TNPSC Thervupettagam

குரங்கு அம்மை: அச்சம் வேண்டாம்

August 24 , 2024 142 days 253 0

குரங்கு அம்மை: அச்சம் வேண்டாம்

  • ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஏதாவதொரு புதிய நோய் மக்களைப் பயமுறுத்திக்கொண்டே இருக்கும். அந்த வகையில் தற்போது உலக மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது ‘MPox’ என அழைக்கப்படும் குரங்கு அம்மை.
  • காங்கோ ஜனநாயகக் குடியரசு உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை அதிகரித்ததைத் தொடர்ந்து பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

எதனால் ஏற்படுகிறது?

  • குரங்கு அம்மை ஒரு வகை டி.என்.ஏ., வைரஸால் ஏற்படுகிறது. இது ஒரு ஆர்தோபாக்ஸ் வைரஸ். விலங்குகளிட மிருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவுகிறது. குரங்கு அம்மை நோயை ஏற்படுத்தும் வைரஸானது, ஒரு காலத்தில் மக்களுக்குப் பெரிதும் பாதிப்பை உண்டாக்கிய பெரிய அம்மை நோயை ஏற்படுத்திய வைரஸின் குடும்பத் தைச் சேர்ந்தது.
  • ஆனால், இவை பெரிய அம்மைபோல் மோசமான உடல் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை அல்ல. 1958ஆம் ஆண்டில் முதன்முறையாக இந்தத் தொற்று குரங்குகளிடம் கண்டறியப்பட்டது. 1970ஆம் ஆண்டில் முதன்முறையாக இந்தத் தொற்று மனிதர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்டது.

வைரஸின் வகைகள்:

  • குரங்கு அம்மை வைரஸில் கிளேட் I (clade I), கிளேட் II (clade II) என இரண்டு வகைகள் உள்ளன. முதல் வகையான கிளேட் I மத்திய ஆப்பிரிக்காவிலும் இரண்டாவது வகையான கிளேட் II மேற்கு ஆப்பிரிக்காவிலும் பரவலாகக் காணப்படுகின்றன. இதில் கிளேட் II வகையைவிட கிளேட் I வகை தீவிரப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகக் கருதப்படுகிறது.

தொற்றுப் பரவல்:

  • 2022இல் கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளில் குரங்கு அம்மைத் தொற்று ஏற்பட்டது. இதுவரை உலக நாடுகளில் 116 நாடுகளில் 99,176 பேருக்குக் குரங்கு அம்மை பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கா கண்டத்தில் மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள நாடுகளில் இந்த வகைத் தொற்று அடிக்கடி ஏற்படுவதுண்டு. தற்சமயம், ஆப்பிரிக்கா மற்றும் பல்வேறு ஆசிய நாடுகளில் குரங்கு அம்மைத் தொற்று பரவி வருகிறது.

அறிகுறிகள்:

  • இந்த வைரஸ் உடலில் நுழைந்த 5-21 நாள்களில் நோயை ஏற்படுத்துகிறது. காய்ச்சல், குளிர், தலைவலி, முதுகுவலி, தசைவலி, சோர்வு, நிணநீர் கட்டிகளில் வீக்கம் போன்றவை இதன் அறிகுறிகளாகும். உள்ளங்கை, உள்ளங்கால்கள் உள்பட உடல் முழுவதும் கொப்புளங்கள் ஏற்படும்.
  • வைரஸின் தாக்கம் 2 முதல் 4 வாரங்கள் வரை இருக்கலாம். பாக்டீரியா தோல் தொற்று, ஜோஸ்டர், சின்னம்மை, சிபிலிஸ், யாவ்ஸ் (yaws), சிரங்கு, ரிக்கெட்சியல் பாக்ஸ் (Rickettsial pox), தட்டம்மை, போன்ற பிற அம்மைகள் குரங்கு அம்மை போலவே காணப்படுவதால் மருத்துவரின் ஆலோசனை கேட்டுத் தொற்றை உறுதிசெய்ய வேண்டும்.

எப்படிப் பரவுகிறது

  • குரங்கு அம்மை பாதிப்பு அபூர்வமாகவே மனிதர்களுக்கு ஏற்படுகிறது. குறிப்பாகக் குரங்குகளிடமிருந்தே இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவுகிறது. அணில், காம்பியன் பவுச் எலி போன்றவை உடலிலும் இந்தக் குரங்கு அம்மை வைரஸ் இருப்பதால் அவற்றிடமிருந்தும் மனிதர்களுக்குத் தொற்று ஏற்படலாம்.
  • தொற்று உள்ளவர்களின் கொப்புளங்களில் வடியும் திரவம், கொப்புளங்கள் காய்ந்த பிறகு உதிரும் பொருக்குகள், இருமல், தும்மல் ஆகியவற்றாலும் இந்த வகை வைரஸ் பரவும். அவர்கள் பயன்படுத்திய துணிகளாலும்கூட இது பரவலாம். கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் மூலம் வைரஸ் ரத்தத்தில் பரவி, பிறக்கும் குழந்தைக்கும் தொற்றை ஏற்படுத்திவிடும்.

பாதிப்புகள்:

  • குரங்கு அம்மை பாதிப்பானது உரிய மருத்துவ வழிகாட்டுதல் இருந்தால் சில வாரங்களில் குணமாகிவிடும். எனவே மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. எனினும், குழந்தைகள், நோய் எதிர்ப்பாற்றல் குன்றியவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு அம்மையின் பாதிப்பு கூடுதலாக இருக்கும். எனவே, இவர்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம். குரங்கு அம்மையால் சிலர் கண்கள் பாதிக்கப்பட்டுப் பார்வையை இழக்கலாம். மூளை அழற்சி, செப்சிஸ் போன்ற கடுமையான நோய் பாதிப்புகளால் இறப்புகளும் ஏற்படலாம்.

பரிசோதனைகள்:

  • குரங்கு அம்மையை உறுதிசெய்ய பி.சி.ஆர் பரிசோதனைகள் முதன்மையாகப் பயன் படுகின்றன. தற்சமயம், புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் உள்பட நாடு முழுவதும் 32 இடங்களில் அம்மைத் தொற்றைக் கண்டுபிடிக்க ஆய்வுக்கூடங்களில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

சிகிச்சை:

  • காய்ச்சல், தலைவலி போன்ற தொந்தரவு களைக் குறைப்பதற்கான மருந்துகளை மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்துக் கொள்ளலாம். அம்மையால் பாதிக்கப்பட்டவரை நோய் முற்றிலும் குணமாகும் வரை தனிமைப்படுத்தி வைத்திருக்க வேண்டும்; உடலைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சமச்சீர் உணவைச் சாப்பிட வேண்டும். தேவையான அளவு நீர் பருக வேண்டும்.
  • குரங்கு அம்மை வைரஸை எதிர்த்துச் செயலாற்றக்கூடிய ‘டெகோவிரிமாட்’ (Tecovirimat) என்கிற மருந்து பயன்படுகிறது. இது ஒரு வைரஸ் எதிர்ப்பு மருந்தாகும். நோய் தீவிரமாகப் பாதித்தவர்களுக்கும் நோய் எதிர்ப்புத்தன்மை குறைந்தவர்களுக்கும் மட்டுமே இம்மருந்து பயன்படுகிறது. இந்த மருந்தை அனைத்துக் குரங்கு அம்மை நோயாளிகளுக்கும் கொடுப்பதில்லை. மருத்துவர்கள் மேற்பார்வையில் மட்டுமே இம்மருந்து வழங்கப்படும்.

தடுப்பூசிகள்:

  • இந்த அம்மை நோய்க்கு MVA-BN, LC16, ACAM2000 என்கிற ஓரிரு தடுப்பூசிகள் உள்ளன. ஆனால், நோய்ப் பரவலைத் தடுக்க அனைவருக்கும் இவை செலுத்தப்படுவதில்லை. குரங்கு வைரஸ் ஆய்வகப் பணியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், விலங்குகளைக் கையாளும் ஆய்வக ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருக்கு இந்தத் தொற்று ஏற்படச் சாத்தியம் உள்ளதால் அவர்களுக்கு இந்தத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

வரும்முன் காப்போம்:

  • குரங்கு அம்மை நோய்த் தொற்றைத் தவிர்க்கத் தனிமனித சுகாதாரம் அவசியம். குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவரைத் தொடுவதோ பாதிக்கப்பட்டவருடன் உறவுகொள்வதோ கூடாது. பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய ஆடைகளையோ பொருள்களையோ தொடக் கூடாது. சோப்பால் அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். முகக் கவசங்களை அணிவது அவசியம். விலங்குகளிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.
  • தொற்றுள்ள நோயாளிகளைத் தனிமைப்படுத்தி, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர் களைக் கண்டறிந்து பரிசோதனைகளைத் தீவிரப்படுத்துவதன் மூலம் குரங்கு அம்மைத் தொற்று பரவுதலைத் தடுக்கலாம். குரங்கு அம்மைத் தொற்றைப் போதிய விழிப்புணர்வுடன் அணுகினால் மட்டுமே இந்நோய் குறித்த அச்சம் விலகும்.

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories