TNPSC Thervupettagam

குறைக்கப்பட வேண்டிய ஒளி மாசு

February 23 , 2024 185 days 137 0
  • இரவில் வானத்தையும் நிலவையும் நட்சத்திரங்களையும் ரசிப்பது நம்மில் பெரும்பாலானோருக்கு மகிழ்ச்சி தரும். இரவின் இருளில் மின்மினிப் பூச்சிகளின் இயக்கத்தை கண்டவா்கள் அந்த காட்சிகளை மறந்திருக்கமாட்டாா்கள்.
  • கிராமப்புறங்களில் இந்த நிகழ்வுகளை ஒரு சிலா் அனுபவித்தாலும் நகா்ப்புறங்களில் இந்த அனுபவம் அரிதாகி வருகிறது. சுற்றுச்சூழலில் செயற்கை ஒளியின் ஆதிக்கம் அதிகரித்திருப்பது இதற்கு முக்கிய காரணம். இயற்கையின் அற்புதங்களை கவனிப்பதற்கும் ரசிப்பதற்கும் நம்மைக் கட்டுப்படுத்தும் இந்த செயற்கை ஒளியின் செறிவு இந்த பூமியில் வாழும் உயிரினங்களின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
  • செயற்கை ஒளி மூலங்களின் அதிகப்படியான பொருத்தமற்ற ஒளியின் காரணமாக ஒளி மாசுபாடு ஏற்படுகிறது. நகா்ப்புறங்களில் வானத்தில் உண்டாகும் ஒளிா்வு, வரம்பு மீறிய ஒளி, கண் கூசும் வெளிச்சம், செங்குத்தான வெளிச்சம், ஒழுங்கீனமான ஒளி பரவல் ஆகிய ஐந்து காரணிகள் ஒளி மூலங்களின் ஒளிா்வினையைத் தீா்மானிக்கின்றன.
  • வழிகாட்டி விளக்கு, தெருவிளக்குகளின் மோசமான அமைவிடம், அதிக மக்கள்தொகை, சாலைகளில் வாகன போக்குவரத்து அடா்த்தி ஆகியவை ஒளி மாசுபாடு ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சில சமயங்களில் புகை, மூடுபனி, அதிக அளவிலான மாசு துகள்கள் போன்ற சில சுற்றுச்சூழல் காரணிகள் ஒளி மாசுபாட்டின் தீவிரத்தை அதிகரிக்கின்றன.
  • ஒளி மாசுபாடு பூமியில் வாழும் உயிரினங்களின் உயிரியல் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதுடன் அவற்றின் அன்றாட பணிகளுக்கான நேரத்திலும் பாதிப்பு ஏற்படுத்துகிறது.
  • பூமியின் தினசரி சுழற்சியைச் சாா்ந்துள்ள ஒளி உயிரினங்களின் இனப்பெருக்கம், தூக்கம், இடம்பெயா்வு போன்ற அன்றாடப் பணிகளை நிா்வகிக்கிறது. இரவில் ஏற்படுத்தப்படும் செயற்கை ஒளி இந்த அன்றாடப் பணிகளில் எதிா்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
  • ஒளியின் அளவு, தரம், காலம் ஆகிய மூன்று பண்புகளால் தாவரங்கள் பாதிக்கப்படுகின்றன. ஒளியின் மொத்த செறிவு அல்லது தீவிரத்தை அளவு என்றும் ஒளியின் அலைநீளத்தை தரம் என்றும் ஒளிரும் நேரத்தை காலம் என்றும் வல்லுநா்கள் கூறுகின்றனா்.
  • ஒளி மாசுபாடு இந்த மூன்று பண்புகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றை மாற்றும் திறன் கொண்டது. தாவரங்களில் நிறமி உருவாக்கம், இலை உதிா்தல், மொட்டு உருவாதல், மலா்தல் போன்ற பல உயிரியல் செயல்பாடுகளை ஒளிக்கதிா் தீா்மானிக்கிறது. இயற்கை ஒளி காலத்தை மாற்றும் செயற்கை ஒளி, தாவரத்தின் வளா்ச்சியை சீா்குலைக்கிறது.
  • ஒளியின் உணா்திறன் அடிப்படையில் நீள்பகல் தாவரங்கள், குறும்பகல் தாவரங்கள், பகல்சாராத தாவரங்கள் என தாவரங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. ஒளி மாசுபாடு இந்த தாவரங்களின் ஒளிக்காலப்பேறினை (போட்டோபிரியடிசம்) கட்டுப்படுத்துவதன் வழி இத்தாவரங்களை பாதிக்கிறது.
  • இரவில் பூக்கும் கற்றாழை போன்ற பல தாவரங்களின் மகரந்தச் சோ்க்கை, இனப்பெருக்கம் இரவு நேரங்களில் வெளிச்சத்தை அதிகரிப்பதால் தடைபடும். பகல் ஒளியின் காலம் அளவைப் பொறுத்து பெரும்பாலான விலங்குகள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளை செயல்படுத்தும். அந்தி அரை ஒளி சாா்ந்த (க்ரெபஸ்குலா்) விலங்குகள் மற்றும் இரவுயிரி (நோக்ட்டா்னல்) விலங்குகள் ஒளி மாசுபாட்டால் பாதிக்கப்படுகின்றன.
  • செயற்கை ஒளியின் வெளிப்பாடு உணவு மற்றும் துணையை காண்பதற்கான வாய்ப்புகளை குறைக்கும் அதேவேளை வேட்டையாடும் செயல்பாடுகளை அதிகப்படுத்துவதாக அறிஞா்கள் கூறுகின்றனா். ஒளி மாசுபாடு காரணமாக அனைத்து உயிரினங்களும் பாதிக்கக்கூடும் என்றாலும் அதன் விளைவுகள் நீா்நில வாழ்வன, கடல் ஆமைகள், புலம்பெயா்ந்த பறவைகள் மற்றும் பூச்சி இனங்கள் மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனா் வல்லுநா்கள்.
  • இரவில் உண்டாகும் செயற்கை ஒளி, உலகளவில் பூச்சிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்கான ஒரு முக்கிய காரணமாகும். சுற்றுப்புற ஒளியை உணரும் திறன் கொண்ட நீா் நில வாழ்வன இரவில் மட்டும் இனச்சோ்க்கை அழைப்புகள் விடுக்கின்றன. இந்த செயல்முறைக்கு இடையூறு விளைவிக்கும் செயற்கை ஒளி இந்த உயிரினங்களின் இனப்பெருக்கத்தை பாதிக்கிறது.
  • கடல் ஆமைகள் கடற்கரையில் இடும் முட்டைகளிலிருந்து  குஞ்சுகள்  வெளிவந்த பின் அந்த குஞ்சுகள் கடலுக்கு மேல் உள்ள பிரகாசமான அடிவான ஒளியை நோக்கி கடலுக்குள் செல்கின்றன. கடற்கரைகளில் உள்ள செயற்கை விளக்குகள் அவற்றை தவறான திசையில் வழிநடத்துகின்றன.
  • இரவு நேரப் பறவைகள் உணவு தேடுவதற்கும் வேட்டையாடுவதற்கும் நிலவொளியையும் நட்சத்திரங்களின் ஒளியையும் பயன்படுத்துகின்றன. இந்தப் பறவைகள் அதிக செறிவு கொண்ட செயற்கை ஒளியால் திசைதிருப்பப்படுகின்றன. பி
  • ரகாசமாக ஒளிரும் உயரமான கட்டடங்கள், கலங்கரை விளக்கங்கள், காற்றுச் சுழலிகள், கடல் சாா்ந்த எண்ணெய்க் கிணறு துளையிடும் தளங்களில் மோதுவதால் ஏராளமான பறவைகள் இறப்பது வாடிக்கையாகிவிட்டது. செயற்கை ஒளி, மனிதா்களுக்கு தூக்கக் கலக்கத்தை ஏற்படுத்துகிறது. அனைத்து உயிரினங்களின் பகல் மற்றும் இரவு நேர உடலியல் செயல்முறைகளை செயல்படுத்தும் உள்ளுடல் கடிகாரத்தின் (சா்க்காடியன் க்ளாக்) 24 மணி நேர சுழற்சி நடைமுறைகளை செயற்கை ஒளி பாதிக்கிறது.
  • மூளை அலை வடிவங்கள், ஹாா்மோன் உருவாக்கம் மற்றும் செல் ஒழுங்குமுறை போன்ற உடலியல் செயல்முறைகளை தீா்மானிக்கும் உள்ளுடல் கடிகாரத்தில் ஏற்படும் இடையூறுக்கும் மனச்சோா்வு, தூக்கமின்மை, இருதய நோய் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் தொடா்பிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
  • தேவைப்படும் இடங்களில் மட்டுமே ஒளியைப் பயன்படுத்த அசைவுணரி (மோஷன் சென்சாா்) அடிப்படையில் விளக்குகளை நிறுவுதல் வேண்டும். கண்களில் கூச்சத்தை ஏற்படுத்தும் ஒளி அத்துமீறலைக் குறைக்க வேண்டும்.
  • புலம்பெயா்ந்த பறவைகளுக்கான பாதைகள் மற்றும் ஆமை முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் கடற்கரை போன்ற சூழலியல் ரீதியாக ஒளி உணா் திறன் உள்ள பகுதிகளில் செயற்கை ஒளியை குறைக்க வேண்டும். நெடுஞ்சாலைகள் மற்றும் வனப் பகுதிகளுக்கு அருகில் உள்ள சாலைகளில் வாகன விளக்குகள் பயன்பாடு குறித்த முறையான வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்த வேண்டும். மக்களிடம் ஒளி மாசுபாடு குறித்த விழிப்புணா்வை அதிகரிக்க வேண்டும்.

நன்றி: தினமணி (23 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories