- தடை செய்யப்பட்ட பொருள்கள் கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டி, பொதுமக்களிடம் பணம் பறிக்கும் மோசடிகள் கடந்த 2 ஆண்டுகளாக அதிக எண்ணிக்கையில் அரங்கேறிவருகின்றன. இந்த ஆண்டுத் தொடக்கத்திலிருந்து இதுவரை தமிழ்நாட்டில் 1,336க்கும் மேற்பட்டோரிடம் இத்தகைய மோசடி நடந்திருப்பதாக சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
- இந்தக் குற்றச் செயலில் ஈடுபடுபவர்கள், சம்பந்தப்பட்ட நபரை மிகவும் தந்திரமாக ஏமாற்றுகின்றனர். அந்த நபருக்கு பார்சலில் போதைப்பொருள் வந்திருப்பதாக ஏதேனும் ஒரு கூரியர் நிறுவன ஊழியர்போல ஒருவர் கைபேசியில் தெரிவிப்பார். சாமர்த்தியமாகப் பேசி, குற்றமிழைத்தவர்போல அந்த நபரை உணரச் செய்துவிடுவார்.
- அடுத்த கட்டமாக, மும்பை போதைப்பொருள் தடுப்புக் காவல் துறை, சிபிஐ, அமலாக்கத் துறை இப்படி ஏதேனும் ஓர் அமைப்பிலிருந்து அதிகாரிகள் காணொளி அழைப்பில் தோன்றி விசாரணை செய்வதாக நம்பவைப்பார்கள்.
- பின்னர், குற்றவாளிகள் கேட்கும் தொகையை அவர்கள் கூறும் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கும்படியும், அந்த நபர் ‘குற்றமற்றவர்’ என உறுதியான பின்னர், தொகை திருப்பி அளிக்கப்படும் எனவும் கூறப்படும். தொகை கைமாறிய பிறகு, குற்றவாளிகள் அனைவரும் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றுவிடுவார்கள்.
- விசாரணை என்னும் பெயரில் மிகுந்த மன நெருக்கடிக்கு உள்ளான மக்களுக்குத் தாங்கள் பெரிய அளவில் ஏமாற்றப்பட்டிருப்பது புரியவே சிறிது காலம் தேவைப்படும். இப்படி ஏமாற்றப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்குப் பிரச்சினைக்குரிய எந்தக் கூரியரும் வந்திருக்கவில்லை என்பதுதான் வருந்தத்தக்க உண்மை.
- மருத்துவர், ஐஐடி மாணவர், பேராசிரியர் உள்பட விவரம் அறிந்தவர்கள் எனக் கருதப்படுபவர்கள்கூட நம்ப முடியாத வகையில் பணத்தைப் பறிகொடுத்துள்ளனர். தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, 2023இல் பொருளாதார நோக்கில் நடந்த சைபர் குற்றங்கள்
- எண்ணிக்கையில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களை அடுத்து, தமிழ்நாடு நான்காம் இடத்தில் உள்ளது. 2023இல் தமிழ்நாட்டில் மொத்தம் ஆறு கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றப்பட்டதாக 59,549 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. கூரியர் நிறுவனங்களின் பெயரில் மிரட்டிப் பணம் பறித்த குற்றங்களும் இதில் அடக்கம்.
- ஏற்கெனவே பணி நெருக்கடியில் உள்ள காவல் துறைக்கு இணையவழிப் பண மோசடிகள் புதிய சவாலாக உருவெடுத்துள்ளன. உலகின் எந்த மூலையிலிருந்தும் இயங்கும் சைபர் குற்றவாளிகளுக்கோ இது மட்டும்தான் ஒரே வேலை. எனவே, வங்கிகளும் காவல் துறையுடன் ஒருங்கிணைந்து செயல்படவும் குற்றவாளிகளின் தொழில்நுட்ப வேகத்துக்கு ஈடுகொடுக்கவும் வேண்டியுள்ளது.
- மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவதுதான் இந்த மோசடியின் அடித்தளம். சட்டத்தை அமல்படுத்தும் முகமைகளின் விசாரணை இப்படித் தர்க்கம் இல்லாமலோ, கருணை இல்லாமலோ இருக்கும் என்கிற அவநம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டுள்ளதும் ஒரு காரணம். மோசடிக்காரர்கள் அதையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
- இணையவழிப் பரிவர்த்தனைகளின் சாதகங்களைப் போல, பாதகங்கள் குறித்தும் மக்களுக்குப் புரிதல் தேவைப்படுகிறது. அடிப்படைத் தகவல்களைப் பகிர்வதற்கு முன், காரணகாரியத்தைக் கேட்டு அறிய வேண்டும். இதில் முதியோர் ஏமாற்றப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதால், குடும்பத்தினர் அவர்களின் பரிவர்த்தனைகள் குறித்துத் தனித்த கவனம் செலுத்துவது நல்லது.
- இணையவழியில் நடக்கும் அனைத்து வகையான குற்றங்கள் குறித்தும் புகார் தெரிவிப்பதற்கான தொலைபேசி எண் 1930ஐ உடனடியாகத் தொடர்புகொண்டால், பாதிக்கப்பட்டோருக்குத் தீர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இதுதொடர்பான விழிப்புணர்வைப் பரவலாக ஏற்படுத்தி மோசடிக்காரர்களிடமிருந்து மக்களைக் காப்பது அரசின் கடமை!
நன்றி: இந்து தமிழ் திசை (28 – 05 – 2024)