TNPSC Thervupettagam

கொரியாவிலிருந்து ஓர் உரிமைக் குரல்

May 26 , 2024 35 days 68 0
  • கொரியாவில் தொடர்ந்து குறையும் குழந்தைப் பிறப்பு விகிதம் சர்வ தேச அளவில் விவாதமாக மாறியிருக்கிறது.
  • ‘பெண்கள் ஏன் குழந்தை பெற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள், பெண்மைக்கு அடையாள மாகச் சொல்லப்பட்டுவரும் தாய்மையை ஏன் இழக்கிறார்கள்?’ என அறக்காவலர்கள் ஒருபுறம் விமர்சனத்தை முன்வைக்கின்றனர். மறுபுறம், குழந்தைப் பிறப்பு விகிதம் குறைய நாட்டில் உள்ள பெண்ணியவாதிகளே காரணம் எனத் தென்கொரியப் பிரதமர் யூன் சுக் இயோல் வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார்.
  • இதற்கிடையில் தென்கொரியாவில் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைவதன் பின்னால், கொரியப் பெண்கள் முன்னின்று நடத்தும் ‘4 பி’ இயக்கம் காரணமாக இருக்கலாம் என்கிற ஊகமும் வலம் வரத் தொடங்கியுள்ளது.

‘4 பி’ இயக்கம்

  • 2016இல் எடுக்கப்பட்ட தரவில், தென் கொரியாவில் 41.5% பெண்கள் குடும்ப வன்முறை யால் பாதிக்கப்பட்டிருந்தனர்; ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் 31% குறைவாக வருமானம் பெறுவதாகக் கூறப்பட்டுள்ளது.
  • இவ்வாறு பணியிடங்களில் ஊதியப் பாகுபாடு, திருமண உறவில் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வதில் பாரபட்சம், அதிகரித்துவரும் பெண்கள் மீதான வன்முறை, பாலியல் துன்புறுத்தல் போன்றவை தென்கொரியப் பெண்களைத் தங்கள் மீதான அழுத்தங்களுக்கு எதிராக ஒன்றிணைய வைத்தது.
  • இந்தக் கசப்புணர்வின் பின்னணியில் 2019இல் ‘4 பி’ இயக்கம் கொரியாவில் உரு வானது. இந்த இயக்கத்தை இறுகப்பற்றிக் கொண்ட கொரியாவின் இளம் பெண்கள், ஆணாதிக்கச் சிந்தனைகளுக்கு எதிராகப் போராடவில்லை; மாறாக ஆண்களிடமிருந்து முழுவதுமாக விலகிச் செல்ல ஆரம்பித்திருக்கி றார்கள்.
  • காதல், திருமணம், குழந்தை, உடலுறவு ஆகிய நான்குக்கும் பெண்கள் தயாராக இல்லை என்பதே ‘4 பி’ (4 B - No to biyeonae, bihon, bisekseu, bichulsan) இயக்கத்தின் அடிப்படை.
  • தற்போது ‘4 பி’ இயக்கம் தென் கொரியப் பெண்களின் உரிமைக் குரலாக மாறியிருக்கிறது.

மதிப்பீடுகள்

  • பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரியாவின் அழகியல் மதிப்பீடுகள் சற்றுக் கடுமையானவை. ஒல்லியான தேகம், வெளிறிய நிறம், கூர்மையான முகவெட்டு. இவையே அழகு குறித்து கொரியா கட்டமைத்து வைத்திருக்கும் பொதுப் பிம்பம்.
  • இந்த அழகியல் மதிப்பீடுகளை ஏற்றுக்கொண்ட கொரியப் பெண்கள் பலரும் தங்கள் முகத் தோற்றத்தை அறுவைசிகிச்சை மூலம் மாற்றிக்கொள்ளக்கூடத் தயாராக இருந்தனர். நாளடைவில் முகமாற்று அறுவைசிகிச்சைகள் அங்கு இயல்பானவையாகவும் அத்தியாவசிய மானவையாகவும் மாறின.
  • இந்த அழகியல் மதிப்பீடுகளிலிருந்து உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்ட ‘கே பாப்’ இசைப் பிரபலங்களும் தப்பவில்லை. விளைவு, அங்கு தற்கொலைகளும் அரங்கேறின. ‘என்னால் மேக் அப் இல்லாமல் வெளியே செல்ல முடியாது. எப்போதும் அழகாகத் தோன்ற வேண்டும்; பிறரால் ஈர்க்கப்பட வேண்டும்’ என்கிற அழுத்தம் தனக்கு இருந்ததாக கூறும் யங்மீ, ‘4 பி’ இயக்கம் தன்னை அழகியல் சார்ந்த மதிப்பீடுகளிலிருந்து விடுவித்துத் தன் சுய அடையாளத்தை நேசிக்க உதவியதாகக் குறிப்பிடுகிறார்.

அடக்குமுறையிலிருந்து விடுதலை

  • ஆங்கிலத்தில் ‘Escape the corset’ என்கிற பிரபலமான பதம் உண்டு. தங்கள் மீது கட்டமைக்கப்பட்ட சமூக மதிப்பீடுகளிலிருந்து பெண்கள் வெளியேறுவதை இது குறிக்கிறது. சமூகம், பொருளாதார அழுத்தங்களினால் பெண்கள் ஆண்களிடமிருந்து விடுபட்டு ஓர் இயக்கமாகச் செயல்படுவது புதிதல்ல.
  • வரலாற்றில் 1870, 1900, 1960, 1970களில் பெண்ணுரிமை சார்ந்த தீவிரமான போராட்டங்கள் உலகெங்கிலும் நடைபெற்றன. அவற்றின் தொடர்ச்சியாகவே ‘4 பி’ இயக்கத்தைப் பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்கள் அணுகு கின்றனர்.
  • தென் கொரியா மட்டுமல்லாமல், பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் ‘4 பி’ இயக்கம் மெல்ல பரவி வருகிறது.
  • யதார்த்தத்தில் கொரியப் பெண்கள் மீதான சமூக அழுத்தங்களை ‘4 பி’ இயக்கம் சற்றுத் தளர்த்தியுள்ளது. ஆனால், அதுவே பொருளாதார முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் வலுசேர்த்துள்ளதா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories