TNPSC Thervupettagam

குறைந்து வரும் சாகுபடிப் பரப்பு: தமிழ்நாட்டுக்கு எச்சரிக்கை மணி

November 29 , 2024 47 days 90 0

குறைந்து வரும் சாகுபடிப் பரப்பு: தமிழ்நாட்டுக்கு எச்சரிக்கை மணி

  • தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் எல்லாப் பயிர்களின் சாகுபடிப் பரப்பளவும் பெரும் சரிவைக் கண்டிருக்கிறது. 1970-71இல் 61.89 லட்சம் ஹெக்டேராக இருந்த பயிரிடும் மொத்தப் பரப்பளவு 2018-19 இல் 45.82 லட்சம் ஹெக்டேராகக் குறைந்திருக்கிறது. இதே 50 வருடங்களில் தமிழ்நாட்டில் தரிசு நிலம் 15.38 லட்சம் ஹெக்டேரிலிருந்து 29.78 லட்சம் ஹெக்டேராக இரட்டிப்பாகியுள்ளது. அகில இந்திய அளவில் இந்த வருடங்களில் தரிசு நிலங்கள் 36.38 சதவீதமே உயர்ந்துள்ளன.
  • தமிழ்​நாட்டின் மொத்தப் பொருள் உற்பத்​தியில் (Gross State Domestic Product) / மொத்த வருவாயில் (State Income) விவசாயத் துறையின் பங்கு 1950இல் 56 சதவீதமாக இருந்து 1980இல் 36 சதவீத​மாகக் குறைந்தது; 2000இல் இது 17 சதவீத​மாகி, 2021ல் 13% என்றாகி​விட்டது. தமிழ்நாடு விரைவான பொருளாதார வளர்ச்​சியைக் கொண்டிருந்​தா​லும், விவசாயத் துறையானது உற்பத்தித் திறனை முழுமை​யாகப் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்​பட்​டிருக்​கிறது. இது மொத்த உற்பத்​தியின் வளர்ச்​சி​யையும் மட்டுப்​படுத்​தி​இருக்​கிறது.

உணவு தானியச் சாகுபடிச் சரிவு:

  • 1980களில் சராசரியாக ஆண்டுக்கு 42.39 லட்சம் ஹெக்டேராக இருந்த உணவு தானியச் சாகுபடிப் பரப்பளவு, 2010களில் 39.6 லட்சம் ஹெக்டேர் என மாற்றம் கண்டது. சராசரி​யாகக் கணக்கிட்​டாலும் 1980இலிருந்து 2017 வரை உணவு தானியச் சாகுபடிப் பரப்பளவு ஆண்டுக்கு 38 லட்சம் ஹெக்டேராக இருந்​துள்ளது. இதனால் ஏற்பட்​டுள்ள உணவு தானிய உற்பத்தி இழப்பு வருடத்​துக்குச் சுமார் 7 லட்சம் டன் எனக் கணிக்​கலாம்.
  • பயிர்ப் பரப்பளவின் தொடர் சரிவு தமிழ்​நாட்டின் ஊரக வேலைவாய்ப்​பையும் பாதித்​துள்ளது. 1970இல், 60% தொழிலா​ளர்கள் (மொத்தம் 1.51 கோடி தொழிலா​ளர்​களில் 91 லட்சம் பேர்) விவசாயத் துறையில் வேலை செய்தனர். இந்த நிலை, 2017இல் 42% (3.28 கோடி பேரில் 1.39 கோடி பேர்) எனவும் குறைந்​து​விட்டது.
  • உணவு தானியங்​களின் சாகுபடிப் பரப்பளவும் உற்பத்​தியும் பரிசீலனைக்கு உள்பட்ட காலக்​கட்டத்தில் எதிர்​மறையான வளர்ச்சி விகிதத்தை வெளிப்​படுத்​தியதாக ஆய்வில் தெரிய​வந்​துள்ளது. தானிய வகைகளில் நெல், உளுந்து, கேழ்வரகு போன்ற​வற்றின் சாகுபடிப் பரப்பள​விலும், நெல் தவிர மேற்குறிப்​பிட்ட பயிர்​களின் உற்பத்​தி​யிலும் வளர்ச்​சியில் சரிவு காணப்​பட்டது. மற்ற தானியங்​களுடன் ஒப்பிடு​கையில் மக்காச்​சோளத்தில் சாகுபடிப் பரப்பள​விலும் உற்பத்​தி​யிலும் உறுதியற்ற தன்மை அதிகமாகக் காணப்​பட்டது.

பயிர்ப் பரப்பளவு ஏன் குறைகிறது?

  • பொதுவான, பருவமழை குறைவு, வெள்ளம், வறட்சி ஆகியவை பயிரிடும் பரப்பைக் குறைக்கும் காரணி​களாகச் சொல்லப்​படு​கின்றன. விவசா​யத்தில் லாபம் குறைந்​துள்ள​தால், சிறு விவசா​யிகள் விவசா​யத்தை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்​பட்​டுள்​ளனர். இவர்கள் பெரும்​பாலும் அண்டை நகர்ப்பு​றங்​களில் கட்டு​மானப் பணிகள் போன்ற வேலைகளுக்குச் சென்று​விடு​கின்​றனர். இவர்களின் பயிர் நிலங்கள் தரிசு நிலங்​களாகி​விடு​கின்றன.
  • தமிழ்​நாட்டில் கால்வாய்ப் பாசனம் குறைந்​துள்ளது, பயிர் சாகுபடி வீழ்ச்​சிக்கு ஒரு முக்கியக் காரணமாகும். கால்வாய்ப் பாசனம் 1960-63இல் 9.03 லட்சம் ஹெக்டேராக இருந்து, 2014-17இல் 6.22 லட்சம் ஹெக்டே​ராகக் குறைந்​திருக்​கிறது. இதேபோல், குளத்துப் பாசனமும் இதே வருடங்​களில், 9.41 லட்சம் ஹெக்டேரிலிருந்து 3.69 லட்சம் ஹெக்டே​ராகக் குறைந்​திருக்​கிறது.
  • 1960, 1970களில், இந்தியாவின் மொத்தக் கால்வாய்ப் பாசனப் பரப்பளவில் தமிழ்நாடு 11% பரப்பளவைக் கொண்டு நாட்டின் முதன்​மையான மாநிலமாக இருந்தது. இந்த நிலை 2014-17இல் 3.4% என்றாகி​விட்டது. வேறெந்த மாநிலத்​திலும் இந்த அளவுக்குச் சரிவு ஏற்பட​வில்லை என்பது கவனிக்​கத்​தக்கது. நீர்வளத்​துக்கான நிலைக்​குழு, தனது 16ஆவது அறிக்கையில் குளங்​களில் ஆக்கிரமிப்புகள், முறையான பராமரிப்பு இல்லாதது ஆகியவை குளத்துப் பாசனப் பரப்பளவு குறைந்​து​விட்​டதற்குக் காரணங்​களாகச் சொல்லப்​பட்​டிருக்​கிறது. பருவமழை குறைவி​னால்தான் பாசனப் பரப்பளவு குறைகிறது என்ற பொதுவான கருத்தை இந்தத் தரவுகள் வலுவிழக்​கவைக்​கின்றன.

நிலத்தடி நீர் குறையும் அபாயம்:

  • கால்வாய்ப் பாசனம் குறைந்​த​தால், விவசா​யிகள் நிலத்தடி நீர்ப்​பாசனத்தை அதிகமாகச் சார்ந்​திருக்கும் நிலைக்குத் தள்ளப்​படு​கிறார்கள். மேற்சொன்ன காலக்​கட்​டத்​தில், நிலத்தடி நீர்ப் பாசனம் 6.02 லட்சம் ஹெக்டேரிலிருந்து 18.53 லட்சம் ஹெக்டேராக உயர்ந்​துள்ளது. நிலத்தடி நீர்ப் பாசனம் உற்பத்திச் செலவை அதிகப்​படுத்து​கிறது; இதனால் விவசா​யிகளின் வருமானமும் குறைந்​து​வரு​கிறது.
  • நிலத்தடி நீரின் தீவிரப் பயன்பாட்​டினால் நிலத்தடி நீர்மட்டம் பல மாவட்​டங்​களில் அபாயகரமான அளவுக்குக் கீழே போய்விட்டது. மத்திய நீர் ஆணையத்தின் மதிப்​பீட்​டின்படி, தமிழ்​நாட்​டில், திருப்பூர் (88%), திருவண்ணாமலை (85%), தருமபுரி (83%), கோவை (82%) உள்ளிட்ட 17 மாவட்​டங்​களில் அதிகமான நிலத்தடி நீர் எடுக்​கப்​பட்​டிருக்​கிறது.
  • தமிழ்நாடு நிலத்தடி நீர் (வளர்ச்சி - மேலாண்மை) சட்டம் (2003) 2013இல் ரத்து செய்யப்​பட்​டுள்ளது. இதற்குப் பதிலாக நிலத்தடி நீரை ஒழுங்​குபடுத்தும் வேறு சட்டம் இயற்றப்​பட​வில்லை. ஜூன் 1, 2019 முதல் நடைமுறைக்கு வந்துள்ள மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் திருத்​தப்பட்ட வழிகாட்டு​தல்களை 2023ஆம் ஆண்டு நிலவரப்படி தமிழ்நாடு செயல்​படுத்​தவில்லை.
  • விவசா​யத்​திலிருந்து கிடைக்கும் வருமானத்தின் நிச்சயமற்ற நிலையால் விவசாய நிலங்கள் விற்கப்​படுவது அதிகரித்​துக்​கொண்​டிருக்​கிறது. நபார்டு வங்கியின் 2016-17இன் ஆய்வின்படி, தமிழ்​நாட்டில் ஒரு விவசாயக் குடும்பத்தின் மாத வருமானம் ரூ.9,975 ஆகும். இது ஒப்பீட்​டளவில் பல மாநிலங்​களைவிட மிகக் குறைவு.

தொலைநோக்குச் செயல்பாடு தேவை:

  • 1980-81 முதல் 2017-18 வரையிலான காலக்​கட்​டத்​தில், தமிழ்​நாட்டில் உணவு தானியம் பயிரிடும் பரப்பளவும் உற்பத்​தியும் குறைந்து நிலையற்ற தன்மையைக் காண்பிக்​கிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. விவசாய வேலைவாய்ப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தி இரண்டும் காலப்​போக்கில் குறைந்​து​ வந்​தா​லும், நாட்டின் பொருளா​தா​ரத்தின் முதுகெலும்பாக அதன் முக்கி​யத்துவம் குறைய​வில்லை.
  • 1951ஆம் ஆண்டில், இந்தியாவின் முதல் ஐந்தாண்டுத் திட்டம் தொடங்​கப்​பட்​ட​போது, நாட்டின் மக்கள்தொகை 36.1 கோடியாக இருந்தது; உணவு தானிய உற்பத்தி 5.08 கோடி டன்னாக இருந்தது. 2011இல், மக்கள்தொகை 121 கோடி; உணவு தானிய உற்பத்தி 25.74 கோடி டன். ஆக, 1951 - 2011 காலக்​கட்​டத்தில் மக்கள்தொகை 3.4 மடங்கும், உணவு தானிய உற்பத்தி தோராயமாக 5.1 மடங்கும் அதிகரித்​துள்ளன.
  • தமிழ்​நாட்டில் மக்கள்தொகை 1951இல் 3 கோடியாக இருந்து, 2011இல் 7.2 கோடியாக வளர்ந்​துள்ளது. அதே வருடங்​களில் உணவு தானிய உற்பத்தி 46 லட்சம் டன்னிலிருந்து 1.02 கோடி டன்னாக அதிகரித்தது. இது, மக்கள்​தொகையில் 2.4 மடங்கு அதிகரிப்​பை​யும், உணவு தானிய உற்பத்​தியில் 2.2 மடங்கு உயர்வையும் குறிக்​கிறது. இதிலிருந்து, அனைத்​திந்திய அளவுகளுடன் ஒப்பிடும்போது தமிழ்​நாட்டில் மக்கள்​தொகைப் பெருக்​கத்​தைவிட உணவு தானிய உற்பத்தி அதிகரிப்பு குறைவாக உள்ளது என்பது தெளிவாகிறது.
  • பயிரிடும் பரப்பளவும் உணவு தானிய உற்பத்​தியும் தொடர்ந்து குறைந்​து​கொண்டே போனால், ஒருகட்​டத்தில் தேவைக்​கேற்ற உணவு தானிய உற்பத்தி இல்லாமல், அத்தி​யா​வசியப் பொருள்களின் விலை அதிகரிக்​கும். இது ஏழை, நடுத்தர மக்களைக் கடுமை​யாகப் பாதிக்​கும். இந்த வகையில், விவசா​யத்தின் மெதுவான வளர்ச்சியை தமிழ்நாடு உடனடி கவனம் செலுத்தி வேகப்​படுத்த வேண்டியதன் தேவையை வலியுறுத்து​கிறது. இந்த உண்மையை அரசும் வேளாண் வளர்ச்சி தொடர்​பாகத் திட்ட​மிடு​பவர்களும் கவனத்தில் கொண்டு செயல்​படுவது மிக அவசியம்.

நன்றி: இந்து தமிழ் திசை (29 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories