TNPSC Thervupettagam

குலோத்துங்கப் புரட்சி

October 29 , 2023 427 days 351 0
  • திருவரங்கம் திருக்கோயிலை அறியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்கமுடியாது. பாசுரம் பெற்ற 108 வைணவத் திருக்கோயில்களில் திருப்பதிக்கு இணையாகப் பதினொரு ஆழ்வார்களால் பாடப்பெற்ற பெருங்கோயில் இது. பழந்தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்தால் சுட்டப்பெற்ற பழைமைச் சிறப்பினது. தமிழ்நாட்டுக் கோயில்களில் அதிக அளவில் கல்வெட்டுப் பதிவுகள் பெற்ற இடமும் இதுதான். இங்குள்ள 191 சோழர் காலக் கல்வெட்டுகளில் சுங்கம் தவிர்த்தவராகவும் பேரம்பலம் பொன்வேய்ந்தவராகவும் அறியப்படும் முதற் குலோத்துங்கர் காலத்தன 83. பொதுக்காலம் 1070இலிருந்து 1120வரை 50 ஆண்டுகள் சோழப் பேரரசைக்கட்டிக் காத்த இவரது பதிவுகளில் 72, திருவரங்கம் கோயிலின் மூன்றாம் திருச்சுற்றின் நாற்றிசைச் சுவர்களிலும் பரவி, அச்சுற்றையே குலோத்துங்கச் சுற்றாக்கியுள்ளன.
  • கலிங்கத்தை வென்று கலிங்கத்துப்பரணி உருவாகக் காரணராய் அமைந்த இம்மன்னரின் காலத்தில் அரங்கத்தில் நிகழ்ந்த வேளாண் புரட்சியை இங்குள்ள கல்வெட்டுகளில் பல ஒரு கதை போலச் சொல்லிக் கண்சிமிட்டுகின்றன.

நிலச்சீர்மைப் பணி

  • சோழர் காலத்தில் தமிழ்நாட்டுக் கோயில்கள் அவற்றின் வழிபாடு, படையல், விழாக்கள்உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளுக்கு, அவற்றிற்கெனவழங்கப்பட்டிருந்த கொடைநிலங்களின் விளைச்சலையேநம்பியிருந்தன. அரங்கத்தின் நிலையும் அதுதான். கோயில் மடைப்பள்ளி சார்ந்த பல்வேறு அறக்கட்டளைகள் திருமடைப் பள்ளிப் புறமாக அளிக்கப் பட்டிருந்த கொடைநிலங்களின் விளைவு கொண்டே நிறைவேற்றப்பட்டன. இந்நிலங்களின் பெரும்பகுதி தண்டுறை, காரைக்குடி எனும் காவிரிக்கரை ஊர்களில் இருந்ததால், ஆற்றில் அவ்வப்போது ஏற்படும் வெள்ளப்பெருக்கு இந்நிலங்களில்மணலடித்து விளைச்சலைக் குறைப்பதும் நிலத்தைத் தரிசாக்குவதும் தொடர்ந்தது.
  • நிலச்சீர்மைப் பணிகள் தேவைக்கேற்ப நிகழ்ந்தாலும் முழு வீச்சில் நடைபெறாமையின் வரவு குறைந்து மடைப்பள்ளிப் பணிகள் சுருங்கின. குலோத்துங்கர் ஆட்சிக்காலத்தில் இவ்விரு ஊர்களிலும் பயிர் ஏறாதிருந்த நிலங்களின் அளவு பெருகியிருந்தமை கோயில் ஆட்சியருக்குப் பெருந்துன்பமானது. போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிடில் திருவரங்கத்து மடைப்பள்ளிச் செயற்பாடுகள் நின்றுவிடும் எனக் கருதிய கோயிலார், அரசின் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்றனர். அரங்கம் கோயிலின் அன்றாட நடைமுறைகள் தொய்வின்றித் தொடரவும் உழுகுடிகள் வேலைவாய்ப்புப் பெறவும் பெருமுயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் விளைவாக இவ்விரு ஊர்களின் மணலடித்த நிலங்களைப் பண்படுத்தும் நோக்கில் அரசும் கோயிலும் முழு வீச்சில் கையிணைத்தன.
  • நிலச்சீர்மையே குறிக்கோளாய்த் தொடங்கிய இந்த அரும்பணியில் குலோத்துங்கரின் தேவியர் தென்னவன் மாதேவி, வளவன் மாதேவி, உலகமாதேவி, நெரியன் மாதேவி ஆகியோருடன் அரசின் உயர்அலுவலர்களும் சோழப் பெரும்படையின் தலைவர்களும் நிலக்கிழார்களும் அரண்மனைப் பணிமக்களும் ஒன்றிணைந்தனர். தமிழ்நாட்டில் வேறெங்கும் வரலாற்றின் எக்காலத்தும் இது போல் நிலம் திருத்தும் பணி அரசுசார் முயற்சி எனக் கொள்ளத்தக்க அளவிற்கு மேற்கொள்ளப்பட்டமைக்குச் சான்றுகள் இல்லை. மணலடித்து விளையாதிருந்த தண்டுறை, காரைக்குடி நிலங்களை முப்பதிற்கும் மேற்பட்ட அரசு உயர்அலுவலர்கள் விலைக்குப் பெற்று அவற்றை விளைநிலங்களாகத் திருத்தினர். எட்டுக்கும் மேற்பட்ட படைத்தலைவர்கள் இத்திருப்பணியில் பங்கேற்றனர். இப்பெருமக்களுள் சிலர் சைவ சமயம் சார்ந்தவர்களாய் இருந்தபோதும் அரங்கன் கோயில் நிலச்சீர்மைப் பணியில் சமயச் சார்பின்றிச் செயற்பட்டமை கல்வெட்டுகள் சுட்டும் அவர்தம் இயற்பெயர்களால் அறியப்படும் உண்மையாகும்.
  • மணலடித்து வீணான நிலங்களைத் திருத்தி விளைச்சல் காட்ட முன்வந்தவர்களுக்கு ஒரு வேலி ஒரு காசு என நிலம் விற்கப்பட்டதுடன் ஐந்தாண்டுகளுக்கு அந்நிலத்தின் மீதான வரியும் நீக்கப்பட்டது. குலோத்துங்கர் காலத்தில் காவிரி, கொள்ளிடம்சார் ஊர்கள் எத்தகு நீர்ப்பாசன வசதிகளைப் பெற்றிருந்தன என்பதையும் அவை வெள்ளத்தால் சீர்குலைந்த நிலையில் அவற்றைச் சரிசெய்ய ஊராட்சிகள் எத்தகு முயற்சிகளை மேற்கொண்டன என்பதையும் இக்கல்வெட்டுகளால் அறியமுடிகிறது.

ஊர்மக்கள் பங்கேற்பு

  • ஆற்றிலிருந்து தலைவாய் மதகுகள் வழி வெளிப்பட்ட நீர் அதற்கென அமைந்த நீரோடுகால்களில் ஓடிப் பெருவாய்க்கால்களை அடைய, அவை அந்தந்த ஊர்களுக்கான வாய்க்கால்களுக்கு நீர்ப்பிரிக்க, உள்வாய்க்கால்களும் உட்சிறு வாய்க்கால்களும் உள்ளார்ந்த நிலத்துண்டுகளுக்கு நீரெடுத்துச் சென்றன. நாட்டு வாய்க்கால், பொது வாய்க்கால், திசைநோக்கிய வாய்க்கால்கள், ஊர்ப்பெயர் கொண்ட வாய்க்கால்கள் என நீர்ப்பாசனம் தேவைக்கேற்பவும் ஊரின் நிலவிளைவுகளுக்கு ஏற்பவும் பிரித்துப் பகிர்ந்தளிக்கப்பட்டது. மிகைநீர் செல்ல நீர்வடிகால்களும் பயன்பாட்டிலிருந்தன. இப்பாசனப் பராமரிப்பிற்குத் தேவையான ஆள்உழைப்பிற்கு நில உரிமையாளர்கள் பொறுப்பேற்றிருந்தனர்.
  • நிலத்தை விலைக்குப் பெற்றவர்கள் நிலச்சீர்மைக்கு உள்ளூர் மக்களையும் சுற்றூர் மக்களையும் உழுகுடிகளாகக் கொண்டதால் வேலைவாய்ப்புப் பெருகிற்று. வேலைக்கேற்ற ஊதியம் உழைத்தவர்களுக்குக் கிடைத்ததாகக் கல்வெட்டுகள் கண்காட்டுகின்றன. பண்படுத்தப்பட்ட நிலத்தில் நிலத்துக்கு உரியவர்கள் அவரவர் விருப்பிற்கேற்ற பயிர்களை விளைவிக்கும் உரிமை வழங்கப்பெற்றதால், இவ்வேளாண் புரட்சியில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் ஊருக்கும் கோயிலுக்கும் பயன்தரும் மரங்களையும் செடிகளையும் விளைவித்தனர். இது போல் நிலம் திருத்தும் பணி சோழர் காலத்தில் தமிழ்நாடு முழுவதும் நிகழ்ந்துள்ளது எனினும் ஒரு தவம் போல ஒரு மன்னர் காலத்தில் அரசு சார்ந்தவர்களால் அது நிகழ்த்தப்பட்டிருப்பது திருவரங்கத்தில்தான், அதுவும் குலோத்துங்கர் ஆட்சியில்தான் என்பது வரலாற்று உண்மையாகும்.
  • திருத்திய நிலத்தில் பயிர் தலைகாட்டியிருப்பின், ஐந்தாம் ஆண்டிற்குப் பிறகு ஒரு வேலி விளைவுக்கு 8 கலம் நெல் கோயில் வரியாகக் கொள்ளப்பட்டது. அதையும் இரு தவணைகளில் தர ஒப்புதலானது. பழ, பயன் மரங்கள், காய்கறிப் பயிர்கள் விளைவித்தவர்கள் மரத்திற்கு இவ்வளவு எனப் பழங்களையும் விளைச்சலைப் பொறுத்துக் காய்களையும் கோயிலுக்கு வழங்கினர். திருத்தப்பட்ட நிலங்களுள் பெரும்பாலன பூந்தோட்டங்களாக மாறியதால், குலோத்துங்கர் காலத்தில் திருவரங்கம் கொண்டிருந்த அளவிற்கு வேறெந்தக் கோயிலிலும் பூந்தோட்டங்கள் அமையவில்லை எனலாம். இவை அரங்கனின் பல்வேறு திருப்பெயர்களில் வழங்கியதுடன் இங்குப் பூத்த மலர்களே அரங்கனின் திருமேனியை அழகுசெய்து கோயில் வளாகத்தை மணக்க வைத்தன.
  • நிலம், நீர் சார்ந்த இயற்கையின் நெருக்குதல்களை ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழ்ச் சமுதாயம் எத்தனை எளிதாகக் கூட்டுறவு நோக்கில் எதிர்கொண்டது என்பதைக் குலோத்துங்கரின் அரங்கக் கல்வெட்டுகள் மிக விரிவாகவும் தெளிவாகவும் பதிவுசெய்துள்ளன. இந்த மண்ணின் வரலாறு வளம் மிக்கது. தேடுவார் திறனுக்கேற்ப அது வழங்கிடும் வழிகாட்டல்கள் வாழ்க்கையின் பன்முகச்சிக்கல்களுக்கும் திறப்பாக அமையும். எந்த உலகமயமாக்கலும் அடிப்படைகளை அழிப்பதில்லை. அவை பொதிந்திருக்கும் வரலாற்றுக்கும் அழிவில்லை. வரலாறு நிழலைப் போல. ஓளியில் வாழ நினைப்பவர்கள் அதைத் தவிர்க்கவும் முடியாது; மறைக்கவும் முடியாது.
  • நிலம், நீர் சார்ந்த இயற்கையின் நெருக்குதல்களை ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழ்ச் சமுதாயம் எத்தனை எளிதாகக் கூட்டுறவு நோக்கில் எதிர்கொண்டது என்பதைக் குலோத்துங்கரின் அரங்கக் கல்வெட்டுகள் மிக விரிவாகவும் தெளிவாகவும் பதிவுசெய்துள்ளன.

நன்றி: இந்து தமிழ் திசை (29 – 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories