TNPSC Thervupettagam

குளங்களின் பாதுகாப்பு ஏன் முக்கியம்

April 12 , 2023 648 days 632 0
  • பொருளாதார வளர்ச்சிக்கும் வறுமை ஒழிப்புக்கும் நீர் மிக முக்கியமானது. ஆனால், சமீப ஆண்டுகளில் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வரும் நீர் தொடர்பான செய்திகள் மிகவும் அச்சுறுத்துகின்றன. 2010களின் முற்பகுதியில், உலக மக்களில் 190 கோடிப் பேர் (27%) கடுமையான நீர்ப் பற்றாக்குறைப் பகுதிகளில் வாழ்ந்தனர்; இந்த எண்ணிக்கை 2050இல் 270-320 கோடியாக அதிகரிக்கும் என ஐநா எச்சரித்துள்ளது.
  • இந்தியாவின் மத்திய நீர் ஆணையம், 2021இல் வெளியிட்டுள்ள நீர், அதனுடன் தொடர்புடைய புள்ளிவிவர அறிக்கையில், 2025ஆம் ஆண்டளவில் மூன்று பேரில் ஒருவர் கடுமையான நீர்ப் பற்றாக்குறையுள்ள பகுதியில் வசிப்பார் என்று குறிப்பிட்டுள்ளது. இச்செய்திகள் நீா்ப் பற்றாக்குறையைத் தவிர்க்க, நீர் இருப்பை அதிகரிக்க அவசர நடவடிக்கைகளின் தேவை இருப்பதாக அறிவுறுத்துகின்றன. ஆனால், இந்தியாவில் பல ஆண்டுகளாக விவசாயம் உள்ளிட்ட பல தேவைகளை நிறைவுசெய்துவந்த குளம், குட்டைகள் இப்போது வேகமாக மறைந்து வருவது தான் வேதனையளிக்கும் விஷயம்.

நன்மைகள்

  • குளங்கள் என்பவை சிறிய நீா்நிலைகள் தான். ஆனாலும் அவற்றிலிருந்து பெறப்படும் நன்மைகள் பல. இவை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பரவியிருப்பதால், வீட்டுத் தேவைகள், கால்நடை வளர்ப்பு, குடிநீர், விவசாயம் போன்ற எல்லாவற்றுக்கும் உதவுகின்றன. இவை மற்ற நீா் ஆதாரங்களிலிருந்து (கால்வாய், நிலத்தடி நீர்) பல தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளன. கால்வாய், நிலத்தடி நீர்ப்பாசனத்துடன் ஒப்பிடும்போது இவை அளவில் சிறியவை என்பதால், எளிதாக நிர்வகிக்கலாம், பராமரிப்புச் செலவும் குறைவு.
  • பெரும்பாலான குளங்களின் பாசனப் பரப்பளவு சிறியது; 100 முதல் 500 ஏக்கர் வரை நீர்ப்பாசனம் செய்யக்கூடியது. இதனால் கால்வாய்ப் பாசனத்தில் ஏற்படுவதுபோல முன் மடை, கடை மடை விவசாயிகளுக்கு இடையில் எந்தவிதமான மோதலும் இல்லாமல், நீரைத் திறம்படப் பயன்படுத்த முடிகிறது.
  • குளங்கள் மூலம் நீா்ப்பாசனம் பெறும் விவசாயிகள் பெரும்பாலும் வசதியற்ற சிறு-குறு விவசாயிகளாக இருப்பதால், அவா்களின் வறுமையைக் குறைக்க இவை உதவுகின்றன. குளங்களில் நீரைச் சேமிப்பதால், கிணறுகளில் நிலத்தடி நீா்ச் சுரப்பு அதிகரிக்கிறது. முக்கியமாக, ஒவ்வொரு கிராமத்திலும் குளம், குட்டைகள் அமைந்திருப்பதால், பெண்கள் வீட்டுத் தேவைகளுக்குத் தண்ணீர் எடுக்க வெகுதூரம் நடக்க வேண்டியதில்லை.

தற்போதைய நிலை

  •  பல நூற்றாண்டுகளாக அனைத்து நீர்த் தேவைகளையும் நிறைவுசெய்துவந்த குளங்கள், எண்ணிக்கையிலும் பாசனப் பரப்பிலும் வேகமாகக் குறைந்துவருகின்றன. இதற்கு மழையின் அளவு முக்கியக் காரணம் அல்ல என்று ஆய்வுகள் கூறுகின்றன.
  • நீர்ப்பிடிப்புப் பகுதிகள், மழைநீரைக் குளங்களுக்குக் கொண்டுசெல்லும் வாய்க்கால்களில் நடக்கும் தொடா் ஆக்கிரமிப்பு, போதுமான நிதியை ஒதுக்கி ஆண்டுதோறும் குளங்களைப் பராமரிக்காதது உள்ளிட்ட காரணங்களால் இவற்றின் நீர்ப்பாசனப் பரப்பளவு தொடர்ந்து குறைந்துவருவதாக ஆராய்ச்சிகளும் அரசின் அறிக்கைகளும் சுட்டிக்காட்டுகின்றன.
  • 1960-61இல் 46.30 லட்சம் ஹெக்டேராக இருந்த இந்தியாவின் குளத்துப்பாசனப் பரப்பளவு, 2019-20இல் 16.68 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துவிட்டது. இதன் விளைவாக, இந்தியாவின் நிகர நீர்ப்பாசனப் பரப்பளவில், குளத்துப்பாசனப் பரப்பின் பங்கு இக்காலகட்டத்தில் 20%இலிருந்து வெறும் 2%ஆகக் குறைந்துவிட்டது. 1960-70களில் மொத்த நீர்ப்பாசனப் பரப்பளவில் குளத்துப்பாசனம் மூலமாக மூன்றில் ஒரு பங்கைப் பெற்றிருந்த தமிழ்நாட்டில், இக்காலகட்டத்தில் இந்த வகையிலான பரப்பளவு 9.36 லட்சம் ஹெக்டேரிலிருந்து 3.72 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துவிட்டது.
  • இதன் காரணமாக, பயிர்ச் சாகுபடிக்கு, குளத்துப்பாசனத்தை முழுமையாக நம்பியிருந்த விவசாயிகள் விவசாயத்திலிருந்து வெளியேறிவிட்டனர் அல்லது தரிசு நிலமாக விட்டுவிட்டார்கள். நல்ல மழைப்பொழிவு கிடைத்த ஆண்டுகளில்கூட, தமிழகத்தின் குளத்துப்பாசனப் பரப்பளவு அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்ற போக்கு மற்ற மாநிலங்களிலும் காணப்படுகிறது.
  • 1990களில் தொடங்கிய துரிதமான நகா்ப்புற வளா்ச்சியால், நகரங்களுக்கு அருகில் உள்ள குளங்கள் குப்பை கொட்டும் இடமாக மாற்றப்பட்டுவிட்டன. நீர்வளங்களுக்கான நிலைக்குழுவின் 16ஆவது (2012-13) அறிக்கை, நாட்டின் பெரும்பாலான நீர்நிலைகள் அரசுத் துறை நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. இதுபோன்ற செயல்பாடுகள் குளங்களின் நீர் சேமிப்புக் கொள்ளளவைக் குறைப்பதோடு, தொடர்ந்து அதிகரித்துவரும் ஆக்கிரமிப்புகளால் பருவமழைக் காலத்தில் பெரும் வெள்ளத்துக்கும் வழிவகுக்கிறது.
  • குளம் உள்ளிட்ட சிறிய நீர்ப்பாசன அமைப்புகளின் எண்ணிக்கை 2006-07இல் 6.01 லட்சத்திலிருந்து 2013-14இல் 5.92 லட்சமாகக் குறைந்திருப்பதாக நீர்வள அமைச்சகம் வெளியிட்ட 5ஆவது சிறிய நீர்ப்பாசனக் கணக்கெடுப்பு (2017) தெரிவிக்கிறது. இது போன்ற எண்ணிக்கைக் குறைவு பெரும்பாலான மாநிலங்களில் நடந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், நீர்வளத்துக்கான நிலைக் குழுவின் (2012-13)16ஆவது அறிக்கையின்படி, ஆக்கிரமிப்பு, அதன் தொடர்பான காரணங்களால் சுமார் 10 லட்சம் ஹெக்டேர் நீர்ப்பாசனப் பரப்பளவை நாம் இழந்துள்ளோம்.

எதிர்காலத்துக்காக

  • குளங்கள், சிறிய நீர்நிலைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால், கிணறுகளின் நீா்சுரக்கும் அளவு சரிந்துவிடும் என்ற உண்மையைக் கொள்கை வகுப்பாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இது தொடர்ந்தால், நாம் தற்போது பெரிதும் பயன்படுத்தும் நிலத்தடி நீரும் இல்லாமல் போய்விடும். ஏற்கெனவே, மத்திய நிலத்தடி நீர் வாரியம் இது தொடா்பாக ஓர் எச்சரிக்கை சமிக்ஞை விடுத்துள்ளது. அதாவது, அதிகப்படியாக நிலத்தடி நீா் எடுக்கப்படும் வட்டங்களின் எண்ணிக்கை 2004இல் 1,645இலிருந்து 2020இல் 2,538 ஆக அதிகரித்துள்ளது.
  • சிறிய நீர்நிலைகளைப் புறந்தள்ள முடியாது. அவற்றை மீட்டெடுத்து, புதுப்பிக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. முதலில், தொடர்ந்து அதிகரித்துவரும் ஆக்கிரமிப்புகளைக் கருத்தில்கொண்டு, நீராதாரங்களின் மீது ஆக்கிரமிப்பு செய்பவர்களைத் தண்டிப்பதற்கு வலுவான சட்டம் இயற்றப்பட வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை 2014 செப்டம்பர் 6 அன்று வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், குளங்கள் அமைந்துள்ள நிலங்களில் எக்காரணத்தை முன்னிட்டும் அரசு - பிற கட்டிடத் திட்டத்துக்கான ஒப்புதல் கொடுக்கக் கூடாது.
  • குளம், சிறிய நீா்நிலைகளின் தற்போதைய பரிதாப நிலையைப் புரிந்துகொண்டு, சிறிய நீர்நிலைகளுக்காக, புதிதாகத் தனி அமைச்சகம் அமைத்து, பழுதுபார்ப்பு-புனரமைப்புப் பணிகளை நடத்துவதற்குப் போதுமான நிதியுதவி வழங்க வேண்டும். சிறிய நீர்நிலைகளின் முக்கியப் பயனாளிகளான விவசாயிகளின் பங்கேற்பு இல்லாமல், இவ்வரலாற்றுப் பொக்கிஷங்களின் செயல்திறனை மேம்படுத்துவது கடினம்.
  • ஆகையால், விவசாயிகளின் பங்களிப்பில் ‘குடிமராமத்து’ என்ற அமைப்பின்கீழ் காலங்காலமாகக் குளங்களை மேலாண்மை செய்துவந்த முறையை மீட்டெடுத்து நடைமுறைப்படுத்த அரசு புதிய முயற்சிகளை எடுக்க வேண்டும்.
  • சமீபகாலமாகப் பெருநிறுவனங்கள் பல்வேறு நோக்கங்களுக்காகவும், வணிகப் பயன்களுக்காகவும் தண்ணீரை அதிகம் பயன்படுத்திவருகின்றன. எனவே, பெருநிறுவனங்கள் சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ், குளங்களைத் துார்வாரி மேலாண்மை செய்ய பெருநிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும். குளங்களைக் காப்பாற்ற விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், அவை மெதுவாக மறைந்துவிடும், நீர்ப் பற்றாக்குறை மிக மோசமடையும், நீா்ப் பஞ்சம் அதிகரிக்கும்

நன்றி: தி இந்து (12 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories