TNPSC Thervupettagam

குற்றமும் தண்டனையும்

January 25 , 2024 215 days 374 0
  • உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்தக் குற்றங்களுக்கான தண்டனைகள் காலம்தோறும், நாடுகள்தோறும் மாறுபடுவதைப் பார்க்கிறோம். குற்றம் புரியாத மனிதர்கள் யாருமில்லை. அதனால்தான் பொதுஇடத்தில் தவறு செய்த பெண்ணைக் கல்லால் அடித்துக் கொல்ல முனைந்தபோது யேசுபிரான், ‘உங்களில் குற்றமே செய்யாதவர்கள் இவர்மீது முதல் கல்லெறியட்டும்என்று அந்தப் பெண்ணுக்காகப் பேசினார்.
  • நாடுகள்தோறும் தண்டனைகள் மாறுபடு கின்றன. நாகரிகத்தில் உயர்ந்துவிட்டதாக நாம் நம்பிக்கொண்டிருக்கும் நாடுகளின் சட்டதிட்டங்கள் பிற்போக்குத்தனமாக இருக்கின்றன. சாட்டையால் அடிப்பது, பிரம்பால் அடிப்பது, பொதுஇடங்களில் மக்கள் முன்னிலையில் மரண தண்டனைகளை நிறைவேற்றுவது என்பன அவற்றுள் சில. அண்மையில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் ஒருவரை, ஒரு நாடு மக்கள் முன்னிலையில் சுட்டுக் கொன்றது உலகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • அண்மைக் காலமாக மரண தண்டனைக்கு எதிராக உலகெங்கும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துவருகின்றன. சிறைச்சாலைகளைச் சீர்திருத்தச் சாலைகளாக மாற்றும் கருத்து முன்வைக்கப்படுகிறது. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்கிற பழிவாங்கும் அடிப் படையில் அமையும் அரசாங்க தண்டனைகள் அரச வன்முறையாகவே பார்க்கப்படுகின்றன.
  • குற்றங்களையும் தண்டனைகளையும் குறித்து நாம் கொண்டிருக்கும் பார்வையை, மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கைச் சம்பவங்களின் பின்னணியில் மறுபரிசீலனை செய்தல் தகும்.
  • ஆங்கிலேய அரசு மக்களை வஞ்சிப்பதாகக் கூறி, கடுமையான சொற்களால் அரசை விமர்சித்த கட்டுரைகளுக்காக காந்தி கைது செய்யப்பட்டு நீதிபதியின் முன்னால் நிறுத்தப்பட்டார். அவர்மீது அரசு நிந்தனைக் குற்றம் சுமத்தப்பட்டது.
  • ஜஸ்டிஸ் புரூம் ஷீல்டு காந்தி மீது மிகுந்த மரியாதை கொண்டவர். அவர் காந்தியைப் பார்த்து இந்தக் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்கிறீர்களா என்று கேட்டார். ஆம், நூற்றுக்கு நூறு ஒப்புக்கொள்கிறேன் என்றார் காந்தி. ஆனால், புரூம் ஷீல்டு, “நீங்கள் மக்களால் மகாத்மா என்று அழைக்கப்படுபவர். ஒரு தத்துவஞானியாகவே மக்கள் உங்களைப் பார்க்கிறார்கள். நீங்கள் எழுதியது குற்றமல்லவா?” என்று கேட்டார்.
  • காந்திஜி தாம் எழுதிய கட்டுரையை நீதிபதிக்கு வாசித்துக் காண்பித்துவிட்டு, “நீதிபதி அவர்களே, உங்களுக்கு முன் இரண்டு விருப்பத் தெரிவுகள் உள்ளன. என் கட்டுரையின் கருத்துகள் ஏற்புடையவை என்றால், ஒன்று நீங்கள் நீதிபதி பதவியிலிருந்து கீழிறங்க வேண்டும். அல்லது அரசு இந்தக் குற்றத்துக்கு விதித்துள்ள உச்சபட்ச தண் டனையை எனக்கு வழங்க வேண்டும். நீதிபதி, “நான் சட்டப்படிதான் செயல்பட்டாக வேண்டும். ஆகவே உங்களுக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கிறேன்என்றார்.
  • இந்தத் தண்டனை ஏதேனும் காரணங் களால்உங்களுக்குக் குறைக்கப்பட் டால் உங்களை விட நான்தான் அதிக மகிழ்ச்சி அடைவேன்என்றும் கூறினார். அவர் கூறியபடியே சிறிது காலம் கழித்து காந்தியின் சிறைத் தண்டனை குறைக்கப் பட்டது. விடுதலையான பிறகும் ஆறு ஆண்டு தண்டனைக் காலத்தில், தாம் அனுபவிக்காத தண்டனைக் காலத்தில் காந்தி எவ்வித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் விலகிவிட்டார்.
  • அதற்குப் பதிலாக கிராமங்கள்தோறும் சென்று மக்களைச் சந்திப்பது, ஒடுக்கப்பட்டோரின் கல்வி மேம்பாட்டிற்கு உழைப்பது என்று தன் தண்டனைக் காலத்தை நிறைவு செய்தார். ஆங்கில அரசு மட்டுமன்றி அகில உலகமே கண்டு அதிசயித்த நிகழ்வு இது.

சாமுவேல் ஜான்சன் மழையில் நனையும் ஓவியம்

  • சிறுவயதில் தான் செய்த குற்றத்திற்கு எண்பது வயதில் பிராயச்சித்தம் தேடிய எழுத்தாளர் உண்டு. ஆங்கில எழுத்தாளர் சாமுவேல் ஜான்சன் அப்போது சிறுவன். அவரது தந்தை அந்த நகரின் சந்தையில் ஒரு பழைய புத்தகக் கடை வைத்திருந்தார். ஒருமுறை காய்ச்சல் காரண மாக அவரால் கடைக்குப் போக முடியவில்லை.
  • அன்று ஒருநாள் மட்டும் கடையைக் கவனித்துக் கொள்ளும்படி சாமுவேல் ஜான்சனைக் கேட்டுக்கொண்டபோது, முடியாது என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார் ஜான்சன். இதை நினைத்து பின்னாளில் சாமுவேல் ஜான்சன் அடிக்கடி வருந்துவதுண்டு. அவரது வாழ்க்கை வரலாற்றை பாஸ்வெல்லிடம் கூறும்போது, இந்தச் சம்பவத்தைக் கண்ணீர்மல்க விவரித்திருக்கிறார்.
  • ஒருநாள் சட்டென்று தாம் குடியிருந்த நகரம் நோக்கிப் புறப்பட்டுவிட்டார். மழை விடாது பெய்துகொண்டிருந்தது. நகரத்தில் சந்தை இருந்த இடம் இடிபாடுகளாகக் காட்சி அளித்தது. அங்கு தந்தை வைத்திருந்த பழைய புத்தகக் கடையின் இடம் மண்மேடாக இருந்தது. அந்த மண்மேட்டின் மீது கொட்டும் மழையில் நீண்ட நேரம் நின்றுவிட்டு வீடு திரும்பினார். கடுமையான சளியும் மூச்சுத் திணறலும் வந்து அவதிப்பட்டார். ஆனால், தான் செய்த குற்றத்துக்குச் செய்த பிராயச்சித்தம் அவருக்கு மனநிறைவு தந்தது என்கிறார் பாஸ்வெல்லிடம்.
  • தஞ்சையில் மராட்டிய மன்னர்கள் ஆட்சியின்போது மக்கள் செய்த சிறிதும் பெரிதுமான குற்றங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் குறித்த செய்திகளை பேராசிரியர் கே.எம்.வேங்கடராமையா, மோடி ஆவணக் குறிப்புகளிலிருந்து தொகுத்துள் ளார். (தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு - 11, 1984)

சிறிய குற்றங்களும் தண்டனைகளும்

  • அரிசி விற்பவர் நனைந்து போன அரிசியை விற்றார்.
  • கோயிலில் சுவாமிக்கு அழுக்குத்துண்டு கட்டப்பட்டிருந்தது.
  • ஒருவர் யானைக்குப் பழைய வெல்லம் கொடுத்தார்.
  • ஒருவர் மாடுகளை அகழியில் மேய்த்தார்.
  • பாராக்காரர் தூங்கிவிட்டார்.
  • மணியைச் சரியாக அடிக்க வில்லை.
  • இத்தகைய குற்றங்களுக்கு ஒரு சக்கரத்துக்குக் குறைவான தொகை அபராதமாக விதிக்கப்பட்டது.
  • சிவகங்கை குளத்தில் குடங்களை அலம்பியதால் குடி தண்ணீரின் தூய்மையைக் கெடுத்த பெண்களுக்குசக்கரம் அபராதம் விதிக்கப்பட்டது. தீர்ப்புகளைத் தம்பட்டம் அடித்துத் தெரிவிக்கும் முறை இருந்தது.
  • தண்டனைகளில் பல வகைகள் காணப்பட்டன. அபராதம் விதித்தல், தேங்காய் இத்தனை என்று வசூலித்தல், விலங்கிட்டு வேலை வாங்கிக்கொண்டு அடித்துக் கோட்டைக்கு வெளியே விட்டு விடுதல், சிறையிலடைத்தல் என்பன சில.

சாதிக்கொடுமை அந்நாளில் இருந்தது

  • பஞ்சு வஸ்தாது என்று ஒருவர் இருந்தார். அவர் ஜாதிப்பிரஷ்டம் செய்யப்பட்டவர் என்று கூறி சாப்பாட்டு வரிசையில் உட்காரவைத்துக்கொள்ளவில்லை. இது சர்க்காருக்குத் தெரிவிக்கப்பட்டது. சர்க்கார் சம்பந்தப்பட்டவர்களுக்குக் கடுமையான தண்டனை விதித்தது.
  • அந்த நாளில் தீர்ப்புக் கூறியவர்கள் சரஸ்வதி பண்டாரத்திலிருந்து (சரசுவதி மஹால்) சாத்திரம் வல்லாரைக் கேட்டு அறிந்து தீர்ப்பு வழங்கினர். விஞ்ஞானேசுவரீயம் முதலான கிரந்தங்களைப் பார்த்து, தீர்ப்புகள் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.

மராட்டிய காலத்திலும் மனுநீதி

  • வீரவாகு என்கிற வண்டிக்காரர் தம்பி மகன் வண்டி ஓட்டிச் சென்றார். அவருக்கு வயது 18. வண்டியோடு வீரவாகு வந்து கொண்டிருந்தார். வண்டி 4 மாதக் காளைக்கன்றின் மேலே ஏற, கன்று இறந்தது. இந்தக் குற்றத்திற்கு 1 சக்கரம் 2 பணம் அபராதம் கன்றுக்குட்டியின் சொந்தக்காரருக்குக் கொடுக்க வேண்டும்.
  • இதுபோன்ற மற்றொரு வழக்கில் கன்றுக்குட்டியை வண்டி ஏற்றிக் கொன்றவர் சொத்தைப் பறிமுதல் செய்து, நெற்றியில் முத்திரை இட்டுத் தமுக்கு அடித்து கோட்டைக்கு வெளியே துரத்தி விடுவது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மகன் ஊர்ந்து வந்த தேரில் அகப்பட்டு கன்றுக்குட்டி இறந்ததற்கு, மகனையே தேர்க்காலில் கிடத்திக் கொன்ற மனுநீதிச் சோழன் நினைவில் நிழலாடுகின்றார்.

நன்றி: இந்து தமிழ் திசை (25 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories