TNPSC Thervupettagam

குழந்தைத் திருமணம் கூடாது

September 15 , 2023 436 days 532 0
  • குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் என்பது குழந்தைத் திருமணத்தைத் தடுக்க நிறைவேற்றப் பட்ட சட்டம் ஆகும். இது 1891 ஜனவரியில் சட்ட முன்வடிவாக ஆங்கில அரசினால் முன்வைக்கப்பட்டு, 1929 செப்டம்பா் 28-ஆம் நாள் சட்டமாக்ப்பட்டது. இது சார்தா சட்டம் என்றும் அழைக்கப்பட்டது. இதன்படி, திருமணம் செய்வதற்கு பெண்ணுக்கு பதினைந்து வயதும், ஆணுக்கு பதினெட்டு வயதும் நிறைவடைந்திருக்க வேண்டும்.
  • 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே, இதுபோன்ற ஒரு சட்டத்தைக் கொண்டுவர ஆங்கிலேய அரசு முயன்றது. 1880-இல் குஜராத்தைச் சோ்ந்த, பி.எம். மலபாரி என்பவா் ஆங்கில அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். ஐந்து வயது பெண் குழந்தைகளுக்கெல்லாம் திருமணம் செய்யும் கொடுமையை அரசு தலையிட்டு நிறுத்த வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் மலபாரி குறிப்பிட்டிருந்தார்.
  • இது லண்டன் வரை சென்று, பல விவாதங்களுக்கு உள்ளாகி, இறுதியில் 1891 ஜனவரியில் சட்ட முன்வடிவாக அரசினால் முன்வைக்கப்பட்டது. இச்சட்டம் 1930 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்தது.
  • 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே முன்சீப் மாயூரம் வேதநாயகம் பிள்ளை போன்றோரும், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாரதியார் போன்ற கவிஞா்களும் பெண் விடுதலைக்காக எழுதினா். அதன் பிறகு இந்தியாவில் பெண் விடுதலை இயக்கங்கள் வீறுகொண்டு எழுந்தன.
  • அதன் விளைவாக, பெண்கள் பலா் எழுச்சி பெற்றனா். சிறு வயதில் பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்யும் கொடுமையை தடை செய்ய வேண்டும் என்று குரலெழுப்பினா். டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி அம்முயற்சியில் முன்னின்று பணியாற்றினார்.
  • இச்சூழலைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, 1929-இல் மீண்டும் ஒரு முயற்சி நடைபெற்றது. இம்முறை அச்சட்ட முன்வடிவை ராய் சாஹிப் ஹாபிலாஸ் சார்தா என்னும் ஆங்கிலேயா் முன் மொழிந்தார். அதனால்தான் அச்சட்டம் சார்தா சட்டம் என்று அறியப்பட்டு, காலப் போக்கில் சாரதாச் சட்டம் ஆகிவிட்டது. 1929 செப்டம்பா் 28-ஆம் நாள் சட்டமாக நிறைவேற்றப்பட்டு, 1930 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
  • 1978-ஆம் ஆண்டில், சட்டத் திருத்தம் செய்யப்பட்டு, பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 எனவும், ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21 எனவும் மாற்றப்பட்டது. இந்த சட்டத்தினால் குழந்தைத் திருமணங்களை தடுக்க முடியும். ஆனால், நடைபெற்று முடிந்த திருமணங்களை ரத்து செய்வதற்கான வழிவகை எதுவும் இல்லை.
  • பெண் கல்வியில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைந்திருக்கும் தமிழ்நாட்டில், இன்றும்கூட குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவது அந்த முன்னேற்றத்தின் வெற்றியையே கேள்விக்குள்ளாக்குகிறது. அண்மையில் ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களில், ஐந்து நாளில் 41 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
  • குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் 2006-இன்படி பெண்ணுக்குத் திருமண வயது 18; ஆணுக்கு 21. இந்தியாவில் ஆண்களும் குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறபோதும் ஒப்பீட்டளவில் பெண் குழந்தைகளுக்கே அதிக எண்ணிக்கையில் திருமணம் செய்துவைக்கப்படுகிறது.
  • பெண் குழந்தை பிறந்தால் செலவு அதிகமாகும் என்று கட்டமைக்கப்பட்ட நம் ஆணாதிக்கச் சமூகத்தில் வறுமை, அறியாமை, வரதட்சிணை, கல்வியறிவின்மை, குடும்ப வழக்கம், மூத்தோர் விருப்பம் போன்றவை பெண் குழந்தைத் திருமணத்துக்குக் காரணங்களாக அமைகின்றன. பெண் குழந்தைகள் பிற சாதியைச் சோ்ந்தவரைக் காதலித்து மணந்துகொண்டால், தங்கள் குடும்பத்துக்கு அவமானம் என்று கருதி, பெரும்பாலான குழந்தைகள் திருமண வயதை எட்டும் முன்பே வலுக்கட்டாயமாகத் திருமண உறவுக்குள் தள்ளப்படுகின்றனா்.
  • பருவ வயதைக் கடந்த பிறகு, பெண் குழந்தைகளை வீட்டில் வைத்திருப்பது பாதுகாப்பு இல்லை எனக் கருதிப் பலரும் தங்கள் மகள்களுக்குச் சிறு வயதிலேயே திருமணம் செய்துவைத்துவிடுகின்றனா். இதைத் தடுப்பதற்காகவும் மக்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்தவும் அரசு சார்பில் திருமண நிதியுதவித் திட்டம், கல்வி உதவித் திட்டம், அரசுப் பள்ளிகளில் மாணவா் வருகைக் கண்காணிப்பு எனப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. இருந்தபோதும் குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவது முற்றாக நின்ற பாடில்லை.
  • தமிழ்நாட்டில் 2019-இல் மட்டும் 2,209 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. கொவைட் 19 நோய்த்தொற்று காலத்தில் (2020) இந்த எண்ணிக்கை அதிகரித்து 3,208 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. 2021 நிலவரப்படி அதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 11,553 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால், இவற்றில் மிகக் குறைவானவையே புகாராகப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
  • குழந்தைத் திருமணத்தில் நேரடியாகத் தொடா்புடையவா்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படலாம். இருந்தபோதும், புகார்கள் பதிவுசெய்யப்படாத நிலை, வழக்கு நீதிமன்றத்துக்கு அனுப்பப்படுவதில் ஏற்படுகிற தாமதம் போன்றவை சட்டத்தை மீறுகிற துணிச்சலை சமூக விரோதிகளுக்கு ஏற்படுத்துகின்றன.
  • இந்தியாவில் ஆண்டுதோறும் 15 லட்சம் பெண்களுக்கு 18 வயது நிறைவடைவதற்கு முன்பே திருமணம் நடைபெறுவதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவிக்கிறது. குழந்தைத் திருமணத்தால் பெண்களின் கல்வி தடைபடுவதோடு மிக இளம் வயதிலேயே தாயாவதால் உடல்நலக்குறைவு தொடங்கி, உயிரிழப்புவரையிலான மோசமான விளைவுகளை அவா்கள் எதிர்கொள்கிறார்கள். இதனால், அவா்களது எதிா்காலமே கேள்விக்குறியாகிவிடுகிறது.
  • ஒரு நாட்டின், ஒரு மாநிலத்தின் முன்னேற்றம் என்பது பெண்களின் முன்னேற்றத்தையும் உள்ளடக்கியது என்பதைக் கருத்தில் கொண்டு, குழந்தைத் திருமணங்களை முற்றாக ஒழிப்பதற்கான பணியில் அரசு முனைப்புடன் செயல்பட வேண்டியது அவசர அவசியம்.

நன்றி: தினமணி (15 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories