கூரத்தாழ்வாரின் திவ்ய சரித்திரம்
- பகவத் ராமானுஜரின் சீடர்களின் தலைவராகவும், வேதாந்தம் அறிந்தவரில் முதல்வராகவும், கூர குலத்தின் தலைவராகவும் விளங்கும் ஸ்ரீவத்ஸசிங்கர் (ஸ்ரீவத்ஸாங்கர்) என்னும் கூரத்தாழ்வான், குருநாதரின் அனைத்து நற்குணங்களையும் பெற்றிருந்தார். முக்குறும்பு என்று அழைக்கப்படும் குலச் செருக்கு, செல்வச் செருக்கு, கல்விச் செருக்கு ஆகிய 3 குழிகளையும் கடந்தவராக இருந்தார். குருநாதரை விட 8 வயது மூத்தவராக இருந்தாலும், குருவே சரணம் என்று தமது பணியை நிறைவாகச் செய்தவர்.
- கூரேசரின் அவதாரம், ஸ்ரீராம அவதாரத்தின் பிரதிபலிப்பாகவும், அனைத்து நற்புலன்களின் உறைவிடமாகவும் கருதப்படுகிறது. குரு பக்தி மற்றும் குரு - சிஷ்ய உறவின் அருமைகளை வெளிக்காட்டும் ஒரு சிறந்த உதாரணமாக, கூரேசரின் வாழ்க்கை நமக்கு வழிகாட்டுகிறது. ‘குரு’ என்ற சொல்லுக்கு இருளைப் போக்குபவர் என்று பொருள். உலக வாழ்க்கையில் சூழ்ந்துள்ள இருளை ‘மாய இருள்’ என்று கூறுவதுண்டு.
- இதையே ‘அக இருள்’ என்று ஆன்றோர் பெருமக்கள் கூறுவர். அகம் உருகி தியானித்து, உள்ளொளியைப் பெருக்குவதன் மூலம் இந்த அக இருளைப் போக்க வழி காணலாம் என்பதை ஆச்சாரியப் பெருமக்கள் பறைசாற்றியுள்ளனர். அக இருளைப் போக்குவதற்கு ஒரு சாதனமாக குருபக்தி உள்ளதை அனைவரும் அறிந்து செயல்பட வேண்டும்.
- தேவர்களின் குரு பிரகஸ்பதி எனப்படும் வியாழ பகவான். அசுரர்களுக்கு சுக்கிராச்சாரியார் குருவாக இருந்தார். திரேதா யுகத்தில் மகாவிஷ்ணு ஸ்ரீராமராக அவதாரம் எடுத்தபோது, அவருக்கு குருவாக வாய்த்தவர் வசிஷ்டர். ஸ்ரீராமபிரானின் ராஜகுருவாக விசுவாமித்திரர் இருந்தார். குரு சிஷ்ய சம்பிரதாயம் என்பது யுகம் யுகமாகத் தொடர்ந்து வருகிறது என்பதை இதிகாச கதைகள் மூலமாகவும், புராணக் கதைகள் மூலமாகவும் அறிய முடிகிறது. ஒரு சொற்பொழிவு சமயத்தில், நம்மாழ்வாரைப் பற்றி கூறிக் கொண்டிருக்கும்போது, ஸ்ரீவத்ஸசிங்கர் மூர்ச்சையாகி விழுந்துவிட்டார்.
- விபரம் அறிந்த ராமானுஜர், அவர் இருக்கும் இடத்துக்கு வந்து, ‘நம்மாழ்வார் போல், நம் சீடரும் பெருமாளின் அருளிச் செயல்களுள் ஆழ்ந்துவிட்டார்’ என்று வியந்தார். முதல் ஆழ்வான் என்ற நாமத்தை அவருக்கு, குருநாதர் தந்தருளினார். காஞ்சியை அடுத்த கூரம் என்ற ஊரில் அவதரித்த காரணத்தால், அன்று முதல் கூரத்தாழ்வான் என்றே ஸ்ரீவத்ஸ சிங்கர் அழைக்கப்பட்டார். பல ஸ்தோத்திரங்களை இயற்றி மனித குலத்துக்கு அளித்தார். ‘கூரேச விஜயம்’ என்ற நூல் கூரேச ஆழ்வாரின் வாழ்க்கை வரலாறாக டாக்டர் பி.கே.வாசுதேவனின் சீரிய முயற்சியால் ஆங்கிலத்தில் அமைந்துள்ளது.
- இந்நூல் கூரத்தாழ்வாரின் ராமபக்தியையும், ஆழ்வார்களின் மேல் அவருக்கு உள்ள அன்பையும், வைணவத்தின் மீதுள்ள பிடிப்பையும் வெளிப்படுத்துகிறது. திருப்பாற்கடலில் ஆலோசனை (பரமாத்மாவின் நோக்கமும், சங்கல்பமும்), கூரேசர் மற்றும் பகவத் ராமானுஜரின் அவதாரம், அவர்களது இளமைப் பருவம், இருவருக்கும் இடையே உண்டான அறிமுகம், ஸ்ரீ ராமானுஜரின் விசிஷ்டாத்வைத கருத்துகள்ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீபாஷ்யம் நூலுக்கு கூரேசரின் பங்களிப்பு, ஸ்ரீவைணவ சித்தாந்த இயக்கம், கூரேசருடைய திருமாலிருஞ்சோலை மலை வாழ்க்கை, குருநாதரும் சிஷ்யரும் ஸ்ரீரங்கம் திரும்புதல், கூரேசர் பரமபதம் எழுந்தருளல், கூரேசரின் முக்கிய படைப்புகள் (ஸ்ரீவத்ஸம், ஸ்ரீவைகுண்டஸ்தவம், அதிமானுஷஸ்தவம், சுந்தரபாஹுஸ்தவம், வரதராஜஸ்தவம் ஆகிய பஞ்சஸ்தவம்) நாலாயிர திவ்ய பிரபந்தத்தத்தின் மீதுள்ள ஈடுபாடு, கூரேசரின் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்கள் ஆகியவற்றை மிகவும் தெளிவாக ஆசிரியர் விளக்கியுள்ளார்.
- ஜாதி, சமய, மொழி என்ற எல்லை கடந்த பிற உயிர்களின் மீது அன்பு, தீங்கு செய்தவர்க்கும் நன்மை செய்யும் பண்பு, பொருளின்பால் பற்றற்ற தன்மை, தன்னலம் கருதாது பொதுநலன் போற்றும் சிந்தனை, குருவுக்கு வரும் சோதனைகளைக் களைய எந்த தியாகமும் செய்ய மனமுவந்த பக்தி, இறைவனிடத்தில் சரணாகதி போன்ற கூரத்தாழ்வாரின் குணா திசயங்கள் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.
- தந்தைவழியில் அவரது குமாரர் பி.வி.ஓம்பிரகாஷ் நாராயணன், வைணவ சம்பிரதாயத்தில் திளைத்து, ஆங்கிலம் அறியாதவர்களுக்கும் பயன்படும் வகையில் அந்தநூலை தமிழில் மொழிபெயர்த்து வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி: இந்து தமிழ் திசை (19 – 12 – 2024)