TNPSC Thervupettagam

குழந்தைப் பருவப் புற்றுநோய்: சவால்களும் சிகிச்சையும்

August 5 , 2023 396 days 240 0
  • சர்கோமா எனும் குழந்தைப் பருவப் புற்றுநோய், மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு நோயாக உள்ளது. பொதுவாக இளம் வயதினருக்கும் குழந்தைகளுக்கும் ஏற்படும் எலும்புப் புற்றுநோய், குழந்தைப் பருவ எலும்புப் புற்றுநோய் அல்லது குழந்தைப் பருவ சர்கோமா எனக் குறிப்பிடப் படுகிறது. சர்கோமா என்பது பல்வேறு வகையான புற்றுநோய்களின் தொகுப்பைக் குறிக்கும் ஒரு சொற்றொடர். இவற்றுள், ஆஸ்டியோசர்கோமா என அழைக்கப்படும் எலும்புப் புற்றுநோய் பரவலாக காணப்படும் புற்றுநோயாக இருக்கிறது.

சர்கோமா:

  • குழந்தைப் பருவ சர்கோமா என்பது, குழந்தைகளின் எலும்புகளிலும் மென் திசுக்களிலும் உருவாகும் அரிதான புற்றுநோய்களின் ஒரு தொகுப்பு. எலும்புப் புற்றுநோயைப் பொறுத்தவரை ஆஸ்டியோ சர்கோமா என அழைக்கப்படும் புற்றுநோயே குழந்தைப் பருவ நோயாளிகளிடம் மிக அதிகமாகக் கண்டறியப்படும் புற்றுநோய் வகையாக இருக்கிறது. இந்தத் தீவிரமான புற்றுநோயானது கைகள், கால்கள் போன்ற நீண்ட எலும்புகளின் முனைகளுக்கு அருகிலுள்ள எலும்பு வளர்ச்சியடையும் பகுதிகளில் உருவாகிறது.

வகைகள்:

  • குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் ஒன்றாக ஆஸ்டியோ சர்கோமா உள்ளது. ஈவிங் சர்கோமா, குருத்தெலும்புப் புற்று, திசுசெல் புற்றுநோய் ஆகியவை எலும்புப் புற்றுநோயின் பிற வகைகளில் அடங்கும். இந்த ஒவ்வொரு வகைப் புற்றுநோயும் அதன் தனிப்பட்ட பண்புகளையும், சிகிச்சை நெறிமுறைகளையும் கொண்டதாக உள்ளன. ஒவ்வொரு குழந்தைக்கும் பொருத்தமான சிகிச்சை முறையைத் தீர்மானிப்பதற்கு ஆரம்ப நிலையிலேயே நோய்கண்டறியப்படுவது மிகவும் முக்கியம்.

தனித்துவச் சவால்கள்:

  • வயதுவந்த நபர்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களிலிருந்து வேறுபட்டதாக, தனித்துவமான பல சவால்களைக் குழந்தைப் பருவ சர்கோமாவும் எலும்புப் புற்றுநோயும் கொண்டுள்ளன.

வயது தொடர்புடைய சிக்கல்கள்:

  • குழந்தைகளின் எலும்புகள் வளர்ச்சியடைந்து பெரிதாகக்கூடியவை. இந்நிலையில் அறுவை சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொள்வது சிக்கலை அதிகரிக்கும். கை, கால் உறுப்புகளின் இயக்கம், வளர்ச்சி ஆகியவற்றில் அறுவைசிகிச்சையினால் ஏற்படச் சாத்தியமுள்ள தாக்கம் குறித்து கவனமாகப் பரிசீலிப்பது மிகவும் முக்கியம்.

உணர்வுரீதியான பாதிப்பு:

  • குழந்தைப் பருவம் என்பது, ஒரு நபரின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் மிக முக்கியமான காலகட்டம். இளவயதில் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்படுவது, அந்த இளநோயாளி களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மிக ஆழமான, உணர்வுரீதியிலான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, புற்றுநோய்க்கான சிகிச்சை காலம் முழுவதிலும் சமூக உளவியல் சார்ந்த ஆதரவும், ஆலோசனையும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
  • உடலின் பிற பகுதிகளுக்குப் புற்றுநோய் பரவும் சாத்தியம்: எலும்புப் புற்றுநோய் உள்பட, குழந்தைப் பருவ சர்கோமா, வயதுவந்த நபர்களுக்கு வரும் பிற புற்றுநோய்களோடு ஒப்பிடுகையில் பிற உறுப்புகளுக்கு இடம்மாறிப் பரவும் போக்கை அதிகளவில் கொண்டிருக்கிறது. பிற உறுப்புகளுக்குப் பரவுவதைக் கண்டறிவதற்கும், சிகிச்சை மூலம் அவற்றை நிர்வகிப்பதற்கும் நெருக்கமான கண்காணிப்பும் பொருத்தமான இமேஜிங் தொழில் நுட்ப உத்திகளும் மிகவும் அவசியம்.

சிகிச்சை அணுகுமுறைகள்:

  • அறுவைசிகிச்சை: குழந்தைப் பருவ சர்கோமாவுக்கான சிகிச்சையில் அறுவை சிகிச்சை நடவடிக்கை, ஓர் இன்றியமையாத பங்கைக் கொண்டிருக்கிறது. முடிந்தவரை ஆரோக்கியமுள்ள எலும்புகளையும் திசுக்களையும் அதிக அளவு தக்கவைத்துக் கொண்டு புற்றுக்கட்டியை மட்டும் அகற்றவேண்டும். உடலுறுப்புகளின் இயக்க நிலையையும் வாழ்க்கையின் தரத்தையும் பராமரிப்பதற்கு, பாதிக்கப்பட்ட எலும்புநீக்கப்பட்டு, செயற்கை உறுப்புஉட்பதியங்கள் அல்லது எலும்பு ஒட்டுசிகிச்சைகள் ஆகியவை பயன்படுத்தப் படுகின்றன. கை, கால் எலும்புகளை முற்றிலும் நீக்காத அறுவைசிகிச்சைகளாக இவை இருக்கும்.

கீமோதெரபி:

  • சிஸ்டமிக் கீமோதெரபி, பொதுவாக அறுவைச்சிகிச்சைக்கு முன்பும் அறுவைசிகிச்சைக்குப் பிறகும் வழங்கப்படுகிறது. புற்றுக்கட்டியின் அளவை சுருங்கச் செய்யவும், அறுவைசிகிச்சை செய்த இடத்தில் எஞ்சியுள்ள புற்றுசெல்களை அழிக்கவும், புற்றுக்கட்டி திரும்பவும் வரும் இடரைக் குறைக்கவும் கீமோதெரபி சிகிச்சை தரப்படுகிறது. அறுவைசிகிச்சை செய்ய இயலாத புற்றுக்கட்டிகளுக்கு அல்லது உடலின் பிற பகுதிகளுக்குப் பரவியிருக்கும் புற்றுக்கட்டிகளுக்கு முதன்மை சிகிச்சை வழிமுறையாக கீமோதெரபி இருக்கக்கூடும்.

கதிரியக்கச் சிகிச்சை:

  • சில நோயாளிகளுக்கு, அறுவைசிகிச்சைக்குப் பிறகு எஞ்சியிருக்கும் புற்றுச்செல்களை இலக்காகக் கொண்டு அழிப்பதற்கும் அல்லது அறுவை சிகிச்சையின் மூலம் முற்றிலுமாக அகற்ற இயலாத புற்றுக்கட்டிகளுக்குப் பிரதானச்சிகிச்சையாகவும் கதிரியக்கச் சிகிச்சை பரிந்துரைக்கப்படக்கூடும். புற்றுக்கட்டியைச் சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்கள் கதிர்வீச்சுக்கு வெளிப்படுவதைக் குறைக்கக் கவனமாகத் திட்டமிட வேண்டும்.

இலக்கு சிகிச்சைகள்:

  • மூலக்கூறு நோயறிதல் துறையில் நிகழ்ந்திருக்கும் கண்டுபிடிப்புகளும், மேம்பாடுகளும் குழந்தைப் பருவ சர்கோமாவோடு தொடர்புடைய குறிப்பிட்ட மரபணு பிறழ்வுகளுக்கு இலக்கு சிகிச்சைகள் உருவாவதற்கு வழிவகுத்திருக்கின்றன. இது ஆரோக்கியமான, இயல்பான செல்களுக்கு ஏற்படக்கூடிய சேதத்தை முடிந்த அளவு குறைக்கிறது; அதே வேளையில், புற்றுசெல் களின் வளர்ச்சியையும் தடுத்து நிறுத்துகிறது.
  • குழந்தைப் பருவ சர்கோமா, நோயாளிகளின் வயது, அவர்களின் வளர்ச்சிஆகியவற்றின் காரணமாகத் தனித்துவமான சவால்களைக் கொண்டதாக இருக்கிறது. இத்தகைய பாதிப்புகளுக்குச் சிறப்பான சிகிச்சை வழிமுறைகள் மிகவும் அவசியம். துல்லியமான நோயறிதல், பல்வேறு துறைகளை உள்ளடக்கிய சிகிச்சை திட்டம், தொடர்ந்து வழங்கப்படும் ஆதரவும், பாதிப்பிலிருந்து மீள்வதற்கும் சமாளிப் பதற்கும் உதவும்.

நன்றி: இந்து தமிழ் திசை (05 – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories