TNPSC Thervupettagam

கொய்யாவின் வாசனை - நூல் அறிமுகம்

January 6 , 2024 195 days 170 0
  • உலக இலக்கியங்களில் இலத்தீன் அமெரிக்காவின் பங்கு முக்கியமானது, அதிலும் குறிப்பாக கொலம்பியோவில் பிறந்த ஸ்பானீஷ் மொழி எழுத்தாளர் காப்ரியேல் கார்சியோ மார்க்வெஸ்ஸின் பங்கு...
  • இவரது நூறு ஆண்டுகளின் தனிமை (One hundred years of solitude) நாவல் 1982 இல் நோபல் பரிசு வென்றது. தமிழ் உள்பட 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவரது மற்றைய நூல்களான மூதந்தையின் அந்திமக் காலம் (the autumn of the patriarch), முன்கூறப்பட்ட சாவின் சரித்திரம் (chronicle of a death foretold) ஆகியவையும் புகழ்பெற்றவை.
  • மார்க்வெஸ்ஸுடன் மென்டோசாவின் 40 ஆண்டுகள் கால உரையாடல்களின் தொகுப்பு இந்தப் புத்தகம். இதில் படைப்புகள், கல்வி, அரசியல், பெண்கள், தொழில்நுட்பம், மூட நம்பிக்கைகள் என 14 பகுதிகளில் கேள்வி - பதில்கள் இருக்கின்றன. தமிழின் மூத்த படைப்பாளியான பிரம்மராஜன் இதை மொழிபெயர்த்துள்ளார்.
  • மார்க்வெஸ்ஸின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், அரசியல், கலை, விமர்சனம் என பலதையும் இதன் ஊடாகத் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இந்த புத்தகம் அமைகிறது.
  • மார்க்வெஸ்ஸின் புத்தகங்களைப் படித்தவர்களுக்கு இந்தப் புத்தகம் மிகவும் அணுக்கமான உணர்வினைத் தரும். படிக்காதவர்களுக்கும் நிறைய திறப்புகள் ஏற்படும் என்பது உறுதி.

கதையின் துவக்கம்

  • ஒரு கதையை எப்படி தொடங்க வேண்டும், எப்படி எழுத வேண்டும், எங்கு முடிக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். கதையின் தொடக்கப் புள்ளி எப்படி அமைய வேண்டும் என்ற கேள்விக்கு, “ஒரு காட்சிப் படிமம். பிற எழுத்தாளர்களுக்கு ஒரு கருத்துருவில் இருந்து பிறக்கிறதென நான் நினைக்கிறேன். ஆனால் நான் எப்போதும் படிமச் சித்திரத்தில் இருந்தே தொடங்குகிறேன்எனக் கூறியுள்ளார்.
  • வயோதிகன் ஒருவன் தனது பேரனை சர்க்கஸில் விநோதமாக பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் ஐஸ் கட்டியை பார்க்க அழைத்து செல்வதுதான் அவரது தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலின் துவக்கப் புள்ளி என்பது குறிப்பிடத் தக்கது.
  • ஒரு நாவலை எழுத 2 ஆண்டுகள் போதும். ஆனால் அவை உருவாக 15, 16 ஆண்டுகள் மனதில் அதைப் பற்றி நினைத்துக்கொண்டு இருப்பேன் என அவர் கூறும்போது ஒரு படைப்பு உருவாகத் தேவைப்படும் காலம் குறித்து வியப்பு ஏற்படுகிறது.

தொழில்நுட்பம்

  • மார்க்வெஸ்ஸின் நூலின் சிறப்புத் தன்மை என்னவெனில் அதன் மேஜிகல் ரியலிசம் எனப்படும் மாய யதார்த்தத் தன்மை கொண்ட கதைக்களம். மேலும் கதை சொல்லல் முறையும் வித்தியாசமானது. இந்தத் தொழில்நுட்ப உதவிக்கு காரணம் யார்எனத் தெரிந்தால் பலருக்கும் அதிர்ச்சிதான் ஏற்படும். உலகத்தில் எவ்வளவோ சிறப்பான எழுத்தாளர்கள் இருந்தும் மார்க்வெஸ் காரணமாகக் கூறியது அவருடைய பாட்டியின் பெயரை! ஆமாம்.
  • முதலாமவரும், முதன்மையானவரும் எனது பாட்டிதான். மிகவும் அட்டூழியமான கதைகளைச் சொல்லும்போதுகூட எந்தவிதமான வெளிப்படையான உணர்ச்சிகளையும் காட்டாமல் கூறுவது அவரது வழக்கம். அது ஏதோ நேரில் கண்டதுபோலிருக்கும். அவரது காட்சிப் படிமங்களின் வளம் அவ்வளவு நம்பகத்தன்மையைக் கொடுத்ததென உணர்கிறேன். நூறு ஆண்டுகளின் தனிமை நாவலை எனது பாட்டியின் முறைமைகளை வைத்துதான் எழுதினேன்" எனக் கூறியுள்ளார்.
  • நமது மண்ணின் வேர்களைத் தேடினாலே போதும், கதைகள் பிறந்துவிடும் என்பதை மார்க்வெஸ்ஸின் எழுத்துகள் மூலம் நம்மால் நன்றாகவே அறிந்துகொள்ள முடியும்.

சிறுகதை எப்படி இருக்க வேண்டும்

  • பனிப் பாளத்தினைப் போல உங்கள் பார்வையில் படாத பகுதியினால் பிடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது ஹெமிங்வேயின் கருத்து. அதுதான் எனக்கும் உதவியது. ஒரு திருப்பத்தில் ஒரு பூனை திரும்பும் விதத்தை ரசிக்கக்கூட ஹெமிங்வே கற்றுத் தருகிறார்.

திடீர் படைப்பு உந்தம்

  • சாதாரண ஒருநாளில் காரில் சென்றுகொண்டிருக்கும்போது தோன்றிய ஒரு கணத்தில் நாவலை எழுத அந்தப் பயணத்தையே ரத்து செய்திருக்கிறார் மார்க்வெஸ். இந்த அளவுக்கு எழுத்தின் மேல் பித்துப் பிடித்தவராக இருந்திருக்கிறார். அவர் சொல்லும் அந்தக் கதையை கேட்கவே மிகவும் சுவாரசியமாக இருக்கிறது.
  • புதியதாக எழுத முனைபவர்களுக்கும் ஏற்கெனவே எழுதிக் கொண்டிருப்பவர்களுக்கும் ஏற்படும் மனத்தடை விலக என்ன செய்ய வேண்டுமென இதில் பதிலளித்திருக்கிறார்.

பிடல் காஸ்ட்ரோ

  • கம்யூனிஸ்ட் போராளிகளில் முக்கியமானவர் பிடல் காஸ்ட்ரோ. இவர் மார்க்வெஸ்ஸுக்கு உற்ற நண்பர். பிடல் காஸ்ட்ரோ பற்றி மார்க்வெஸ் கூறும் தகவல்கள் மெய் சிலிர்க்க வைக்கும். அதில் அவர் அதிகமாக புத்தகம் படிப்பவர் என்பது. “நான் மறுபிறவி எடுத்தால், நான் எழுத்தாளனாக  விரும்புகிறேன்என ஃபிடல் காஸ்ட்ரோ கூறியுள்ளதாக மார்க்வெஸ் கூறியுள்ளார்.

அதிகாரத்தின் தனிமை

  • ஒரு எழுத்தாளர் கடைசி வரை ஒரே ஒரு புத்தகத்தைத்தான் எழுதுவதாகப் பலரும் கூறியுள்ள நிலையில் மார்க்வெஸ்ஸும் அதையே கூறுகிறார். தனது அனைத்துப் படைப்புகளையும் சுருக்கி, “அதிகாரத்தின் தனிமை மீதான ஒரு கவிதைஎன்கிறார். மேலும், காதல் செய்ய இயலாமைதான் அவர்களை அதிகாரத்தில் ஆறுதல் செய்ய தூண்டுகிறது என்கிறார்.
  • அதிகாரம் செலுத்துபவர்களை நாம் பார்க்கும் பார்வையும் மார்க்வெஸ் பார்க்கும் பார்வையும் வெவ்வேறாக இருக்கிறது. இப்படி பல வகையான சுவாரசியமான கேள்வி - பதில்கள் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன.
  • தமிழில் குறிப்பிடத்தக்க வாசகர்கள் மட்டுமல்ல, அவசியம் எழுதுபவர்கள் படிக்க வேண்டிய நூல்.

நன்றி: தினமணி (06 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories