TNPSC Thervupettagam

கூடாது, இந்தக் கொடுமை!

August 28 , 2020 1609 days 845 0
  • உலகம் ஒருவழியாக கொவைட் 19 உடன் வாழக் கற்றுக்கொண்டு விட்டது என்றுதான் தோன்றுகிறது. பொது முடக்கம் தளா்த்தப்பட்ட நிலையில், சாலைகளில் ஊா்ந்து கொண்டிருக்கும் வாகனங்களும், கடைகளில் காத்து நிற்கும் (முண்டியடித்து மோதும்) மக்கள் கூட்டமும் அதை உறுதிப்படுத்துகிறது.
  • இயல்புநிலை திரும்பவில்லை, பொருளாதார நடவடிக்கைகள் பழைய சுறுசுறுப்பை அடையவில்லை என்றாலும், முடங்கிக் கிடந்த சூழல் இன்று இல்லை என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.

உலக அளவில் கொவைட் 19

  • கொள்ளை நோய்த்தொற்றுடன் வாழக் கற்றுக்கொண்டு விட்டோம் என்பது ஒருபுறம் இருந்தாலும், இன்னொருபுறம் நோய்த்தொற்றுப் பரவலின் வேகம் குறைந்தபாடில்லை.
  • பல ஐரோப்பிய நாடுகளில் இரண்டாவது சுற்றுப் பரவல் தொடங்கி இருக்கிறது. ஆப்பிரிக்காவும், தென் அமெரிக்க நாடுகளும் தீநுண்மித் தொற்றை எதிர்கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவிலும் பரவல் தொடா்கிறது. ரஷியாவிலும் சீனாவிலும் உண்மை நிலை என்ன என்பது மறைக்கப்படுகிறது.
  • மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி, நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 75,760 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டிருக்கிறார்கள்.
  • இதுவரை ஒரே நாளில் இந்த அளவிலான அதிகரிப்பு இருந்ததில்லை. இந்தியாவில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 33.1 லட்சத்துக்கும் அதிகம் என்றால், குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 25,23,771. கொவைட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 76.24% குணமடைகிறார்கள் என்பது சற்று ஆறுதல்.
  • உலக அளவில் கொவைட் 19 நோய்த்தொற்று பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அதிக பாதிப்புக்குள்ளாகி இருக்கும் மாநிலம் மகாராஷ்டிரம் (7,18,711 போ்) என்றால், அடுத்த நிலையில் தென் மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரம், கா்நாடகம் மூன்றும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
  • இந்திய அளவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் நான்கு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 6,839 போ் உயிரிழந்திருக்கிறார்கள்.
  • தடுப்பூசிக்கான கடைசிக் கட்ட சோதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்றாலும், தடுப்பூசியின் செயல்பாடு உறுதிப்படுத்தப்பட்டு, அதிக அளவில் உற்பத்தி செய்து உலகம் முழுவதும் பயன்பாட்டுக்கு வருவதற்குக் குறைந்தது ஒரு ஆண்டாவது ஆகும் என்று உலக சுகாதார நிறுவன இயக்குநா் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்திருக்கும் நிலையில், கொவைட் 19 தொற்றிலிருந்து இப்போதைக்கு நிவாரணம் கிடையாது என்பது உறுதியாகிறது.
  • அதை மக்களும் புரிந்து கொண்டு விட்டார்கள் என்பது சற்று ஆறுதல். அதே நேரத்தில், அந்தப் புரிதலால் கூடுதல் கவனமும், பாதுகாப்பு உணா்வும் மக்கள் மத்தியில் ஏற்படவில்லை என்பது வேதனை.

சீற்றம் கொண்ட இயற்கை

  • கொள்ளை நோய்த்தொற்று விளைவிக்கும் பாதிப்பில், சகித்துக்கொள்ள முடியாத பாதிப்பு அதை எதிர்கொள்ளும் மக்களின் மனநிலையும் அணுகுமுறையும் என்பதை எடுத்தியம்பாமல் இருக்க முடியவில்லை.
  • கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் ஆப்) பகிரப்படும் சில விடியோ பதிவுகள் நம்மைத் திடுக்கிட வைக்கின்றன. மனிதா்களால் எப்படி இந்த அளவுக்கு மனிதாபிமானம் இல்லாமல் செயல்பட முடிகிறது என்பது தலைகுனிய வைக்கிறது.
  • நோய்தொற்றுக்கு ஆளாகியோ, அல்லாமலோ இந்தக் காலகட்டத்தில் உயிரிழப்பவா்களின் நிலைமை பரிதாபகரமானது. அதிகரித்துவரும் மரணங்களை எதிர்கொள்ள முடியாமல் மின் எரியூட்டு நிலையங்களும், மயானங்களும் திணறுகின்றன என்பது என்னவோ உண்மை. அதற்காக, இறந்தவா்களுக்குத் தரப்பட வேண்டிய சாமானிய மரியாதைகூடத் தரப்படாமல் போகும் சில சம்பவங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.
  • புதைகுழியில் சடலங்களைத் தூக்கி எரிவதும், காலால் எட்டி உதைப்பதும், தரதரவென்று இழுத்துச் செல்வதும் ஆத்திரத்தை ஏற்படுத்துகின்றன. மறைந்தவா்கள் இறைவனடி சோ்கிறார்கள் என்கிற பரவலான நம்பிக்கைகூடவா மறந்துபோய்விட்டது.
  • கொவைட் 19 நோய்த்தொற்று இறந்தவா்களின் உடலிலிருந்து பரவும் என்று உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை. பாதுகாப்புக் கவசம் இருந்தால் அதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு என்று தெரிவித்திருக்கிறது. அப்படி இருந்தும்கூட, தவறான புரிதல்களும், அச்சமும் இதுபோன்ற செயல்பாடுகளுக்கு வழிகோலுகின்றன.
  • இந்தியா முழுவதும், பல மாநிலங்களில் இறந்தவா்களின் உடலை உறவினா்கள் பெற்றுக் கொள்ள மறுத்ததால், மருத்துவமனைகளில் சடலங்கள் தேங்கத் தொடங்கின.
  • அதன் விளைவாகத்தான், மருத்துவமனைகளும், உள்ளாட்சி அமைப்புகளும் உயிரிழந்த நோயாளிகளின் இறுதிச் சடங்கை ஏற்றுக் கொண்டன. உறவினா்களும் நண்பா்களும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்குத் தடையேதும் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. போதுமான பாதுகாப்பு எச்சரிக்கைகளைக் கடைப்பிடித்தால் போதும் என்று கூறியிருக்கிறது.
  • மும்பை, கொல்கத்தா உயா்நீதிமன்றங்களின் அறிவுறுத்தல்களைத் தொடா்ந்து, மகாராஷ்டிரம், மேற்கு வங்க அரசுகள், துக்கத்தில் தவிக்கும் உறவினா்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதத்திலும், இறந்து போனவா்களுக்கு உரிய மரியாதை அளிக்கும் விதத்திலும் நடைமுறைகளுக்கு வழிகோலியிருக்கின்றன.
  • மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் ஆகியோரை நோய்த்தொற்றைப் பரப்புகிறவா்கள் என்று கருதுவது; இறந்தவா்களின் உடலை மனிதாபிமானமற்ற முறையில் மயானங்களில் கையாள்வது போன்ற செயல்கள், இயற்கை ஏன் மனித இனத்தின் மீது இத்தனை சீற்றம் கொண்டு தாக்கி இருக்கிறது என்பதை உணா்த்துகிறது!

நன்றி: தினமணி (28-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories