TNPSC Thervupettagam

கேரளத்தின் எதிர்காலம்

November 12 , 2019 1885 days 1125 0

கேரளத்தின் எதிர்காலம் என்னவாகும்?

  • நவீன இந்தியாவில் ஒரு மாநிலமாக உருவெடுத்த நாளான நவம்பர் 1-ம் தேதியை விமரிசையாகக் கொண்டாடியது கேரளம். கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு, நிலச் சீர்திருத்தம், அதிகாரப் பரவலாக்கப்பட்ட நிர்வாக அமைப்பு என்று பல விஷயங்களில் நாட்டுக்கும் ஏனைய மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கிறது கேரளம்.
  • ஆனால், சிறப்பான அந்த இடத்திலிருந்து வேகமாக அது சரிந்துவிடுமோ என்ற அச்சமும் இருக்கிறது.

கேரளத்தின் சாதனைகள்

  • சாதிரீதியிலான, வர்க்க அடிப்படையிலான வேறுபாடு களைக் களையவும் சுதந்திரம் பெறவும் கேரளம் ஒரு சமூகமாகத் திரண்டெழுந்து போராடி, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகங்களுக்குச் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. ஸ்ரீ நாராயண குருவின் போதனைகளிலிருந்தும் அப்போதைய சமுதாயத் தலைவர்கள் பலரின் அறிவுறுத்தல்களிலிருந்தும் உத்வேகம் பெற்ற சமூகம், மனித இன முன்னேற்றத்துக்கான நடைமுறைகளைப் பின்பற்றி மறுமலர்ச்சி கண்டது.
  • விவசாயத்தில் நிலவிய கொத்தடிமை முறை ஒழிக்கப்பட்டது, தீண்டாமை தகர்க்கப்பட்டது, மேல்சாதி மக்கள் மட்டும் பெற்றிருந்த ஆலய நுழைவு உரிமை போராடிப் பெறப்பட்டது, சமத்துவம் மேலெழுந்ததால் மக்களுடைய ஆற்றலும் பெருகியது, சுதந்திரமும் வலுப்பெற்றது.
  • வளமான பல்லுயிர்ப் பெருக்கம், ஏராளமான நீர்நிலைகள், மலைத் தொடர்கள், சதுப்பு நிலங்கள் என்று அனைத்துவிதமான இயற்கை வளங்களும் நிறைந்த தன்னிகரற்ற புவியியல் சூழலினூடாகத்தான் இந்த மாற்றங்கள் அத்தனையும் நிகழ்ந்தன என்பதையும் நாம் மறந்துவிடலாகாது.
  • கேரளத்தின் தன்னிகரற்ற இயற்கை வளங்களை, சுற்றுச்சூழல்களைக் கெடுக்காமல், சுதந்திரத்தையும் முன்னேற்றத்தையும் அனுபவிக்க வேண்டியது கேரள மக்களுக்கும் அதன் நிர்வாக அமைப்புகளுக்கும் உள்ள முக்கியமான கடமைகள்.
  • சமீபத்திய பத்தாண்டுகளில் கேரளத்தின் சுற்றுச்சூழல் நாசமானதற்கும், முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருந்த அரசியல் தலைமைகளுக்கும் தொடர்பு இல்லை என்று தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது.
  • இயற்கை வளங்களை வரம்பின்றிச் சுரண்டி எடுக்கும் காலனி காலத்திய நடைமுறையை, சமூகப் பொறுப்புள்ள எந்த அரசியல் தலைமையும் முன்னுதாரணமாகக் கொள்ள முடியாது.
  • ஆனால், மிக மூர்த்தண்யமாக அதுதான் நடந்தது. மாநில சட்டமன்றக் குழுக்களில் 2019 ஜூலை 4-ல் அளிக்கப்பட்ட 16-வது குழுவின் அறிக்கை தவிர, எஞ்சிய அனைத்துமே கேரளத்தின் தன்னிகரற்ற மேற்கு தொடர்ச்சி மலை சுற்றுச்சூழல் நாசமாவது குறித்து மிகவும் அலட்சியமாகவே இருந்துள்ளன.
  • 16-வது அறிக்கை மட்டுமே இடுக்கி, வயலாறு மாவட்டங்களில் சூழலைக் காக்கவிடாமல் கொடூரமாகவும் அற்பத்தனமாகவும் நிகழ்ந்த அரசியல் குறுக்கீடுகளைச் சுட்டிக்காட்டிக் கண்டித்துள்ளது.
  • சட்டப்படி அனுமதிக்கப்பட்ட குவாரிகளின் எண்ணிக்கையைப் போல பத்து மடங்கு குவாரிகள் செயல்பட்டு, மலைகளை வெட்டியெடுத்து, சூழலை நாசமாக்கியதை விவரித்துள்ளது. வரலாறு காணாத வெள்ளம், நிலச்சரிவுகளுக்குப் பிறகும் மேலும் பல மடங்கு குவாரிகளுக்கும் கல்லுடைக்கும் இடங்களுக்கும் அரசியல் தலைமை அனுமதி அளித்துள்ளது - அதுவும் மக்களுடைய எதிர்ப்புகளுக்கும் பிறகு - என்பது மாநிலத்தின் நலனில் தங்களுக்கு அக்கறை என்பதெல்லாம் வெறும் அலங்காரப் பேச்சுதான் என்பதையே உணர்த்துகிறது.
  • அரைகுறை கூட்டாட்சி நடைபெறும் இந்தியா போன்ற நாட்டில் மாநில, உள்ளூர் அரசியலின் தரம் மிக முக்கியம். அது நன்றாக இருந்தால்தான் ஊழலற்ற ஆட்சியைத் தர முடியும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும், உயர் கல்வி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த முடியும், மக்களிடையே சமத்துவத்தை வளர்க்கவும் சுதந்திரத்தை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க முடியும்.
  • கம்யூனிஸ்ட் அரசுக்கு ஆதரவாக கேரள மக்கள் 1957-ல் வாக்களித்தனர். அது பல முற்போக்கான நடவடிக்கைகளைத் தொடக்க காலத்தில் எடுத்ததை மறந்துவிட முடியாது. ஊழலற்ற அரசாக அது இருந்தது. கேரளம் இப்போது அந்த இடத்திலிருந்து வெகுதூரம் போய்க்கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது.

வளர்ச்சி வந்த பாதை

  • கடந்த 62 கால வளர்ச்சிப் பாதையைப் பின்னோக்கிப் பார்த்தால், முதல் கட்டத்தில் சமத்துவ சமூகத்தை அமைப்பதற்கான திட்டங்கள் ஏராளம் என்பது தெரிகிறது. 1979 முதல் 1988 வரையில் பொருளாதாரத் தேக்கநிலை நிலவியது. அதற்குப் பிறகு நடந்த இரு நிகழ்வுகள் கேரளத்தின் அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் எதிரொலித்தன.

1) வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட தொழில் பெருக்கம் காரணமாக லட்சக்கணக்கான மலையாளிகள் அங்கே வேலைக்குச் சென்றனர்.அதனால், கோடிக்கணக்கான ரூபாய் இந்தியாவுக்கு அவர்களால் அனுப்பப்பட்டது.

2) மத்திய அரசும் தாராளமயம், தனியார்மயம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் பொருளாதாரச் சீர்திருத்தங்களை அமல் செய்தது. இதனால், வளைகுடா நாடுகளிலிருந்து கேரளத்துக்குப் பணம் வருவது மேலும் அதிகரித்தது.

  • அத்துடன் சந்தையின் குறுக்கீடுகளுக்கு உட்பட்ட வளர்ச்சி நடைமுறையும் உருவானது. இவையெல்லாம் சேர்ந்து கேரளத்தின் நபர்வாரி நுகர்வைப் பலமடங்காகப் பெருக்கியது. அதில் ஏராளமாக வீண் செலவுகளும் சேர்ந்துகொண்டன. மாநிலத்தில் கட்டுமானத் தொழில் பெரிய அளவில் வளர்ந்தது.
  • அதன் முதல் துணை விளைவாக, மாநிலத்தின் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிப்படைந்தது. மக்களிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகமாயின. சேவைத் துறைகளை அடிப்படையாகக் கொண்டே வளர்ச்சி ஏற்பட்டது. வலுவான, உறுதிமிக்க அரசியல் தலைமை அப்போது இருந்திருந்தால் கேரளத்தின் எதிர்காலத்துக்கேற்ப நல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கும்.
  • எனவே, ரியல் எஸ்டேட் துறையில் மாஃபியா, மதுபான விற்பனையில் மாஃபியா, வனச் செல்வங்களைச் சூறையிடும் வன மாஃபியா, ஆற்று மணல் விற்பனை மாஃபியா, கருங்கல் ஜல்லி உடைப்பு மாஃபியா ஆகியவை ஏற்பட்டு, வளர்ச்சித் திட்டங்களைத் தங்களுடைய ஆதிக்கத்துக்கு உட்படுத்தின. மாஃபியாக்கள் சட்டங்களைத் தங்களுடைய தேவைகளுக்கேற்ப வளைப்பார்கள், யாரும் யாருக்கும் பதில்சொல்லத் தேவையில்லை என்பதை உருவாக்குவார்கள்.
  • கேரளத்தில் ஊறிவிட்ட லஞ்சக் கலாச்சாரத்துக்கு கொச்சியில் கட்டப்பட்டு, உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியிருக்கும் மராடு பல மாடி அடுக்ககமும், பலரிவட்டம் பாலமும் நிரந்தர நினைவுச் சின்னங்களாகும். மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக் 2000-ல் எழுதினார்: “ஒப்பந்ததாரர்கள் பெரும் லாபம் அடைந்தார்கள். அவற்றை அரசியல்வாதிகளுடன் பகிர்ந்துகொண்டார்கள்.
  • அந்த வேலைகளை ஒப்பந்ததாரர்களுக்குத் தர அரசியல்வாதிகள் உடந்தையாக இருந்தார்கள். பொறியாளர்கள் தொழில்நுட்ப அனுமதி வழங்கவும், பணிகளைக் கண்காணிக்கவும் லஞ்சம் வாங்கினார்கள், ஒப்பந்ததாரர்களுக்குப் பணம் தருவதற்கான பில்களுக்கு கிளார்க்குகளும் கணிசமாகக் கையூட்டு பெற்றார்கள்”.
  • 19 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரும்பிப் பார்த்தால் நிலைமை மேலும் மோசமாகிவிட்டது தெரிகிறது. போலீஸ் காவலில் விசாரணைக் கைதிகள் இறப்பது அடிக்கடி நிகழ்கிறது, அரசியல் படுகொலைகளும் அதிகரித்துவிட்டன, மதுபான நுகர்வு ஆண்டுக்காண்டு அதிகரிக்கிறது - இப்படிப் பல மோசமான அறிகுறிகள். கேரளத்தின் தற்காலம் இப்படியிருந்தால் எதிர்காலம் என்னாகும் என்று சிந்திக்காமல் அரசியல் வர்க்கத்தால் புறக்கணித்துவிட முடியுமா?

மக்கள் ஏன் எதிர்க்கவில்லை?

  • கேரளத்தில் எந்த அநீதி என்றாலும் கொதித்தெழும் மக்கள் ஏன் இவற்றை எதிர்த்துப் போராடவில்லை என்ற கேள்வி எழும். கேரள மக்கள் போராட்ட குணமும் சமூக நலனில் அக்கறையும் உள்ளவர்களாக இருந்தார்கள் என்பதை மறுக்க முடியாது.
  • கண்ணிலேயே படக் கூடாது, தீண்டக் கூடாது, பண்ணையில் கொத்தடிமையாக இருக்க வேண்டும் என்ற தலித்துகளுக்கு எதிரான தளைகளை உடைத்தவர்கள் கேரளர்கள்; பல சடங்குகளையும் நம்பூதிரிகளின் மூடப்பழக்கவழக்கங்களையும் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்று ஒதுக்கியவர்கள் கேரளர்கள்.
  • சாதி, மதத் தலைவர்களின் ஆதரவில் புதிதாகப் பல அரசியல் கட்சிகள் உருவான பிறகு கேரளமும் இப்போது ‘உண்மை கடந்த’ சமூகமாகிவிட்டது. பல மலையாள சேனல்களில் நடைபெறும் பொது விவாதங்களைக் கவனித்தாலே இது தெளிவாகும். பொதுமையான தார்மீக உணர்வு, பொதுமையான பகுத்தறிவு ஆகியவற்றை வேகமாக இழந்துவருகிறது கேரள சமூகம்.
  • ஒருகாலத்தில் தீண்டத்தகாத சமூகமாக ஒதுக்கப்பட்ட ஈழவர் சமூகம் இன்று அபாரமான வளர்ச்சி பெற்று மேலேறிவந்திருக்கிறது. ஆனால், தலித்துகளுக்கு நில உடைமை தொடர்பான உரிமை வழங்கப்பட்டாலும் காலனிகளுக்குள்ளேயே முடக்கப்பட்டுள்ளனர். ஆதிவாசிகளும் மீனவர்களும்கூட அவரவர்களுடைய பாரம்பரியமான வாழிடங்களிலேயே தங்கிவிட்டனர்.
  • அரசியல் சமூகத்தில் அவர்கள் ஒன்றுகலக்கவிடப்படவில்லை. விளிம்புநிலை சமூகத்தினர் தொடர்ந்து வெளிவட்டத்திலேயே உறைய வைக்கப்பட்டிருப்பது சமூகத் தோல்வியாகும்.பகுத்தறிவுள்ள பொதுவெளி விரிவடையாமல் போய்விட்டது.
  • பல்கலைக்கழகங்களும் உயர் கல்வியும் அந்த நிலைக்கேற்ற வளர்ச்சியைப் பெறாமல் வெறும் கேலிச்சித்திரங்களாகவே தொடர்கின்றன.

நன்றி: இந்து தமிழ் திசை (12-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories