதனம். அந்த விளம்பரத்தில் அப்பா, அம்மா, மகள், மகன் -ஒரு குடும்பம். அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதுதான் நம் எதிர்பார்ப்பு; குடும்பம் என்ற சொல்லுக்கு நம் மனதின் முன்பு நிற்கும் படிமம்.
  • ஆனால், எதார்த்தம் இதற்கு மாறுபட்டது. சில உதாரணங்கள். குழந்தை பிறக்காத குடும்பம், ஆண் குழந்தை இல்லாத குடும்பம், இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ள குடும்பம். இவர்கள் மகிழ்ச்சியாக இருக்கமாட்டார்கள் என்று நான் சொல்லவில்லை. அப்பா,அம்மா, மகன், மகள் என்ற வரையறைக்குள் அடைபடாதவர்கள் என்று தான் சொல்கிறேன்.
  • இன்னும் சில சொல்கிறேன். நான்கு சகோதரிகள் திருமணம் செய்துகொள்ளாமல் ஒரு வீட்டில் வாழ்கிறார்கள். அதுவும் குடும்பம்தான். குடும்பத் தலைவர் பெண்ணாக இருக்கலாம் அதுவும் குடும்பம்தான். இவையும் குடும்பங்கள்தானே?
  • குடும்பம் என்ற சொல்லுக்கு விளக்கம் எப்படி தரலாம்? ஒன்றுக்கு மேற்பட்ட மனிதர்கள் சேர்ந்து ஒரே இடத்தில் உண்டு, உறங்கி சேர்ந்து வாழவேண்டும் என்ற புரிதலோடு இருந்தால் அதைக் குடும்பம் என்று சொல்லலாமா? இந்த அமைப்பில் குழந்தைகள், பதின் பருவத்தினர், அதற்கு மேற்பட்ட வயதினர் இருக்கலாம்.
  • உதிர பந்தம் அல்லது திருமண பந்தம் இருக்கலாம் (இருந்தாக வேண்டும் என்று இல்லை). இப்பொழுது உச்சநீதிமன்றம் சேர்ந்து வாழும் உறவை சட்டப்படி செல்லும் என்று சொல்லிவிட்டது. ஒரு பெண் தத்தெடுத்த இரு மக்களுடன் வசித்தால் அது குடும்பம் தான்.
  • இது வரை வந்துவிட்டீர்களா? இப்பொழுது சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தின் இறுதிக் காட்சிகளைப் பார்ப்போம். அப்பா ஒரு திருநங்கை. ஆணாக ஓடிப்போய் பெண்ணாக வருகிறார். இடைப்பட்ட காலத்தில் அவருடைய பையன் ராசுக்குட்டி, "அப்பா வருவார் அப்பா வருவார்' என்று காத்திருப்பான். அப்பா வருவார், பெண்ணாக. அவனுக்கு அது பிரச்னை இல்லை. ஆனால் உலகத்தாருக்கு அப்படி இல்லை. கேலி, ஏச்சு வன்கொடுமை கூட.
  • இங்கு இருக்க முடியாது என்று அந்த திருநங்கை அப்பா தப்பி ஓடப் பார்ப்பார். அந்த பையன், "நீ ஆம்பளையா வேணா இரு பொம்பளையா வேணா இரு ஆனா எங்களோடு இருந்து தொலையேன்' என்று கூறுவான். அப்பா மன்னிப்பு கேட்பார். கடைசி ஷாட் திருநங்கை அப்பா, அம்மா, சிரிக்கும் பையன். இது சில படிமங்களை உடைத்தது. என்னை ரொம்ப யோசிக்க வைத்த, பாதித்த காட்சி. ராசுக்குட்டிக்கு வேற்றுமை தெரியவில்லை, அன்பு ஒன்றுதான் தெரிந்தது. வயது முதிர்ந்த நமக்கு?
  • இப்பொழுது இந்த சர்ச்சை ஏன் என்று தோன்றலாம். எல்ஜிபிடி என்று சொல்கிறார்கள் இல்லையா? தன்பாலின ஈர்ப்புள்ளவர்கள் திருநங்கைகள் திருநம்பிகள் போன்றவர்கள், அவர்களுடன் ஒரு பப்ளிக் ஹியரிங்கில் பங்கேற்றேன். குடும்பம் என்ற அமைப்புக்கு அடித்தளம் என்ன என்று அதன் பிறகு யோசித்தேன்.
  • நினைக்கமுடியாத கொடுமைகளை இவர்கள் சந்திக்கிறார்கள். அதில் ஒருவர், "சொல்ல முடியாத வன்முறையை நான் சந்தித்தேன். அதில் சோகமென்னவென்றால் இழைத்தது என் குடும்பமே. என் அப்பா, அம்மாவே' என்று கூறி அவர் கேவினார். எனக்கும் அப்படித்தான் இருந்தது.
  • நமக்கு நம் மக்களை அடக்கி ஆண்டு அதிகாரம் செய்து அடித்து நொறுக்கும் உரிமை இருக்கிறதா?
  • கலீல் ஜிப்ரான் "குழந்தைகள்' என்ற கவிதையில்

அவர்கள் உன் குழந்தைகள் இல்லை

வாழ்க்கை தான் நீடித்து இருக்கவேண்டும் என்ற ஏக்கத்தில் பிறந்த பையனும் பெண்ணும்.

அவர்கள் உடலை நீ உன்னில் வைத்திருக்கலாம், அவர்கள் ஆன்மாவை அல்ல.

நீ தான் வில், உன்னில் இருந்து விடுபட்டு பறந்த அம்புகள் அவர்கள்.

அன்புடன் மகிழ்ச்சியுடன் வளைந்து அவர்களை சுதந்திரமாக அனுப்பு' என்பார்.

  • ஜிப்ரானின் சொற்கள் உண்மை, வலிமை கொண்டவை.
  • பாவக்கதைகள் என்ற ஓடிடி அந்தோலஜியில் 'ஓர் இரவு' என்ற கதை, கொடுமை யான ஆணவக்கொலை பற்றியது. மகள் வேறு ஜாதி பையனைத் திருமணம் செய்து கொண்டதால் "வளைகாப்பு' செய்யவேண்டும் என்று பெண்ணை அழைத்துவந்து விஷம் கொடுத்து அப்பா கொல்லுவார். அந்தப் பெண்ணுக்கு தெரிந்து விடும் "இது தப்புப்பா' என்று சொல்லிக்கொண்டு உயிரை விடுவாள்.
  • இந்தக் குடும்பம் குடும்பமே இல்லை. ஒப்புக்கொள்கிறீர்களா? குடும்பம் என்ற அமைப்பின் அடித்தளம் அன்பு, பரஸ்பர மதிப்பு இவைதான். எத்தனை கெளசல்யாவை, எத்தனை சங்கரை நாம் பார்த்துவிட்டோம்? கெளசல்யா பெற்றோரின் வெறி சங்கரை மட்டுமா அழித்தது? அவர்கள் மகளின் அன்பையும் கொன்றது இல்லையா?
  • ஜாதி என்கிறோம், மதம் என்கிறோம் அந்தப் பிரிவுகளின் ஆழம் என்ன? பிலால் நஸ்க்கி என்று ஒரு நீதியரசர். ஒடிஸா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவர் என்னிடம் ஒரு நாள், " பிரபா, உன் தாயாரும் என் தாயாரும் பக்கத்து பக்கத்துஅறைகளில் பிள்ளை பெற்றார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஏதோ ஒரு காரணத்தால் குழந்தைகள் மாறிப்போகின்றன. அப்பொழுது நான் பலராமனாக வாழ்ந்திருக்கலாம், நீ பர்வீனாக இருந்திருப்பாய். இவ்வளவுதான். இதற்குத்தான் இத்தனை வெறியும் வன்முறையும்' என்று கூறினார்.
  • சமீபத்தில் ஒரு அமெரிக்க துப்பறியும் தொடர் பார்த்தேன். அதில் குற்றவாளி யார் என்று தெரியாமல் தொங்கலில் இருக்கும் பழைய வழக்குகளை ஒருநாள் துப்பு துலக்குவார்கள். 60-களில் நடந்த கொலை. கொலை செய்யப்பட்டவர் தன்பாலின ஈர்ப்புடைய ஆண். அவன் தன் அப்பா அம்மாவிடம் இதைப் பற்றி சொல்லவில்லை ஏனென்றால் அவர்கள் அது தவறு என்று நினைப்பவர்கள். யார் கொலையாளி என்று கண்டு பிடிக்கவே இல்லை.
  • இத்தனை ஆண்டுகள் சென்ற பின் அவனுடைய அம்மாவுக்கு ஒரு துப்பு கிடைக்கிறது. போலீஸிடம் வருகிறார். கோல்ட் கேஸ்களை கவனிக்கும் துறைக்கு இந்த வழக்கு வந்து அவர்கள் புலனாய்வு செய்ததில் குற்றவாளி யார் என்று தெரிகிறது. அப்பொழுது அந்த அம்மா, "அவனை நாங்கள் ஏற்றுக்கொண்டு இருந்தால் அவன் இறந்து இருக்கமாட்டானோ' என்று கேட்கிறார். கண்ணில் அப்பும் சோகம். ஆனால் இந்த கேள்விக்கு பதில் கிடைக்காது. ராசுக்குட்டிக்கு இருக்கும் முதிர்ச்சி இந்த அம்மாவுக்கு இல்லை.
  • அப்பா, அம்மாக்களுக்கு எத்தனை சவால்கள்! அவர்கள் பையனோ பெண்ணோ அவர்கள் ஒப்புக் கொள்ள முடியாத ஜாதியில் பிறந்த இணையை தேடிக் கொள்ளலாம். அல்லது தன்பாலின இணையோடு கூடலாம். அல்லது "நான் பையனாக பிறந்தேன் இப்பொழுது பெண்ணாக உணர்கிறேன்' என்று சொல்லலாம். எல்லாவற்றையும் பெற்றோர் ஒப்புக் கொள்ள வேண்டுமா? ஒப்புக் கொள்வது அவரவர் மன நிலையைப் பொறுத்தது. ஆனால் அந்த குழந்தையை கொல்ல கூடாது, கொடுமை செய்யக் கூடாது. அந்த மகனோ மகளோ வேண்டும் என்றே இதைச் செய்யவில்லை. அவர்களுக்கு இயல்பாக தோன்றும் உணர்வு.
  • பார் புகழும் நடன வல்லுநர் நர்த்தகி நடராஜ் ஒரு முறை பேசும் போது தன் நிலையை அப்பர் தேவாரம் சொல்லும் தன்னை மறந்த நங்கையுடன் ஒப்பிட்டார்.

அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்

அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை

தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்

  • தன் உணர்வுதான் உண்மை என்று தோன்றுகிறது. எல்லாவற்றையும் விடத் தயாராக இருக்கிறார்கள்.
  • அப்பரும் மாணிக்கவாசகரும் சொன்னால் நமக்கு உறுத்தவில்லை. இது போலவே ஆழ்வார்கள் தம்மை பராங்குச நாயகியாகவும் பரகால நாயகியாகவும் உருவகப்படுத்தி, பெருமாளை நினைத்து உருகினார்கள். நாமும் அந்தப் பதிகங்களை, பாசுரங்களைப் படித்தது உருகுவோம். அது வேறு, இது என் குழந்தை.
  • ஆண்டாளின் தந்தை என்ன ஜாதி? அவள் நோன்பு இருக்கிறாளே ஒருவனுக்காக அந்த நந்தகோபன் குமரன், அவன்? அது சாமி, பெருமாள்... ஆகவே ஓகே. இது என் குழந்தை.
  • திருவரங்கத்தில் ஒரு நாச்சியார் இருக்கிறாள். அவளுக்கு நாம் ரொட்டியும் வெண்ணையும் அம்சை பண்ணுவோம். அறுபத்து மூவரும் வெவ்வேறு இனம். அவர்களை விழுந்து விழுந்து சேவிப்போம். ஆனால் இது என் குழந்தை.
  • புரிகிறது. இது உங்கள் குழந்தை. பல காலமாக கொண்டாடி வரும் மதக் கோட்பாடுகளை உதறுவது எளிது இல்லை. உங்களைச் சுற்றி இருக்கும் சமூகம் ஒரு 'தினுசா'க உங்களைப் பார்க்கலாம். அதை தைரியமாக ஏற்க "தில்' வேண்டும். ஆனால், எந்த மதக் கோட்பாட்டிற்காகவும், சமூகத்தின் ஏளனத்துக்காகவும் வன்முறை கூடாது. அன்பு அனைத்தையும் தாண்டிய கட்டளை.
  • அந்த பப்ளிக் ஹியரிங்கில் கேட்ட குரல், 'அதில் சோகம் என்னவென்றால் கொடுமை இழைத்தது என் அப்பா, அம்மாவே'. பாலூட்டிய அம்மா, நடை கற்றுக் கொடுத்த அப்பா, இன்று வீட்டில் அடைத்து பட்டினி போட்டு, எலெக்ட்ரிக் ஷாக் சிகிச்சை கொடுத்து...
  • "அவள் மட்டும் எங்கள் இதயத்தை உடைக்கலாமா?' அவளோ அவனோ குற்றமுறு நெஞ்சத்தில் செய்த செயல் இல்லை. ஆனால் அவர்கள் மேல் இழைக்கப்படும் செயல் தெரிந்து செய்யும் குற்றம். குடும்பம் என்ற அமைப்பில் அதற்கு இடம் இல்லை.
  • குடும்பத்தில் அன்பையும் ஆதரவையும் குழந்தைகள் எதிர்பார்ப்பது நியாயம், இயற்கை. அது முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் குடும்பம் என்ற அமைப்பில், பரஸ்பரம் மனித உரிமை மீறல் இல்லாமல் இருக்கலாம், இருக்க வேண்டும்.
  • எழுத்தாளர் இமையம் எழுதிய ஒரு கதையில் பெத்தவன் தன் மகளுக்காக தான் பாலிடால் அருந்துவார். குடும்பம் என்பது அன்பும் கருணையுமே. அங்கே வெறுப்புக்கும் கொலைவெறிக்கும் இடமில்லை.

 நன்றி: தினமணி (10 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories