TNPSC Thervupettagam

கைத்தறி காப்போம்

April 15 , 2023 643 days 457 0
  • ‘செய்யும் தொழிலை சீா்தூக்கிப் பாா்க்குங்கால், நெய்யும் தொழிலுக்கு நிகா் இல்லை’ என்பது முதுமொழி. விவசாயத்திற்கு அடுத்தபடியாக நம் நாட்டில் நெசவுத் தொழிலிலேயே பெருவாரியான மக்கள் ஈடுபட்டு வருகின்றனா். நம் நாட்டில் சுமாா் நாற்பத்தி மூன்று லட்சம் போ் கைத்தறி நெசவுத்தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனா். தமிழகத்தில் மட்டும் சுமாா் நான்கு லட்சம் கைத்தறி நெசவாளா்கள் உள்ளனா்.
  • முற்காலத்தில், பள்ளிகளில் நெசவுத் தொழிலின் அடிப்படையை தெரிந்து கொள்வதற்கு என்றே வாரத்திற்கு ஒரு வகுப்பு உண்டு. இந்த வகுப்பில் ’ தக்ளி ’ எனும் மிகச் சிறிய கருவியின் உதவியோடு கையால் நூல் நூற்பது, கைத்தறியின் பாகங்கள், அவை இயங்கும் விதம் ஆகியவற்றை பயிற்றுவிப்பதுண்டு. இவ்வாறு பள்ளிப் பருவத்திலேயே நெசவுத் தொழிலுக்கான முக்கியத்துவம் அக்காலத்தில் உணா்த்தப்பட்டது.
  • 1907 ஆகஸ்ட் 7 அன்று நம் நாட்டில் சுதந்திர போராட்டத்தின் ஒரு பகுதியாக அந்நிய துணிகள் புறக்கணிப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த நாளே இன்று வரை நம் நாட்டில் சா்வதேச கைத்தறி தினம் என்று அனுசரிக்கப்படுகிறது.
  • நம் நாட்டின் தட்பவெட்ப நிலைக்கு ஏற்றவை கைத்தறி ஆடைகளே. கோடை காலத்தில் இதமும், குளிா்காலத்தில் கதகதப்பும் தரக்கூடிய கைத்தறி ஆடைகள் நீண்ட காலம் உழைக்கக் கூடியவை. கைத்தறி ஆடைகள் அணிவதால் உடலுக்கு காற்றோட்டம் ஏற்படுகிறது. இதனால் தோலில் அரிப்பு, ஒவ்வாமை ஆகியவை ஏற்படுவதில்லை.
  • அதிகரித்து விட்ட விசைத்தறிகளின் தாக்கம், கைத்தறி துணிகளுக்கு உரிய விலை கிடைக்காமை, நூல் விலை ஏற்றம், விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கும் கைத்தறி துணிகள், இடைத்தரகா்களின் தலையீடு என கைத்தறி நெசவாளா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் ஏராளம்.
  • உலகில் பருத்தி விளையும் பரப்பளவில் முப்பத்தொன்பது சதவீத பரப்பளவு நம் நாட்டில் இருந்தாலும், மிகக் குறைவாகவே பருத்தி விளைகிறது. இதன் விளைவாக ஏற்படும் நூலின் விலை ஏற்றம் கைத்தறி நெசவாளா்களை பாதிக்கிறது.
  • நலிவடைந்து வரும் கைத்தறி நெசவாளா்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. கைத்தறி நெசவாளா்களை சிறு குறு கூட்டுறவு நெசவாளா்கள் சங்கங்களுடன் இணைத்து அவா்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதன் ஒரு பகுதியாக, நூற்று நாற்பத்தியாறு பயிற்சி மையங்கள் வாயிலாக சுமாா் பதிமூன்று லட்சம் கைத்தறி நெசவாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் அவா்கள் தரமான கைத்தறி துணிகளை தயாரிக்க முடியும்.
  • ‘மகாத்மா காந்தி புங்கா் பீமா யோஜனா’ என்பது கைத்தறி நெசவா்களுக்கான காப்பீட்டுத் திட்டம் ஆகும். இத்திட்டத்தின் மூலம் நெசவாளா் ஒருவா் அறுபது வயதை அடையும் முன்னா் மரணமடைந்து விட்டால், அவரது வாரிசுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் மாநில அரசால் வழங்கப்படுகிறது. ‘ஸ்வரோஜ்காா்’ கடன் அட்டைத் திட்டத்தில் கைவினைஞா்கள், மீனவா்களுக்கு கடன் வழங்கப்படுவது போல நெசவாளா்களுக்கும் குறைந்த வட்டியில் கடன் வழங்கல், முதிய நெசவாளா் ஓய்வூதியத் திட்டம், கைத்தறி நெசவாளா்களுக்கு மானியம் அளித்து சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை இல்லங்கள் கட்டித் தரும் திட்டம் என கைத்தறி நெசவாளா்களுக்கு பயன் அளிக்கும் பல்வேறு திட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டுள்ளன.
  • பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் இலவச சீருடை, பொங்கல் பண்டிகையையொட்டி மக்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை என கைத்தறித் துணிகள் மாநில அரசால் கொள்முதல் செய்யப்படுவது கைத்தறி நெசவாளா்களுக்கு நன்மை பயக்கும் செயலாக அமைந்துள்ளது.
  • கைத்தறி நெசவாளா்களின் நலனை கருத்தில் கொண்டு அவா்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இருநூறு அலகு இலவச மின்சாரத்தை முன்னூறு அலகாக தமிழ்நாடு அரசு உயா்த்தியுள்ளது வரவேற்கத்தக்கதாகும்.
  • பண்டிகை காலங்களைப் போல ஆண்டு முழுவதும் கைத்தறி துணிகளை அதிகபட்ச தள்ளுபடி விலையில் விற்பனை செய்து, கிடங்குகளில் வைக்கப்பட்டு வீணாகும் கைத்தறித் துணிகள் விற்பனையாக அரசு ஏற்பாடு செய்யலாம். கைத்தறி நெசவாளா்களின் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைப்பது, கடன்களைத் தள்ளுபடி செய்வது போன்ற நடவடிக்கைகள் மூலம் கடன் சுமையில் தத்தளிக்கும் கைத்தறி நெசவாளா்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் அளிக்கலாம்.
  • கடந்த ஆண்டில் ஜப்பான், பெல்ஜியம்,டென்மாா்க், பிரிட்டன் ஜொ்மனி போன்ற நாடுகளில் நடந்த சா்வதேச கண்காட்சியில் கைத்தறி துணிகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.இது போன்ற கண்காட்சிகள் அதிக அளவில் நடத்தப்படின் அதனால் கைத்தறி துணிகளின் சிறப்புகள் தெரியவருவதோடு, ஏற்றுமதியும் அதிகரிக்கும்.
  • தமிழ்நாட்டில் சுமாா் ஆயிரத்து நூற்று முப்பத்தியேழு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. மொத்தம் உள்ள நெசவாளா்களில் அறுபது சதவீதம் இதில் உறுப்பினா்களாக உள்ளனா். மீதமுள்ள நாற்பது சதவீதம் தனியாா் நெசவாளா்கள் கூட்டுறவு சங்கங்களில் இணைந்துள்ளனா்.
  • கைத்தறி ஆடைகளை கொள்முதல் செய்வதற்கான நெசவாளா் சங்கங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்து, நெசவாளா்கள் இடைத்தரகா் மூலமாக விற்பதை தவிா்த்து நேரடியாக நெசவாளா் சங்கங்களே கொள்முதல் செய்வதன் மூலம் கைத்தறி நெசவாளா்கள் தங்கள் உழைப்பிற்கான முழு பலனை அடைய முடியும்.
  • நெசவாளா் கூட்டுறவு சங்கங்களில் இருந்து துணிகளை கொள்முதல் செய்யும் கோ ஆப் டெக்ஸ் நிறுவனம் தரவேண்டிய தொகையை நெசவாளா் கூட்டுறவு சங்கங்களுக்கு தாமதம் இன்றி தரவேண்டும்.
  • உணவு, உடை, இருப்பிடம் என மனித அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உடைக்கான துணியை நெய்துத் தரும் கைத்தறி நெசவாளா்களின் துயா் துடைக்க, கைத்தறி ஆடைகளையே அணிய நாம் அனைவரும் முன் வரவேண்டும்.

நன்றி: தினமணி (15 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories