- கும்பல் கொலைகள் தொடர்பாக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு, அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. தெஹ்சீன் பூனாவாலா எதிர் இந்திய அரசு (2018) வழக்கில், உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவைக் கண்டிப்பாக அமல்படுத்துவது தொடர்பாகத் தொடரப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பேலா திரிவேதி ஆகியோர் அடங்கிய இரு நபர் அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.
- 2015இல், உத்தரப் பிரதேசத்தின் தாத்ரி நகரில் தனது வீட்டில் மாட்டுக் கறி வைத்திருந்ததாக அடித்துக் கொல்லப்பட்ட அக்லாக் முதல் ஏராளமானோர் கும்பல் வன்முறைகளுக்குப் பலியாகியிருக்கிறார்கள். குழந்தைக் கடத்தல், பசுக் கடத்தல், மாட்டுக்கறி வைத்திருத்தல், திருட்டுக் குற்றத்தில் ஈடுபட்டது எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தே இப்படியான வெறிச்செயல்களில் வன்முறையாளர்கள் ஈடுபடுகிறார்கள். குஜராத், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பசுவதைத் தடைச் சட்டம் அமலில் இருக்கிறது. இந்தச் சட்டத்தின் கூறுகளைத் தவறாகப் பயன்படுத்தும் பசு குண்டர்கள், தங்கள் குற்றங்களைப் பொதுவெளியில் நியாயப்படுத்துவதும் தொடர்கிறது.
- 2019 ஜூன் 17 அன்று ஜார்க்கண்ட் மாநிலம் சராய் கேலா காவல் சரகத்துக்கு உள்பட்ட தாட்கிடி கிராமத்தில் நடந்த கும்பல் கொலை, இந்தக் கொடூரத்துக்குச் சரியான உதாரணம். புனேயில் கூலி வேலை பார்த்துவந்த தப்ரேஸ் அன்சாரி எனும் இளைஞர், பக்ரீத் பண்டிகைக்காகத் தனது சொந்த மாநிலமான ஜார்க்கண்டுக்குத் திரும்பிய நிலையில், அவர் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறி அவரை மின்கம்பத்தில் கட்டிவைத்து சிலர் கடுமையாகத் தாக்கினர். பின்னர் அவர் காவல் நிலையத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டார். நான்காவது நாளில் அவர் உயிரிழந்தார்.
- நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்தச் சம்பவம் மிகுந்த மன வலியை ஏற்படுத்தியிருப்பதாகவும் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். 2023 ஜூலை 5 அன்று, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 10 பேருக்கு, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.
- அரசமைப்புச் சட்டத்தின் 21ஆவது கூறு, இந்தியாவின் குடிநபர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்வதற்கான உரிமையையும், அடிப்படை உரிமைகளையும் உறுதிப்படுத்துகிறது. ஆனால், பசுப் பாதுகாவலர்கள் எனத் தங்களை அழைத்துக்கொள்ளும் பசு குண்டர்கள், சட்டவிரோதமாகச் செயல்பட்டு இத்தகைய குற்றங்களை இழைக்கிறார்கள். பல தருணங்களில், குற்றம்சாட்டப்பட்டவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் விமர்சனங்கள் உண்டு.
- இந்தப் பின்னணியில், 2018 முதல் நடைபெற்ற கும்பல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை போன்ற ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது மிக முக்கியமான நகர்வு. இது தொடர்பாக மத்திய உள் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் அனைத்து மாநிலங்களின் உள் துறை செயலர்களும் கலந்துகொண்டு தகவல்களை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி முன்வைத்த ஆலோசனைகளை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், அவற்றைப் பின்பற்றுமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது. கும்பல் கொலைகள் இன்றுவரை முடிவுக்கு வராத நிலையில், இந்த உத்தரவு அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான முக்கிய நகர்வாக அமையட்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (19 – 07 – 2023)