- மாறிவரும் பருவக் காலச் சூழலில் அதிக வெப்பம், மழை, குளிரால் மக்கள் பல உபாதைகளையும் நோய் களையும் அவற்றால் சில நேரம் மரணத்தையும் எதிர்கொள்கிறார்கள். குளிர்காலத்தில் உடல்ரீதியாக அதிகம் பாதிக்கப்படுபவர்கள் குழந்தை களும் முதியவர்களுமே. தோல், சுவாச மண்டலம், இதயம், மூட்டுகள், அவற்றின் கட்டுமானத் திசுக்கள், தசைகள் ஆகியவை குளிர்காலத்தில் அதிகப் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இச்சூழலில் குளிர்கால நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு நமக்கு அவசியம்.
தோல்
- சுற்றுப்புறச்சூழலின் பேராபத்திலிருந்து நம்மைத் தோல் பாதுகாக்கிறது. குளிர்காலத்தில் குறைந்த ஈரப்பதம் நிலவுவதால் தோல் எளிதில் வறண்டு விடும். வறண்ட சருமம் ஈரப்பதத்தை இழக்கச் செய்து தோலில் வறட்சி, எரிச்சல், அரிப்பு, தோல் வெடிப்புக்குக் காரணமாகிறது. உதடுகளின் மெல்லிய தோலும் கடுமையான குளிரால் வறண்டுபோவதால் காற்றோட்டத்தால் உதடுகள் வறண்டு வெடிக்கத் தொடங்கும்.
- குளிர்காலத்தில் தோலில் பாயும் ரத்தக் குழாய்களும் சுருங்கி ரத்த ஓட்டம் தடைபட்டு வியர்வை நாளச்சுரப்பி, எண்ணெய்ப் பசையைத் தோலுக்குத் தரும் சுரப்பி போன்றவை சீராகச் செயல்படாமல் போவதாலும் தோல் வறண்டு அரிப்பு ஏற்படும்.
- முதுமையில் தோல் இயல் பாகவே சேதமடையும் நிலை யில் இருப்பதால் குளிர் காலம் தோலுக்குக் கூடுதல் தொல்லையைத் தருகிறது.
தடுக்கும் வழி
- குளிப்பதற்கு முன் உடலில் தேங்காய் எண்ணெய்யைத் தேய்த்துச் சிறிது நேரம் கழித்து குளிக்கலாம். குளித்த பின் பருத்தித் துணியால் துடைத்துத் தோலின் மீது பேரஃபின் (parafin) பெட்ரோலியம் எண்ணெய்யைப் பூசினால் தோலின் ஈரப்பதம் பாதுகாக்கப்படும்.
- குளிக்கும்போது மென்மையான மாய்சரைசர் சோப்பைப் பயன் படுத்தலாம். உதடுகள் வெடிக்காமல் இருக்க கற்றாழை ஜெல், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், பேரஃபின், வேசலின் தடவிப் பாதுகாக்கலாம். இரவு நேரத்தில் உதடுகளில் தேன் தடவி ஈரப்பதத்தைத் தக்கவைக்கலாம்.
சோரியாசிஸ் (Psoariasis)
- குளிர்காலங் களில் மிக வீரிய மான தாக்கத்தை ஏற்படுத்துவது சோரியாசிஸ். ஈரப்பதம் இல்லாத குளிர்காற்று, போதுமான சூரிய ஒளி இல்லாத நிலையாலும் இந்த நோய் அதிகப் பாதிப்பைத் தரும்.
தடுக்கும் வழி
- குளிரிலிருந்து முழுமையாகப் பாதுகாக்க குளிர்கால உடைகள் அவசியம். தோல், தலை முடியின் ஈரப்பதம் காக்க தோல் மருத்துவரின் பரிந்துரையில் மாய்ச்சரைசரை (Moisuritone Cream) தோலில் பூசலாம். மொட்டைமாடியில் மிதமான காலை வெய்யில் குளியல் நன்மை தரும்.
சிரங்கு
- ‘சார்க்காப்டஸ் ஸ்கேபி’ என்கிற தோல் ஒட்டுண்ணி புறத்தோலில் துளையிட்டுச் சிரங்கு நோயை ஏற்படுத்தும்.
தடுக்கும் வழி
- உடைகள், தலையணை, பாய், போர்வை, உள்ளாடைகளைக் கொதிநீரில் ஊறவைத்து, வெயிலில் உலர்த்தி கிருமியை அழிக்கலாம். Permethrin சோப்பைப் பயன்படுத்தலாம். பெர்மித்திரின் சிரங்கு மருந்தை இரவில் உடல் முழுக்கத் தேய்த்தால் நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும். சிரங்கு நோயிலிருந்து விடுபடத் தோல் மருத்துவரின் ஆலோசனை முக்கியம்.
கால்விரல் பூஞ்சை (Fungus Tineapedis)
- குளிர்காலத்தில் கால் விரல் இடுக்கில் நீர் தங்கி ஈரப்பதம் அதிகரித்துப் பூஞ்சையை வளர்த்தெடுக்கும். இதைத் தொடர்ந்து நுண்ணுயிர் பாக்டீரியாக்கள் தாக்கி நீரிழிவு நோயாளிகளுக்குப் பேராபத்தைத் தரும். இதைச் சேற்றுபுண் என்பர்.
தடுக்கும் முறை
- குளிர்காலத்தில் கால்களின் விரல் இடுக்கில் ஈரம் தங்குவதைத் தடுக்கலாம். முகத்தைத் தூய்மையான நீரால் சுத்தம் செய்வதைப் போல் கால்விரல் இடுக்கிலும் கைவிரல் கொண்டு சுத்தம் செய்து சுகாதாரம் பேணவேண்டும். நோய் போக்க Clotrimazole Dusting பவுடரை விரல் இடுக்கில் தூவி பூஞ்சை தங்குவதைச் சரிசெய்யலாம்.
எக்ஸிமா (Eczema)
- இது குளிர் காலத்தில் உண்டாகும் தோலழற்சி நோயா கும். இது குளிர்கால அரிப்பு என்றும் அழைக்கப்படும். இது முதியவர்களுக்குப் பொதுவானது. குளிர்காலத்தில் தோல் வறண்டு விரிசல், பிளவுகள் ஏற்பட்டு வீக்கமடையும். கடுமையான தோல் வறட்சி அரிப்புக்கு வழிவகுக்கும். நுண்ணுயிர்க் கிருமி ஊடுருவி தொற்று ஏற்பட்டுத் திறந்த காயங்களையும் உருவாக்கும்.
தடுக்கும் முறை
- தோலில் பெட்ரோலியம் ஜெல், மினரல் ஆயில், வேசலின் போன்றவற்றைத் தடவுவதன் மூலம் நோய் வராமல் தடுக்கலாம். மிருதுவான சோப், கற்றாழை சோப் போன்றவை தோலின் வறட்சியை அதிகரிக்காமல் இருக்க உதவும்.
சுவாச மண்டல குளிர்கால நோய்கள்
- மூக்கின் உள்பகுதி முனையிலிருந்து நுரையீரல் வரையிலான சளி ஜவ்வு (Mucus Membrane) குழாய் வடிவில் நீண்டு சுவாசக் குழாயில் செயல்படும் உடலியல் உறுப்பாகும். சுவாசிக்கும் வெளிப்புறக் காற்று ஈரத்தன்மையுடன் இருந்தால் சளி ஜவ்வுப் பகுதி பாதிக்காமல் இருக்கும்.
- ஈரப்பதம் இல்லாத மாசு படிந்த வறண்ட குளிர் காற்று சுவாச சளி ஜவ்வு மீது பாய்ந்து அதை அழற்சிக்கு உள்படுத்தும். இதனால், சளி ஜவ்வு வீங்கி சுவாசக் குழாய் எதிர்வினையாற்றி, சுவாசக் குழல் சுருங்கிக் காற்று புகச் சிரமப்பட்டு மூச்சுத் திணறலை ஏற்படுத்தும்.
- இதனால், புற சுவாசக் குழலில் வைரஸ்கள் எளிதில் சளி ஜவ்வைத் தாக்கி ஜலதோஷம், ஆஸ்துமா, எம்பிஸிமா (Emphysema), நிமோனியா ஆகியவற்றை ஏற்படுத்தும். குளிர் காலத்தில் நோய் எதிர்ப்புத் திறன் பாதிக்கப்படுவதாலும் ஆஸ்துமா நோய் மிக அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
தடுக்கும் முறை
- மிதமான சூட்டில் குடிநீர், உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். படுக்கும் அறையை கதகதப்பாகப் பராமரிக்க வேண்டும். அதிகாலை நடைப் பயணம் தவிர்த்தல், புகைப்பழக்கத்தைக் கைவிடுதல், முகக் கவசம் அணிதல், உடல் நீர் இழப்பை ஈடுசெய்தல், ஆரோக்கியமான குளிர்கால உணவுமுறையைப் பேணுதல், வெளியூர்ப் பயணம் தவிர்த்தல் போன்றவை உடலைப் பாதுகாக்கும்.
- நுரையீரல் தொடர்பான ஆஸ்துமா நோய்க்கான ‘Inhalar’-ஐ கைவசம் வைத்திருப்பது அவசியம். சுவாசப் பயிற்சிகள், யோகா போன்றவை நன்மை தரும். நியுமோகாக்கல் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் குளிர்காலத்தில் நிமோனியா நோயிலிருந்து முதியோர் தப்பிக்கலாம்.
இதயம்
- உடலின் வெப்பம் 1 டிகிரி செல்சியஸ் குறையும்பட்சத்தில், 1.49% மாரடைப்பு நோய் அதிகரிக்கும் என்கிறது ஓர் ஆய்வறிக்கை. முதியவர்களுக்கு இயல்பிலேயே உடல் வெப்பம் குறைவாக இருக்கும். குளிர்காலத்தில் இதன் தாக்கம் அதிகரித்து ஆபத்தைத் தரும். இதைத் தவிர்க்க குளிரிலிருந்து காக்கும் வகையில் நன்கு கனமான உடைகளை அணிய வேண்டும். காலுறை, கையுறை, தலைக்குத் தொப்பி, கம்பளி போன்றவை பாதுகாப்பைத் தரும்.
மூட்டு வலி
- குளிர் காலத்தில் முதியவர்களுக் குக் கை, கால், மூட்டுகள் பன்மடங்கு விறைப்புத்தன்மை பெற்று முன்னங்கால் மூட்டு அதிகமாக வலிக்கும். இரவு நேரம் அதிகப் பனியால் முன்னங்கால் மூட்டு மேலும் பாதிக்கப்படும்.
- இதைக் குறைக்க உடற்பயிற்சி, யோகா பயிற்சி, பிசியோதெரபி சிகிச்சை போன்றவற்றை மேற்கொள்ளலாம். இதன் மூலம் மூட்டின் இயக் கம் சீர்செய்யப் படும். இதில் பிசியோதெரபி குளிர்காலத்தில் மூட்டு இயங்க, வலியின்றி இருக்க பெரும் பங்களிப்பை அளிக்கிறது. மேலும், மூட்டுப் பகுதியை விளக்கெண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் வலியைக் குறைக்கலாம்.
நன்றி: இந்து தமிழ் திசை (06 – 01 – 2024)