- உலகெங்கும் போர் சூழ்ந்த பகுதிகளில் வாழும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில், 45 லட்சம் குழந்தைகள் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 2 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் கல்வி வசதியின்றி உள்ளனர் என்றும் ஓர் அறிக்கை கூறுகிறது.
- காசாவில் உள்ள குழந்தைகள், போரால் பலவிதமான ஆபத்துகளைச் சந்திக்கின்றனர். காசாவின் ராஃபா பகுதியில் ஏறக்குறைய 6 லட்சம் குழந்தைகள் ஆபத்தில் இருப்பதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவிக்கிறது.
- உக்ரைனில் கடந்த 2 ஆண்டுகளாக நடக்கும் போரில் ஏறக்குறைய 600 உக்ரைன் குழந்தைகள் இறந்துள்ளதாகவும், 18 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் மனநல பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும் ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. ஈக்வடாரில் பாதுகாப்பு நிலைகளைக் காரணம் காட்டி, நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், 43 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. புள்ளிவிவரம் கூறுகிறது.
- கடந்த 2 மாதங்களில் மொசாம்பிக்கில் கபோ டெல் கடோ பகுதியில் 61,000-க்கும் அதிகமான குழந்தைகள் தங்கள் வீடுகளிலிருந்து கட்டாயமாக வெளியேற வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மியான்மரில் கடந்த 2021-இல் ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்பட்டது முதல் 60 லட்சம் குழந்தைகள் போதிய சத்துணவின்றி வாடுவதாக ஐநா தெரிவித்துள்ளது. சமீப காலத்தில் சிரியாவில் கொல்லப்பட்ட ஒரு லட்சம் பேரில், குழந்தைகளின் எண்ணிக்கை 10,000.
- ஐ.நா. குழந்தைகள் நிதியத்தின் (யுனிசெஃப்) கூற்றுப்படி, கடந்த 10 ஆண்டுகளில் 20 லட்சம் குழந்தைகள் கொல்லப்பட்டனர்; 4.5 கோடி குழந்தைகள் உடல் உறுப்புகளை இழந்தனர்; 1.2 கோடி குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்; 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் அனாதைகள் ஆயினர் அல்லது பெற்றோரிடமிருந்து பிரிந்துள்ளனர்; மேலும், அதிர்ச்சியால் 1 கோடி குழந்தைகள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
- உலகின் மிகப் பெரிய குழந்தை மற்றும் இளம்பருவ மக்கள் தொகை இந்தியாவில்தான் இருக்கிறது. இந்தியாவில் உள்ள 44.4 கோடி குழந்தைகளில் 33 லட்சம் குழந்தைகளுக்கு மிதமான மற்றும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 41% பெண் குழந்தைகள் மட்டுமே 10-ஆம் வகுப்பை தாண்டுகின்றனர். 23.3% பெண் குழந்தைகள், சட்டபூர்வ வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொள்கின்றனர்.
- 2022-ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கைப்படி, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களாக 1,62,449 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2021-ஐவிட 8.7% அதிகம். இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 26% அதிகரித்துள்ளது.
- இந்தியாவில் பதிவாகும் வழக்குகளில், கடத்தல் (45.7%) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போஸ்கோ சட்டம் (39.7%) ஆகியவை முக்கியமானவை. 2022-இல் 83,350 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். இவர்களில் 20,380 சிறுவர்கள், 62,946 சிறுமிகள் மற்றும் 24 திருநங்கைகள். இவை தவிர, குழந்தைத் தொழிலாளர், தெருவில் உள்ள குழந்தைகள், தொடக்கப் பள்ளிகளை மூடுதல் மற்றும் இணைத்தல் மற்றும் சிறப்புத் தேவையுடைய குழந்தைகளுக்கான வசதியின்மை போன்ற பிரச்னைகள் குழந்தைகளின் வளர்ச்சியில் பாதிப்பை உருவாக்குகின்றன.
- குழந்தைகள் மீதான அடக்குமுறைகள் அவர்களுக்கு உடல்ரீதியான பாதகங்களை ஏற்படுத்துவதோடு, தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி தற்கொலைக்கும் காரணமாக அமையலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். மேலும், வன்முறையைப் பார்க்கும் குழந்தைகளுக்கு வன்முறை மீதான ஈர்ப்பு அதிகமாகலாம். அதனால், அந்தக் குழந்தைகளின் கவனம் பிற்காலத்தில் வன்முறையின்பால் கொண்டுசெல்லும் அல்லது வன்முறையைக் கண்டு பயந்துவிடுவர். சண்டை வரும் சூழல் வந்தாலே அதை எதிர்கொள்ளத் துணிச்சலின்றி ஓடி ஒளியும் எண்ணம் முளைத்துவிடும்.
- பிஞ்சு வயதில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானால், வளரும்போது எதிர் பாலினத்தின் மேல் பயம் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம். கடத்தல், உடலைக் காயப்படுத்துதல், பாலியல் தொல்லைகள் என்று பலவும் நடக்க சாத்தியங்கள் உண்டு.
- மனித மூளையின் வளர்ச்சிக்கு குழந்தைப் பருவம் மிக முக்கியமானது. ஒருவருக்கு உணர்ச்சி திறன், மொழி மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகள் குழந்தைப் பருவத்திலேயே தொடங்கிவிடுகின்றன. குழந்தைகளின் சிந்தனையை சுற்றுச்சூழல் மாற்றிவிடும்.
- அந்த வகையில், ஆயுத மோதல் பகுதிகளில் உள்ள குழந்தைகள், பதற்றம் மற்றும் மனச்சோர்வு போன்ற மனநலப் பிரச்னைகளுக்கும், நோய் எதிர்ப்பு மண்டலம் மற்றும் மத்திய நரம்பு மண்டலங்களில் உள்ள உடலியல் பிரச்னைகளுக்கும் அதிகமாக எளிதில் உட்படலாம்.
- குழந்தைகளை அதிகமாகப் பாதிக்கும் போர்களை உடனடியாக நிறுத்துவதற்கு அரசுகளும், பன்னாட்டு அமைப்புகளும் முன்வர வேண்டும். குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளித்தல் அவசியம்.
- குழந்தைகள் நலனில் ஆட்சியாளர்கள் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். அவர்களை பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று இணைத்து வைத்துள்ளனர். குழந்தை உரிமைகளுக்காக தனி அமைச்சகத்தை நிறுவ உறுதியளிக்க வேண்டும். குழந்தை மற்றும் குடும்பத்தை மையமாகக் கொண்ட சமூகத்திற்கான பார்வையை உருவாக்க இது உதவும்.
- குழந்தைகளை ஆனந்தமாக இருக்க விடுங்கள். ஒரு குழந்தை புன்னகைக்க மறந்துவிடுவதைவிட ஆபத்தானது ஏதுமில்லை.
நன்றி: தினமணி (18 – 07 – 2024)