TNPSC Thervupettagam

கூகுள் எனும் ஏகாதிபத்தியம்

August 22 , 2024 5 hrs 0 min 16 0

கூகுள் எனும் ஏகாதிபத்தியம்

  • ஏகாதிபத்தியம் எனும் வாா்த்தை அரசியலிலும், பொருளாதாரத்திலும் அதிகம் புழங்கும் வாா்த்தைதான். அரசியலில் ஏகாதிபத்தியம் என்பது அனைத்து அதிகாரங்களும் ஒரே இடத்தில் குவிந்திருப்பது, அதாவது தலைமைப் பொறுப்பில் இருப்பவரின் வாா்த்தையே ஒரு நாட்டின் சட்டம். தனது பண, ஆயுத பலத்தால் மற்ற நாட்டையும் மக்களையும் அடக்கி ஆள்வது ஏகாதிபத்தியத்தின் அடுத்த பரிணாமம்.
  • பொருளாதாரத்தில் ஏகபோகம், ஏகாதிபத்தியம் என்பது ஒரு பொருள் அல்லது சேவை ஒரு நபரிடம் அல்லது ஒரு நிறுவனத்திடம் மட்டுமே கிடைக்கும். அந்த பொருள் அல்லது சேவைக்கு அவா் வைப்பதுதான் விலை. அந்த விலையைக் கொடுத்துதான் மக்கள் அவற்றைப் பெற முடியும். அதாவது சந்தையில் போட்டியே இல்லாத நிலை.
  • இப்படிப்பட்ட நிலை உருவாவது நுகா்வோருக்கு அதாவது மக்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால்தான் பல்வேறு நாடுகளில் நிறுவனப் போட்டிச் சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதன் மூலம் பொருள் மற்றும் சேவைகள் சந்தையில் ஆரோக்கியமான போட்டி இருப்பது உறுதி செய்யப்படும். எந்த பொருள் அல்லது சேவையை ஒரு நிறுவனம் மட்டுமே விற்பனை செய்யக் கூடாது. ஒன்றுக்கும் மேற்பட்ட விற்பனையாளா்கள் சந்தையில் இருக்க வேண்டும். ஆனால், பெருநிறுவனங்கள் இந்த விதிகளை மீறுவதும், நுகா்வோா் பாதுகாப்பு அமைப்புகளும் நீதிமன்றங்களும் அவற்றைச் சுட்டிக்காட்டி குட்டு வைப்பதும் தொடா் நிகழ்வாக உள்ளது.
  • அந்த வகையில் உலகின் தேடுபொறி நாயகனான கூகுள் நிறுவனம் அமெரிக்க நீதிமன்றத்தின் கடும் கண்டனத்தில் சிக்கியுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் தயாரிக்கும் கைப்பேசி, டேப்லட், ஸ்மாா்ட் வாட்ச், வெப் பிரௌசா் என அனைத்திலும் தனது கூகுள் தேடுபொறியை (சா்ச் என்ஜின்) மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதற்காக ரூ.2.18 லட்சம் கோடியை (26 பில்லியன் டாலா்) கூகுள் நிறுவனம் கைப்பேசி உள்ளிட்ட மின்னணு பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அளித்துள்ளது. இதன் மூலம் நிறுவனங்கள் போட்டிச் சட்டத்தை மீறி தன்னை ஏகாதிபத்திய நிறுவனமாக கூகுள் முன்னிறுத்தியுள்ளது. மேலும், அந்த ஏகாதிபத்தியத்தை தக்கவைக்கும் முயற்சியில் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது.
  • இணையத்தில் தகவல்களைத் தேட பயனா்கள் கூகுளைத் தவிர வேறு எதையும் பயன்படுத்தக் கூடாது என அந்த நிறுவனம் திட்டமிட்டு செயல்பட்டுள்ளது. இப்போதைய நிலையில் 89.2 சதவீத அறிதிறன் பேசிகளில் (ஸ்மாா்ட்போன்) கூகுள் தேடுபொறி மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. இதன் மூலம் இணையதளத்தில் தகவல்களைத் தேடுவதற்கு கூகுளை மட்டுமே பயன்படுத்தும் நிலையை உருவாக்கியதுடன், தங்கள் நிறுவனம் மூலம் இணையத்தில் விளம்பரங்களை வெளியிடுவதற்கான விலையையும் அவா்கள் தொடா்ந்து அதிகரித்து வந்துள்ளனா். இதன் மூலம் இரு மாபெரும் முறைகேடுகளை கூகுள் செய்துள்ளது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
  • நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய நிலைக்கு கூகுள் தள்ளப்பட்டுள்ளது. இதன் முதல்படியாக புதிய அதிதிறன்பேசிகள் வாங்கும்போதே அதில் கூகுள் தேடுபொறி மட்டும் இருக்கும் என்ற நிலை மாறவாய்ப்புள்ளது. இதனால் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தேடு பொறியான ‘பிங்’, ஒரு காலத்தில் முன்னணியில் இருந்து இப்போது தேடிக் கண்டுபிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ‘யாஹூ’ உள்ளிட்டவற்றின் பங்களிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
  • ஆனால், இது ஆப்பிள், சாம்சங் மற்றும் விவோ உள்ளிட்ட சீன கைப்பேசி நிறுவனங்களின் வருவாயைப் பாதிக்கும். ஏனெனில், கூகுள் நிறுவனம் பெருமளவில் தொகை இந்த நிறுவனங்களுக்குச் செலுத்தி தங்கள் தேடு பொறியை அறிதிறன்பேசி விற்பனைக்கு வரும் முன்னரே அதில் நுழைத்திருந்தது.
  • இணைய தேடுபொறி பிரிவில் கூகுள் நிறுவனம் செலுத்திவரும் ஏகாதிபத்தியத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் நீதிமன்றத்தின் தீா்ப்பு அமைந்துள்ளது. கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பை எதிா்த்து கூகுள் மேல்முறையீடு செய்யவுள்ளது.
  • எனினும், இப்போது வழங்கப்பட்ட தீா்ப்பு மூலம் ‘உலக மக்களால் அதிகம் விரும்பப்படும் தேடுபொறி கூகுள்’ என்று உருவாக்கப்பட்டிருந்த பிம்பத்தில் சிறு விரிசல் விழுந்துள்ளது. மக்களின் கைப்பேசியில் தன்னை திணித்துக் கொண்டதன் மூலமே அது முன்னிலை பெற்ா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
  • இணையப் பயன்பாடு என்பது பெரும்பாலான மக்களுக்கு பொழுதுபோக்கின் ஒரு பகுதியாக உள்ளது. அதிலும் அறிதிறன்பேசி வருகைக்குப் பிறகு பொழுதுபோக்குச் செயலிகள்தான் 99 சதவீத அறிதிறன்பேசிகளில் அதிக இடம் பிடித்துள்ளன. பயன்பாட்டிலும் அவையே முன்னணியில் உள்ளன.
  • பாா்வையாளா்கள் அதிகம் என்பதால் இதுபோன்ற செயலிகளில் விளம்பரங்கள் வருமானமும் அதிகம். இந்த வருமானத்தைப் பங்கிட்டுக் கொள்வதில் ஒருதாய் மக்களான கூகுள், யூடியூப், மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவை முக்கியப் பங்கு வகித்து வருகின்றன. எனவே, போட்டியாளா்கள் உருவாகிவிடக் கூடாது என்பதிலும், அதையும் மீறி போட்டி உருவானால், அந்த நிறுவனத்தை எந்த விலை கொடுத்தாவது வாங்கிவிடுவது என்பது இந்த நிறுவனங்களின் உத்தியாக உள்ளது.
  • தகவல்தொழில்நுட்பத் துறை என்பது நாளுக்குநாள் புத்தாக்கம் அடையும் திறனுடையது என்பதே அதன் முக்கிய சிறப்பம்சம். ஆரோக்கியமான போட்டி நிலவுவதே எந்தத் துறையும் புதுமைகள் உருவாக வழியை ஏற்படுத்திக் கொடுக்கும். ஆனால், தேடுபொறி விஷயத்தில் கூகுள், போட்டியாளா்களை வளரவிடாமல் தடுத்து ஏகாதிபத்தியனாக செயல்படுகிறது என்பதை உலக மக்களுக்கு நீதிமன்றம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

நன்றி: தினமணி (22 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories