- தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமன் என்கிற கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஸ்ரீமதிக்கு சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்க வேண்டும் என்பது ஆசை. அவரது பெற்றோர் ஒரு தையலகத்தில் வேலை செய்து வந்தனர். அவர்களுக்குக் கிடைக்கும் சம்பளம், குடும்பத்தை நடத்தவே போதுமானதாக இருந்தது. சைக்கிள் வாங்குவது, ஸ்ரீமதி குடும்பத்தினருக்கு எட்டாக் கனிதான்.
- அப்போது அவர் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். ஒரு பழைய சைக்கிளைப் புதுப்பித்து, மாவட்ட அளவிலான போட்டியில் ஸ்ரீமதி பங்கேற்றார். அதில் அவர் முதலிடத்தைப் பிடித்தார். அப்போதுதான் அவரது ஈடுபாட்டைக் குடும்பமும் முழுமையாகப் புரிந்துகொண்டது. சைக்கிள் பந்தய வீரர் ஒருவர், தான் முன்பு பயன்படுத்திய சைக்கிளைக் கொடுக்க, அதன் மூலமாகவும் சில போட்டிகளில் ஸ்ரீமதி கலந்துகொண்டார்.
சாதித்த ஸ்ரீமதி
- ஸ்ரீமதியின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகக் கழகம், கூடுதல் வசதிகள் கொண்ட ஒரு சைக்கிளை வழங்கியது. 14 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் பல போட்டிகளில் ஸ்ரீமதி முதலிடம் பெற்றார். 2019 இல் அவரது பயிற்சியாளரின் ஆலோசனையின்பேரில், சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வகையிலான சைக்கிளை இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. பல லட்ச ரூபாய் செலவழித்து அதை வாங்க ஒரு நன்கொடை யாளர் தேவைப்பட்டார். ஸ்ரீமதி தரப்பினர் நன்கொடையாளரைத் தேடினர்.
- இந்தச் சமயத்தில், திமுகவைச் சேர்ந்த இன்றைய மக்களவை உறுப்பினர் கனிமொழி, அப்போது கீழமுடிமனில் கிராமசபை கூட்டம் ஒன்றை நடத்தினார். ஸ்ரீமதியின் சைக்கிள் ஓட்டும் திறமை குறித்து அவருக்குக் கூறப்பட்டது. அவர் ஸ்ரீமதிக்குத் தேவைப்பட்ட சைக்கிளுக்கான நன்கொடையாளர் ஆனார். நடப்பது, கனவா நினைவா என்று ஸ்ரீமதிக்குத் தோன்றும் வகையில் அந்த சைக்கிள், அவரது வீட்டுக்கு வந்து சேர்ந்தது.
- ஸ்ரீமதியை ஊக்குவித்தவர்களின் எதிர் பார்ப்பு வீணாகவில்லை. அண்மையில் தமிழகத்தில் நடந்து முடிந்த கேலோ இந்தியா போட்டியில் 500 மீட்டர் பிரிவில் மதி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இவர் 2022இல் மிக இளையோருக்கான தேசிய அளவிலான போட்டியில் தங்கம் வென்றிருந்ததால், கேலோ இந்தியா போட்டியிலும் இடம் கிடைத்தது. தினமும் காலை 5 மணிக்கு எழுந்து பயிற்சியைத் தொடங்கும் ஸ்ரீமதி, தொடர்ந்து ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் சைக்கிள் ஓட்டுகிறார். ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெறுவது இவரது இலக்கு.
ஊர் மாறிய குடும்பம்
- தமிழகத்தில் நடந்து முடிந்த ஆறாவது கேலோ இந்தியா இளையோர் போட்டிகளில், ஸ்ரீமதியைப் போல பல இளம் வீரர், வீராங்கனைகள் அழுத்தமாகத் தடம் பதித்துள்ளனர். இந்தியா முழுவதிலுமிருந்து வீரர்கள் பங்கேற்கும் இப்போட்டியில் வெற்றி பெறுவது எளிதல்ல.
- தமிழ் மக்களுக்கு நம்பிக்கையை விதைத் திருக்கும் இன்னொரு வீராங்கனை, அபிநயா ராஜராஜன். தென்காசி மாவட்டம் கல்லூத்து என்கிற ஊரைச் சேர்ந்தவர். பன்னிரண்டாம் வகுப்பு வணிகவியல் மாணவி. அபிநயாவுக்குத் தடகளத்துறையில் தானாகவே ஆர்வம் பிறந்தது.
- இவரது பயிற்சிக்காகக் குடும்பம், சொந்த ஊரிலிருந்து திருநெல்வேலிக்கு வந்தது. மாநில,தேசிய அளவிலான போட்டிகளில் இதுவரை 40க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ள அபிநயா, இந்த நிகழ்வில் கூடுதலாக 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். மகளிருக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியில், அந்தத் தொலைவை இவர் 24.85 விநாடிகளில் கடந்தார்.
- விளையாட்டில் அபிநயாவுக்கு முன்மாதிரி யார் என்று கேட்டால், உலகின் வேகமான தடகள வீராங்கனையாக அறியப்படும் அமெரிக்காவைச் சேர்ந்த ஷெகேரி ரிச்சர்டுசென் என்கிறார்.
- கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரிகளான அன்சிலின், அக்சிலின் ஆகியோரும் பார்வையாளர்களின் கவனத்தைக் கவர்ந்தனர். இவர்களின் தந்தை கட்டுமானத் தொழிலாளி. இன்று கேலோ இந்தியா போட்டிக்காக ஓடும் இவர்களது கால்கள், எத்தனை தடைகளை எதிர்கொண்டிருக்கும் என்பதை எவரும் எளிதாகப் புரிந்துகொள்ளலாம். சகோதரிகள் இருவருமே 800 மீ. ஓட்டத்தில் கலந்துகொண்டனர்.
- அக்கா தங்கை பாசமெல்லாம் களத்துக்கு வெளியில்தான் என்று கூறுவதுபோல ஒருவரை இன்னொருவர் முந்தும் துடிப்புடன் இவர்கள் ஓடிய காட்சி ஆரவாரத்தை ஏற்படுத்தியது. மூத்தவரான அன்சிலின் முதலிடத்தைப் பிடித்துத் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார். இளையவர் அக்சிலின் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
- இரட்டையர்களான தேவேஷ், சர்வேஷ் ஆகியோர் யோகாசனத்தில் இருவர் ஈடுபடும் ‘ரிதமிக் பேர்’ பிரிவில் தங்கப்பதக்கம் வென்றனர். இம்முறை கேலோ இந்தியா நிகழ்வில் தமிழகத்துக்கு முதல் தங்கம் இவர்கள் மூலம்தான் கிடைத்தது. இருவரும் ஆறாம் வகுப்பிலிருந்தே யோகாசனம் செய்து வருகின்றனர்.
அண்ணன் வழியில்
- கரூர் அருகில் உள்ள பெரிய பனையூரைச் சேர்ந்தவர் ரவி பிரகாஷ். இவரது அண்ணன் நீளம் தாண்டுதல் வீரர். சிறுவயதில் அவரைப் பார்த்து நீளம் தாண்டுதலில் ஈடுபட்ட ரவி பிரகாஷிடம், மும்முறை தாண்டும் (ட்ரிப்பிள் ஜம்ப்) விளையாட்டுத்திறன் இருப்பதைப் பயிற்சியாளர் லட்சுமிநாராயணன் கண்டறிந்தார். அன்றிலிருந்து ரவிபிரகாஷ், அவ்விளையாட்டில் ஈடுபட்டார்.
- இவர் இந்த கேலோ இந்தியா போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். ரவி பிரகாஷ், பயிற்சிக்காகப் பள்ளிப்பருவத்தில் பாதி நாள்களைச் சென்னையில் கழிக்க வேண்டியிருந்தது. “சென்னை எனக்குப் புதிய இடம். வீட்டை விட்டுப் பிரிந்ததும் சில நேரத்தில் மனச்சோர்வை அளித்தது. எனினும் விளையாட்டில் இருந்த ஈடுபாடு அதையெல்லாம் மறக்கடித்து விட்டது” என்கிறார் ரவிபிரகாஷ்.
- தமிழக வாலிபால் ஆடவர் அணி, கேலோ இந்தியா தொடங்கப்பட்ட 2018 லிருந்தே பெரும் பாலும் தங்கப்பதக்கம் வென்று வந்திருக்கிறது. இம்முறையும் தமிழக அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. அதேபோல பெண்கள் அணி, வெண்கலப் பதக்கம் வென்றது.
- நீச்சல், பளு தூக்குதல், குத்துச்சண்டை, மல்யுத்தம், கைப்பந்து, கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ் என 26 வகையான விளையாட்டுகளை கேலோ இந்தியா உள்ளடக்கியது. இம்முறை ஸ்குவாஷ், புதிதாகச் சேர்க்கப்பட்டது. அதில் ஆடவர் பிரிவில் சந்தோஷ், அரிஹந்த், மெய்யப்பன் ஆகியோர் அடங்கிய அணி, பெண்கள் பிரிவில் ஷமீனா ரியாஸ், பூஜா ஆர்த்தி, தீபிகா ஆகியோர் அடங்கிய அணி இரண்டுமே தங்கம் வென்றுள்ளன.
- மகளிருக்கான தனிப்பிரிவில் தமிழக வீராங்கனை பூஜா ஆர்த்தி, தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். அவர், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த நிருபமா துபேவை 11-6, 7-11, 11-8, 9-11, 11-6 என்கிற கணக்கில் போராடி வீழ்த்தினார்.
- நிகழ்வின் முடிவில், மகாராஷ்டிரம் 57 தங்கப்பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்தது. தமிழகம் இரண்டாமிடம் பிடித்தது 38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலம் என 98 பதக்கங்களை வென்றது. நீச்சல், துப்பாக்கிச் சுடுதல், மிதிவண்டி ஓட்டுதல் உள்ளிட்ட விளையாட்டுகளிலும் தமிழ்நாடு முத்திரை பதிக்கத் தவறவில்லை. மேன்மேலும் பெரிய களங்களில் சாதனை படைக்க வேண்டும் என்கிற தமிழக வீரர்களின் கனவு நிறைவேறட்டும்!
நன்றி: தி இந்து (02 – 02 – 2024)