குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்: என்ன செய்துகொண்டிருக்கிறது அரசு?
- தமிழகத்தில், பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. கிருஷ்ணகிரியில் எட்டாம் வகுப்பு மாணவி மூன்று ஆசிரியர்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதாக வெளியான செய்தி ஏற்படுத்திய அதிர்வுகள் அடங்குவதற்குள் மணப்பாறையில் தனியார் பள்ளி மாணவியிடம், அப்பள்ளியின் அறங்காவலர் வகுப்பறையிலேயே பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வெளியான செய்திகள் பதைபதைக்க வைக்கின்றன.
- ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் காவல் துறையினர், அரசியல் பிரமுகர்கள் எனக் கண்ணியத்துக்குரிய பொறுப்பில் இருக்கிறவர்கள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுக் கைதுசெய்யப்பட்டுவருகின்றனர். அதன் தொடர்ச்சியாகத்தான் மருத்துவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு இரட்டிப்புத் தண்டனை வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.
- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வரை விதிக்கப்படும் வகையில் தமிழக அரசால் ‘போக்சோ’ சட்டத்தில் அண்மையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், வழக்கு விசாரணையிலும் தீர்ப்பு வழங்கப்படுவதிலும் ஏற்படும் காலதாமதம் குற்றவாளிக்குச் சாதகமாக அமைந்துவிடுகிறது. ‘போக்சோ’ வழக்குகளில் குற்றம் நிகழ்ந்த அல்லது புகார் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 30 நாள்களுக்குள் காவல் துறையினர் விசாரணையை முடித்து, ஓராண்டுக்குள் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால், அதிகாரிகள் - மருத்துவ வசதி - நீதிமன்றங்கள் உள்ளிட்ட பல தரப்புகளில் நிலவும் பற்றாக்குறையாலும் போதாமையாலும் நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் குற்றவாளிக்குத் தண்டனை வழங்கப்படுவதில்லை.
- தன் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையால் உடல்/உணர்வு/மன ரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தையை, விசாரணையும் அது தொடர்பான அலைக்கழிப்பும் மேலும் பாதிக்கக்கூடும். ‘போக்சோ’ வழக்குகளைக் கையாள்வோருக்கு அது சார்ந்து போதுமான பயிற்சியும் புரிதலும் இல்லாத நிலையில் பாதிக்கப்பட்ட குழந்தை மனநல ஆலோசனை பெறுவதும் இடைக்கால நிவாரணம் பெறுவதும் தவிர்க்கப்படுகிறது அல்லது தாமதமாகிறது. ‘போக்சோ’ வழக்குகளில் காணப்படும் இதுபோன்ற தொய்வுகளை அரசு சீராக்க வேண்டும்.
- பாதிக்கப்பட்ட குழந்தையின் அடையாளம் பாதுகாக்கப்படுவதை எல்லா நிலைகளிலும் அரசு உறுதிசெய்ய வேண்டும். குழந்தை மீது சுமத்தப்படும் சமூகக் களங்கமும் புறக்கணிப்புமே சிறாருக்கு எதிரான பாலியல் குற்றங்களை வெளியே வரவிடாமல் தடுத்துவிடுகின்றன. கிருஷ்ணகிரி சம்பவத்திலும் ஒரு மாதம் கழித்துத்தான் குற்றம் காவல் துறையின் கவனத்துக்கு வந்திருக்கிறது. இப்படியொரு சமூகச் சூழலில் வழக்குகள் விரைந்து முடிக்கப்படுவதும் குற்றவாளிகளுக்கு உடனுக்குடன் தண்டனை வழங்கப்படுவதும் அவசியம். ‘போக்சோ’ வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ் ரத்து செய்யப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருக்கிறார். இதுபோன்ற துறை ரீதியான நடவடிக்கைகளும் குற்றங்களை ஓரளவுக்குக் கட்டுக்குள் வைக்கும்.
- குழந்தைகளைப் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கச் சட்டங்களும் தண்டனைகளும் மட்டும் போதாது. குழந்தைகளுக்குப் பள்ளி அளவில் விழிப்புணர்வு தரப்பட வேண்டும். வீட்டில் சொன்னால் என்ன ஆகுமோ என்கிற அச்சத்திலேயே பெரும்பாலான குழந்தைகள் தங்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்களை வெளியே சொல்வதில்லை. வீட்டிலும் பொதுவெளியிலும் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழ்வதை உறுதிப்படுத்துவதில் அரசும் சமூகமும் இன்னும் தீவிரம் காட்ட வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (10 – 02 – 2025)