TNPSC Thervupettagam

கேரளத்தின் நேசக் கரம் நீளுமா?

September 30 , 2019 1938 days 1192 0
  • ஆண்டுக்கு பெருமளவு மழை பொழியும் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆனைமலை பகுதிகளில், மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக் கடலில் கலந்து வீணாகும் நீரைத் தடுத்து அவற்றைச் சமவெளியில் பாயும் ஆறுகளுடன் இணைத்து, கிழக்கு நோக்கி திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களுக்கும், கேரளத்தின் சித்தூர் பகுதிக்கும் பாசன வசதி அளிப்பதுதான் பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம். ஆனைமலையாறு, நல்லாறு திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதன் மூலம் இதற்குத் தீர்வுகாண முடியும்.
பல்வேறு திட்டங்கள்
  • இரு மாநிலங்களுக்கும் பயன்படுவதால், இதன் மொத்தச் செலவு ரூ.44 கோடியை தமிழகம் ஏற்றுள்ளது.
  • ஆனைமலையாறு, நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம் ஆறு, தூணக்கடவு ஆறு, பெருவாரிப்பள்ளம் ஆறு ஆகிய ஆனைமலைக் குன்றுகளில் உள்ள 6 ஆறுகளும், ஆழியாறு, பாலாறு எனச் சமவெளிகளில் பாயும் இரண்டு ஆறுகளும் என மொத்தம் 8 ஆறுகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
  • இவற்றை இணைக்கும் வகையில், 10 அணைகள் கட்ட முடிவு செய்யப்பட்டதில், "அப்பர்' நீராறு, "லோயர்' நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, அப்பர் ஆழியாறு, திருமூர்த்தி ஆகிய 9 அணைகள் கட்டப்பட்டு, நீர்ப் பகிர்மானம் நடைபெறுகிறது.
  • ஆனைமலையாறு மட்டும் கட்டப்படவில்லை. பிரச்னையின் மூல காரணமே அதுதான்.
  • பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் அணைகள் கேரள மாநிலப் பகுதிக்குள் இருந்தாலும், அவற்றைப் பராமரிப்பது தமிழக பொதுப்பணித் துறைதான். இதற்காக கேரள அரசுக்கு தமிழக அரசு  குத்தகை செலுத்துகிறது.
  • கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சுமார் 4.5 லட்சம் ஏக்கரும், கேரளத்தில் சுமார் 20,000 ஏக்கரும் நேரடியாகப் பாசன வசதி பெறுகின்றன.
மின் உற்பத்தி
  • மேலும், சுமார் 200 மெகாவாட் மின் உற்பத்தியும் இவற்றில் நடைபெறுகிறது. கிடைக்கும் நீரில் 30.50 டி.எம்.சி. அளவு நீரை தமிழகமும், 19.55 டி.எம்.சி அளவு நீரை கேரளமும் பகிர்ந்து கொள்கின்றன.
  • தமிழகத்துக்கு முழுமையான அளவு தண்ணீர் ஒரு முறைகூட கிடைக்கவில்லை என்றாலும், கேரளத்துக்கு பெரும்பாலான ஆண்டுகளில் முழுமையான தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் எந்தவிதமான முரண்பாட்டையும் தமிழக அரசு பேணுவதில்லை.
  • கேரளப் பகுதிக்குள் தமிழகக் கட்டுப்பாட்டில் இருக்கும் மூன்று அணைகளையும் கையகப்படுத்த கேரள அரசு தொடர்ந்து முயன்று வருகிறது.
  • கடந்த 2013-ஆம் ஆண்டில் தில்லியில் நடைபெற்ற தேசிய அணைகள் பாதுகாப்புக் குழு கூட்டத்தில் வலியுறுத்தியதால் பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் அணைகளை கேரள அணைகள் என்ற பிரிவில் சேர்ப்பதாக மத்திய அரசு அறிவித்தது.
  • இதையடுத்து இந்த அணைகளில் பணியாற்றி வரும் தமிழக அதிகாரிகளுக்கு கேரள காவல் துறையினர் மூலம் தொடர்ந்து கேரள வனத் துறையினர் நெருக்கடிகளைக் கொடுப்பது வருத்தமளிக்கும் ஒன்றாகும்.
  • இரண்டு ஆண்டுகளுக்கு முன்புகூட தமிழக அதிகாரிகள் உள்பட 18 பேரை கேரள காவல் துறையினர் தாக்கினர்.
அணைத் திட்டங்கள்
  • நல்லாறு அணைத்திட்டம், ஆனைமலையாறு திட்டம் ஆகியவற்றை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்பதே விவசாயச் சங்கங்களின் தொடர் கோரிக்கையாகும்.
  • ஆனைமலையாறு திட்டம் என்பது ஆனைமலையாறு, இட்லியாறு ஒன்றுசேரும் இடத்தில் "லோயர்' நீராறு அணைக்கு மேல் இட்லியாறுக்கு குறுக்கே சிறிய அணை கட்டி அங்கிருந்து 6 கிலோமீட்டருக்கு சுரங்கம் அமைத்தால்,  கீழ் நீராறு அணைக்கு தண்ணீர் வந்து சேரும்.
  • அங்கிருந்து சோலையாறு, பரம்பிக்குளம் வழியாக தண்ணீரை தமிழகத்துக்குக் கொண்டு வரலாம். இந்தத் திட்டப்படி தமிழகத்துக்குக் கூடுதலாக 2.5 டி.எம்.சி. நீர் கிடைக்கும்.
  • ஆனால், இதற்கான உத்தேச மதிப்பீட்டுத் தொகை ரூ.585 கோடி. 
  • தற்போது இருக்கிற பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தில் உள்ள ஆனைமலையாறு திட்டம் விவசாயிகளின் கனவாகவே இருந்து வருகிறது.
  • இந்தத் திட்டத்தை நிறைவேற்றாமல் போனதற்கு முக்கியக் காரணம், இடைமலையாறு அணையை கேரள அரசு கட்டி முடிக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் தமிழகம் ஆனைமலையாறு திட்டத்தைக் கட்ட வேண்டும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது கேரளம். 
  • இடைமலையாறு அணையை கேரளம் கட்டி முடித்ததாகக் கூறினால், ஆனைமலையாறு அணையை தமிழகம் கட்டி 2.5 டி.எம்.சி.யும். இதைத் தவிர கீழ் நீராறில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் வழங்கும் 1.75 டி.எம்.சி. தண்ணீரையும் ஆக மொத்தம் 4.25 டி.எம்.சி.யை தமிழகம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது ஒப்பந்தமாகும்.
  • கடந்த  33 ஆண்டுகளுக்கு முன்பே இடைமலையாறு அணையைக் கட்டி முடித்து 75 மெகாவாட் மின் உற்பத்தி செய்து வந்தாலும், ஒரே ஒரு கால்வாயை மட்டும் வேண்டுமென்றே கட்டாமல், இடைமலையாறு அணைத் திட்டம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரவில்லை என்று கூறி கேரளம் தப்பித்துக் கொள்கிறது.
  • இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததாகக் கூறினால், 4.25 டி.எம்.சி நீரை தமிழகம் எடுத்துக்கொள்ளும் என்கின்ற அச்சமே இதற்குக் காரணம்.
  • கேரளத்துக்கு தண்ணீர் வழங்குவது தமிழகத்தின் கடமை மட்டுமல்ல, சகோதர உணர்வும் ஆகும். ஆனால், இது இரு பக்கமும் பொதுவாகத்தானே இருக்க வேண்டும்.
  • பருவகாலத்தில் நீரைப் பகிர்ந்து கொள்வதைப் போல, வறட்சிக் காலத்திலும் இருப்பதைப் பகிர்ந்து கொள்வதுதான் சகோதர மனப்பான்மையின் அங்கமாக இருக்க முடியும்.

நீரை திருப்பி விடுதல்

  • ஆனைமலையாற்றில் இருந்து பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்துக்கு 2.5 டி.எம்.சி நீரைத் திருப்புவதற்கு ஒப்பந்தப்படி உரிமை உண்டு.
  • மேலும் கேரளத்துக்கு நீர் செல்வதை முறைப்படுத்த தற்போதுள்ள மணக்கடவு அணைக்கட்டின் மேல்பகுதியில் 0.5 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட ஒரு சமச்சீர் நீர்த்தேக்கம் அமைக்கும் தமிழ்நாட்டின் திட்டத்தை கேரள அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.
  • எனினும், இந்தத் திட்டத்துக்கு கேரள அரசு இசைவு அளித்தால்தான் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள ஆண்டு ஒன்றுக்கு 7.25 டி.எம்.சி.- க்கும் கூடுதலான நீரை மணக்கடவில் இருந்து கேரளத்துக்கு அளிப்பது குறித்து தமிழ்நாடு பரிசீலிக்க முடியும் என்று எடுத்துரைக்கப்பட்டது.
  • நல்லாறு திட்டம் என்பது நீராற்றின் குறுக்கே ஒரு சிறிய அணையைக் கட்டி அங்கிருந்து 14 கி.மீ. தொலைவுக்கு "டனல்' அமைத்தால்  நல்லாறு பகுதிக்கு தண்ணீர் வந்து சேர்ந்துவிடும்.
  • இங்கு நல்லாறு என்ற அணையைக் கட்டி, தமிழகப் பகுதிகளுக்கு தண்ணீரை எளிதாகக் கொண்டு செல்ல முடியும். இந்தத் திட்டத்தின் மூலம் 7 டி.எம்.சி. தண்ணீரை தமிழகம் பெறவும், 250 மெகாவாட் மின் உற்பத்தி செய்யவும் இந்தத் திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • 1992-ஆம் ஆண்டு இரு மாநில அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது கேரளப் பகுதியில் அமைந்துள்ள பரம்பிக்குளம் அணையை தங்கள் பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டுக்குத் தேவையான தண்ணீரை தாங்கள்  வழங்குவதாகவும் கேரளம் கூறியது.
  • ஆனால், அணை பராமரிப்புச் செலவை தமிழக அரசுதான் ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையையும், நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்தியது.
அணை பராமரிப்புப் பணிகள்
  • படிப்படியாக பரம்பிக்குளம் அணையை கேரளம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர திட்டங்களை வகுத்து வருகிறது.
  • இந்த அணையின் அருகே தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் 2013 - ஆம் ஆண்டு கேரள அரசு தனது வனக் காவல் நிலையத்தைத் திறந்து அணைப் பகுதிகளைக் கண்காணிக்கத் தொடங்கியது.
  • கடந்த 2018 ஜனவரி 16-ஆம் தேதி பரம்பிக்குளம் மற்றும் துணை அணைகளின் பராமரிப்புப் பணிக்காக சென்ற தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளை அங்கு அனுமதிக்காமல், கேரள வனத் துறை திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
  • முல்லைப் பெரியாறு, குமரி மாவட்டத்தில் நெய்யாறு, திருநெல்வேலி மாவட்டத்தில் அடவிநயினார், உள்ளாறு, விருதுநகர் மாவட்டத்தில் செண்பகவல்லி - அழகர் அணைத்திட்டம், கோவை மாவட்டத்தில் பாம்பாறு, சிறுவாணி போன்ற நீராதாரப் பிரச்னைகளில் நம்மோடு சாதகமான போக்கை கேரளம் கையாளவில்லை.
  • பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்திலும் இதே போன்ற நிலைமைதான். தமிழக அரசின் கட்டுப்பாட்டில் பரம்பிக்குளம் அணை இருப்பதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டும் அதை விட்டுக் கொடுக்க மனமில்லாமல் கேரளம் தொடர்ந்து இடையூறுகளைச் செய்து வருகிறது.
  • கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு 4.50 லட்சம் ஏக்கர்  பாசன வசதி கிடைத்தும், குடிநீர் வழங்கும் பரம்பிக்குளம் திட்டத்துக்கு கேரள அரசு ஆர்வம் காட்டவில்லை.
  • தமிழக முதல்வர்  எடப்பாடி கே.பழனிசாமி - கேரள முதல்வர்  பினராயி விஜயன் ஆகியோரின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து  பரம்பிக்குளம் - ஆழியாறு  திட்டம் உள்பட நதிநீர்ப் பங்கீட்டு பிரச்னைகளுக்கு தீர்வுகாண இரண்டு அரசுகளின் சார்பில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன;
  • இரண்டு மாதங்களில் தீர்வு காணப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.  
  • இதன் மூலம் தமிழகம் - கேரளம் இடையே நல்லுறவும், நதிநீர்ப் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வும் கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

நன்றி: தினமணி (30-09-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories