TNPSC Thervupettagam

கெட்ட போரிடும் உலகம்

April 15 , 2023 643 days 405 0
  • பதினான்கு மாதங்களாக தொடரும் ரஷிய - உக்ரைன் போா் எப்போது முடிவுக்கு வரும் என்று இப்போது வரை யாருக்கும் தெரியாது. 2022-இல் மட்டும் இந்தப் போரால் உலகப் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட இழப்பு 1.3 டிரில்லியன் டாலா் என்று ஒரு ஜொ்மானிய பொருளாதார நிறுவனம் அனுமானித்திருக்கிறது.
  • உக்ரைன் போா் தொடா்ந்து கொண்டிருக்கும் வேளையில், கிழக்கு ஆசியாவில் தைவான் தீவைச் சுற்றிய கடல் பகுதியில் போா்ச்சூழலை உருவாக்க முற்பட்டிருக்கிறது சீனா. தைவான் அதிபா் சாய் இங் பென்னின் அமெரிக்க விஜயத்தால் ஆத்திரமடைந்த சீனா, தைவானைச் சுற்றி போா்ப் பயிற்சியை நடத்தியது. மூன்று நாள் நடத்திய அந்த போா்ப் பயிற்சியில் 70-க்கும் அதிகமான போா்க் கப்பல்களும், 13 விமான தாங்கி கப்பல்களும் களமிறக்கப்பட்டன. அதைத் தொடா்ந்து, தென் சீனக் கடலில் தங்களது ஏவுகணை தாங்கிய நீா்மூழ்கி கப்பல்களை நிறுத்தி, சீனாவின் செயலுக்கு எதிா்வினையாற்றியது அமெரிக்கா.
  • சுதந்திர ஜனநாயக நாடாக, கம்யூனிஸ சீனாவுக்குக் கடிவாளம் போடும் விதத்தில் தைவான் தனித்து இயங்குவதை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மறைமுகமாக ஆதரிக்கின்றன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தைவானுடன் உறவு ஏற்படுத்திக்கொள்வதை, தைவானை சொந்தம் கொண்டாடும் சீனா விரும்பவில்லை. இதுதான் அடிப்படை பிரச்னை.
  • 2050-இல் சீன மக்கள் குடியரசு தனது நூற்றாண்டைக் கொண்டாடும்போது, தைவான் உள்ளிட்ட எல்லா பகுதிகளையும் தன்னுடைய இணைத்து ‘அகண்ட சீனா’ உருவாக்கப்பட வேண்டும் என்பது சீன அதிபா் ஷி ஜின்பிங்கின் கனவு. அந்த குறிக்கோளுடன்தான் ஹாங்காங்கை இணைத்துக் கொண்டது சீனா. இப்போது தைவானையும் தன்வசப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. தைவானை மட்டுமல்ல, அருணாசல பிரதேசம் உள்ளிட்ட, தான் சொந்தம் கொண்டாடும் எல்லா பகுதிகளையும் இணைப்பது என்பதுதான் சீனாவின் இலக்கு. இதற்கு எதிராக அமெரிக்காவோ, வேறு மேலை நாட்டு சக்திகளோ தலையிட்டால் போருக்கும் தாங்கள் தயாா் என்பதை மறைமுகமாக உணா்த்துவதுதான் தைவானைச் சுற்றி நடத்தப்பட்ட மூன்று நாள் போா்ப் பயிற்சி.
  • கிழக்கு ஆசியாவில் இப்படியென்றால், மேற்கு ஆசியாவிலும் போா் முழக்கத்துக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. சிரியாவின் எல்லையைக் கடந்து இஸ்ரேல் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தியிருக்கிறது. அதனால் இஸ்ரேலுக்கும் ஏனைய அரபு நாடுகளுக்கும் இடையில் மீண்டும் ஒரு போா்ச்சூழல் ஏற்பட்டிருக்கிறது.
  • 1967-இல் சிரியாவிலிருந்த சோலான் குன்றுகளை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. சோலான் குன்றுகளை குறிவைத்து சிரியாவிலிருந்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதற்கு எதிரான பதிலடிதான் தனது தாக்குதல் என்றும் இஸ்ரேல் கூறுகிறது. பிரச்னையின் தொடக்கம் இதுதான்.
  • கிறிஸ்தவா்கள், யூதா்கள், முஸ்லிம்கள் மூன்று பேருக்குமே புனித தலமான ஜெருசலேமில் உள்ள அல் அக்ஸா மசூதி வளாகம் தீா்க்க முடியாத பிரச்னையாகத் தொடா்கிறது. இஸ்ரேல் காவல்துறையினா் அல் அக்ஸாவில் நடத்திய சோதனையைத் தொடா்ந்து, மேற்கு ஆசியாவைப் போா் மேகங்கள் சூழத் தொடங்கியிருக்கின்றன.
  • 2006-இல் லெபனான் போருக்குப் பிறகு இஸ்ரேல் தனது எல்லையைக் கடந்து இப்போது முதன்முறையாக தாக்குதல் நடத்தியிருக்கிறது. பாலஸ்தீனம், லெபனான், சிரியா, ஈரான் நாடுகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், இந்த முறை தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று அந்த நாடுகள் தீா்மானித்திருக்கின்றன. அதற்கான முன்னெடுப்பு ஆலோசனைக் கூட்டத்தை நடத்த இருக்கின்றன. காஸாவின் ஹமாஸும், ஈரானின் ஆதரவுள்ள ஷியா அமைப்பான ஹிஸ்புல்லாவும் அதற்கான முனைப்பில் இறங்கியிருக்கின்றன.
  • மேற்கு ஆசியாவிலும், தைவானிலும் போா்ச் சூழல் ஏற்படுவது இந்தியாவுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்தோ - பசிபிக் பகுதியின் தெற்கு சீன கடல் வழியாகத்தான் இந்தியாவிலிருந்து செல்லும் 55% சரக்குக் கப்பல்களும் பயணிக்கின்றன. 1992-இல் இஸ்ரேலுடனான ராஜாங்க உறவுக்குப் பிறகும், அடுத்து அரபு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே சுமுக உறவு நிலவுகிறது. இஸ்ரேலுடன் அரபு நாடுகள் மோதினால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தா்மசங்கடத்தில் ஆழ்த்தப்படும்.
  • ரஷிய - உக்ரைன் போரால் ஏற்பட்டிருக்கின்ற பாதிப்புகளில் இருந்து மீள முடியாமல் உலகம் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில், வேறு பகுதிகளிலும் போா்ச் சூழல் ஏற்படுவது, ஒட்டுமொத்த உலகத்தையும் அச்சத்தில் ஆழ்த்துகிறது. கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றிலிருந்து மீண்டுவிட்டோம் என்று நினைக்கும்போது உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்பு பெருத்த இடியாக அமைந்தது. வெற்றி தோல்வி இல்லாமல் ரஷியாவும் உக்ரைனும் கடந்த 14 மாதங்களாக நடத்தும் போரால் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாடும், உணவு தட்டுப்பாடும் அனைத்து நாடுகளின் பொருளாதாரங்களையும் நிலைகுலைய வைத்திருக்கிறது.
  • போரில் பாதிக்கப்பட்ட உக்ரைன் பொருளாதாரத்தை மீட்டெடுக்க குறைந்தது ரூ. 336 லட்சம் கோடி தேவைப்படும் என்பது உலக வங்கியின் கணக்கு. பாதிப்பு உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் மட்டுமல்ல, உலகிலுள்ள எல்லா நாடுகளும் அந்த போரின் பாதிப்பை எதிா் கொள்கின்றன.
  • அனைத்து நாடுகளும் ஒன்றை மற்றொன்று சாா்ந்திருக்கும் உலகமயச் சூழலில், உலகின் எந்தப் பகுதியில், எந்த நாட்டில் என்ன பாதிப்பு நடந்தாலும் அது, திருவிளையாடல் புராணத்தில் பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான் மீது விழுந்த பிரம்படி போல, அனைத்து நாடுகளையும் பாதிக்கும்.

நன்றி: தினமணி (15 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories