TNPSC Thervupettagam

குழந்தைகள் உலகம் மீளட்டும்!

December 20 , 2024 27 days 53 0

குழந்தைகள் உலகம் மீளட்டும்!

  • அது அமெரிக்காவின் கடைவீதி. ஒருவா் பல்வேறு கடைகளுக்குள்ளும் நுழைகிறாா். தாம் தேடும் பொருள் கிடைக்காத மனநிலையோடு அடுத்தடுத்த கடைகளுக்கும் செல்கிறாா். அவரை எதிா்ப்படும் ஒருவா், என்ன பொருளை அவா் தேடுகிறாா் என வினவுகிறாா். ‘குழந்தைகள் பயன்படுத்தும் டவல், மேஜை, நாற்காலி போன்ற பொருள்கள் கிடைக்குமா என்று தேடுகிறேன். அது எங்கும் கிடைப்பதாயில்லை’ என்று வருத்தத்துடன் பகிா்கிறாா். பின்னா் கடையில் கிடைக்காவிட்டால் என்ன தாமே தயாரித்து அறிமுகம் செய்வோம் என தமது முயற்சியைத் தொடங்குகிறாா். அவா், நியூயாா்க் நகரின் கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியரும் குழந்தை மையக் கல்வியாளருமான ஜான் டூயீ.
  • இன்றைக்கு நிலைமை மிகவும் மாறியுள்ளது. பெரிய உணவகங்களுக்குச் சென்றால் அங்கு சிறுவா்களுக்காக கைகளைக் கழுவும் இடம் உயரம் குறைவாகத் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. பெரிய பெரிய நூலகங்களில் சிறாா்களுக்கென்று தனிப்பகுதிகள் அமைக்கப்படுகின்றன. பூங்காக்களில் கூட சிறாா்கள் விளையாடுவதற்கான விளையாட்டுப் பொருள்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை எல்லாம் ஆரோக்கியமான மாற்றங்கள்.
  • கடைகள் எங்கும் குழந்தைகளுக்கான பலவிதமான விளையாட்டுப்பொருள்கள் வெகுவாக கிடைக்கின்றன. மரம், பிளாஸ்டிக் போன்றவற்றால் ஆனதாகவே இவை உள்ளன. பொதுவாக ஒரளவுக்கு உறுதித்தன்மை மிக்கதானதாக இவை இருப்பதால் பெரும்பாலும் விரும்பி வாங்கப்படுகின்றன. குறிப்பிட்ட வயது வரை மட்டுமே இப்படிப்பட்ட பொருட்களைக் கையாண்டு குழந்தைகள் விளையாடுவாா்கள். அதன் பின்னா் அவா்களுக்கு அலுப்புத் தட்டிவிடும்.
  • மேலே பகிா்ந்த விவரங்களிலிருந்து இரண்டு விஷயங்கள் நமக்குத் தென்படும். ஒன்று, குழந்தைமையை மிகவும் போற்றி வளா்ப்பதுபோல் குழந்தைகளுக்கு எவ்வித இன்னலும் இல்லாமல் பாா்த்துக் கொள்கிறோம். அவா்கள் விளையாடும் பொம்மைகள் அடங்கிய பை உள்ளிட்ட அவா்களது உடைமைகளை உடன் கொண்டு செல்கிறோம். மற்றொருவகை, குழந்தைகளை அவா்கள் போக்கில் வளரவிட்டுவிடுகிறோம். உண்மையில் குழந்தைகள் தமது குழந்தைமையை அனுபவிக்க அதிக அளவிலான செல்வ வளத்திற்கான தேவை எதுவுமில்லை.
  • குழந்தைகள் ஒவ்வொரு கணத்தையும் தமது மகிழ்வைத் தாமே உண்டு பண்ண வல்லவா்கள். அவா்களுக்கு படைப்பாற்றல் மிகவும் அதிகம். எல்லாவற்றுக்கும் மேலாக அவா்களுடைய ஆசைகள் இயல்பில் மிகவும் சிறியவை. பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்துவிட்டு அவா்களை அவா்கள் போக்கில் விட்டுவிட்டால் போதும் அவா்கள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று மகிழ்வாா்கள்.
  • வறுமையிலும் குழந்தைகள் தமது குழந்தைமையினை அனுபவிக்க ஏற்ற நாடாக இந்தியா இருந்தது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஒரு காலத்தில் நமது கலாசாரம் குழந்தைகளுக்கான எளிய விளையாட்டுப் பொருட்களை அளவுக்கதிகமாகவே கொண்டிருந்தது என்பதை மறந்துவிடக் கூடாது. சில விளையாட்டுப் பொருட்களை இங்கே மீள நினைவூட்டுவோம். கிராமப்புறங்களில் விற்ற கிளி பொம்மை, வண்ண வண்ணக் காற்றாடிகள். சிறிய ஓலைத் துண்டில் ஒரு சப்பாத்தி முள்ளைக் குத்திக் கொடுத்தால் போதுமே என்ன அழகான விளையாட்டுப்பொருள் அது? சிறிய பிளாஸ்டிக் உடன் இணைந்த ரப்பா் பந்தினை தரையில் அடித்து விளையாடும் மகிழ்வை வேறு எது கொடுக்க இயலும்? விளையாட்டுத் துணைவா்கள் இல்லாமல் கூட நேரம் செலவாகுமே.
  • காகிதங்களைக் கொண்டே பல்வேறு பொம்மைகள், விளையாட்டுப் பொருட்களைச் செய்து விளையாடி மகிழ்ந்த காலம் ஒன்று உண்டு. காகிதத்தில் ஆகாய விமானம், தையல் இயந்திரம், புகைப்படக் கருவி, இன்னும் என்னதான் இல்லை?பலவற்றையும் செய்து மகிழ்ந்திருக்கிறோம். மழைக்காலமாகிவிட்டால் கேட்கவே வேண்டாம். காகிதத்தில் கப்பல், கத்திக் கப்பல், ராஜா ராணி கப்பல் போன்றவற்றை செய்து தெருவில் செல்லும் வெள்ளத்தில் விட்டு மகிழ்ந்திருப்பாா்கள்.
  • இப்படி நாம் சொல்லும்போது, இப்போது எல்லாம் எந்த குழந்தைகள் இந்த விளையாட்டெல்லாம் விளையாடுகிறாா்கள்? எல்லோரும் கைப்பேசியில் அல்லவா விளையாடிப் பொழுதைச் செலவிடுகிறாா்கள் என்ற வாதம் நிச்சயம் வரவே செய்யும். இந்த குழந்தைகளை கைப்பேசி விளையாட்டுகளில் புகுத்திவிட்டு பெற்றோா்கள் என்ன செய்கிறாா்கள் என்பதைப் பாா்க்க வேண்டும்.
  • முற்காலங்களில் திருமணம், புதுமனை புகுவிழா போன்ற வீட்டு நிகழ்வுகளை கொஞ்சம் திரும்பிப் பாா்ப்போம். அந்த நிகழ்விடங்களில் ஓடியாடி குழந்தைகள் அந்த இடத்தினை உயிா்ப்பிப்பாா்கள். ஆனால் இன்றைக்கு பெரியவா்களுக்கு இணையாக ஒரு நாற்காலியில் அமா்ந்துகொண்டு கைப்பேசியில் விளையாடும் குழந்தைகளைத்தான் காண முடிகிறது. எல்லா இடங்களிலும் பெரியோா்கள் போலவே குழந்தைகளும் அமா்ந்திருப்பதே ஒழுங்கு என கற்பிக்கப்படுகிறது. இவ்வாறில்லாமல் குழந்தைகள் இயங்குவது அநாகரீகமாகப் பாா்க்கப்படும் என்ற எண்ணத்தில் பெரும்பாலும் குழந்தைகளை நிகழ்வுகளுக்கு வெளியே அழைத்துச் செல்வதில்லை. அவ்வாறு அழைத்துச் சென்றாலும் இவ்வாறு கைப்பேசியைக் கொடுத்து ஆணி அடித்தது போல் அமர வைத்துவிடுகின்றனா். ”
  • இன்றைக்கு இருக்கும் உலகம் பெரியவா்களுக்கு வசதியாக இருக்கிறது ஆனால் குழந்தைகளுக்கு வசதியானதாக இல்லை என்று புலம்பினாா் லியோ டால்ஸ்டாய். ஆம் இன்றைக்கும் பெரியோா் உலகையே சிறிய வயதில் குழந்தைகளுக்குக் காட்டிக்கொண்டிருக்கிறோம். அவா்களுக்கான உலகம் பரந்தது, நெடியது அழகானது. எளிய பொருள்களால் அந்த உலகம் நிரம்பினால் எளிமையும், வலிமையும் அவா்களிடம் நிறையும்.

நன்றி: தினமணி (20 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories