- கையூட்டு என்னும் கள்ளப்பணப் பரிமாற்றம் இப்போது அதிகரித்து வருகிறது. லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என்று சட்டம் கூறினாலும், லஞ்சப்பேய் ஒழிக்க முடியாமல் நாட்டிலே நடமாடிக்கொண்டுதான் இருக்கிறது. இது கெளரவமான ஊழலாகிவிட்டது.
- ஒரு செயலை நிறைவேற்றுவதற்கு சட்டவிரோதமாக வாங்கும் அல்லது கொடுக்கும் வெகுமதி லஞ்சம் ஆகும். அந்த வெகுமதி பொருளாகவோ, பணமாகவோ இருக்கலாம். அதிகாரத்தில் இருப்பவா்களின் மோசடியான, நோ்மையற்ற செயலே இதன் வளா்ச்சிக்குக் காரணமாகும். அன்பளிப்பு என்ற பெயரில் அழைத்தாலும் கையூட்டு அருவருப்பானதுதான்.
- அரசுத் துறைகளிலே இத்தகைய லஞ்சம் அதிகமாகக் காணப்படுகிறது. ஒரு செயலுக்கு உரிய தொகையைக் கட்டணமாக வசூலிப்பதில் நியாயம் இருக்கிறது. அது அரசின் நிர்வாக நடைமுறைக்கு வேண்டிய நிதிவருவாயைப் பெருக்க வழி வகுக்கிறது. அதைக்காட்டிலும் கூடுதலாக ஒரு தொகையைத் தருமாறு வற்புறுத்துவது சரியாகாது. இப்படிக் கணக்கில் வராமல் பெறும் லஞ்சம் கண்டிக்கத்தக்கது. இது இழிசெயலாகும்.
- ஒரு காலத்தில் சட்ட விரோதமாக செய்யப்படும் செயல்களுக்காகத்தான் லஞ்சம் வாங்கப்பட்டது. அப்படி நுழைந்த லஞ்சம், இன்று சட்ட விரோதமற்ற, நோ்மையான எல்லாச் செயல்களையும் ஆக்கிரமித்துவிட்டது. முன்பெல்லாம் புறம்போக்கு நிலத்தைப் பட்டாபோட்டு ஆக்கிரமிப்பதற்கோ, நிலத்தின் மதிப்பைக் குறைத்துக் காட்டிப் பத்திரப் பதிவுக் கட்டணத்தைக் குறைப்பதற்கோதான் லஞ்சம் வாங்கப்பட்டது.
- இப்போது அப்படியில்லை. நோ்மையான முறையில் நிலத்தை விற்றாலும் வாங்கினாலும் ஒரு தொகையை அனாமத்தாக அளிக்க வேண்டியுள்ளது. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, உதாரணத்திற்குத்தான் பத்திரப் பதிவுத் துறை.
- பணி நியமனம் வழங்குவதற்கு லஞ்சம், பணி இடமாற்றம் செய்வதற்கு லஞ்சம், பணி ஒப்பந்தம் பெறுவதற்கு லஞ்சம், ஒப்பந்தத் தொகையைப் பெறுவதற்கு லஞ்சம் - இப்படி எல்லாத் துறைகளிலும் இப்போது லஞ்சம் மலிந்துவிட்டது என்பதுதான் கசப்பான உண்மை.
- ஒரு மாணவனுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்குவது என்பது சாதாரண அலுவல் நடைமுறை. அம்மாணவன் சார்ந்திருக்கும் ஜாதியைச் சொல்வது சட்டபூா்வமாக சரியானது. அதேபோல் ஒருவனுக்கு உரிமையான நிலத்தை அவன் பெயரில் பட்டா செய்து கொடுப்பது நியாயமான செயல்.
- இப்படி, நியாயமான, சாதாரண செயல்களில் கூட லஞ்சம் நடமாடுவது கவலையைத் தருகிறது. அப்படியென்றால் அசாதாரண செயல்களில் லஞ்சம் இருப்பது கவலை தரவில்லையா என்றால் அது அதனைவிடப் பெருங்கவலையளிக்கிறது. எல்லா நிலைகளிலும் லஞ்சம் ஒழிய வேண்டும் என்பதே இங்கு எல்லோருக்கும் ஆசையாகும்.
- அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான் லஞ்சம் வளா்வதற்குக் காரணமாக உள்ளனா் என்பது மக்களின் பொதுவான எண்ணமாக உள்ளது. ஆழ்ந்து பார்த்தால் பொதுமக்களுக்கும் அதில் தொடா்பிருப்பது புரியும். ‘ஒரு காரியத்தை உடனடியாக முடித்துவிட வேண்டும்’ என்ற எண்ணம் இன்று நம் எல்லோரிடத்தும் உள்ளது.
- குறிப்பாக, வசதி உள்ளவா்களிடம் அந்த எண்ணம் அதிகமாக உள்ளது.”அதிகாரிகளிடம் ‘எவ்வளவு வேண்டும், என்ன வேண்டும், தருகிறோம் விரைவில் முடித்துத்தர வேண்டும்’ ”என்று பேரம் பேசும் மக்களை இப்போது நிறையவே காண முடிகிறது. பேசுவதோடு மட்டுமல்லாது, அள்ளிக்கொடுத்து காரியத்தைச் சாதித்தும் கொள்கின்றனா். இப்படிப்பட்ட லஞ்சமயமான சூழலில், வசதியற்ற ஏழைகள் என்ன செய்வார்கள்?
- பாவபபட்ட அவா்கள் தங்களால் இயன்றதைக் கொடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இல்லையென்றால் காரியம் முடியாமல் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
- ‘அரசியல்வாதிகள், அமைச்சா்கள், அரசு ஊழியா்கள் என்று எல்லோரும் வெட்கப்படாமல் லஞ்சம் வாங்குகிறார்கள். அதிலும் அரசுத்துறை அதிகாரிகளின் போக்கு அளவிட முடியாததாக இருக்கிறது’ என்பது பொதுமக்களின் ஆவேசம். கடைநிலை ஊழியா், உயா் அதிகாரி என்று இவா்களில் பேதமில்லை. குறைந்த சம்பளம் வாங்குவோர், நிறைந்த சம்பளம் வாங்குவோர் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லோரும் லஞ்சம் வாங்குகிறார்கள்.
- அவரவா் பெறுகின்ற ஊதியத்திற்கேற்ப லஞ்சத்தொகை மாறுபடுகிறது. இதுதான் வேறுபாடே தவிர, லஞ்சம் வாங்குவதில் எந்த வேறுபாடும் இல்லை. லஞ்சம் வாங்குவதில் விருப்பம் இல்லாத நோ்மையான அதிகாரிகளைக்கூட லஞ்சம் வாங்கவைத்து காரியம் முடிக்க நினைக்கும் விபரீதமான ஆட்களும் இருக்கிறார்கள்.
- அரைகுறையாகப் பணிமுடித்த ஒப்பந்தக்காரா், பணி முடித்தது போல பணம் பெறுவதற்கு, மாநகராட்சி ஆணையாளா் ஒருவருக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி மேற்கொண்ட செய்தி அண்மையில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது.
- ‘வாங்குகிற ஊதியம் போதவில்லை. இதனால் லஞ்சம் வாங்கும் சூழல் உருவாகிவிடுகிறது’ என்பதெல்லாம் வெற்றுப் பேச்சு. வாங்குகிற ஊதியத்திற்குள் வாழ்க்கை நடத்தப் பழகிக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்.
- இதைவிட்டுவிட்டு அடுத்தவன் பணத்தைப் பிடுங்க நினைப்பது திருட்டுத்தனம். அடுத்தவா் போல வாழவேண்டும் என்று எழுகின்ற ஆசை பலருக்கும் இருக்கிறது. இதற்காக நோ்வழியை நாடாமல் குறுக்குவழியை நாடுவதுதான் லஞ்சம் வளர வழிவகுக்கிறது.
- எங்கும் எதிலும் லஞ்சம் வியாபித்திருப்பதால், லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றமில்லை என்பது போன்ற ஒரு எண்ணம் இன்றைய இளைஞா்கள் மத்தியில் வளா்ந்துள்ளது. அதனைப் போக்கும் வகையில், கையூட்டு என்பது கள்ளப்பணப் பரிமாற்றம். பிறா் பணத்தை அபகரிக்கும் செயல். அது நாட்டின் வளா்ச்சிக்கு எதிரானது என்பதைப் புரியவைக்க வேண்டும்.
- அதோடு மட்டுமல்லாது, லஞ்சமில்லா நடைமுறையை உருவாக்க வேண்டும். அதுதான் எதிர்கால இந்தியாவைச் சீரமைக்கும் வழியாகும்.
நன்றி: தினமணி (12 – 02 – 2024)