TNPSC Thervupettagam

குழந்தைத் திருமணங்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது?

October 23 , 2024 32 days 64 0

குழந்தைத் திருமணங்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது?

  • குழந்தைகளுக்குத் திருமண நிச்சயதார்த்தம் செய்வதைத் தடுக்கும் வகையில், குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் 2006 இல் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்திருப்பது வரவேற்கத்தக்கது.
  • 18 வயதுக்குக் கீழுள்ள பெண்களையும் 21 வயதுக்குக் கீழுள்ள ஆண்களையும் குழந்தைகள் என்றே குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் வரையறுக்கிறது. இவர்களுக்குத் திருமணம் செய்துவைப்பது குற்றமாகவும் ஒழிக்கப்பட வேண்டிய சமூக அவலமாகவும் இந்தச் சட்டம் அடையாளப்படுத்தியுள்ளது.
  • இச்சட்டம் நடைமுறைக்கு வந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இந்தியாவில் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் அதன் விகிதம் அச்சுறுத்தும் அளவுக்கு அதிகமாகவே இருப்பதாக ‘சொசைட்டி ஃபார் என்லைட்மென்ட் அண்டு வாலன்டரி ஆக்ஷன்’ உள்ளிட்ட சில அரசு சாரா நிறுவனங்கள் வழக்குத் தொடர்ந்திருந்தன.
  • இந்த வழக்கை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகிய மூன்று நீதிபதிகளின் அமர்வு விசாரணைக்கு ஏற்றது. இந்த வழக்கில் குழந்தைத் திருமண நிச்சயதார்த்தம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
  • குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தில் குழந்தைகளுக்கிடையே நிச்சயதார்த்தம் செய்வதைத் தடுப்பதற்கான தெளிவான விதிகள் வரையறுக்கப்படவில்லை. இதைப் பயன்படுத்திப் பெற்றோர் பலர் குழந்தைகளுக்கு நிச்சயதார்த்தம் செய்துவிடுகின்றனர். நிச்சயதார்த்தம் என்பது திருமணத்தை உறுதிப்படுத்தும் நிகழ்வாகக் கருதப்படுகிறது. நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நிறுத்துவது அமங்கலமானதாக நம்பப்படுகிறது. இந்தப் பின்னணியில், குழந்தைகளின் திருமணத்தை நிச்சயம் செய்வது அவர்களுக்குத் திருமணம் செய்துவைப்பதற்கு இணையான குற்றமாகவே கருதப்பட வேண்டும்.
  • எனவே, குழந்தைத் திருமணத்தைப் போலவே குழந்தைத் திருமணத்தை நிச்சயம் செய்வதையும் சட்டப்படி குற்றமாக நிர்ணயிக்கும் வகையில், குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. மேலும், திருமணம் நிச்சயிக்கப்பட்ட குழந்தைகளைச் சிறார் நீதிச் சட்டத்தின்படி ‘பராமரிப்பும் பாதுகாப்பும் தேவைப்படும் சிறார்’ என்று அறிவிக்க வலியுறுத்தியுள்ளது.
  • குழந்தைத் திருமணத்தால் பெண்களே அதிக அளவில் பாதிக்கப்படுவதோடு ஆண்களுக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்படுவது குறித்து நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. தன் வாழ்க்கை குறித்து முடிவெடுப்பதற்கான முதிர்ச்சியை அடைவதற்கு முன்பே திருமணம் செய்துவைக்கப்படுவதால், இருபாலரும் வாழ்விணையரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை இழந்துவிடுகின்றனர். அதோடு, குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றுவது உள்ளிட்ட வயதுக்குப் பொருந்தாத சுமைகள் சிறுவர்கள் மீது திணிக்கப்படுகின்றன.
  • சிறாருக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டம் (போக்ஸோ) உள்ளிட்ட சட்டங்களுக்குக் குழந்தைத் திருமணம் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திவருவதாக நீதிபதிகள் கூறியுள்ளனர். குழந்தைத் திருமணங்கள் குறித்துப் புகார் அளிப்பதற்கான இணையதளம் தொடங்குவது உள்பட குழந்தைத் திருமணத்தை முற்றிலும் தடுப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு வேறு சில வழிகாட்டுதல்களையும் நீதிபதிகள் வழங்கியுள்ளனர்.
  • இந்தியாவில் திருமணமான பெண்கள் வேலைக்குச் செல்வது, தமது பெற்றோருக்குப் பொருளாதாரரீதியாக உதவுவது ஆகியவற்றைத் தடுக்கும் பிற்போக்குக் கண்ணோட்டங்களின் காரணமாகப் பெண்களைக் கல்வி கற்க வைப்பதைத் தேவையற்ற பொருளாதாரச் சுமையாகவே குடும்பங்கள் கருதுகின்றன.
  • பெண்கள் சாதிக்காத துறையே இல்லை என்றாகிவிட்ட பிறகும் இந்தியப் பெற்றோர் பலர், மகள்களுக்குத் திருமணம் செய்துவைப்பதையே தலையாய கடமையாகக் கருதுகின்றனர். பெண்களுக்குக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பதவி உயர்வுகளிலும் சமமான பங்கை உறுதிசெய்வது இத்தகைய கண்ணோட்டங்களை மாற்றுவதற்குத் துணைபுரியும்.
  • உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைகளையும் வழிகாட்டுதல்களையும் செயல்படுத்துவதோடு, மேற்கூறிய பிரச்சினைகளைக் களையும் வகையில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது மட்டுமே குழந்தைத் திருமணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும்.

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories