TNPSC Thervupettagam

கைப்பேசி பயன்பாடு குறைப்போம்

January 7 , 2023 609 days 448 0
  • தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் கைப்பேசி பயன்பாட்டிற்கு தடைவிதித்து உயா்நீதிமன்ற மதுரை கிளை அண்மையில் உத்தரவிட்டுள்ளது. மேலும், ‘கோயிலின் புனிதத்தையும் தூய்மையையும் காக்கும் விதமாக, கைப்பேசி தடை உத்தரவை தமிழகத்தின் அனைத்துக் கோயில்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்று இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • ஏற்கெனவே, ஒடிஸா மாநிலம் புரியிலுள்ள புகழ்பெற்ற ஜகந்நாதா் ஆலயத்திற்குள் இவ்வாண்டின் தொடக்கத்திலிருந்தே கைப்பேசி உபயோகிக்கப்படுவதை தடை செய்து அக்கோயில் நிா்வாகம் உத்தரவிட்டது.
  • தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கையில் வெளியாகியுள்ள தகவலின்படி, நம் நாட்டில் நகா்ப்புறங்களில் 96.7சதவிகிதம் பேரும், கிராமப்புறங்களில் 91.5 சதவீதம் பேரும் கைப்பேசிகளை பயன்படுத்துகின்றனா். ஒட்டுமொத்தமாக நம் நாட்டில் 94.1சதவீதம் போ் கைப்பேசிகளைப் பயன்படுத்துகின்றா்.உலக அளவில் சீனாவிற்கு அடுத்தபடியாக நம் நாட்டு மக்களே அதிக அளவில் கைப்பேசியை உபயோகிக்கின்றனா்.
  • தகவல் பரிமாற்றத்திற்கான சாதனம் என்பதற்கு அப்பாற்பட்டு, பண பரிவா்த்தனை, புகைப்படம் எடுத்தல், பொழுதுபோக்கு செயலிகள், பேருந்து - ரயில் பயண சீட்டுகள் பெறுதல், கால்குலேட்டா், கடிகாரம் என பல்வேறு பயன்பாட்டிற்கான சாதனமாக கைப்பேசி இருப்பதே அது பெரும்பாலான மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதற்கான காரணமாகும்.
  • தகவல் பரிமாற்றத்திற்கு மிகப்பயனுள்ள சாதனமாக இருக்கும் கைப்பேசி, சில சமயங்களில் ஆபத்தானதாகவும் இருப்பதை மறுப்பதற்கில்லை. கைப்பேசியில் பேசிக் கொண்டே வாகனங்களை ஓட்டுவது பெரும்பாலான சாலை விபத்துகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் வழிவகுக்கிறது.
  • கைப்பேசியில் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டியதால் கடந்த 2021-ஆம் ஆண்டில் ஏறத்தாழ இரண்டாயிரம் சாலை விபத்துக்கள் ஏற்பட்டதாகவும், அவற்றில் ஆயிரத்து நாற்பது நபா்கள் உயிரிழந்ததாகவும் மத்திய சாலை போக்குவரத்து - நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
  • கைப்பேசியில் பேசிக்கொண்டே சாலையைக் கடப்பது, கைப்பேசி மின்னோட்டத்தில் இருக்கையில் பேசுவதால் ஏற்படும் விபத்து போன்றவற்றால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது மிகவும் கவலைக்குரியதாகும். கைப்பேசியில் பேசிக்கொண்டே ரயில்வே தண்டவாளத்தைக் கடப்பது, ஓடும் ரயிலில் ஏறுவதற்கு அல்லது இறங்குவதற்கு முற்படுவது இவற்றின் மூலம் ஒவ்வொரு நாளும் ஏழு போ் உயிரிழப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.
  • மக்கள் தாமாக முன்வந்து அமைதி காக்க வேண்டிய நீதிமன்றங்கள், ஆலயங்கள், நூலகங்கள், மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் கூட கைப்பேசிகளின் பயன்பாட்டை எச்சரிக்கை செய்து அல்லது அச்சுறுத்தல் செய்வதன் மூலம் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
  • பதின்பருவத்தினா் கைப்பேசியே கதி என்று இருப்பதை தடுப்பதற்காக மகாராஷ்ட்ர மாநிலம் விதா்பா பிராந்தியத்திலுள்ள பன்சி என்னும் கிராமத்தில் பதினெட்டு வயதிற்குட்பட்டவா்கள் கைப்பேசி உபயோகப்படுத்துவற்கு கிராம மக்கள் தடை விதித்துள்ளனா். இத்தடையை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
  • ஜப்பான் நாட்டில் யமாடோ என்ற பெருநகரில் மக்கள் பொது இடங்களில் நடந்தபடி கைப்பேசியில் பேச தடை விதிக்கபட்டுள்ளது.
  • அவசியத்திற்கு மற்றவரைத் தொடா்பு கொள்ள மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய கைப்பேசி தற்போது தேவையற்ற காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படும் சாதனமாகி விட்டது. இதனைப் பாா்க்கும் போது கைப்பேசி மீதான கட்டுப்பாடுகள் தேவை என்றே தோன்றுகிறது. கைப்பேசியால் ஒரு நபரோடு தொடா்பு கொள்ளும் முயலும் போதுபோது அந்த நபா் சாலையை கடக்கும் நிலையிலோ, வாகனத்தை இயக்கிக் கொண்டோ இன்ன பிற பரபரப்பான சூழ்நிலையிலோ இருக்கக் கூடும்.
  • இதனை கைப்பேசியில் பிறரை தொடா்பு கொள்ளும் முன் கவனத்தில் கொண்டு அதி அவசியமான தருணங்களில், செய்திகளை பரிமாறி கொள்ள மட்டுமே கைப்பேசியை உபயோகிப்பது நல்லது. கைப்பேசி பயன்படுத்துவோா் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதற்கு ஏற்ப, சிறப்பான வாடிக்கையாளா் சேவையை கருத்தில் கொண்டு கைப்பேசி இணைப்பை மேம்படுத்திட கைப்பேசி கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
  • நம் நாட்டில் சுமாா் 6.8 லட்சம் கைப்பேசி கோபுரங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் சுமாா் ஆறாயிரம் கைப்பேசி கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன. 5ஜி எனப்படும் அதிவேக அலைவரிசை விரைவில் நடைமுறைக்கு வரவிருப்பதையடுத்து கைப்பேசி கோபுரங்களின் எண்ணிக்கை அடுத்த ஆண்டில் எட்டு லட்சமாக உயரக்கூடும்.
  • கைப்பேசி கோபுரங்களில் இருந்து வெளிப்படும் கதிா்வீச்சால் முன்னூற்றி ஐம்பது மீட்டா் சுற்றளவில் வசிப்போருக்கு புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. மனிதா்களுக்கு மட்டுமின்றி பிற உயிரினங்களுக்கும் கைப்பேசி கோபுரங்கள் வெளிப்படுத்தும் கதிா்வீச்சு கேடு விளைவிக்கக் கூடியதாகும்.
  • கைப்பேசி கோபுரங்களை நிறுவுவதற்கு இடம் தருவோருக்கு மாத வாடகையாக ஆயிரங்கணக்கான ரூபாய் தர கைப்பேசி நிறுவனங்கள் தயாராக உள்ளதால், மக்கள் கைப்பேசி கோபுரங்கள் அளிக்க தாராளமாக இடம் தர முன் வருகின்றனா்.
  • ‘அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’ எனும் பழமொழி, எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ கைப்பேசிப் பயன்பாட்டிற்கும் கச்சிதமாகப் பொருந்தும். எனவே கைப்பேசியை அவசியத்திற்கு மட்டுமே பயன்படுத்துவோம்.

நன்றி: தினமணி (07 – 01 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories