TNPSC Thervupettagam

குழந்தைத் தொழிலாளர்களின் குமுறல்

June 12 , 2024 213 days 463 0
  • யுனிசெப் அறிக்கையின்படி உலகம் முழுவதும் 5 முதல் 14 வயதுக்குட்பட்ட 15.8 கோடி சிறுவர் சிறுமிகள் வீட்டு வேலை தவிர பிற வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஐ.நா. மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்புகள் குழந்தைத் தொழிலாளர் உழைப்புச் சுரண்டலை கவனத்தில் கொண்டுள்ளன.
  • ஐ.நா. குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு உடன்படிக்கை 32-ஆவது விதியில், அபாயகரமான தொழில்கள் அல்லது குழந்தைகளின் கல்வியைப் பாதிக்கும் தொழில்கள், குழந்தைகளின் உடல், மனப் பழக்கவழக்கத்தில் அபாயம் தரும் தொழில்கள் மற்றும் சமூக மேம்பாட்டைத் தடுக்கும் தொழில்களில் குழந்தைகள் ஈடுபடுவதை அரசுகள் கண்டறிய வேண்டும். ஏற்கெனவே உலகம் முழுவதும் 25 கோடி குழந்தைகள் தொழிலாளர்களாக உள்ளனர் என்று கணிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
  • 1990-ஆம் ஆண்டில் சோமாலியா தவிர உலகின் பிற நாடுகள் குழந்தைகள் உரிமைக்கான உடன்படிக்கையில் கையொப்பம் இட்டன. சோமாலியாவை வழிநடத்தும் அரசு இல்லாததால் தாமதமாக 2002-இல் அந்நாடு உடன்படிக்கையில் கையொப்பமிட்டது. 1999-ஆம் ஆண்டு உலகளாவிய குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான ஓர் இயக்கம் உருவெடுத்தது.
  • குழந்தைத் தொழிலாளர் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டது. ஐ.நா.வின் பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு, இது 2002-ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்படுகிறது.
  • இந்தியாவில் குழந்தைகள் பகுதி நேர அல்லது முழு நேர அடிப்படையில் ஈடுபடுத்தும் நடைமுறை உள்ளது. இது அவர்களின் குழந்தைப் பருவத்தைப் பறித்து அவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. வறுமை, நல்ல பள்ளிகள் மற்றும் முறைசாரா பொருளாதார வளர்ச்சி இல்லாமையே இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் நடைமுறை இருக்க முக்கிய காரணங்களாகும்.
  • 2001-ஆம் ஆண்டு இந்திய தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 5-14 வயது குழந்தைத் தொழிலாளர்கள் சுமார் 1.26 கோடி இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. குழந்தைத் தொழிலாளர் பிரச்னை இந்தியாவின் தனிப்பட்ட பிரச்னை அல்ல, உலக அளவில் 21.5 கோடி குழந்தைகள் வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
  • 14 வயதிற்குக் கீழ் உள்ள தொழிலாளர்கள் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் இந்தியாவில் உள்ளதாக யுனிசெப்பால் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பில் 24-ஆம் உறுப்புரை குழந்தைத் தொழிலாளர் நடைமுறையைத் தடை செய்கிறது.
  • குழந்தைத் தொழிலாளர் தடை மற்றும் ஒழுங்குமுறைத் திருத்தச் சட்டம் - 2016 ஜனவரி 1, 2016 இயற்றப்பட்டது. அதன்படி 14 வயதுக்கு உட்பட்ட சிறார்களை வேலைக்கு அமர்த்துவது சட்டவிரோதம். இந்தத் திருத்தம் 14 முதல் 18 வயதுடைய இளம் பருவத்தினரை ஆபத்தான வேலைகளில் பணியமர்த்துவதை மேலும் சட்ட விரோதம் ஆக்குகிறது. 13 தொழில்கள் மற்றும் 51 நடைமுறைகளில் குழந்தைகளை வேலை செய்வதிலிருந்து சட்டம் தடுக்கிறது.
  • சட்டத்தின் விதிகளை செயல்படுத்த மாவட்ட மாஜிஸ்திரேட் அளவிலான அதிகாரிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
  • குழந்தைத் தொழிலாளர் (தடுப்பு ஒழுங்குமுறைச் சட்டம்) 1986, சிறார்களை எந்தவிதமான தொழிலிலும் உற்பத்தி நடைமுறைகளிலும் ஈடுபடுத்துவதைத் தடை செய்யும் நோக்கத்தை முக்கியமாகக் கொண்டு 2016-ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது. இதன்மூலம் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது.
  • உலகிலேயே அதிகமான குழந்தைத் தொழிலாளர்களைக் கொண்ட நாடு இந்தியா என்று கூறப்பட்டாலும், வீட்டுவேலை செய்வது, பேப்பர் பொறுக்குவது, எடுபிடி வேலை செய்வது போன்றவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் உலகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவது என்பது பொதுவாக காணப்படுகிறது.
  • தொழிலகங்களில் வேலை செய்யும் குழந்தைகளுக்காவது வாரம் ஒரு நாள் விடுமுறை கிடைக்கும். ஆனால் வீட்டு வேலை செய்யும் குழந்தைகளுக்கு ஓய்வும் கிடையாது; விடுமுறையும் கிடையாது. ஆண்டு முழுவதும் உழைத்துக் கொண்டே யிருக்க வேண்டும். ஊதியமும் மிகக் குறைவு.
  • இவர்களில் பெண் குழந்தைகளே அதிகமாக வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். பெரும்பாலான ஏழைக் குடும்பங்களில் வீட்டிலுள்ள பிற பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ளுதல், சமையல் செய்தல், வீட்டைப் பராமரித்தல் என்பன பெண் குழந்தைகள் மீதே சுமத்தப்படுகிறது. இதனால் பெரும்பாலான குழந்தைகள் படிக்கவும் முடிவதில்லை, பள்ளிப் படிப்பை முடிக்கவும் முடிவதில்லை.
  • இதைவிட திடுக்கிடச் செய்யும் மற்றொரு தகவல் ஆப்பிரிக்கக் குழந்தைகளை விட இந்தியக் குழந்தைகளிடம் சத்துணவுப் பற்றாக்குறை அதிகமாக உள்ளது என்னும் அறிவிப்பாகும். இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் அங்குள்ள குழந்தைகளில் 25 விழுக்காட்டினர் சத்துணவுப் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். இந்தியாவில் மட்டும் சுத்தமான குடிநீர் கிடைக்காமையால் ஆண்டுதோறும் 4 இலட்சம் குழந்தைகள் வயிற்றுப் போக்கினால் இறந்து போகின்றன என்பது மிகப் பெரிய சோகம்.
  • குழந்தைத் தொழிலாளர் (தடை செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல்) சட்டம் 1986-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதன்படி 14 வயதுக்கு உட்பட்டவர்கள் குழந்தைகள் என அழைக்கப்படுவர். இவர்கள் சட்டத்தின் 3ஆம் பிரிவில் இடம் பெற்றுள்ள 13 வகையான தொழில்கள் மற்றும் 57 வகையான தொழில் நடைமுறைகள் போன்றவற்றில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவதை இந்தச் சட்டம் தடை செய்கிறது.
  • குழந்தைகளைப் பணியில் அமர்த்துவோருக்கு 3 மாதம் முதல் ஓர் ஆண்டு வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.20 ஆயிரம் வரை அபராதம் அலலது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம். இந்தச் சட்ட நடைமுறைகளை மத்திய அரசும், மாநில அரசும் அவரவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் செயல்படுத்த வேண்டும்.
  • 1987-ஆம் ஆண்டு தேசிய குழந்தைத் தொழிலாளர் கொள்கை அறிவிக்கப்பட்டது. இதன்படி தீமைகளை ஏற்படுத்தும் தொழில்களில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படாமல் காப்பதற்குத் தேவையான அரசியல் சட்டப் பிரிவுகள் மற்றும் சட்டப் பிரிவுகள் இடம் பெற்றுள்ளன. இந்தச் சிக்கலான குழந்தைத் தொழிலாளர் முறை பற்றி இந்தக் கொள்கையில் விரிவாகவும், ஒருங்கிணைந்த முறையிலும் விளக்கப்பட்டுள்ளன.
  • சட்ட நடவடிக்கைத் திட்டம், குழந்தைகளின் குடும்பங்கள் பயன் அடையும் வகையிலான பொது வளர்ச்சித் திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்துதல், குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் அம்முறையை ஒழிப்பதை அடிப்படையாகக் கொண்ட திட்டங்களைச் செயல்படுத்துதல் என இந்தக் கொள்கையின்படி தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டங்களை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
  • தீமை ஏற்படுத்தும் தொழில்களில் ஈடுபட்டுள்ள குழந்தைகளை மீட்டு மறுவாழ்வு அளிப்பதற்கான தொடர் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • பெரும்பாலான குழந்தைகள் வேலைக்கு அனுப்பப்படுவதற்குக் காரணம் வறுமைதான் என்பதை வசதியாக மறந்து விடுகின்றனர். குடும்பத்தில் எல்லோரும் வேலைக்குப் போனால்தான் அரைவயிறாவது சாப்பிட முடியும். இந்நிலையில் பெற்றோரைக் குற்றம் கூறி என்ன பயன்? அவர்கள் வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கின்றனர்? இல்லாதபோது என்ன செய்ய முடியும்? இப்படியும் சிலர் கேட்கவே செய்கின்றனர்.
  • இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த நாட்டின் வளர்ச்சியைக் கண்டு உலக நாடுகள் வியக்கின்றன. இந்தியா 9 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை அடைந்துவிட்டது. இதுவரை இந்தியச் செல்வந்தர்களாக இருந்தவர்கள் இப்போது உலகச் செல்வந்தர்களாக மாறிவிட்டார்கள்.
  • ஆனால் இங்குள்ள ஏழை மக்கள் மேலும் ஏழைகளாகி வருவதும் காணப்படுகிறது. "நாளைய பொழுது நல்ல பொழுதாக விடியுமா?' என்ற கவலையிலேயே காலம் ஓடுகிறதே! இவர்களை எந்தச் சட்டம் என்ன செய்ய முடியும்?
  • ஏழ்மை மட்டுமின்றி, இயற்கைச் சீற்றங்களின்போது பல குடும்பங்கள் வீடு, சொத்து, வாழ்வாதாரம் போன்ற அனைத்தையும் இழந்துவிடுவதால் அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் வேலைக்கு அனுப்பப்படுகின்றனர். உறவினர்கள், மற்றும தரகர்களால் நகர்ப்புறங்களுக்கு அழைத்துச் செல்லப்படும் குழந்தைகளில் பெரும்பாலோர் கொத்தடிமைகளாக விற்கப்படுகின்றனர்.
  • குழந்தைகள்தான் நமது உண்மையான சொத்து என்றும் தேசத்தின் எதிர்காலம் என்றும் கொள்கை ஆவணங்கள் கூறுகின்றன. இந்தியாவில் உள்ள தொழிலாளர் சக்தியில் 55 விழுக்காடு குழந்தைத் தொழிலாளர்கள் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
  • இந்தியாவில் கோடிக்கணக்கான குழந்தைகள் எந்த ஆதரவும் இல்லாமல் தெருவில் திரிகின்றனர். இந்தியாவில் குழந்தைகளின் நலனுக்காக நிதிநிலை அறிக்கையில் 5 விழுக்காட்டிற்கும் குறைவாகவே ஒதுக்கப்படுகிறது.
  • "அனைவருக்கும் கல்வி' என்னும் அரசுத் திட்டம் இன்னும் அனைவரையும் சென்றடையவில்லை. இப்போது படித்து வருபவர்களில் 50 விழுக்காடு பேர் தொடக்கக் கல்வியை முடிக்கும் முன்பே பள்ளியிலிருந்து நின்றுவிடுகின்றனர். இடைநிற்றல் ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே வருகிறது.
  • குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை உறுதி செய்ய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று கூறுகிறது. குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பது, சத்துணவு வழங்குவது, கல்வி அளிப்பது ஆகியவை அரசாங்கக் கொள்கையின் அடிநாதமாக அமைய வேண்டும் என்றும் கூறுகிறது.
  • "குழந்தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்திலே' என்பது பெரியோர் பொன்மொழி. தெய்வத்தைக் கொண்டாடுகிறோம். குழந்தைகளைக் கொண்டாட வேண்டாமா? செதுக்க வேண்டிய சிற்பத்தைச் சிதைக்கலாமா?
  • "குழந்தைகளின் வருமானம் குடும்பத்துக்கே அவமானம்' என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர வேண்டும். குழந்தைகளின் எதிர்காலத்தைக் கெடுப்பதற்கான உரிமை யாருக்கும் இல்லை; அவர்களை ஆளாக்க வேண்டிய கடமை மட்டுமே அனைவருக்கும் உள்ளது.
  • இன்று உலகக் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள்.

நன்றி: இந்து தமிழ் திசை (12 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories