TNPSC Thervupettagam

குலசேகரபட்டின முக்கியத்துவம் என்ன

March 2 , 2024 143 days 224 0
  • பிரதமர், 2024 பிப்ரவரி 28 அன்று இஸ்ரோ தலைவர் சோமநாத் முன்னிலையில் குலசேகரபட்டினத்தில், இந்தியாவின் இரண்டாவது விண்வெளி ஏவுதளக் கட்டுமானத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். இதன் தொடர்ச்சியாக ஆர்ஹெச்-200 (RH200) ரோகிணி சவுண்டிங் ராக்கெட் எனப்படும் வளிமண்டல ஆய்வு ஏவூர்தியை ஏவி சோதனையோட்டம் செய்தார்கள். அடுத்த சில ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வர இருக்கும் இந்த ஏவுதளம் விண்வெளி வாணிபத்தில் புதிய மைல்கல்லைப் பதிக்கும் எனக் கருதுகிறார்கள்.
  • ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள ஏவுதளத்துக்கு அடுத்தபடியாக குலசேகரபட்டினத்தில் இரண்டாவதாக ஏவுதளம் அமைக்கப்படும். சிறிய செயற்கைக்கோள் ஏவுகலத்தை (Small Satellite Launch Vehicle - SSLV) மட்டுமே ஏவும் வசதிகொண்ட இந்த ஏவுதளத்திலிருந்து செலவு குறைவாகச் சிறு, குறு, மைக்ரோ, நானோ வகை செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ முடியும்.
  • தொலையுணர்வு, டிஜிட்டல் தகவல் பரிமாற்றம், பயணவழிதடமறிச் செயலிகள் போன்ற வணிக பயன்பாடுகளுக்கு இந்தச் சிறு செயற்கைக்கோள்கள் உதவும். ஆண்டுதோறும் உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, மைக்ரோ, நானோ செயற்கைக்கோள்களை ஏவ தேவையுள்ளது என மதிப்பீடு செய்துள்ளார்கள்.
  • செலவு குறைந்த வகையில் இந்தவகை சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் திரம் படைத்த சிறிய செயற்கைக்கோள் ஏவுகலத்தை (Small Satellite Launch Vehicle SSLV) ஏவும் விதமாகத்தான் இந்த இரண்டாவது விண்வெளி ஏவுதளம் அமைக்கப்படுகிறது.

தும்பா ஏவுதளம்

  • திருவனந்தபுரத்துக்கு அருகே 1963ஆம் ஆண்டு நவம்பர் 21இல் நிறுவப்பட்ட தும்பா நிலநடுக்கோட்டு ஏவூர்தி ஏவுதளம்தான் (Thumba Equatorial Rocket Launching Station -TERLS) இந்தியாவின் முதல் ஏவூர்தி ஏவுதளம். 
  • உயர் வளிமண்டலத்தின் வானிலை, காஸ்மிக் கதிர்கள் போன்ற ஆய்வு நோக்குடன் வளிமண்டல ஆய்வு ஏவூர்திகளை ஆகாயத்தில் செலுத்தி ஆய்வதுதான் இந்த ஏவுதளத்தின் பணி. பூமியின் வளிமண்டலம், காஸ்மிக் கதிர் ஆய்வுக்குத்தான் இந்த வகை ஏவூர்திகள் பயன்படும். இவற்றால் விண்வெளியில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த முடியாது.
  • மேலே எறிந்த கல், வீசிய விசைக்கு ஏற்ப குறிப்பிட்ட உயரம் செல்லும். பின்னர் கீழே விழுவதுபோல சவுண்டிங் ராக்கெட் எனப்படும் வளிமண்டல ஆய்வு ஏவூர்திகள் குறிப்பிட்ட உயரம் சென்று மறுபடி கீழே விழுந்துவிடும். ஏவூர்தி விசை மூலம் ஆய்வுப் பொதி ஆகாயத்தில் வீசி எறியப்படும். ஆய்வுப் பொதியில் உள்ள கருவிகள் வளிமண்டலத்தின் ஊடே செல்லும்போது தமது பயணப் பாதையில் உள்ள வானிலை தகவல்களையும் காஸ்மிக் கதிர்கள் குறித்தும் தரவுகளைச் சேகரிக்கும்.
  • இந்த ஏவுதளத்திலிருந்து ஆர்ஹெச்-200 (RH-200) வகை ஏவூர்தியை ஏவி சுமார் பத்துக் கிலோ எடை கொண்ட ஆய்வுக் கருவிகள் பொதியைச் சுமார் எண்பது கி.மீ. உயரத்துக்கு எடுத்துச் சென்று ஆய்வுசெய்வார்கள்.  இந்த ஏவுதளத்தைக் கொண்டு விண்ணில் செயற்கைக்கோள்களை நிறுவ முடியாது என்பதால் இதனை விண்வெளி ஏவுதளம் எனக் கொள்வது இல்லை.
  • தும்பாவில் உள்ளதுபோலவே பிருதிவி, தனுஷ், ஆகாஷ் போன்ற சிறு ஏவூர்திகளை ஆகாயத்தில் செலுத்தி ஆய்வுசெய்ய ஒரிசா மாநிலத்தில் பாலசோர் ராக்கெட் ஏவுதளம் (BRLS) உள்ளது.

ஏன் தும்பா?

  • முதலாவதாக பொதுவே கடலோரத்தில்தான் ஏவுதளத்தை அமைப்பார்கள். ஏவுதளத்தைச் சுற்றி ஆபத்து பகுதி இருக்கும். கடலோரத்தில் அமைத்தால் பாதியளவு ஆபத்து பகுதி கடலில் அமையும். எனவே, அவ்வளவு அளவு நிலத்தைக் கையகப்படுத்த வேண்டாம்.
  • இந்த ஏவுதளத்தைப் பொருத்தவரை இது ஆய்வுக்கான ஏவூர்திகளை ஏவும் தளம். எனவே, ஆய்வுக்குப் பொருத்தமாகவும் அமைய வேண்டும்.
  • பூமிக்கு நிலநடுக்கோடு உள்ளதுபோலவே காந்த மண்டல நடுக்கோடும் உள்ளது. பூமியோ சுற்றி வளையம்போல இந்தக் கோடு இருக்கும். புவிக்கந்தப்புல நடுக்கோடு (geomagnetic equator) எனப்படும் இந்தக் கோடு இந்தியாவில் திருவனந்தபுரம் - திருநெல்வேலியை இணைக்கும் கோட்டுக்கு அருகே அமைந்துள்ளது.
  • புவிகாந்தப்புல நடுக்கோட்டுக்கும் சிதம்பரம் - திருனள்ளாறு கோவில்கள் அமைவிடங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை கவனிக்கவும். இந்தக் கோவில்கள் புவிகாந்த மையத்தில் உள்ளன என்பது போன்ற சமூக வலைதள செய்திகள் வெறும் புரளிகள், போலிகள் மட்டுமே.
  • பூமியின் நிலநடுக்கோடு நிலையாக இருக்கும். ஆனால், பூமியின் காந்தப்புலம் சற்றே அங்கும் இங்கும் அலைபாயும் என்பதால் ஆண்டுதோறும் புவிக்காந்தப்புல கோடு சற்றே இங்கும் அங்கும் நகரும். புவிக்காந்தப்புல நடுக்கோடு அலையும் பகுதியில் இந்த ஏவுதளத்தை அமைக்கும் விதமாகத் தும்பா தேர்வுசெய்யப்பட்டது. மேலும் திருநெல்வேலியில் புவிக்காந்தப்புலத்தை ஆய்வுசெய்யும் ஆய்வு நிறுவனமும் ஏற்படுத்தப்பட்டு இன்றும் செயல்படுகிறது.
  • புவியின் நடுக்கோடு நிலையாக இருக்கும், ஆனால் புவிக்காந்தப்புல நடுக்கோடு அங்கும் இங்கும் அலையயும்.1975 முதல் 2005 வரை புவிக்காந்தபுல நடுக்கோடு மேலும் கீழும் அலைந்த பாதையைக் காணலாம்.
  • காஸ்மிக் கதிர் ஆய்வு, உயர் வளிமண்டல ஆய்வு முதலிய மேற்கொள்ள புவிக்காந்தப்புல நடுக்கோட்டுக்கு அருகே ஏவுதளம் வேண்டும். எனவேதான் திருவனந்தபுரத்துக்கு அருவே உள்ள தும்பாவில் இந்த ஏவுதளத்தை நிறுவினார்கள்.
  • 1963, நவம்பர் 21 அன்று இந்த ஏவுதளத்திலிருந்து முதன்முதல் ஏவூர்தி ஆகாயத்தில் சீறிப் பாய்ந்தது. ஆர்ஹெச்-75, ஆர்ஹெச்-100, ஆர்ஹெச்-125, ஆர்ஹெச்-200 (RH-75, RH-100, RH-125, RH-200) எனப் படிப்படியாக ஏவூர்திகளை நாமே உருவாக்கி இந்த ஏவுதளத்தில் பரிசோதனை செய்ய கற்றுக்கொண்டுதான் இறுதியில் விண்வெளியில் செயற்கைக்கோளை நிலைநிறுத்தும் ஆற்றல் கொண்ட எஸ்எல்வியை (SLV) வடிவமைத்தார்கள்.

விண்வெளி ஏவுதளம் அமைய உகந்த இடம் எது?

  • மேலே வீசும் கல்போல ஏவுவதும் விண்வெளிக்குச் செயற்கைக்கோள்களை எடுத்துச் சென்று நிலைநிறுத்துவதும் வேறு வேறு சாவல்கள்.
  • இதில் 2022ஆம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மணிக்கு 157 கி.மீ. வேகத்தில் தன் பலம் முழுவதையும் பயன்படுத்தி உம்ரான் மாலிக் பந்தை வீசி சாதனை படைத்தார். மணிக்கு நூறு கி.மீ. வேகத்தில் செல்லும் புல்லெட்டில் அமர்ந்து அவர் பந்தை வீசியிருந்தால் மணிக்கு 257 (=157+100) கி.மீ. வேகத்தில் அவரால் பந்தை வீசி இருக்க முடியும்.
  • அதேபோல நாம் புத்திசாலித்தனமாக நடந்துகொண்டால், சிறிய மீனை வைத்து பெரிய மீனை பிடிப்பதுபோல பூமியின் சுழற்சி வேகத்தை நமது ஏவூர்திக்கு அளித்து அதன் திறனைக் கூட்ட முடியும்.  மேற்கிலிருந்து கிழக்காகப் பூமி தன்னைத் தானே சுற்றுகிறது. எனவே, ஏவூர்தியைக் கிழக்கு முகமாக விண்ணில் ஏவினால், புல்லெட்டின் வேகம் பந்துக்குக் கிடைப்பதுபோல, பூமியின் சுழல் வேகம் ஏவூர்திக்குக் கிடைத்துவிடும்.
  • நிலநடுக்கோட்டின் மீது பூமி தன்னைத் தானே சுழலும் வேகம் நொடிக்கு 460 மீட்டர். ஆனால், என்பது டிகிரி அட்சரேகையில் சுழல் வேகம் வெறும் நொடிக்கு 81 மீட்டர் மட்டுமே. அதாவது, நிலநடுக்கோட்டுக்கு அருகே ஏவுதளத்தை அமைத்தால் கூடுதல் இலவச உந்து ஆற்றலைப் பெறலாம். எனவேதான், ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ஏவுதளம் ஐரோப்பாவில் இல்லை! தென் அமெரிக்காவின் வட கிழக்குக் கடற்கரையில் நிலநடுக்கோட்டுக்கு வெறும் ஐந்து டிகிரி தொலைவில் அமைந்துள்ள பிரஞ்சு கனாவின் குரோவ் (Kourou) எனும் இடத்தில்தான் ஏவுதளம் உள்ளது.
  • இரண்டாவதாகக் கிழக்கு முகமாகக் கடல் பாலைவனம் என மக்கள் வாழ்விடம் இல்லாத பகுதியாக இருக்க வேண்டும். கட்டுசாதம் கட்டிக்கொண்டு வெளியூர் பயணம் செல்கிறோம் எனக் கொள்வோம். காலை உணவை முடித்துக்கொண்டதும் அந்தப் பொதியைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவோம்தானே. கையில் வைத்து பயணம் முழுவதும் எடுத்துச் செல்வதில்லை.
  • அதேபோல ஏவூர்தியில் ரயில் பெட்டிகளைப் போல ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கடுக்காக எரிபொருளை நிரப்பி அனுப்புவதுதான் ஆற்றல் சிக்கனம். முதல் அடுக்கில் உள்ள எரிபொருள் தீர்ந்துவிட்டால் அதனைக் கழற்றி வீசிவிடலாம். அந்த அளவு எடை குறையும். அவ்வாறு படிப்படியாக எடையைக் குறைத்துக்கொண்டே போனால் குறைவான எரிபொருளைப் பயன்படுத்தி விண்வெளிக்குச் செல்லலாம். எனவேதான், செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் ஏவூர்திகள் மூன்று நான்கு அடுக்கு நிலைகளைக் கொண்டதாக அமையும்.
  • ஒவ்வொரு அடுக்கு எரிபொருள் தீர்ந்த பின்னர் அது கீழே விழும். மக்கள் வாழும் நிலப்பரப்பின் மீது விழுந்தால் ஆபத்து. எனவே, ஒவ்வொரு அடுக்கும் அடுத்தடுத்து கடலில் விழுவதுபோல ஏவூர்தியின் பயணப் பாதையை அமைக்க வேண்டும். எனவேதான், கிழக்கு முகமாகக் கடல் அமைய வேண்டும்.
  • மூன்றாவதாக பிஎஸ்எல்வி - ஜிஎஸ்எல்வி போன்ற பெரிய ஏவூர்திகளை ஏவும்போது ஏவுதளத்தைச் சுற்றி சுமார் இருபது கிலோமீட்டர் சுற்றளவில் ஆபத்து பகுதியாக இருக்கும். இங்கே மனித வாழ்விடங்கள் இருக்கக் கூடாது. (சிறு எவூர்தியான எஸ்எஸ்எல்வி ஏவுதளத்தைச் சுற்றி ஒரு கி.மீ. சுற்றளவு மட்டுமே ஆபத்துப் பகுதி). மேலும் தளவாடங்களை எடுத்துவர, நிபுணர்களின் போக்குவரத்துக்கு முதலியவற்றுக்குச் சாதகமாக அருகே விமானத் தளம், நெடுஞ்சாலை ரயில் போக்குவரத்து முதலியவை தேவை.
  • இவற்றையெல்லாம் கணக்கில்கொண்டுதான் மனிதக் குடியிருப்பு இல்லாத ஸ்ரீஹரிக்கோட்டா தீவைத் தேர்வுசெய்தார்கள். இவையெல்லாம் சேர்ந்துதான் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் குரோவ் விண்வெளி ஏவுதளத்துக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது சிறந்த விண்வெளி ஏவுதளம் என ஸ்ரீஹரிக்கோட்டாவைக் கூறுகிறார்கள்.
  • இதன் தொடர்ச்சியாக 1969இல் ஸ்ரீஹரிக்கோட்டா தீவில் முதல் விண்வெளி ஏவுதளம் அமைக்க முடிவுசெய்யப்பட்டது. 1971 அக்டோபர் 9 அன்று ஆர்ஹெச்-125 (RH-125) ஏவப்பட்டு இந்த மையம் துவக்கப்பட்டது. இங்கிருந்துதான் இந்தியாவின் முதன்முதல் செயற்கைக்கோள் ரோகிணி 1A விண்கலத்தை எஸ்எல்வி-3 மூலம் விண்வெளிக்குச் செலுத்த 1979 ஆகஸ்ட் 10 அன்று முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஏவூர்தியின் இரண்டாம் கட்டம் செயல்படுவதில் கோளாறு ஏற்பட்டு முயற்சி தோல்வியைத் தழுவியது. பின்னர் 1980ஆம் ஆண்டு ஜூலை 18இல் ரோகிணி RS-1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
  • முதலில் எஸ்எல்வி-3 (SLV-3) வகை ஏவூர்திகளைச் செலுத்த எஸ்எல்வி-3 ஏவூர்திச் செலுத்து தளம் (launchpad) உருவாக்கப்பட்டது. பின்னர் மேலும் ஆற்றல் வாய்ந்த பிஎஸ்எல்வி வகை ஏவூர்தி உருவானதும் 1993 முதல் விண்வெளி ஏவூர்திச் செலுத்து தளம் (launchpad) ஏற்படுத்தப்பட்டது. கூடுதல் செயற்கைக்கோள்களை ஏவும் விதமாக இரண்டாவது விண்வெளி ஏவூர்திச் செலுத்து தளம் (launchpad) 2005இல் ஏற்படுத்தப்பட்டது.
  • தற்போது மனிதர்களை விண்ணில் ஏவும் திறன் படைத்த செலுத்து தளமாக இதை மறுவடிவமைப்பு செய்துள்ளார்கள். மனிதர்களை ஏந்தி விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் ககன்யான் திட்டத்தில் இந்தச் செலுத்து தளம் மூலமாகத்தான் ஏவூர்தி ஏவப்படும். இஸ்ரோ தலைவராகத் திகழ்ந்த சதீஷ் தவான் பெயரில் இந்த மையம் தற்போது சதீஷ் தவான் விண்வெளி மையம் என்று அழைக்கப்படுகிறது.

மாறிவரும் விண்வெளி வாணிபம்

  • துவக்கக் காலத்தில் எடை கூடிய பெரிய செயற்கைக்கோள்களை விண்ணில் நிறுவுவதுதான் லாபகரமாக இருந்தது. பத்துப் பதினைந்து டன் எடை கொண்ட இந்தச் செயற்கைக்கோள்கள் இருபது முப்பது ஆண்டுகள் ஆயுள் கொண்டவையாக வடிவமைக்கப்பட்டன. மேலும் பூமியிலிருந்து சுமார் முப்பதாயிரம் கி.மீ. உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டன.
  • சமீபத்தில் இதில் மூன்று பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுவருகிறது. முதலாவதாகச் சமீபத்தில் மின்னணு கருவிகள் வெகு வேகமாகப் புத்தாக்கம் பெறுகின்றன.  இரண்டு மூன்று வருடம் பழமையான கைப்பேசியின் மின்னணு சாதனங்கள் காலாவதியாகிவிடுகிறது. இருபது முப்பது ஆண்டுகள் விண்வெளியில் செயற்கைக்கோள்கள் செயல்பட்டால் அதில் உள்ள மின்னணு சாதனங்கள் வெகு வேகமாக அதரப்பழசாகப் போகும். எனவே, தற்காலத்தில் குறைந்த ஆயுள் உள்ள செயற்கைக்கோள்களைத்தான் வணிக நிறுவனங்கள் விரும்புகின்றன.
  • இரண்டாவதாகச் செயற்கைக்கோள் பூமியைச் சுற்றிவரும்போது அதனுடன் தொடர்புகொள்ள அலைவாங்கியை அதன் திசையில் திருப்பிக்கொண்டே இருக்க வேண்டும். ஆய்வு நிறுவனங்கள் போன்ற இடங்களில் இது சாத்தியம். ஆனால், வீட்டின் கூரை மேலே அலைவாங்கி நிறுவிச் செயற்கைக்கோள் தொலைக்காட்சி வசதி ஏற்படுத்த இயலாது.
  • ஆனால், புவி நிலக்கோட்டுக்கு மேலே பூமியிலிருந்து 35,784 கி.மீ. உயரத்தில் செயற்கைக்கோளை நிலைநிறுத்தினால் பூமியைச் சுற்றிவர 24 மணிநேரம் எடுத்துக்கொள்ளும். அதாவது, பார்வைக்குப் பூமியிலிருந்து ஒரே திசையில் இருக்கும். அந்தத் திசையில் வீட்டுக்கூரை அலைவாங்கியை நிலைநிறுத்தினால் போதும். செயற்கைக்கோள் தொலைக்காட்சி வசதி பெறலாம். எனவேதான், தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை முன்பு 30,000 கி.மீ. உயரமாக எடுத்துச் சென்று புவியிணக்கச் சுற்றுப்பாதையில் (geosynchronous orbit) நிலைநிறுத்தினார்கள்.
  • ஆனால், இன்று தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கைப்பேசியை எடுத்துக்கொண்டு பயணம் செய்தாலும் ஒரு கோபுரத்திலிருந்து வேறு கோபுரத்துக்குத் தொடர்பு செல்வதுபோலே தலைக்கு மேலே சர்… சர்… என தொடர் வண்டி போல செயற்கைக்கோள்கள் ஒன்றன்பின் ஒன்றாக செல்லும்படி அமைத்தால் அலைவாங்கி திசையைத் திருப்பாமலேயே சீரான டிஜிட்டல் தகவல் தொடர்பைப் பெற முடியும். இந்தச் செயற்கைக்கோள்களை வெறும் 200 முதல் 400 கி.மீ. உயரத்தில் தாழ் விண்வெளி பாதையில் சுற்றச் செய்தால் போதும். எனவேதான், தற்காலத்தில் தொடர் வண்டியைப் போல ஒன்றன்பின் ஒன்றாக செல்லும் தாழ் விண்வெளி செயற்கைக்கோள் தொகுப்பைப் பயன்படுத்தி தகவல் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சிகள் உருவாகியுள்ளன.
  • தாழ் விண்வெளியில், குறைந்த ஆயுளுடன் செயற்கைக்கோள்கள் எனும்போது முந்தைய காலம் போல எடை கூடிய பெரிய செயற்கைக்கோள்களைவிட சிறு, குறு, மைக்ரோ, நானோ செயற்கைக்கோள்களை விரும்புகிறார்கள்.
  • ‘விரலுக்கேற்ற வீக்கம்’ என்பதுபோல சிறு செயற்கைக்கோள்களை தாழ் விண்வெளியில் ஏவ பிஎஸ்எல்வி போன்ற பெரிய ஏவூர்தி தேவையில்லை. எஸ்எஸ்எல்வி போன்ற சிறிய ரக ஏவூர்திதான் பொருத்தமானது. 

சிக்கல்

  • எலி புகும் சிறிய ஓட்டை வழியே பெரிய பூனை வர முடியாது. ஆனால், பெரிய பூனை நுழையும் ஓட்டை வழியே சிறிய எலி புக முடியும். அதுபோல, பிஎஸ்எல்வி போன்ற பெரிய ரக எவூர்தியை ஏவும் செலுத்து தளம் வழியே சிறிய ரக எஸ்எஸ்எல்வியைச் செலுத்த முடியும். ஆனால், ஸ்ரீஹரிக்கோட்டா அமைந்துள்ள பகுதி சிக்கலைத் தருகிறது. 
  • ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து நேர் கிழக்கில் ஏவினால் அந்த விண்கலம் சுமார் -13 டிகிரி சாய்வு தளத்தில் பூமியைழ் சுற்றிவரும். சில செயற்கைக்கோள்களுக்கு இது போதும். தகவல் தொடர்பு மற்றும் பயணவழித்தடச் செயற்கைக்கோள்களை புவியிணக்கச் சுற்றுப்பாதையில் (geosynchronous orbit) சுமார் 35,784 கி.மீ. உயரத்தில் நிலைநிறுத்த வேண்டும். இவற்றை நிலைநிறுத்தவும் பெரும் சிக்கல் ஏதுமில்லை.
  • வானிலை, தொலையுணர்வு போன்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை தென்துருவம் துவங்கி வடதுருவம் வழியே சுற்றிவரும் துருவ பாதையில் சுற்றவைக்க வேண்டும்.
  • எடுத்துக்காட்டாக, கார்டோசாட் 2எஃப் எனும் புவிஅமைப்பியல் ஆய்வு செயற்கைக்கோள் துருவப் பாதையில் செலுத்த வேண்டும். அதாவது, தென்திசை நோக்கி ஏவூர்தியை ஏவ வேண்டும்.
  • இதில்தான் சிக்கல். ஸ்ரீஹரிக்கோட்டவிலிருந்து நேர் கிழக்கில் கடல் பகுதி. ஆனால், தென்பகுதியில் ஸ்ரீலங்கா நிலப்பரப்பு இடையே வந்துவிடுகிறது.
  • எனவேதான், கார்டோசாட் 2எஃப் கோளை விண்ணில் செலுத்தியபோது முதலில் ஏவூர்தி கிழக்காகச் சென்று ஸ்ரீலங்காவை தாண்டிய பின்னர் தென்புறமாக திரும்பி தன் இலக்கை நோக்கிச் சென்றது.
  • நாயின் கால் வடிவில் இந்தப் பாதை தென்படுவதால் இதனை நாய்க்கால் பாதை என்பார்கள். இப்படி திசையை திருப்ப எரிபொருளை செலவழிக்க வேண்டும். பிஎஸ்எல்வி ஜிஎஸ்எல்வி போன்ற பெரிய ஏவூர்திகளுக்கு இது பெரும் பிரச்சனை அல்ல. ஆனால் எஸ்எஸ்எல்வி போன்ற சிறிய ஏவூர்திகளுக்குப் பெரும் சாவால்.
  • ஸ்ரீஹரிக்கோட்டவிலிருந்து கிழக்கு முகமாக எஸ்எஸ்எல்வியை ஏவலாம். ஆனால், ஸ்ரீஹரிக்கோட்டவிலிருந்து எஸ்எஸ்எல்வியைத் தெற்கு முகமாக ஏவ பெரும் எரிபொருள் செலவு பிடிக்கும். லாபகரமானது இல்லை.

ஏன் குலசேகரபட்டினம்?

  • குலசேகரபட்டினத்தின் தெற்கு மற்றும் தென் கிழக்குப் பகுதியில் கடல் உள்ளது. பெரும் தொலைவுவரை நிலபரப்பு ஏதுமில்லை. நிலநடுக்கோட்டுக்கு மேலும் கூடுதல் அருகில் உள்ளது. எனவே, பூமி தரும் இலவச உந்து மேலும் கூடுதலாக கிடைக்கும்.
  • அப்போது ஏன் முதல் விண்வெளி ஏவுதளத்தை ஸ்ரீஹரிக்கோட்டாவில் அமைத்தார்கள். அப்போதே குலசேகரபட்டினத்தில் அமைத்திருக்கலாமே என்று கேள்வி இயல்பாக எழும். 
  • சிலர் அந்தக் காலத்திலேயே குலசேகரபட்டினம்தான் முதலில் தேர்வுசெய்யப்பட்டதாக கூறுகிறார்கள். எதோ அரசியல் காரணமாக கைவிடப்பட்டது என்றும் சமூக ஊடகங்களில் செய்தி பரப்பப்படுகிறது. ஆனால், பிஎஸ்எல்வி - ஜிஎஸ்எல்வி போன்ற ஏவூர்திகளைக் குலசேகரபட்டினத்திலிருந்து எவ முடியாது என்பதுதான் உண்மை. அது ஏன் என்பதைப் புரிந்துகொள்ள பல அடுக்கு கொண்ட ஏவூர்தி ஏவும்போது உருவாகும் ஆபத்து பகுதிகள் குறித்து அறிய வேண்டும்.
  • அடுக்கடுக்காக உள்ள பிஎஸ்எல்வி - ஜிஎஸ்எல்வி போன்ற எவூர்திகள் செல்லும்போது எரிபொருள் தீர்ந்ததும் அடுத்தடுத்து அதன் அடுக்குகள் கீழே விழும். எடுத்துக்காட்டாக, கார்டோசாட் 2எஃப் ஏவப்பட்டபோது அதன் உதிரி பாகங்கள் ஏழு இடங்களில் விழும் எனக் கணிக்கப்பட்டது. இந்த எச்சரிக்கை பகுதிகள் ஏவுவதற்கு முன்னரே முன்கணிக்கப்பட்டு ‘நோட்டம்’ (NOTAM - Notice to Air Missions of flight hazards) என்ற அறிக்கை வழியே உலகெங்கும் உள்ள கப்பல் விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை தருவார்கள். இந்தப் பகுதியில் கப்பல் மற்றும் விமானங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் செல்லக் கூடாது.
  • ஜிஎஸ்எல்வி-14 (GSLV-F14) ஏவூர்தி மூலம் 2024 பிப்ரவரி 8 அன்று இன்ஸாட்-3டிஎஸ் (INSAT-3DS) செலுத்தியபோது நான்கு எச்சரிக்கை பகுதிகளைக் காணலாம்.
  • பிஎஸ்எல்வி - ஜிஎஸ்எல்வி போன்ற எவூர்திகளைக் கொண்டு புவிநிலை பாதை போன்ற பாதைக்குச் செயற்கைக்கோள்களை அனுப்ப ஏவுதளம் அமைந்த பகுதியில் ஏவுதளத்தின் கிழக்கு - தென்கிழக்கு முகமாக பல நூறு கி.மீ. அளவுக்குக் கடல் பரப்பு அவசியம்.
  • எனவே, ஜிஎஸ்எல்வி ஏவூர்தியைப் பயன்படுத்தி கிழக்கு நோக்கி குலசேகரபட்டினத்திலிருந்து ஏவ முடியாது. ஆகவே, அந்தக் காலத்தில் பிஎஸ்எல்வி போன்ற ஏவூர்திகளைத் தயாரித்து எவ முயற்சிசெய்தபோது குலசேகரபட்டினத்தைத் தேர்வுசெய்திருக்கவே முடியாது.
  • தற்காலத்தில்தான் சிறு செயற்கைக்கோள்களுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. அதுவும் துருவப் பாதையில் செலுத்த வேண்டும் என்ற ஆர்வமும் உருவாகியுள்ளது. இதுபோன்ற சிறு எவூர்தியை துருவப் பாதையில் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து செலுத்துவது கடினம். எனவேதான் குலசேகரபட்டினத்தில் இரண்டாவது ஏவுதளம்.
  • இதன் காரணமாகத்தான் குலசேகரபட்டின ஏவதளத்திலிருந்து வெறும் எஸ்எஸ்எல்வி போன்ற சிறிய ரக ஏவூர்தி மட்டுமே ஏவப்படும். அதுவும் தெற்கு - தென்கிழக்கு முகமாகத்தான் ஏவப்படும்.

குலசேகரபட்டின ஏவுதளம் ஓர் அறிமுகம்

  • இந்த வளாகத்தில் ஏவூர்தியில் செயற்கைக்கோளை இணைக்கும் வசதி, தரைக் கட்டுபாட்டு அறை, நடமாடும் (மொபைல்) ஏவு செலுத்து தளம் போன்ற வசதிகளைக் கட்டுமானம் செய்வார்கள். விண்வெளித் துறையில் தனியார்மயக் கொள்கையின் அடிப்படையில் பெருமளவு தனியார் தொழில்முனைவோர் இந்தத் தளத்தைப் பயன்படுத்துவார்கள் எனக் கருதப்படுகிறது.
  • இங்கே சிறு ஏவூர்தி மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதால் இதில் ஒரே ஒரு அடுக்கு மட்டுமே இருக்கும். எனவே, ஏவு செலுத்து தளத்துக்குச் சுற்றிலும் சுமார் ஒரு கி.மீ. விட்ட வட்ட பகுதி வரை மட்டுமே எச்சரிக்கைப் பகுதியாக அமையும். எனவே, அருகில் உள்ள வாழிடங்களுக்கு ஆபத்து ஏதுமில்லை.
  • இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தமிழ்நாடு அரசு அருகில் விண்வெளி தொழில் பூங்கா அமைக்க திட்டமிட்டிருப்பது வரவேற்புக்குரியது. இதுகுறித்த திட்டத்தை டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை முன்னரே முன்மொழிந்தார். தமிழ்நாட்டைச் சார்ந்த பல பொறியியல் கல்லூரிகள் நானோ செயற்கைக்கோள்களைத் தயரித்து ஏற்கெனவே விண்ணில் ஏவியுள்ளன.
  • அதேபோல இந்தப் பகுதியில் ஏற்கெனவே பட்டாசு தொழிற்சாலைகள், திட எரிபொருள் குறித்த நிபுணத்துவம் கொண்டவை. எனவே, இந்த மனித வளத்தை ஆதாரமாகக்கொண்டு எஸ்எஸ்எல்வி திட எரிபொருளைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் முதல் மின்னணு, ஏவூர்தி உதிரி பாகங்கள், சிறு, குறு, நானோ செயற்கைக்கோள்கள் முதலியவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இங்கே வளர முடியும்.

நன்றி: அருஞ்சொல் (02 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories