TNPSC Thervupettagam

குல்பூஷண், நீதியின் நெடும் பயணம்

July 25 , 2019 1994 days 1035 0
  • இந்தியரான குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் விதித்த மரண தண்டனையை சர்வதேச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. 2016-ஆம் ஆண்டு மார்ச் 3-ஆம் தேதி பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மாகாணத்தில் அந்த நாட்டுக்குள் ஈரானிலிருந்து சட்ட விரோதமாக ஊடுருவ முயன்றதாக குல்பூஷண் ஜாதவ் கைது செய்யப்பட்டார். அவரை இந்திய உளவாளி என அறிவித்தது பாகிஸ்தான்.

குல்பூஷண் ஜாதவ்

  • அதன் பிறகு, 2016, மார்ச் 25-இல் குல்பூஷண் ஜாதவ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் என்று பாகிஸ்தான் ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில் இந்திய கடற்படை அதிகாரியாக தாம் பணியாற்றியதாக குல்பூஷண் ஜாதவ் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டிருந்தது. ஆனால், குல்பூஷண் ஜாதவ் தற்போது கடற்படையில் பணிபுரியவில்லை; அவர் முன்னாள் அதிகாரி என்று மத்திய அரசு தெரிவித்தது. குல்பூஷண் ஜாதவ் மீது ஏப்ரல் 28-ஆம் தேதியன்று முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது பாகிஸ்தான்.
  • பயங்கரவாத தடுப்புப் பிரிவுகளின் கீழ் குல்பூஷண் ஜாதவ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து மே 2-ஆம் தேதியன்று குல்பூஷண் ஜாதவ் வழக்கில் விசாரணை தொடங்கியது.
  • தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதியன்று குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்தியா இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், சர்வதேச நீதிமன்றத்தில் குல்பூஷண் ஜாதவ் மீதான மரண தண்டனைக்கு எதிராக ஒரு மாதத்துக்குள் (மே 8) இந்தியா முறையீடு செய்தது.
    வியன்னா ஒப்பந்தங்களுக்கு எதிராக பாகிஸ்தான் செயல்படுகிறது என்று இந்தியா குற்றஞ்சாட்டியது. குல்பூஷண் ஜாதவ் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கப் போதுமான ஆதாரம் இல்லை. எனவே, குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஒரு வாரத்துக்கு முன்பு (ஜூலை 17) சர்வதேச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி அப்துல்லாவி அகமது யூசுப் தலைமையிலான 16 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.

தீர்ப்பு

  • சர்வதேச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது; வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்தத் தீர்ப்பை குல்பூஷண் ஜாதவுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகவே இந்தியா பார்க்கிறது. உண்மையும் நீதியும் வென்றுள்ளது; உண்மையை ஆய்வு செய்து தீர்ப்பளித்த சர்வதேச நீதிமன்றத்துக்கு பாராட்டுகள் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
  • மனித உரிமைகளுக்கும், சட்ட விதிகளுக்கும் தகுந்த முக்கியத்துவம் அளித்து சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவே இதை நாம் பார்க்கலாம். இதை உற்று நோக்கினால், மிகப் பெரிய உண்மையும், ஆச்சரியமும் நம்மைக் கவர்ந்திழுக்கும். மொத்தமுள்ள 16 நீதிபதிகளில் 15 நீதிபதிகள் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய ஆதரவு அளித்துள்ளனர். இதை ஒருமனதாக அறிவிக்கப்பட்ட தீர்ப்பாகவே நாம் பார்க்கலாம்.
  • குல்பூஷண் ஜாதவ் தொடர்பாக இந்தியா தொடர்ந்த வழக்கை விசாரிக்க சர்வதேச நீதிமன்றத்துக்கு உரிமை உள்ளது என்று முன்னதாக ஒருமனதாக தீர்மானித்தது இந்த நீதிமன்றம். தூதரக உறவுகள் தொடர்பாக 1967-ஆம் ஆண்டின் வியன்னா ஒப்பந்தத்தின் கீழ் இந்த முடிவுக்கு வந்ததாக இந்த நீதிமன்றம் கூறியது. இந்தியா தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதற்கு, பாகிஸ்தான் தெரிவித்த ஆட்சேபணைகளை சர்வதேச நீதிமன்றம் நிராகரித்தது.

சர்வதேச தூதரக உறவுகள்

  • மேலும், சர்வதேச தூதரக உறவுகள் தொடர்பான வியன்னா ஒப்பந்தத்தின்படி, கைது செய்யப்பட்ட குல்பூஷண் ஜாதவுக்கு அளிக்க வேண்டிய அடிப்படை உரிமைகளை பாகிஸ்தான் மீறிவிட்டது. அதாவது, குல்பூஷண் ஜாதவை நேரில் சந்திக்கவும் அவருக்கான வாதங்களை முன்வைக்க வழக்குரைஞரை நியமிக்கவும் இந்திய அதிகாரிகளின் கோரிக்கையை பாகிஸ்தான்அரசு நிராகரித்து விட்டது. இதன் மூலம் சர்வதேச ஒப்பந்தங்களை பாகிஸ்தான் மீறிவிட்டது என சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதை குறிப்பிடத்தக்க ஒன்றாகப் பார்க்கலாம்.
  • இந்த விவகாரத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தலையிட்ட விதம் குறித்து இந்தியாவின் சார்பில் நன்றி தெரிவித்ததற்கு மேலே குறிப்பிட்ட கருத்தே பொருந்திப் போகிறது. இதன் மூலம் குல்பூஷண் ஜாதவ் தூக்கிலிடப்படுவதிலிருந்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் காப்பாற்றியுள்ளது. இதை முக்கிய தருணமாகவே நாம் பார்க்கலாம். குல்பூஷண் ஜாதவின் கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) என்று குறிப்பிடுவதன் படத்தை திரும்பத் திரும்பக் காட்டியது பாகிஸ்தான்.
  • அதுவே, பாகிஸ்தான் தரப்பு வாதத்தை நீதிமன்றம் நிராகரிப்பதற்கு வழி வகுத்துவிட்டது. அதுவே நீதிக்கான பாதையைத் திறந்துவிட்டது.
    யார் இந்த குல்பூஷண் ஜாதவ்? 46 வயதான குல்பூஷண் ஜாதவ் மும்பையைச் சேர்ந்தவர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இந்திய கடற்படையில் அதிகாரியாகப் பணியாற்றியவர்.
  • திருமணமாகி அவருக்கு குழந்தைகள் உள்ளனர். சொந்தமாக தொழில் தொடங்க, கடற்படையில் இருந்து அவர் விலகியதாகவும், ஈரானில் உள்ள சபாஹர் துறைமுகத்தில் பணியாற்றி வந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். உளவு பார்த்த குற்றச்சாட்டில் 2016-ஆம் ஆண்டு மார்ச் 3-ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் கூறுகிறது.

தனி நாடு

  • பலூசிஸ்தானில் தனி நாடு கோரி பிரிவினைவாத கிளர்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்தப் பதற்றமான பகுதியில் இருந்து உளவு பார்த்ததாக குல்பூஷண் ஜாதவ் மீது குற்றச்சாட்டுகள் எழுகின்றன. பாகிஸ்தான் ராணுவ சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்ட உளவாளிக்கு மரண தண்டனையை ராணுவ நீதிமன்றம் விதித்தது.
    இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியிட்டுள்ள காணொலியில், உளவு பார்த்ததை குல்பூஷண் ஜாதவ் ஒப்புக்கொண்டதாகக் கூறுகிறது.
  • குல்பூஷண் ஜாதவ் இந்தியக் குடிமகன் என்று கூறிய மத்திய அரசு, அவர் உளவு பார்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது. அவர் பலூசிஸ்தானில் கைது செய்யப்படவில்லை என்றும், ஈரானிலிருந்து கடத்தப்பட்டார் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.
  • இதன் மூலம் பாகிஸ்தானின் இத்தகைய நடவடிக்கை கேலிக்கூத்தானது என்றும் இந்தியா பதிவு செய்திருந்தது. குல்பூஷண் ஜாதவுடன் அரசு அலுவல் முறைப்படியான தொடர்புகள் மேற்கொள்ள 13 முறை கோரிக்கை வைக்கப்பட்ட போதிலும், அதற்கு பாகிஸ்தான் அனுமதிக்கவில்லை என்றும், அவர் மீது விசாரணை நடத்தப்படும் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.
  • எனவே, அவர் மீது விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை நிறைவேற்றினால், அதை திட்டமிட்ட படுகொலையாகவே இந்தியா கருதும் என்றும் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெளிவுபடுத்தியிருந்தது.
  • இத்தகைய நெருக்கடி மிகுந்த தருணத்தில்தான், குல்பூஷண் ஜாதவ் மீதான தண்டனையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது சர்வதேச நீதிமன்றம். சர்வதேச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது கடமை. ஆனால், உறுப்பு நாடுகள் எல்லா நேரங்களிலும் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வதில்லை. இருந்தபோதிலும், மனிதாபிமானத்தின் அடிப்படையில் குல்பூஷண் ஜாதவின் விடுதலை, நெடும் பயணத்தை நோக்கி நீண்டு விடுமோ என அச்சமும், கவலையும் கொள்கிறது இந்திய வெளிவிவகாரத் துறை.

மீட்பு

  • இந்தியா சார்பில் குல்பூஷண் சார்பாக வழக்குரைஞரை நியமித்துக் கொள்ளலாம் என்றும், உறவினர்களைப் பார்க்கலாம் என்றும் சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மகிழ்வையும், நெகிழ்வையும் தருகிறது. இந்திய மக்கள், உலக அமைதியை விரும்புபவர்களின் வேண்டுதலின்படி, விங் கமாண்டர் அபிநந்தன் தாயகம் திரும்பினார். அபிநந்தனைப் போன்றே இன்னொரு இந்தியக் குடிமகனை, பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய தருணம் இது. ஏனெனில், குல்பூஷண் ஜாதவ் கடற்படையின் முன்னாள் கமாண்டர்.
  • 1973-ஆம் ஆண்டு இந்திய உளவாளி என்று கருதி கைது செய்யப்பட்டு, 35 ஆண்டுகள் கடும் சிறைத் தண்டனையைப் பெற்றவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த காஷ்மீர் சிங். 2008-ஆம் ஆண்டு அன்றைய பாகிஸ்தான் அதிபர் முஷாரப் மூலம் விடுதலை பெற்ற காஷ்மீர் சிங் போன்று ஒரு நீண்ட பயணம் ஆகி விடக் கூடாது.
  • நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றது. இந்தியா சார்பாக வாதிட்டவர் மூத்த வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே ஆவார். பெரும் புள்ளிகளுக்கு மட்டுமே வாதாடி வெற்றி ஒன்றையே தேடித் தந்த இவர், லட்சக்கணக்கில் ஊதியம் பெறும் வழக்குரைஞர் ஆவார். ஆனால், குல்பூஷண் ஜாதவுக்கு ஒரு ரூபாய் மட்டுமே ஊதியம் பெற்று மனிதநேயத்தின் சாட்சியாக திகழ்கிறார்.
  • சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்திலும் குல்பூஷண் ஜாதவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும். தம்முடைய எண்ணங்களோடும், கனவுகளோடும் சிறையில் தனித்து வாடும் குல்பூஷண் ஜாதவின் நம்பிக்கை காற்றாய், தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு அவருக்கு ஆறுதலை அளித்திருக்கும். விடுதலைக்கான ஒரு யாத்திரையின் நெடும் பயணத்தின் மூலம் நிச்சயம் நல்ல விடை கிடைக்கும் என நம்புவோம்.

நன்றி: தினமணி(25-07-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories