- அஸ்ஸாம் அனுபவத்துக்குப் பிறகும்கூட தேசிய அளவில் குடியுரிமைக் கணக்கெடுப்பு நடத்துவது என்கிற உள் துறை அமைச்சர் அமித் ஷாவின் அறிவிப்பில் பல கேள்விகளும் குறைபாடுகளும் இருக்கின்றன.
- தேசிய மக்கள்தொகை பதிவேடு உருவாக்குவது மட்டுமல்லாமல், நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை மறு தாக்கல் செய்யப் போவதாகவும் அவர் அறிவித்திருப்பது பலரது மனதிலும் தங்களது வருங்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
- இதன் விளைவாக ஏற்பட இருக்கும் குழப்பங்கள் ஏராளம் என்பதை எச்சரிக்காமல் இருக்க முடியவில்லை.
குடியேற்றம்
- இந்தியப் பிரிவினையைத் தொடர்ந்து லட்சக்கணக்கானோர் மேற்கு, கிழக்குப் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர்.
- இப்படி மேற்கு பாகிஸ்தான் (பாகிஸ்தான்), கிழக்குப் பாகிஸ்தான் (வங்கதேசம்), ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்தவர்களில் அல்லது அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டவர்களில் ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்ஸிகள், சிந்திகள், சமணர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோர் இருந்தனர். அவர்கள் மட்டுமல்லாமல் அகமதியர், ஷியா முஸ்லிம் பிரிவினர்களும் இருந்தனர்.
- முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்குவது என்பதுதான் குடியுரிமை திருத்த மசோதாவின் நோக்கம். அதில் தவறு காண முடியாது.
- பிரிவினையைத் தொடர்ந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த அனைவருக்கும் குடியுரிமை உள்ளிட்ட எல்லா உரிமைகளையும் வழங்குவது நமது கடமை. அதில் அகமதியர், ஷியா முஸ்லிம் பிரிவினர் சேர்க்கப்படாதது தவறு.
- பிரிவினையைத் தொடர்ந்து அன்றைய கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து பெரிய அளவில் அகதிகள் அஸ்ஸாமில் நுழைந்தனர்.
- 1971-இல் வங்கதேசம் உருவானபோதும் அதேபோல லட்சக்கணக்கானோர் இந்தியாவில் குடியேறினார்கள்.
- அதைத் தொடர்ந்து இப்போது வரை வங்கதேசத்திலிருந்து பிழைப்புத் தேடி, சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறுவது தொடர்கிறது.
போராட்டம்
- வங்கதேசத்திலிருந்து நடைபெறும் குடியேற்றத்துக்கு எதிராக அஸ்ஸாமில் மிகப் பெரிய போராட்டம் நடந்தது.
- 1985-இல் அன்றைய ராஜீவ் காந்தி அரசு, சட்ட விரோதக் குடியேற்றத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மாணவர்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டது.
- அந்த ஒப்பந்தத்த்தில் குடியேற்றம் தடுக்கப்படும் என்றும், சட்ட விரோதமாகக் குடியேறிவர்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வெளியேற்றப்படுவார்கள் என்றும் உறுதியளிக்கப்பட்டது.
தேசியக் குடியுரிமை பதிவேடு கணக்கெடுப்பு
- இந்தப் பின்னணியில்தான் உச்சநீதிமன்றம் தன்னுடைய நேரடிக் கண்காணிப்பில் அஸ்ஸாமில் மக்கள் குடியுரிமைப் பதிவேடுக்கான கணக்கெடுப்பை நடத்த உத்தரவிட்டது.
- 2013 முதல் 6 வருடங்கள் உச்சநீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் அஸ்ஸாமில் நடத்தப்பட்ட தேசியக் குடியுரிமை பதிவேடு கணக்கெடுப்பில் 50,000 -க்கும் அதிகமான மாநில அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
- சுமார் ரூ.1,300 கோடி செலவில் 3.3 கோடி மக்களின் பின்னணி சரிபார்க்கப்பட்டது.
- ஒவ்வொருவரும் தாங்கள் அஸ்ஸாமில்தான் பிறந்தவர்கள் என்பதையும் மூன்று தலைமுறைகளாக தங்களது குடும்பம் அஸ்ஸாமில்தான் வாழ்கிறது என்பதையும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர்.
- ஒட்டுமொத்த அஸ்ஸாமின் இயல்பு வாழ்க்கை இதனால் தடம் புரண்டது.
- அஸ்ஸாமில் நடந்த தேசியக் குடியுரிமை கணக்கெடுப்பின் முடிவில் 19 லட்சம் பேர் இறுதிப் பட்டியலில் இடம்பெறாமல் அவர்களது குடியுரிமை கேள்விக்குறியாகத் தொடர்கிறது.
- எல்லாவற்றிலும் பெரிய வேடிக்கை என்னவென்றால் பட்டியலில் இடம் பெறாதவர்களில் பெரும்பாலோர் ஹிந்துக்கள் என்பதுதான்.
- பாஜக உள்ளிட்ட எல்லா அரசியல் கட்சிகளும் அஸ்ஸாமில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பை நிராகரித்திருக்கின்றனர்.
- ஏற்கனவே உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் மிகப்பெரிய தோல்வியை அடைந்திருக்கும் தேசியக் குடியுரிமை கணக்கெடுப்பு முயற்சியை, அகில இந்திய அளவில் நடத்துவது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்திருப்பது தவறுகளிலிருந்து பாடம் படிக்கவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.
தேசிய அளவிலான குடியுரிமை - கால வரம்பு
- அஸ்ஸாம் மாநிலத்திலாவது குடியுரிமை பெறுவதற்கு மார்ச் 25, 1971 என்கிற கால வரம்பு இருந்தது.
- அதற்கு முன்னால் அஸ்ஸாமில் குடியிருந்ததற்கான ஆதாரம் இருந்தால் குடியுரிமைப் பதிவேட்டில் இடம்பெறலாம். தேசிய அளவிலான குடியுரிமைக்கு என்ன கால வரம்பு விதிப்பது?
- உலகெங்கிலும் குடியேற்றம் ஒரு பிரச்னையாக மாறியிருக்கிறது.
- குடியேற்றத்தின் மூலம் பெரும்பான்மையினர் தங்களது நாட்டில் சிறுபான்மையினராகி விடுமோ என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.
- இந்தியா போன்ற நூறு கோடிக்கும் மேல் மக்கள்தொகை உள்ள நாட்டில் கணக்கெடுப்பு நடத்தி குடியேறியவர்களை அகற்றி நிறுத்துவது சுலபமல்ல.
- குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, வருமான வரி அட்டை, கடவுச் சீட்டு என்று அடையாள அட்டைகள் வழங்கும்போது அவற்றின் மூலம் குடியேறியவர்களை அடையாளம் கண்டு அகற்றி நிறுத்த முயற்சிக்கலாமே தவிர, ஒவ்வொருவரையும் தங்களது குடியுரிமையை நிரூபிக்கச் சொல்வது நியாயமல்ல.
- ஆவணங்கள் எதுவுமில்லாத அப்பாவி இந்தியர்கள் குடியுரிமையை இழந்து நிற்பார்கள். கையூட்டு கொடுத்து அடையாளத்தை நிரூபிப்பவர்கள் குடியுரிமை பெறுவார்கள்.
- அஸ்ஸாமில் தேசியக் குடியுரிமைப் பதிவேட்டில் இடம்பெறாத 19 லட்சம் பேரை நாடு கடத்தவா முடியும்? அப்படியிருக்கும்போது, தேசிய அளவில் கணக்கெடுப்பு நடத்தி குடியுரிமை இழப்பவர்களை என்ன செய்யப் போகிறோம்?
நன்றி : தினமணி (30-11-2019)