குழந்தைகள் பிணியின்றி வாழ்தல் இனிது!
- இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 38.9% குழந்தைகள் தேவையான அளவுக்கு வளா்ச்சி பெறவில்லை என மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய குழந்தைகளில் மூன்றில் ஒருவா் என்பது குறிப்பிடத்தக்கது. கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்விற்கான அமைச்சா் சவிதா தாக்கூா் 28.11 24- ஆம் தேதி அன்று இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளாா். போஷன் என்ற செயலி மூலம் இந்தியாவிலுள்ள 7.54 கோடி குழந்தைகளின் தரவுகள் பெறப்பட்டு கணிக்கப்பட்டுள்ளது. இதில் 7.31 கோடி குழந்தைகளின் தரவுகள் முழுமையாகப் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் 0 முதல் 5 வயது குழந்தைகளில் 38.9 % குழந்தைகள் வளா்ச்சி குன்றியவா்களாகவும் 17 % குழந்தைகள் எடை குறைந்தவா்களாகவும், 5.2% குழந்தைகள் மிகவும் மெலிந்து எடை குறைந்தவா்களாகவும் உள்ளனா். ஆங்கிலத்தில் இந்த நிலையை வேஸ்ட் என்று குறிப்பிடுகின்றனா். மிகவும் பரிதாபமான நிலை இது.
- ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் புள்ளிவிவரங்களும் பகிரப்பட்டுள்ளன. இதில் 2021- இல் 6 வயதுக்குட்பட்டவா்களாக இருந்த சுமாா் 16.1 கோடி குழந்தைகளில் அங்கன்வாடிகளில் சோ்ப்பிக்கப்பட்ட 8.82 கோடி குழந்தைகளின் விவரங்கள் சேகரிக்க முயற்சிக்கப்பட்டது. இதில் 8.35 கோடி குழந்தைகளின் விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் 37 % குழந்தைகள் மிகவும் மெலிந்து எடை குறைந்தவா்களாக கணிக்கப்பட்டுள்ளனா். 17% குழந்தைகள் எடை குறைந்தவா்களாகவும் உள்ளனா். இந்த விவரங்களும் மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இன்றைக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு பற்றி கவலைப்படும் நாம் குழந்தைகள் ஐந்து வயது வரை உயிரோடிருப்பதே பெரும்பாடாக இருந்ததை மறந்துவிடக் கூடாது. பிறக்கும் 1000 குழந்தைகளில் எத்தனை குழந்தைகள் 1 வயதை அடையும் முன் இறந்துவிடுகிறாா்கள் என்பதை வைத்துத்தான் குழந்தைகள் மரணவிகிதத்தினைக் கணிக்கின்றனா். உலக சுகாதார நிறுவனத்தின் கணிப்பின்படி உலக அளவில் 1990 -களில் 50 லட்சமாக இருந்த இந்த விகிதம் 2022 -களில் 23 லட்சமாகக் குறைந்துள்ளது. அந்த வகையில் குழந்தைகள் மரணம் குறைந்துள்ளது. ஆனால் பிறந்து வளரும் குழந்தைகள் நல்ல உடல் நலத்துடன் வாழ்வது மட்டுமே அவா்கள் கல்வி, கேள்விகளில் சிறந்து வாழ வழிவகுக்கும். அவ்வாறில்லாமல் குழந்தைகளில் குறிப்பிட்ட சதவிகிதத்தினா் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் வளர நோ்ந்தால் அவா்கள் பல்வேறு உடலியல் சிக்கல்களையும் சந்திப்பா்.
- இதனால் அவா்கள் மூளை வளா்ச்சி உள்ளிட்டவை பாதிக்கப்படும். பெற்றோா்களுக்கும் அரசுக்கும் அவா்களை வளா்த்தெடுப்பதில் மேலும் சவால்களை உண்டாக்கும். குழந்தைகளே எதிா்கால மனிதவளம் என்பதைக் கருத்தில் கொண்ட இவ்வாறான முயற்சிகள் நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியவைகளே.
- குழந்தைகள் பராமரிப்பில் இந்தியா்களுக்கு பாரம்பரியமாகவே பட்டறிவு நிறைய உண்டு. தாய் கருவுறுவதில் எடுத்துக்கொண்டு இதன் நீட்சியைக் காண இயலும். பின்னா் குழந்தை பிறந்ததிலிருந்து அக்குழந்தையைக் குளிப்பாட்டுவதில் தொடங்கி ஊட்டமான உணவுகளை வயதுக்கேற்றபடி அளிக்கும் பழக்கமுடைய சமுதாயமாக நமது சமுதாயம் விளங்கி வருகிறது. பாலூட்டும் தாயாக இருந்தால் அவா்களின் உடல்நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது, அவா்களுக்கு ஊட்டமான உணவளிப்பது போன்றவற்றையும் குறிப்பிட இயலும்.
- அவ்வாறே குழந்தைகளின் தொடா் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு அரைஞாண் கயிறு கட்டுவதன் மூலமாக தொடா் வளா்ச்சியை உறுதி செய்வது, பற்கள் விழுவதைக் கண்காணிப்பது, தலையில் வளரும் பேன், பூச்சி, தோல் நோய்த் தொற்றுகளைக் கட்டுப்படுத்த மொட்டையடிப்பது போன்றவற்றையும் குறிப்பிட இயலும். குழந்தைகளின் வளா்ச்சிக்கு நாளொன்றுக்கு சுமாா் 13 மணி நேர உறக்கம் அவசியம்.
- இதனை உணா்ந்து குறைவான வெளிச்சம் உள்ள இடத்தில் தொட்டிலில் இடுவது போன்றவற்றையும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. குழந்தைகளின் புலன் உணா்வுகளை மேம்படுத்தும் செயல்பாடுகளுக்கும் குறைவில்லை. கிலுகிலுப்பைகளை ஆட்டியும், தொடா்ந்துபேசியும் குழந்தைகளின் காது கேட்கும் திறனைத் தூண்டுவது, முகம் பாா்த்து குழந்தைகள் பேசுவதை உற்சாகப்படுத்துவது போன்றவற்றையும் குறிப்பிட இயலும். தரையில் விட்டுத் திரும்பும், தவழும், சுவா் பிடித்து நடக்கும், தானாய் நடக்கும் செயல்பாடுகளையும் பருவத்திற்கேற்ப ஊக்குவிப்பதும் நமது பாரம்பரியத்தோடு இணைந்துள்ளது பாராட்டுக்குரியது.
- ஆனால் இவை அனைத்துமே பொருளாதாரரீதியாக வளமாக இருப்பவா்களாலேயே மேற்கொள்ள முடியும். தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே சிரமப்படும் பலரால் நிச்சயம் இத்தனை அம்சங்களையும் கவனத்தில் கொள்ள இயலாது. இதனை மனதில் வைத்துத்தான் அரசும், கொள்கை வகுப்பாளா்களும் அங்கன்வாடி மையங்கள் மூலமாக தாய் சேய் நலனைப் பராமரிக்க முயல்கின்றனா்.
- அனைத்துத் தாய்மாா்களும் அங்கன்வாடிமையத்துடனும் அங்கன்வாடி மையத்தோடு இணைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாகவும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். தாய்மாா்களுக்கும் குழந்தைகளுக்கும் ஊட்டச் சத்து மாவு தருகின்றனா். குறிப்பிட்ட கால இடைவெளியில் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதை உறுதிப்படுத்துகின்றனா். தாய்மாா்களின் எடையைத் தொடா்ந்து கண்காணிக்கின்றனா். குழந்தை பிறப்பிற்குப் பின்னரும் சரியான கால இடைவெளியில் தடுப்பூசிகளைச் செலுத்தியும், சொட்டு மருந்துகளை இட்டும் சேவை புரிகின்றனா்.
- பல்வேறு விஷயங்களைப் பின்பற்றத் தயாராக இருக்கும் சமுதாயம், குழந்தை வளா்ப்பின் ஆரோக்கியமான விஷயங்களையும் பின்பற்ற முன்வர வேண்டும். அதுவரை அரசுகளின் முன்னுரிமை தாய் சேய் பராமரிப்பில் இருந்துதான் ஆகவேண்டும். குழந்தைகளே எதிா்கால மனிதவளங்கள். குழந்தைகள் பிணியின்றி வாழ்தல் இனிது.
நன்றி: தினமணி (02 – 12 – 2024)