TNPSC Thervupettagam

குறையும் கருவுறுதல் விகிதம்

May 22 , 2024 227 days 398 0
  • மக்கள்தொகையில் உலக அளவில் இந்தியா முதலிடத்துக்கு வந்துவிட்டது பழைய செய்தி. ஆனால், இந்தியாவில் மக்கள்தொகையின் வளர்ச்சிவிகிதம் முன்பை விடக் குறைவு என்பது பலரும் கவனிக்கத் தவறும் புதிய செய்தி. கருவுறுதல் விகிதம் (total fertility rate) உலக அளவில் குறைந்திருப்பினும், இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் தீவிரமாகக் குறைந்திருப்பது, மக்கள்தொகை வளர்ச்சியில் நிலைத்தன்மையோடு இருந்த அவற்றின் போக்கில் மிகவும் முரணான நிகழ்வு என்றே சொல்ல வேண்டும்.

வரையறை என்ன?

  • ஒரு பெண் தன் வாழ்நாளில் சராசரியாக எத்தனை குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார் என்பதே கருவுறுதல் விகிதம். இதனுடன் தொடர்புடைய சொல்லான ‘பதிலீடு விகிதம்’ (replacement level), ஒரு நாட்டில் தற்போது வாழும் குடிமக்கள் மறையும்போது அதை நிரப்பத் தேவையான மக்கள்தொகை விகிதத்தைக் குறிக்கிறது. ஆசிய நாடுகளில் இந்த விகிதம் வீழ்ச்சி அடைந்துவருகிறது.
  • வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் எவால்யுவேஷன் என்கிற அமைப்பு, உலக அளவில் உடல்நல இழப்பு குறித்த தரவுகளைத் திரட்டுகிறது. உலக அளவிலான நோய்ச்சுமை குறித்த ஆய்வு என்கிற பெயரில் இவை வெளியிடப்படுகின்றன.
  • ‘லான்செட்’ மருத்துவ ஆய்விதழில் அண்மையில் வெளியான ஆய்வு முடிவுகள், ஆசிய நாடுகளில் கருவுறுதல் விகிதம் குறைந்திருப்பதை நிறுவுகின்றன.

இலக்குக்கும் கீழே சென்ற விகிதம்:

  • கருவுறுதல் விகிதம் இந்தியாவில் 1950இல் 6.2ஆக இருந்தது. ஒரு பெண் சராசரியாக 6க்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக்கொள்பவராக இருந்தார். தேசியக் குடும்ப நல ஆய்வின் ஐந்தாம் சுற்று ஆய்வு, 2022இல் சில தரவுகளை வெளியிட்டது.
  • இந்தியா முழுவதும் 707 மாவட்டங்களில் 6.37 லட்சம் குடும்பங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, இந்தியாவில் கருவுறுதல் விகிதம் 2015-2016இல் 2.2ஆக இருந்து, 2019-2021இல் 2க்கும் கீழே சென்றுவிட்டது. 2050இல் கருவுறுதல் விகிதம் 1.29ஆகக் குறையும் என அஞ்சப்படுகிறது.
  • ஒரு நாட்டில் கருவுறுதல் விகிதம் 2.1ஐவிடக் குறைவாக இருந்தால், ஒரு தலைமுறையில்இருந்து அடுத்த தலைமுறை தொடர்வதற்குத் தேவையான குழந்தைகளைப் பெற முடியவில்லை என ஐநா அவை வரையறுக்கிறது. கருவுறுதல் விகிதம் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் குறைக்கப்பட்டது.
  • இந்தியாவில் மக்கள்தொகை விகிதத்தைக் குறைக்கும் நோக்கில் 2.1 என்பது இலக்காக முன்பு கொள்ளப்பட்டது. இது இலக்கைவிடக் குறைவான நிலையைத் தற்போது அடைந்திருப்பதே கவலைக்குரியதாக உள்ளது.

தாக்கம் செலுத்தும் காரணிகள்:

  • இந்தியாவில் கிராமப்புறப் பெண்களிடையே கருவுறுதல் விகிதம் 2.1ஆகவும் நகரங்களில் 1.6 விகிதமாகவும் காணப்படுகிறது. கல்வியறிவும் இதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பள்ளிப் படிப்பு உடைய பெண்களின் கருவுறுதல் விகிதம் 2.8ஆகவும் பள்ளிப் படிப்புக்கு மேல் படித்த பெண்கள் 1.8 கருவுறுதல் விகிதத்தையும் கொண்டிருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.
  • பொருளாதார வசதியில் உயர்ந்த பெண்களைவிட, ஏழ்மையான பெண்களிடையே கருவுறுதல் விகிதம் அதிகமாகக் காணப்படுகிறது. ஏழ்மையான நிலையில் உள்ளவர்கள் 2.6 விகிதத்தையும் நடுத்தர வசதி உள்ளவர்கள் 1.9 விகிதத்தையும் அதிகப் பொருளாதார வசதி கொண்டவர்கள் 1.6 விகிதத்தையும் கொண்டுள்ளனர்.

ஆசிய நாடுகளின் நிலை:

  • சீனா 1980களில் பின்பற்றிய கடுமையான குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளால் கருவுறுதல் விகிதம் வீழ்ச்சி அடைந்தது. இதையடுத்து இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என 2020இலும் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என 2021இலும் சீனா அறிவித்திருக்கிறது. தென் கொரியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளும் ‘ஒரு குழந்தை போதும்’ என முன்பு பரப்புரை செய்தன.
  • தென் கொரியாவில் பெண்களிடம் தோன்றிய எதிர்ப்புணர்வு, கருவுறுதல் விகிதம் குறைந்ததற்கு இன்னொரு காரணம். வீடு, அலுவலகம் இரண்டிலும் அதிக வேலைகளில் ஈடுபடுத்தப்படும் நெருக்கடியில்இருந்து விடுபட குழந்தைப் பேற்றைப் பெண்கள் தவிர்த்தனர். இந்தப் போக்கு ‘திருமணம் வேண்டாம்’ என்கிற மறைமுக இயக்கமாகவே மாறியது.
  • இது கருவுறுதல் விகிதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை உணர்ந்த தென் கொரிய அரசு, திருமணம் செய்துகொள்ளவும் குழந்தை பெற்றுக்கொள்ளவும் ஊக்குவித்து வருகிறது.
  • ஆசிய நாடுகள் கருவுறுதல் விகிதத்தை அதிகரிப்பதற்குத் தற்போது உதவித்தொகை அளிக்கின்றன. வீட்டு வாடகைக்கு அதிகத் தொகை ஒதுக்கி வைக்குமளவுக்கு ஹாங்காங்கில் செலவு அதிகம். குழந்தையை வளர்க்கத் தேவையான குறைந்தளவு வீட்டு வசதிகூட அமைவது மக்களுக்குக் கடினமாக இருக்கிறது.
  • இது குழந்தைப் பிறப்பில் பாதிப்பு ஏற்படுத்துவதைக் கண்ட அரசு நிர்வாகம், பிறக்கும் குழந்தைக்காக மானிய வாடகையில் வீட்டை ஏற்பாடு செய்து தருகிறது. சிங்கப்பூரில் பிறக்கும் குழந்தைக்காகச் சேமிப்புக் கணக்கை அரசே உருவாக்கித் தருகிறது. ஜப்பானில் குழந்தை உயர்கல்விப் பருவத்தை அடையும்வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் நிலை:

  • 1992-1993இல் வெளியான முதல் தேசியக் குடும்ப நல ஆய்வு, தமிழ்நாட்டில் உள்ள பெண்களின் கருவுறுதல் விகிதம் 2.5 எனப் பதிவு செய்தது. 2019-2021க்கான தேசியக் குடும்ப நல ஆய்வுத் தரவுகளின்படி, தமிழ்நாட்டின் கருவுறுதல் விகிதம் 1.8ஆகக் குறைந்திருந்தது. இது நகர்ப்புறத்தில் 1.6ஆகவும் கிராமப்புறத்தில் 1.9ஆகவும் உள்ளது. 2015-2016க்கான ஆய்வுத் தரவில் சுட்டப்பட்ட 1.7 என்ற விகிதத்தைவிட, அடுத்த ஆய்வில் இது சற்று அதிகரித்துள்ளது.

தீர்வுகள்:

  • வீட்டு வேலைகளை இரு பாலினருக்கும் பொதுவானதாக நினைக்கும் மனநிலையை ஆண்களிடம் ஏற்படுத்துவது அவசியம்; இதன் மூலம் குழந்தை வளர்ப்பு பெண்களுக்குச் சுமையாக மாறும் சூழல் தவிர்க்கப்படும் என நல்வாழ்வுத் துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
  • படிப்பு, வேலை போன்றவற்றால் வாழ்க்கை முறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடம் போதுமான உடல் உழைப்பு இல்லாததால் குழந்தைப்பேற்றுக்குத் தகுதியில்லாதவர்கள் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. மோசமான பணியிடச் சூழல், சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவையும் கருவுறுதல் விகிதத்தைப் பாதிக்கின்றன.
  • பணியிடங்களில் தொழிலாளர்களுக்கு வேலைநேரம், விடுப்பு தொடர்பான உரிமைகள் மதிக்கப்படும்போது, அவர்களது குடும்ப வாழ்க்கைத்தரமும் மேம்படுகிறது. உதாரணமாக, காவல் துறையில் பணியாற்றும் பெண்கள் ஒரு குழந்தை பெற்றுக்கொள்வதே முன்பு கடினமாக இருந்தது. அவர்களுக்குப் பேறுகால விடுமுறை அதிகரிக்கப்பட்ட பிறகு, இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்வோர் அதிகரித்துள்ளனர்.

நன்றி: இந்து தமிழ் திசை (22 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories