TNPSC Thervupettagam

குறைந்தபட்ச ஆதரவு விலை: சட்ட உத்தரவாதம் உண்மையில் தீர்வுதானா

February 29 , 2024 145 days 178 0
  • ‘தில்லி நோக்கி விவசாயிகள் பேரணி’, ‘தில்லி முற்றுகை’, ‘டிராக்டர்கள் - ஜேசிபிக்களுடன் அணிவகுப்பு’ என்றெல்லாம் செய்திகள் அலையலையாக வருகின்றன. ‘சட்ட உத்தரவாதம் தருவோம்’ என்று (அதிகாரப்பூர்வமற்ற) காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘பாரத் ஜோடோ நியாய் யாத்திரை’யின்போது அறிவித்துவிட்டார். நியமனத் தலைவர் கார்கேவும் வழிமொழிந்திருக்கிறார். மோடி அரசு ஏன் தயங்குகிறது, விவசாயிகளுக்கு அவர்கள் விரோதிகள் என்பதாலா?
  • யோகேந்திர யாதவ் சொல்வதைப் போல இதனால் அரசுக்கு எந்தப் பிரச்சினையும் வராதா, குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக அமலில் இருக்கும்போது திடீரென்று அதற்குச் சட்டப்பூர்வ உத்தரவாதம் கேட்டு பஞ்சாப் - ஹரியாணா, மேற்கு உத்தர பிரதேச பெரும் பண்ணை விவசாயிகள் களம் இறங்கியிருப்பது ஏன், அவர்களுக்கு மட்டும்தான் விழிப்புணர்வு இருப்பதாலா, குலாக்குகள் என்று அழைக்கப்படும் இந்த இந்தியப் பண்ணை முதலாளிகளுக்கு ஏழைப் பங்காளர்களான இந்திய இடதுசாரி கட்சிகள் ஆதரவு தருவது ஏன்?
  • மக்களவைக்குப் பொதுத் தேர்தல் நெருங்குகிறது. ஒன்றிய அரசின் இடைக்கால வரவு - செலவு அறிக்கையை அளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வருமான வரி விலக்கு வரம்பு உயர்வு உள்பட பலரும் எதிர்பார்த்த எந்தப் பெரிய கொள்கை முடிவையும் எடுக்கவில்லை. இது மரபுதான் என்றாலும், பாஜக கூட்டணியை வெல்ல முடியாமல் திணறும் எதிர்க்கட்சிகள் உள்ளூர இதற்காக நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளன. இந்த நிலையில் அவசரச் சட்டம் மூலம் இதை உறுதிப்படுத்த போராடும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். இது கொள்கை முடிவா, இல்லையா என்பது ஒருபுறம் இருக்க இது நாட்டின் பொருளாதாரத்துக்கு நன்மை செய்யுமா, தீங்காக முடியுமா என்று பாரதூர விளைவுகளையுரும் ஆராய வேண்டியிருக்கிறது.
  • காங்கிரஸ் கட்சியால் முடிந்த ஒன்று (அறிவிப்பது) பாஜகவால் முடியாதா? அடிப்படையில் எல்லா அரசியல் கட்சிகளுமே, செயல்படுத்த முடியாத வாக்குறுதிகளைத் தேர்தல் காலத்தில் அளிப்பதில் ஒன்றுதான். நிதியிழப்பு எவ்வளவு ஏற்படும், நிதி நிலைமை எப்படி இருக்கிறது என்றெல்லாம் ஆராயாமல் தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டம், அனைத்து தாற்காலிகப் பணியாளர்களுக்கும் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், அனைத்து அரசு வேலைகளிலும் காலியிடங்கள் நிரப்பப்படும், ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு அரசில் வேலை, விவசாயக் கடன் ரத்து, கல்விக்கடன் ரத்து, வீட்டுக்கடன் ரத்து, கைமாற்றுக் கடன்கள் அறவே ரத்து என்றெல்லாம் அறிவித்தனர்.
  • பாமர மக்கள் பேசுவதைப் போல, ‘மயிரைக் கட்டி மலையை இழுப்போம், வந்தால் மலை – போனால் மயிரு’ என்ற சித்தாந்தப்படியே வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன.

தேதி போட்டார்களா?

  • தமிழ்நாட்டின் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேட்டதைப் போல, “எந்தத் தேதியிலிருந்து தருவோம் என்று சொன்னோமா?” என்றும் சமத்காரமாகப் பதில் அளிக்கலாம்; அல்லது, “தேர்தல் வாக்குறுதிகளைத் தயார்செய்தது டி.ஆர்.பாலுதான் - கட்சித் தலைமை அல்ல” என்றும் பொறுப்போடு பதில் அளிக்கலாம். தேர்தல் காலத்தில், ‘எங்கள் அறிக்கைதான் கதாநாயகன்’ என்று பேசியதை மக்கள் மறந்திருப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.
  • இவ்வளவையும் சொல்வது எதற்கு என்றால், விவசாயிகள் பிரச்சினையை தேர்தல் நெருங்க நெருங்க எதிர்க்கட்சிகள் அறிக்கையிலும் வாக்குறுதிகளிலும் தயக்கமின்றி சேர்க்கும். இடதுசாரிகளும், இதனால் நாட்டுக்கு நல்லதே என்றும் பேசுவார்கள். எதிர்த் தரப்பையும் ஆராய்வோம்.

குறைந்தபட்ச ஆதரவு விலை

  • விவசாயிகள் சாகுபடி செய்யும் உணவு தானியங்களுக்கு அவற்றின் சாகுபடிச் செலவு அடிப்படையில் அரசு நிர்ணயிப்பதே குறைந்தபட்ச ஆதரவு விலை. இது விவசாயிகள் விலை வீழ்ச்சியால் நஷ்டம் அடையக் கூடாது என்பதற்காக நீண்ட காலமாக அமலில் இருப்பது. நெல், கோதுமை, சில பருப்பு வகைகளுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்ட இது படிப்படியாக கரும்பு, எண்ணெய் வித்துகள் என்று மேலும் பல ரகங்களுக்குமாக மொத்தம் 23 பயிர்கள் இந்தப் பட்டியலில் சேர்ககப்பட்டுள்ளன.
  • மூன்று வேளாண் சட்டங்களைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்திய வேளாண் சங்கங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை கோரிக்கையையும் சேர்த்திருந்தன. அதை வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் விவசாயிகளின் பிரதிநிதிகளையும் சேர்த்து குழு அமைக்கப்படும் என்று அரசு அளித்த வாக்குறுதி காரணமாக, 2020 - 2021இல் 13 மாதங்களாகத் தொடர்ந்த விவசாயிகள் கிளர்ச்சி விலக்கப்பட்டது.

ரூ.18 லட்சம் கோடி

  • மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த கடந்த பத்தாண்டுகளில் நெல், கோதுமைக்காக மட்டும் குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.18 லட்சம் கோடியை விவசாயிகள் பெற்றுள்ளனர். இது 2014க்கும் முன்னதாக பெறப்பட்ட தொகையைப் போல 2.5 மடங்கு அதாவது 250%. எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள் சாகுபடி செய்தவர்கள் கடந்த பத்தாண்டுகளில் ரூ.1.25 லட்சம் கோடி பெற்றுள்ளனர். முந்தைய ஆட்சிக்காலத்தில் பருப்பு, எண்ணெய் வித்துகள் கொள்முதல் அளவு குறிப்பிட்டுச் சொல்லும் அளவில் இருக்கவில்லை.
  • மேலும் 23 விளைபொருள்களில் ஏழு, நெல், கோதுமை, சோளம், கம்பு, கேழ்வரகு, பார்லி, மக்காச் சோளம் ஆகியவை, பருப்புகளில் அவரை, துவரை, உளுந்து, கடலை, மசூர், எண்ணெய் வித்துகளில் சோயா மொச்சை, கடுகு, எள், குதிரைவாலி, சூரியகாந்தி, குங்குமப்பூ, உச்செள்ளு (நைஜர் சீட்), வணிகப் பயிர்களில் நிலக்கடலை, பருத்தி, கொப்பரை, சணல் ஆகியவை அடங்கும். இப்படிப் பல பயிர்களுக்குக் குறைந்தபட்ச விலை அறிவிக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலும் நெல், கோதுமைதான் கொள்முதல் செய்யப்படுகிறது.
  • அரசிடம் இருக்கும் கிடங்குகளில் பெரும்பகுதி இவற்றுக்குத்தான் ஒதுக்கப்படுகின்றன. ஆனாலும், நாட்டில் சாகுபடியாகும் நெல், கோதுமைகளில் அரசு கொள்முதல் செய்யும் அளவை சேமிக்க கிடங்குகளில் இடம் போதாமல் – ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், வெட்டவெளிகள் என்று மழைக்கும் வெயிலுக்கும் பூச்சி தாக்குதலுக்கும் பெருச்சாளிகளின் வேட்டைக்கும் இரையாகும் அளவுக்குத் தார்ப்பாலின் போட்டு மூடப்படுகின்றன. முடைக்கால கையிருப்புக்கு எவ்வளவு தேவையோ அதைப் போல இரண்டு மடங்கை அரசுகள் வாங்குகின்றன.
  • வெங்காயம், உருளைக்கிழங்கு விலை உயர்வால் சில மாநிலங்களில் பாஜக ஆட்சியை இழந்ததிலிருந்து அரசுகள் நஷ்டக் கணக்கைப் பாராமல், அவசியப் பொருள்களைக் கொள்முதல் செய்து கையிருப்பில் வைத்துக்கொள்கின்றன. இதனால் இவை புழுத்தும் அழுகியும் வீணாவதும் நடக்கின்றன. முன்னர் போல நாடு முழுவதும் பெருமளவு பஞ்சமும் அல்லது பக்கத்து நாடுகளுடன் போர்ச் சூழலும் இல்லை என்றாலும் அடுத்தடுத்து மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களும் நாடாளுமன்ற பொதுத் தேர்தல்களும் வந்துகொண்டிருப்பதால் விலைவாசி உயர்வால் மக்களுடைய அதிருப்தியைச் சம்பாதித்துவிடக் கூடாது என்று கோடிக்கணக்கான ரூபாய்களை அரசு விரயம் செய்கிறது.
  • இந்த நிலையில்தான், வீரியமுள்ள விதைகளை மட்டும் நட்டுவிட்டு உரம், பூச்சிக்கொல்லி என்று எந்த ரசாயனங்களையும் பயன்படுத்தாமல் ‘இயற்கை விவசாயம்’ செய்யவும் அதன் மூலம் கோடிக்கணக்கான உர மானிய ரூபாய்களை மிச்சம் பிடித்து அதை அப்படியே விவசாயிகளுக்கும் தரவும் விரும்பி குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவுக்கு, போராட்டம் நடத்திய விவசாயிகள் தரப்பில் பிரதிநிதிகளை அனுப்பவில்லை என்பது கூடுதல் தகவல்.
  • அதற்குக் காரணம் அந்தக் குழுவின் விசாரணை வரம்பு தங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இல்லை என்று விவசாயிகள் பதில் அளித்தனர். குறிப்பிட்ட கால இடைவெளியில் கூட்டத்தை நடத்துகிறோம், இன்னொரு குழுவை அமைக்கலாம் என்று அரசு சொல்லிப் பார்த்தும் இதில் சமரசம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

விவசாயிகள் வலியுறுத்தல்

  • யோகேந்திர யாதவ் கூறுவதற்கு மாறாக, 23 வகைப் பயிர்கள் என்பதை எல்லா விளைபொருள்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் ‘விளைகிற எல்லாவற்றையும்’ அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்றும்தான் விவசாய சங்கப் பிரதிநிதிகள் அரசிடம் வலியுறுத்திவருகின்றனர். நுகர்வோரின் தேவை, சந்தையின் போக்கு ஆகியவற்றுக்கு ஏற்ப சாகுபடிகள் அமையாமல், விவசாயிகளின் சாகுபடி வசதி உள்ளிட்டவற்றுக்காக மட்டும் பயிர்களைச் சாகுபடி செய்வதும் ஏற்பட்டுவிடும்.
  • அவற்றை அரசு முழுதாகக் கொள்முதல் செய்ய உத்தரவாதம் அளிப்பதால் நாளடைவில் மக்களுக்கே தேவையான பயிர்கள் போதுமான அளவு சாகுபடியாகாமலும், மக்களால் அதிகம் விரும்பப்படாதவை உபரியாகவும் சாகுபடியாகலாம். இதனால் மக்களின் வரிப் பணமும், விவசாயிகளின் உழைப்பும் தண்ணீர் உள்ளிட்ட வளங்களும் வீணாவதற்கு வழிவகுக்கும் என்றும் விவசாயிகளிடம் கூறப்பட்டது. அதை அவர்கள் ஏற்கும் மனநிலையில் இல்லை.

மாதம் 10,000 ஓய்வூதியம்

  • தில்லி அருகில் திரண்டு நிற்கும் விவசாயிகளின் கோரிக்கைகளில் இரண்டு முக்கியமானவை. முதலாவது, சுவாமிநாதன் குழு அளித்த பரிந்துரைப்படி அனைத்து சாகுபடிச் செலவையும் கூட்டிவரும் தொகையுடன், அதன் 50% அளவை மேலும் சேர்த்து அதையே குறைந்தபட்சக் கொள்முதல் விலையாக அறிவிக்க வேண்டும்.
  • இரண்டாவது, 60 வயதைக் கடந்த அனைத்து விவசாயிகளுக்கும் (நில உடைமை எவ்வளவு என்று பாராமல்) மாதந்தோறும் ரூ.10,000 அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். மூன்று விவசாயச் சட்டங்களை ரத்துசெய்ய வேண்டும் என்ற போராட்டத்தின்போதும் இந்தக் கோரிக்கை இருந்து. இப்போது இதை அமல்படுத்த வேண்டும் என்று தீவிரமாக வலியுறுத்துகிறார்கள்.

ஏன் ஏற்க முடியாது?

  • விவசாயத்துக்கு இயற்கையால் ஏற்படும் சோதனைகளைப் போல, அரசுக்கும் பல சோதனைகள் ஏற்படுகின்றன. விவசாயப் பொருள்களின் விலையானது சர்வதேச சந்தையில் நிலவும் விலையைப் பொருத்தும், வரத்தைப் பொறுத்தும் மாறும் தன்மையது. உலகின் எந்த மூலையிலாவது நடைபெறும் போர், வறட்சி, பூச்சித் தாக்குதல், பயிர் சுழற்சி முறையில் ஏற்படும் மாறுதல், தொழில் துறையில் ஏற்படும் திடீர் தேவைகள் அல்லது திடீர் வீழ்ச்சி, நுகர்வில் ஏற்படும் மாற்றம், போக்குவரத்தில் ஏற்படும் பிரச்சினைகள், கடல் கொள்ளையர்களின் தாக்குதல், பெரிய நாடுகளின் திடீர் அரசியல் முடிவுகள், பொருளாதாரத் தடைகள் என்று பல அம்சங்கள் விவசாயத்தையும் பாதிக்கும்.
  • இந்தியாவின் குறைந்தபட்சக் கொள்முதல் விலை, உலக அளவிலான சராசரி விலையைவிட இப்போதே அதிகம், இது விவசாயிகளுக்கு அரசு மானியம் தந்து விற்கும் தந்திரம் என்று உலக வர்த்தக அமைப்பு (டபிள்யுடிஓ) குற்றஞ்சாட்டுகிகிறது. இதனால் இந்தியாவுக்குச் சர்வதேச அரங்கில் எதிர்ப்பும் கண்டனங்களும் எழுவதுடன் இந்தியப் பொருள்களைப் புறக்கணிக்கும் முடிவுக்கும் இட்டுச் செல்கிறது.
  • எண்ணெய் வித்துகள் இறக்குமதிக்கு அரசு செய்யும் செலவு அதிகமாக இருப்பதால் அவற்றை உள்நாட்டிலேயே சாகுபடி செய்ய நிலங்களை ஒதுக்கினால், ‘சுற்றுச்சூழல் கெட்டுவிடும்’ என்று இந்தியத் தன்னார்வலர் அமைப்புகள் போர்க் கொடி தூக்குகின்றன. இந்திய உணவு தானியங்கள் ரசாயன உரங்கள் கலப்பால் நச்சுக் கலப்புடன் இருக்கின்றன என்று உலக சுகாதார அமைப்பு, இறக்குமதி நாடுகளை எச்சரிக்கிறது.

இலவச மின்சாரம்

  • விவசாயத்துக்கு இலவச மின்சாரம், உரம் – பூச்சிக்கொல்லிகளுக்கு மானியம் என்பவை விளைச்சலைப் பெருக்க உதவினாலும் நீர் வளம், நில வளம் இரண்டுக்கும் பெருத்த கேட்டை விளைவித்துவிட்டன. பஞ்சாப், ஹரியாணா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நிலத்தடி நீர் வேகமாக சுரண்டப்பட்டு அபாயகரமான அளவை எட்டிவிட்டன. கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களும்கூட நிலத்தடி நீர் பற்றாக்குறையைச் சந்திக்கத் தொடங்கிவிட்டன. மின்சாரம் இலவசம் அல்லது மானியம் என்பதால் தண்ணீர் அதிகம் தேவைப்படும் கரும்பு, நெல் சாகுபடி தேவைக்கும் மேல் அதிகரிக்கிறது.
  • உள்நாட்டுத் தேவைக்குப் போக எஞ்சியவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிசெய்யப்பட்டாலும் குறைந்த அளவே அன்னியச் செலாவணி வருவாய் கிடைக்கிறது. இதனால் அதைச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கே அதிக விலை கிடைக்காமல் விலை குறைந்து வருமானம் குறைகிறது. இப்படிக் குறைந்த வருவாய்க்காக மின்சார மானியம், தண்ணீர் மானியம் ஆகிய செலவுகளை விவசாயிகளால் அல்லாத இதர சமுதாயமும் பகிர்ந்துகொள்ள நேர்கிறது.
  • அரசின் மானியம் அதிகம் கிடைக்கும் பயிர்களை மட்டும் பெரிய விவசாயிகள் தேர்வுசெய்வதால் காய்கறிகள், பழங்கள், எண்ணெய் வித்துகள் போன்றவற்றில் தேவைக்கேற்ப உற்பத்தியும் விநியோகமும் இல்லாமல் நிலையற்ற சந்தை வாய்ப்புகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் விவசாயிகள் தங்களுடைய நலனில் மட்டும் அக்கறை கொண்டு வலியுறுத்தும் கோரிக்கைகள் நாளடைவில் அவர்களுக்கு எதிராகவே திரும்பக்கூடும்.
  • நாட்டின் பெரும்பாலான சிறு, குறு விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைவதை சந்தையில் விற்று லாபம் சம்பாதிக்க முடிவதில்லை, பெரிய விவசாயிகள்தான் அரசின் மானியச் சலுகைகளை அதிகம் பெறுகின்றனர். அத்துடன் வங்கி, கூட்டுறவு வங்கிகளிடம் கடன் வசதியை அனுபவிக்கின்றனர். குறைந்தபட்ச ஆதரவு விலையையும் பயிர்க் காப்பீட்டு முறையையும் அவர்கள்தான் பெரிதும் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
  • இப்போது தில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தின் பின்னணியில் பெரும் பணக்கார பண்ணை விவசாயிகள்தான் இருக்கின்றனர். இந்தப் போராட்டத்துக்கு, தங்கள் நிலங்களில் வேலை பார்க்கும் ஆயிரக்கணக்கான விவசாயத் தொழிலாளர்களைத் தருவித்து அவர்களுக்கு மூன்று வேளை காபி - டீ, சாப்பாடு என்று எல்லா செலவுகளையும் திட்டமிட்டுச் செய்கின்றனர்.
  • அவர்களே மண்டிகளை நடத்துகின்றனர், நெல், கோதுமை, உருளை, வெங்காயம், எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள் உள்பட அனைத்தின் விலையையும் கட்டுப்படுத்தும் மொத்த வியாபாரிகளாகவும் கிடங்கு வசதிகளோடு இருக்கின்றனர். தங்களிடம் சொற்பக் கூலிக்கு வீட்டோடு அல்லது பண்ணையோடு தங்கி வேலை செய்யும் விவசாயத் தொழிலாளர்களுக்கு அரசு செலவிலேயே கூடுதல் ஊதியம் வாங்கித் தருவதற்கு மாதம் பத்தாயிரம் ஓய்வூதியக் கொள்கையையும் தாராள மனதுடன் முன்வைத்துள்ளனர்.

பவந்தர் புக்டன் யோஜனா

  • குறைந்தபட்சக் கொள்முதல் விலைக்கும் குறைவாக, சந்தையில் விலை வீழ்ச்சி ஏற்பட்டு விற்க நேரிட்டால் அதனால் ஏற்படும் விலை வேறுபாட்டை ஈடுகட்டும் ‘பவந்தர் புக்டன் யோஜனா’ மத்திய பிரதேசத்திலும் ஹரியாணாவிலும் நடைமுறையில் உள்ளது. ஆனால், இதில் முறைகேடுகளும் வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டுவதும்தான் அதிகம், அதிகாரிகளின் விருப்ப அதிகாரமும் கோலோச்சுகின்றன.
  • தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே, விவசாயிகள் கோரிக்கைப்படி சட்டப்பூர்வ உத்தரவாதத்துக்கு பாஜக அரசு அவசரச் சட்டம் இயற்றினால் இடதுசாரிகள் உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் அதை, ‘தேர்தலுக்காக ஆடிய நாடகம்’ என்றே குறிப்பிடுவார்கள். இது தார்மிகப்படி சரியல்ல என்றும் ஓலமிடுவார்கள். தேர்தல் தேதி அறிவித்தாலும் அறிவிக்காவிட்டாலும் அடுத்த தேர்தலின் முடிவு எப்படி இருக்கும் என்று தெரியாமல், பாஜக அரசு அறிவிப்பது தார்மிக அடிப்படையில் சரியாக இருக்காது.
  • நாட்டையே மிகப் பெரிய பொருளாதார சிக்கலில் ஆழ்த்தக்கூடியது இந்தக் கோரிக்கை. இந்த அரசு மட்டுமல்ல, எந்த அரசுமே விவாசிகள் - நுகர்வோரின் நலன் கருதி குறைந்தபட்சக் கொள்முதல் விலை அறிவிப்பையும் கொள்முதலையும் தொடர்ந்துதான் ஆக வேண்டும். இதற்கொரு சட்ட உத்தரவாதம் தேவையில்லை. இதை மேலும் தீவிரமாக ஆராய்ந்துதான் முடிவுசெய்ய வேண்டும். மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு இதே கோரிக்கைக்காக விவசாயிகள் மீண்டும் டிராக்டர்களுடன் தில்லி வரலாம், அதற்குள் டீசல் விலையும் குறையக்கூடும்.

போனஸ் சட்டம் என்ன ஆனது?

  • தனியார் துறையிலும் அரசுத் துறையிலும் வேலை செய்யும் ஊழியர்கள் நலனுக்காக லாபத்தில் பங்கு தரும் போனஸ் சட்டம் காங்கிரஸ் கட்சியால் 1970களில் கொண்டுவரப்பட்டது. பிறகு போனஸ் கணக்கிடுவதற்கு ஊதிய வரம்பும், போனஸ் தொகைக்கே ஊதிய வரம்பும் கொண்டுவரப்பட்டன. லாபம் வராவிட்டாலும் 8.33% அதாவது ஒரு மாத ஊதியம் போனஸாக தரப்பட வேண்டும் என்று முற்போக்காக முதலில் முடிவுசெய்தார்கள்.
  • பிறகு, நஷ்டம் வந்தால் தர வேண்டாம் என்றார்கள். எந்த நிறுவனமாவது 8.33%க்கு மேல் (குறைந்தபட்ச போனஸ்) தந்தால் அதை நிறுவனத்தின் செலவாகவே அரசு கருதும், எனவே அதற்கு வரி செலுத்த வேண்டும் என்றார்கள். இப்படியாக அந்த முற்போக்குச் சட்டத்தை முடக்கி மூலையில் வீசிவிட்டார்கள். 1980களில் தீபாவளி நெருங்கும்போது தனியார் நிறுவனங்களில் போனஸ் எவ்வளவு தருகிறார்கள் என்று ஆவலுடன் பார்ப்பது (அரசு ஊழியர்களின்) வழக்கமாக இருந்தது. இப்போது ரயில்வே துறை, ஒன்றிய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் சில மட்டுமே இந்த போனஸை அளிக்கின்றன.
  • தமிழ்நாடு அரசின் அரசுத் துறை நிறுவனங்களில் எவ்வளவு இந்த வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றன என்பது ஆராயப்பட வேண்டும். முற்போக்கு, ஏழைகளின் நலன் என்றெல்லாம் கொட்டி முழுக்கி கடைசியில் குட்டிச்சுவராக்குவதே அரசியலர்களின் கலையாக இருக்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடர வேண்டும், கொள்முதலும் நீடிக்க வேண்டும், விவசாயிகள் – நுகர்வோர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும், பெரும் பண்ணையார்களின் உள்நோக்கங்களுக்கு அரசு பணிந்துவிடக் கூடாது. இந்தக் கிளர்ச்சி பசுமைப் புரட்சியால் கோடீஸ்வரர்களான பெரும் பண்ணையார்களால் அவர்களுடைய நலனுக்காகவே நடத்தப்படுகிறது.
  • பாஜக அரசுக்கு எதிராக யார் எதற்காகப் போராடினாலும் ஆதரித்தாக வேண்டியது நம் கடமை, அப்படியாவது மோடி ஆட்சி ஒழியட்டும் என்ற நல்லெண்ணத்தில் தீர ஆராயாமல் இந்தக் கிளர்ச்சியை ஆதரிப்பது ‘இந்தியா’ கூட்டணிக் கட்சியின் முடிவாக இருந்தால் என்ன செய்வது? தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.60 கமிஷன் வாங்குவதைத் தடுக்க முடியவில்லை, மின் இணைப்பு கோரினால் கையூட்டு கேட்பதை ஒழிக்க முடியவில்லை, தீர திட்டமிடாமல் கொண்டுவந்த உழவர் சந்தை தோற்றுவிட்டதை மீண்டும் சீர்படுத்த முடியவில்லை.
  • இந்த நிலையில், கொள்முதல் விலைக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் தந்தாலும் சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்குப் பெரிய லாபம் ஏற்பட்டுவிடாது என்ற உண்மையையும் அறிவது நல்லது. உழுபவர்களுக்கே நிலம் சொந்தம் என்பதை உண்மையாக அமல்படுத்தவும், நிலத்தில் இறங்கி பாடுபடாதவர்களுக்குச் சொந்தமாக நிலங்கள் கூடாது என்ற முற்போக்கு அம்சங்களையும் சேர்த்து வலியுறுத்துவது பயன் தரும். ‘தில்லி முற்றுகை விவசாயிகள்’ ஆதரிப்பார்களா.

நன்றி: அருஞ்சொல் (29 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories