TNPSC Thervupettagam

குழந்தைகளைப் பசியில் தள்ளாதீர்கள்!

June 29 , 2020 1666 days 1295 0
  • வரலாற்றின் பின்தேதியிட்ட பக்கங்களுக்குச் சென்றோமானால், இந்தியாவில் பெரும்பாலான குழந்தைகள் கல்விச் சாலைகளுக்குள் நுழைய முடியாமல் இருந்ததற்கு இரண்டு தலையாய காரணங்கள் இருந்ததைப் பார்க்கலாம்.
  • ஒன்று, சாதிக் கொடுமை; இன்னொன்று, கொடிய வறுமை. நெடும் போராட்டங்களின் விளைச்சலாக அனைவருக்குமான அரசுப் பள்ளிகள், ஆதிதிராவிடர் பள்ளிகள், பழங்குடியினருக்கான பள்ளிகள் என்றெல்லாம் திறக்கப்பட்டன.
  • இதனால், முதல் காரணத்தால் குழந்தைகளுக்குக் கல்வி மறுக்கப்பட்ட அத்தியாயம் முடிவுக்கு வந்தது. மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாவது காரணத்தால் பல குழந்தைகள் பள்ளிகளுக்கு வர முடியாதிருந்த நிலைமை மாறியது.
  • சத்துணவு ஒரு சலுகை அல்ல; அது குழந்தைகளின் உரிமை.
  • பள்ளிக் குழந்தைகளுக்கான சத்துணவு வழங்கல் எந்தச் சூழலிலும் தடைபடக் கூடாது என்பதைத்தான் இந்த மாற்றமும் வளர்ச்சியும் உணர்த்துகின்றன. இதைத் தமிழக அரசு உணர்ந்திருக்கிறதா?

65 லட்சம் குழந்தைகளுக்கு இழப்பு

  • தமிழ்நாட்டில் 2018-19 புள்ளிவிவரப்படி அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளிலும், நடுநிலைப் பள்ளிகளிலும் பயிலும் 50,10,783 குழந்தைகளில் 43,62,894 பேர், அதாவது மொத்தக் குழந்தைகளில் 87% பேர் சத்துணவு பெற்றுப் பயனடைகிறவர்கள்.
  • இவர்களோடு ஒன்பதாவது, பத்தாவது வகுப்புக் குழந்தைகளையும் சேர்த்தால், கிட்டத்தட்ட 65 லட்சம் குழந்தைகள் சத்துணவால் பயனடைகிறார்கள்.
  • இவர்களுக்கெல்லாம் கடந்த மூன்று மாதங்களாகச் சத்துணவு வழங்கப்படவில்லை. ஊரடங்கானது கோடை விடுமுறையோடு சேர்ந்துகொண்டபோது, அரசும் ரேஷன் பொருட்களைக் கொள்ளைநோயின் பொருட்டு வழங்கியபோது, இதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளும் சூழல் இல்லாமல் இருந்தது.
  • இப்போது ஊரடங்குக் கட்டுப்பாடுகள் நீளமாக நீளும் சூழலில், அடித்தட்டு மக்கள் வழக்கமான வருமானத்தையே இழந்து நிற்கும் நிலையில், பள்ளிக்கூடங்கள் இல்லாததால் குழந்தைகளின் உணவுத் தேவையும் சேர்ந்துகொள்ள குடும்பங்கள் தடுமாறுகின்றன.
  • வழக்கமான பள்ளிக் காலங்களிலேயேகூட விடுமுறை நாட்களில் சத்துணவு வழங்க சட்டபூர்வ ஏற்பாடு உள்ளது.
  • சமைத்த உணவு வழங்க இயலவில்லை என்றால் நிர்ணயிக்கப்பட்ட அளவு அரிசி, பருப்பு, எண்ணெய், சமைப்பதற்கான செலவு உள்ளிட்ட உணவு உறுதிக்கான மானியத்தைக் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்பது மதிய உணவுத் திட்ட விதி (எம்டீஎம்-2015).
  • இன்று தவிர்க்கவியலாமல் பள்ளிகள் மூடப்பட்டிருக்கிறபோது இந்த விதியை அமலாக்க வேண்டியதன் அவசியத்தை நாம் பேச வேண்டியிருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் தலையீடு

  • அது எப்படி பள்ளிகள் செயல்படாத நாட்களில் இதைச் செயல்படுத்த முடியும் என்று சிலர் கேட்கக்கூடும்.
  • இது உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் ஒன்றிய அரசு எடுத்த முடிவு. மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் வலியுறுத்தப் பட்டுள்ள நடவடிக்கை.
  • கரோனா தாண்டவம் தொடங்கியிருந்த கட்டத்திலேயே, சொல்லப்போனால் ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பாகவே, மார்ச் 18 அன்று உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இதைப் பற்றி விசாரித்தது.
  • பள்ளிகளிலும் அங்கன்வாடிகளிலும் குழந்தைகளுக்கு இந்தச் சூழலில் மதிய உணவு வழங்க என்ன ஏற்பாடு செய்திருக்கிறீர்கள் என்று ஒன்றிய அரசிடமும் மாநில அரசுகளிடமும் விளக்கம் கேட்டது.
  • அதைத் தொடர்ந்து, மார்ச் 20 அன்று மாநில அரசுகளின் தலைமைச் செயலர்களுக்கும், பள்ளிக் கல்வித் துறைச் செயலர்களுக்கும், சத்துணவுக்குப் பொறுப்பான சமூகநலத் துறைச் செயலர்களுக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவு தொடர்பாக ஒன்றிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சக இணைச் செயலர் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார்.
  • அதில், ‘எம்டீஎம்-2015’ விதியைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். மேலும், ஊரடங்கு தொடங்கிய பிறகு, மார்ச் 28 அன்று ஒன்றிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், மாநிலங்களின் பள்ளிக் கல்வி அமைச்சர்களோடு காணொலி வழிக் கூட்டம் நடத்தினார்.
  • அந்தக் கூட்டத்திலும் கரோனா பரவும் சூழலில் குழந்தைகள் ஊட்டச்சத்தும் நோய் எதிர்ப்பு ஆற்றலும் பெறுவதற்குச் சத்துணவு கண்டிப்பாகத் தேவை என்பதால், மதிய உணவாகவோ, உணவுப் பொருள்களாகவோ, சமைப்பதற்கான செலவாகவோ வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
  • அமைச்சர்கள் கூட்டம் நடந்த மறுநாளே மனித வள மேம்பாட்டுத் துறை இணைச் செயலர், மாநிலத் தலைமைச் செயலருக்கும் பள்ளித் துறைச் செயலர்களுக்கும் இன்னொரு சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறார்.
  • செப்டம்பர் வரைக்கும் பள்ளிகளின் மதிய உணவுக்காக 12.24 டன் தானியம் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொடக்கப் பள்ளிக் குழந்தைக்கும் ரூ.4.48-ஆக இருந்த சமையல் செலவு ஏப்ரல் முதல் நாளிலிருந்து ரூ.4.97 என்றும், உயர்நிலைப் பள்ளிக் குழந்தைகளுக்கு ரூ.6.71 என்றிருந்தது ரூ.7.45 ஆக உயர்த்தப்படுகிறது என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
  • அத்துடன் இதற்கான இடைக்கால நிதி ஒதுக்கீடாக ரூ.2,566.93 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், தமிழக அரசு ஏன் இன்னும் இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை?

பணமாகவும் அளிக்கலாம்

  • இதனிடையே, சம்பந்தப்பட்டோரின் வங்கிக் கணக்கில் சத்துணவுக்கான தொகையைப் பணமாகவே அரசு செலுத்திவிடும் யோசனையும் பேசப்பட்டது.
  • பள்ளிகளில் அன்றாடம் குழந்தைகள் கூடுவது தொற்றுக்கு வழி வகுக்கும் என்று அரசு கருதுமேயானால், ஒரு இடைக்கால ஏற்பாடாக வேறு ஒரு வழியையும் கையாளலாம்.
  • மதிய உணவு பெற்றுக்கொண்டிருந்த அனைத்துப் பள்ளிகளின் குழந்தைகளுக்கும், விடுதிக் குழந்தைகளுக்கும் பள்ளிகள் திறக்கும் வரையில் தானியங்கள் உள்ளிட்டவற்றைப் பொருளாகவும், காய்கறி, முட்டைக்கானதைப் பணமாகவும் அளிப்பது, இதுவரை அளித்துவந்த வைட்டமின் மாத்திரை, குடற்புழு நீக்க மாத்திரை, நாப்கின் ஆகியவை நின்றுவிடாமல் கிடைக்கச் செய்வது போன்ற செயல்களே அந்த வழி.
  • எப்படியோ குழந்தைகளின் பசி தீர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். மாறாக, இயல்பு நிலை திரும்பிய பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தமிழக அரசு கருதுமானால், கரோனா உருவாக்கிய மறைமுகச் சேதாரங்களில் ஒன்றாக அது கருதப்படும்.

 

நன்றி: தி இந்து (29-06-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories