- சிறைக் கைதிகள் தற்கொலையை மனித உரிமைப் பிரச்சினையாகக் கருதி, அதைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை, மத்திய-மாநில அரசுகளுக்குத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.
- தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2021இல் 150 சிறைக் கைதிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்; 2014இல் இந்த எண்ணிக்கை 94 ஆக இருந்தது. ஏறத்தாழ இதேரீதியில் தற்கொலைகளின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் சற்று கூடியும் குறைந்தும் வந்துள்ளன. 2019இல், 116 பேர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், 2020இல் அந்த எண்ணிக்கை 156ஆக அதிகரித்தது கவனிக்கத்தக்கது.
- கைதிகளின் தற்கொலைகளைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்களைத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் 2014இல் அளித்திருந்தது. அதற்குப் பிறகும் தற்கொலைகள் குறையவில்லை என்பதைக் கருத்தில்கொண்டு, இப்போது விரிவான பரிந்துரைகளை உள்ளடக்கிய ஆலோசனைக் குறிப்பை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கும் ஆணையம் அனுப்பியுள்ளது.
- சிறையில் நிகழும் தற்கொலைகளுக்குப் பெரும்பாலும் கைதிகளின் மனநலப் பாதிப்புகளே காரணமாகின்றன. மனநலம் பாதிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை, 2020இல் 7,524 ஆக இருந்தது. அடுத்த ஆண்டில் அது 9,180 ஆக அதிகரித்தது. இந்தப் பின்னணியில் கைதிகளின் மனநலத்தைப் பேணுவது மிகவும் முக்கியம்.
- மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைகளிலும் இது எதிரொலிக்கிறது. கைதிகளைச் சிறையில் அடைக்கும்போது நிகழ்த்தப்படும் தொடக்கநிலை மருத்துவப் பரிசோதனையில் அவர்களின் மனநலமும் பரிசோதிக்கப்பட வேண்டும்; உளவியல் முதலுதவிப் பயிற்சி பெற்ற ‘சிறைவாசி நண்பர்’ ஒவ்வொரு சிறையிலும் நியமிக்கப்பட வேண்டும்; உளவியலாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட சிறை ஊழியர்களுக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்; சிறை ஊழியர்களுக்கான அடிப்படைப் பயிற்சியில் மனநலம் சார்ந்த அடிப்படைக் கல்வி சேர்க்கப்பட வேண்டும்; குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அந்தப் புரிதல் மேம்படுத்தப்படுவதற்கான வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
- உளவியல் பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும் கைதிகளை அவர்களது குடும்ப உறுப்பினர்கள் வந்து சந்திப்பது ஊக்குவிக்கப்பட வேண்டும்; விதிகளுக்கு உள்பட்டு கைதிகள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடன் தொலைபேசியில் உரையாடுவதற்கான வாய்ப்புகளும் அதற்கு உரிய ஏற்பாடுகளும் இருப்பது உறுதிசெய்யப்பட வேண்டும்; திறன் வளர்ப்பு வகுப்புகள், யோகா, விளையாட்டு, இசை, நாடகம், நடனம், கலை ஆகியற்றில் கைதிகளைப் பயிற்றுவிக்க வேண்டும் - அரசுசாரா நிறுவனங்களை இந்தப் பணியில் ஈடுபடுத்தலாம் - இவையெல்லாம் ஆணையம் அளித்துள்ள பரிந்துரைகளில் சில.
- அரசுகள், இந்தப் பரிந்துரைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பரிந்துரைகளை வழங்கும்போதே அவற்றின் மீதான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்குக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருப்பது முக்கியமானது என்றாலும், இது வெறும் சம்பிரதாய நடவடிக்கையாக அமைந்துவிடக் கூடாது.
- பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசுகள் கொடுக்கும் விளக்கங்களை உரிய வகையில் பரிசீலித்து அடுத்தடுத்த கட்டங்களில் இது தொடர்பான வழிகாட்டுதல்களையும் உத்தரவுகளையும் பிறப்பித்து அவை முறையாக நடைமுறைப் படுத்தப் படுவதை ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும். கைதிகளின் தற்கொலைகளை முற்றிலும் தடுத்து நிறுத்துவதில் ஆணையம் தொடர்ந்து அக்கறை செலுத்த வேண்டும். அரசுகளும் இந்த விஷயத்தில் ஆணையத்துக்கு முழுமையான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.
நன்றி: தி இந்து (29 – 06 – 2023)