- ஆட்சியில் இருக்கும் முதல்வரை, ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்வதில் சட்டப் பிரச்சினை, அரசியல் பிரச்சினை, அரசமைப்புச் சட்டப் பிரச்சினை ஆகியவை உள்ளன; இந்தப் பிரச்சினையானது அரசமைப்புச் சட்ட வாசகங்களையும் மீறிச் செல்வது, அரசமைப்புச் சட்ட நீதி முறைமையையே கேள்விக்குள்ளாக்குவது.
- இந்த விவகாரத்தில் ‘உண்மைகள்’ என்று சொல்லப்படுகிறவற்றை ஒவ்வொன்றாக ஆராய்வோம். முதல்வர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் எல்லாம், அவர்கள் லஞ்சம் வாங்கினார்கள் - லஞ்சம் கொடுக்கிறவர்களுக்குச் சாதகமான முடிவுகளை எடுப்பதற்காக என்பது குற்றச்சாட்டு. இப்போதைய நிலையில் இதைப் பற்றிக் கூறுவதென்றால், ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்துவதாலேயே, உண்மையைக் கண்டுபிடித்துவிட்டதற்குச் சமமாக அதைக் கருதிவிட முடியாது; காலங்காலமாக சட்டம் ஏற்கும் கொள்கை என்னவென்றால், ‘ஒருவர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கும் வரையில் - அவரை குற்றம் செய்யாதவர் (நிரபராதி) என்றே கருத வேண்டும்’.
- எனவே, சட்ட கோணத்தில், குற்றஞ்சுமத்தப்பட்டவர் உண்மையில் அப்பாவி என்று கருதி இதை ஆராய்வோம். ஒருவர் அரசியல் கட்சியில் உறுப்பினராக இருக்கிறார். அந்த அரசியல் கட்சி தேர்தலில் போட்டியிடுகிறது, அக்கட்சியின் உறுப்பினர்கள் பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெறுகிறார்கள், வென்ற கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூடி, தங்களில் ஒருவரை முதல்வராகத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
- அவரும் அவருடைய அமைச்சரவையும் பதவியேற்று, புதிய அரசு ஆட்சிக்கு வருகிறது. இந்த முறையில்தான் நாடு சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான முறை, மாநிலங்களில் அரசுகள் பதவியேற்று வந்துள்ளன. மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்படும் ‘வெஸ்ட்மின்ஸ்டர்’ (பிரிட்டிஷ் பாணி) கொள்கைகளுக்கு ஏற்ற அரசியல்தன்மையும் அரசமைப்புச் சட்டத்தன்மையும் இவ்வகை அரசுகளில் இருக்கின்றன.
முதல்வரை நீக்குவது
- மாநிலத்தின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறவர் ‘சுதந்திர’மாக தனது கடமைகளைச் செய்தாக வேண்டும். அவர் ஆளுநருக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டும், அமைச்சரவைக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்க வேண்டும், மக்களுடைய குறைகளையும் ஆலோசனைகளையும் கேட்டுக்கொள்ள வேண்டும், சட்டப்பேரவையில் பேசப்படுவதை அவர் காதுகொடுத்து கேட்க வேண்டும் – அவரும் பேச வேண்டும், அவையில் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் மீதும் மசோதாக்கள் மீதும் அவர் வாக்களித்தாக வேண்டும்; நம்முடைய அரசு நிர்வாகம் முழுக்க முழுக்க எழுத்துப்பூர்வமான ஆவணங்கள், கோப்புகள் ஆகியவற்றைக் கொண்டு நடைபெறுகிறது.
- எனவே, முதல்வராகப் பதவி வகிப்பவர் அனைத்தையும் படித்து, அதில் குறிப்புகள் எழுதுவதும் கையெழுத்திடுவதும் கட்டாயம். ‘சுதந்திர’மாக நடமாட முடியாத எந்த முதல்வராலும் இந்தக் கடமைகளைச் செய்ய முடியாது.
- முதல்வராக இருப்பவரைப் பதவியிலிருந்து அகற்றவும் தோற்கடிக்கவும் சட்டம் அனுமதிக்கும் நடைமுறையிலேயே பல வழிகள் இருக்கின்றன. தேர்தல் மூலம் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்றால், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் இருக்கிறது; அல்லது சட்டப்பேரவையில் முதல்வர் தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றினால் அவர் பதவி விலகித்தான் தீர வேண்டும். அல்லது அரசு கொண்டுவரும் நிதி மசோதாவை எதிர்த்து வாக்களித்து, அந்த எண்ணிக்கை பெரும்பான்மையாக இருந்தால் அதன் மூலமும் அவரைப் பதவி விலகச் செய்துவிட முடியும்.
- அல்லது முக்கியமான கொள்கை மீதான அரசின் தீர்மானத்தைக்கூட வாக்கெடுப்பில் தோற்கடித்து பதவி விலகச் செய்யலாம். இவற்றுக்கெல்லாம், முதல்வரை எதிர்ப்பவர்களுக்கு அவையின் பெரும்பான்மை உறுப்பினர்களுடைய ஆதரவு தேவை. ஆனால், இப்போது முதல்வர் ஒருவரை நீக்க, அரசியல் கட்சிகள் புதிய – குயுக்தியான வழிமுறையைக் கண்டுபிடித்துள்ளன. ‘கவர்ந்திழுக்கும் காந்த தாமரை திட்டம்’ என்று இதற்குப் பெயர்.
- ஆளுங்கட்சி அல்லது கூட்டணிக்கு அவையில் உள்ள ‘பெரும்பான்மை’ வலிமை குறையும் அளவுக்கு, சில ஆளுங்கட்சி உறுப்பினர்களை மட்டும் அணுகி - பதவியிலிருந்து விலகுமாறோ அல்லது வேறு கட்சிக்குத் தாவுமாறோ சம்மதிக்க வைத்து, ஆளுங்கட்சிக்கு பேரவையில் உள்ள பெரும்பான்மை வலிமையைக் குறைத்துவிடுவது; ஆளுங்கட்சி பெரும்பான்மையை இழந்து சிறுபான்மைக் கட்சியாகிவிடும்.
- ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு மூன்றில் இரு பங்கு எண்ணிக்கைக்கும் மேல் ஒட்டுமொத்தமாக மாறினால் அதைக் ‘கட்சித்தாவல்’ என்று கருதாமல், ‘கட்சிப் பிளவு’ என்று கருத, புதிய கட்சி மாறல் தடைச் சட்டம் இடம் தருகிறது. அரசமைப்புச் சட்டத்தின் பத்தாவது அட்டவணை கட்சித்தாவலைக் கடுமையாகத் தண்டிக்கிறது. அப்படித் தாவுகிறவர்கள் பேரவை உறுப்பினர் பதவியை இழந்துவிடுவார்கள். அப்படிப்பட்ட பத்தாவது அட்டவணை சட்டத்தை நேரடியாக மோதித் தகர்க்காமல், நுட்பமாக காய்களை நகர்த்தி பயனற்றுப் போகச் செய்ய புது வழியால் முடிகிறது.
அரசைக் கவிழ்ப்பது
- முதல்வராகப் பதவி வகிப்பவரை அந்தப் பதவியிலிருந்து அகற்ற சட்டப்படி வேறு வழிகள் இருக்கின்றனவா? என்னால் இன்னொரு வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை, ஆனால் அப்படிக் கண்டுபிடிக்கக்கூடிய சூழ்ச்சித் திறம் கொண்ட ஆண்களும் பெண்களும் இன்றைய அரசியலில் நிச்சயம் இருக்கிறார்கள். மேலோட்டமாகப் பார்க்கும்போது சட்டப்பூர்வம்போலத் தோன்றும் வழியை அவர்கள்தான் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
- முதல்வருக்கு எதிராக ‘முதல் தகவல் அறிக்கை’ அல்லது ‘அமல்பிரிவு இயக்குநரக முதல் தகவல் அறிக்கை’யைப் பதிவுசெய்வது, பிறகு விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை அனுப்புவது, பிறகு அங்கேயே அவரைக் கைதுசெய்துவிடுவது; இந்த நடைமுறையில் ‘மத்திய புலனாய்வுக் கழகம்’ (சிபிஐ) சற்று எச்சரிக்கையாக நிதானத்துடன் செயல்படுகிறது, அமல்பிரிவு இயக்குநரகமோ (இடி) வெட்கமே இல்லாமல் (ஆள்வோர் ஆணைப்படி) அவசரகதியில் செயல்படுகிறது.
- முதல்வர் கைதுசெய்யப்பட்டுவிட்டால் உடனடியாக அவர் பதவி விலக வேண்டும் என்றோ, ஆளுநர் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றோ வலியுறுத்தப்படுகிறது. முதல்வராக இருக்கிறவரும், குற்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்படும் பிறரைப் போலவே நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும், பிணையில் விடுதலை செய்யுமாறு மனுச் செய்ய வேண்டும், பிணை கிடைக்காவிட்டால் நீதிமன்றக் காவலிலோ – விசாரிக்கும் அமைப்பின் காவலிலோ கைதியாகத் தொடர வேண்டும், கைது நடவடிக்கையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும், உயர் நீதிமன்றத்தில் பிணை விடுதலை கிடைக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்திடம் முறையிட வேண்டும், அந்த நீதிமன்றம் பிணை விடுதலை வழங்கலாம் அல்லது வழங்க மறுக்கலாம்.
- இதற்கிடையில் அந்த மாநில அரசின் நிர்வாகமும் நிலைத்தன்மையும் நிலைகுலைவது மட்டும் நிச்சயம். முதல்வர் கைதுசெய்யப்பட்டுவிட்டார் என்றாலே மாநில அரசு ஆட்டம் காணத் தொடங்கும்; உடனேயோ - சில மாதங்களுக்குப் பிறகோ ஆட்சி கவிழ்ந்துவிடும். இடைக்கால ஏற்பாடாக அதே கட்சியின் இன்னொரு தலைவர் முதல்வர் பதவியை ஏற்றால் அவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு கைதுசெய்யப்படும் அபாயம் நெருங்கிவிடும். ஊழல் குற்றச்சாட்டுகளின் உடனடி விளைவு என்னவென்றால், பதவியில் இருக்கும் முதல்வரை அகற்றுவது – அது நிறைவேறிவிடும்.
- இவை எல்லாமே பார்வைக்குச் சட்டப்படியானவைதான். அரசியல் நோக்கில் பார்த்தால் இது முரட்டுத்தனமான செயல் – ஒழுக்கக்கேடானது; அரசமைப்புச் சட்ட கோணத்தில் பார்த்தால் – இது விவாதத்துக்குரியது; என்னுடைய கேள்வி இவற்றைவிட பெரிய பரிமாணத்தைக் கொண்டது. ‘வெஸ்ட்மின்ஸ்டர்’ மாதிரியை நாடாளுமன்ற ஜனநாயகத்துக்குத் தேர்ந்தெடுத்த நாட்டில் அரசமைப்புச் சட்ட நீதிநெறிப்படி பார்க்கும்போது, முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்துவதும் அதை நிரூபிப்பதற்கு முன்னதாகவே அவரைப் பதவி விலகச் செய்வதும் பொருத்தமான செயல்தானா? அரசமைப்புச் சட்டத்தை, ஆட்சியிலிருக்கும் அரசியல் சக்திகள் அவ்வளவு எளிதாக அழிக்க அனுமதித்துவிடலாமா?
ஜனநாயகத்தைக் காக்க
- அரசியல் போட்டி காரணமாக தீய உள்நோக்கத்துடன் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, விசாரணை அமைப்புகளை விசாரிக்கவிட்டு, பிணை விடுதலை தொடர்பாக நீதிமன்றங்களின் வெவ்வேறு அடுக்குகளில் முரண்பாடான தீர்ப்புகளை வழங்க வைக்கக்கூடிய ஆபத்தும் இருக்கிறது என்று சில நாடுகள் ஏற்கெனவே உணர்ந்துள்ளன. எனவே, அவை தங்களுடைய நாட்டை ஆளும் அதிபர் அல்லது தலைமை நிர்வாகி பதவியில் இருக்கும்போது இத்தகைய குற்றச்சாட்டுகளால் கைதாவதிலிருந்து விலக்கு தர சட்டப்பூர்வமாகவே வழிசெய்துள்ளன.
- இந்தியாவிலும் நீதித் துறையில் உச்ச நீதிமன்ற – உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் பேரில் உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் முன்கூட்டிய ஒப்புதல் பெறாமல் எந்த விசாரணையையும் மேற்கொள்ளக் கூடாது என்று விலக்கு உரிமை வழங்கப்பட்டிருக்கிறது.
- ஒன்றிய அரசின் அமைப்புகள் செய்யும் இதே வேலையை, மாநில அரசுகள் சார்பில் எவரேனும் செய்தால் என்னவாகும்? ‘தன்னுடைய ஆட்சிக்குள்பட்ட பகுதியில், பிரதமர் பதவியில் இருப்பவர் ஒரு தவறு செய்திருக்கிறார் அதனால் அவரைக் கைதுசெய்கிறேன்’ என்று கைதுசெய்து, மாநில நீதித் துறை நடுவர் அவரை காவல் துறைக் காவலிலோ – நீதிமன்றக் காவலிலோ சிறைவைக்கிறார் என்று கருதுவோம்; அதன் விளைவுகள் கொடுங்கனவாகவும், பேரழிவை ஏற்படுத்துவதாகவும் மாறிவிடும்.
- கைதுசெய்யப்படுவதிலிருந்து சட்டத்தில் விலக்கு இல்லையென்றாலும், நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ பிரதமரும் – முதல்வரும் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ள நிலையில், அவர்களைக் கைதுசெய்ய அனுமதிக்கக் கூடாது என்ற தார்மிக விலக்கு நியதி இருப்பதை நீதிமன்றங்கள் கருத்தில் கொண்டால் என்ன?
- இதற்கான விடையில்தான், ‘வெஸ்ட்மின்ஸ்டர்’ கொள்கை அடிப்படையிலான நம்முடைய நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறை தப்பிப் பிழைப்பதிலும், அரசமைப்புச் சட்ட நீதிநெறி தழைப்பதிலும் இருக்கிறது.
நன்றி: அருஞ்சொல் (08 – 04 – 2024)