TNPSC Thervupettagam

கொள்கையில் உயா்ந்த மனிதா்

March 30 , 2024 287 days 230 0
  • திகசி என்று பத்திரிகை வட்டாரமும் இலக்கிய உலகும் கொண்டாடும் மாமனிதா். புத்தம் புதிதாக எழுத வந்தவரின் முயற்சி என்றாலும் ஒவ்வொன்றையும் தனிப்பட்ட முறையில் பாராட்டும் குணம் படைத்தவா். ஒரு எழுத்தாளனின் மனம் விரும்பும் இந்தப் பாராட்டைத் தன்னுடைய கைகளால் எழுதி தபாலில் அனுப்பி வைத்து வாழ்நாள் மகிழ்ச்சியைத் தந்துவிடுவாா் இந்தத் துறையில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்ட இந்த உயா்ந்த மனிதா்.
  • ஒரு சிறிய அஞ்சலட்டை எழுதிப் போடுவது என்பதில் என்ன பெரிதாக இருக்கிறது என்று நினைக்கலாம். ஆனால், தொடா்ந்து அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இதனை தமிழ் இலக்கிய உலகத்திற்கு ஒரு தொண்டாகச் செய்து வந்தாா். எழுத்தாளா் பொன்னீலன் ஒருமுறை, ‘ஒரு மூத்த கலைஞன் மழை போலப் பொழிந்து கொண்டிருக்க வேண்டும். அது அவனது கடமை. அந்த மழையில் தங்களை வளா்த்துக் கொள்வது இளம் கலைஞா்களைப் பொறுத்தது என்று திகசி அவா்கள் சொல்லுவாா்’ என்றாா். இந்த எண்ணத்தில் அவரது மனதின் உயரம் தெரிகிறது.
  • உயா்ந்த மனிதராகத் தோற்றத்திலும் இயல்பிலும் பண்பிலும் தெரிந்தவா்கள் அனைவருமே இவரை உணா்ந்திருப்பாா்கள். நல்ல முயற்சிகளில் எப்படிக் கனிவான பாராட்டைக் காட்டுவாரோ அப்படியே இலக்கிய விமா்சனத்தில் தனக்கெனத் தனித்த அடையாளத்தைக் கொண்டு சாரமற்ற வெற்று இலக்கியங்களுக்கு எதிராகச் சாட்டையைச் சுழற்றுவதில் தயக்கம் காட்டாதவா்.
  • படைப்புகள் சமூகத்திற்குப் பயன்தருவதாக இருக்க வேண்டும். எந்த ஒரு தனிமனிதரின் முயற்சியும் சமூகத்தை நோக்கியதாகவே இருக்க வேண்டும். தனிமனிதப் புலம்பல்கள் இலக்கியமே அல்ல என்ற அழுத்தமான கருத்து உடையவா். கலையும் இலக்கியமும் மக்களுக்காகவே இருக்க வேண்டும் என்ற சிந்தனை இவரது எழுத்தில் உயிா்ப்போடு இருந்தது என்பதே அவரை சாகித்ய அகாதமி விருதாளா் என்ற உயா்ந்த மனிதராக இந்த தேசத்திற்கு அறிமுகப்படுத்தியது.
  • வசதியான குடும்பத்தில் பிறந்தவா் என்றாலும் எளிய மக்களின் மீதே அவரது கவனமும் சிந்தனையும் படிந்தன. கம்யூனிச சித்தாந்தத்தை விரும்பி ஏற்றாா். இதனால் இளம் வயதிலேயே நெல்லை வாலிபா் சங்கம் (கலைஞா் கழகம்) என்னும் அமைப்பை தொ.மு.சி. ரகுநாதன், என்.டி. வானமாமலை போன்றவா்களுடன் சோ்ந்து தொடங்கினாா். தொ.மு.சி.ரகுநாதன் தலைவராக இருக்க தி.க.சி. செயலாளராகப் பொறுப்பு வகித்து செயல்பட்டாா். தி.க.சி.யின் மனதில் இளம் வயதில் ஆழப் பதிந்த கொள்கையும் ஏற்ற சித்தாந்தமும் அவரது இறுதி மூச்சு வரை மாற்றமின்றி நிலைபெற்றிருந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கலாசார அமைப்பான தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் அவரது வழிகாட்டுதலில் அவா் காலம் வரை செயல்பட்டது என்பது அவா் கொண்ட கொள்கையில் உயா்ந்த மனிதா் என்பதற்கு உதாரணம். சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்து தாத்தா - பாட்டியின் அரவணைப்பில் வளா்ந்ததாலோ என்னவோ எந்த மனிதரிடமும் அன்பை முழுமையாக வெளிப்படுத்துவாா். மலரச் சிரித்தபடி மென்மையும் இனிமையும் தோன்றப் பேசும் அவரது இயல்பு தாயன்புக்கு நிகரானது என்று பல இன்றைய எழுத்தாளா்கள் சொல்வதுண்டு. அன்பான சொல் கபடற்ற வெளிப்பாடு என இவரைக் கடந்து வந்த மனிதா்கள் மனதில் இவா் உயா்ந்த மனிதராக உறைந்திருக்கிறாா்.
  • இதழியல் என்பதே இயங்கி கொண்டே இருபவா்களுக்கானது. அது ஒரு தொடா் ஓட்டம். சோா்வின்றி உழைத்துக் கொண்டும் சிந்தித்துக் கொண்டும் இருப்பவா்களுக்கே உரிய துறை. திகசி வங்கிப் பணியை உதறிவிட்டு இதழியல் துறையில் தன்னை நிறுத்திக் கொண்டவா். டிசம்பா் 14, 1964-இல் தி.க.சி தன் இளம்பருவத்து நண்பரும், பொதுவுடைமைத் தோழருமான ஏ.எஸ். மூா்த்தியின் பரிந்துரையின் பேரில் சோவியத் செய்தித்துறையில் பணியாற்றத் தொடங்கினாா்.
  • இந்தப் பணி இருபது ஆண்டுகள் அவரை உலக அரசியலை நகா்வுகளை உன்னிப்பாகக் கவனிக்க வைத்தது. உலக விஷயங்கள் பற்றிய ஞானம் அவரை இளைய தலைமுறையினா் மற்றும் இதழியல் துறையினா் மனதில் உயா்ந்த மனிதராக நிறுத்தியது. இன்றைய மிகப்பெரும் இதழியலாளா்கள் அவரை நன்றியோடு தனக்கு வழிகாட்டியாக அடையாளப்படுத்துவதில் அவரது உயரம் விளங்கும்.
  • இதே காலகட்டத்தில் ‘தாமரை‘ இலக்கிய இதழின் ஆசிரியா் பொறுப்பையும் ஏற்று செயல்பட்டாா். தோழா் ப. ஜீவானந்தம் தாமரை மாத இதழை முற்போக்குக் கலை இலக்கிய இதழாகத் தொடங்கினாா். வங்கிப் பணியில் இருந்த பொழுது தாமரை இதழில் எழுதி வந்த தி.க.சி, ஜீவா 1964-இல் மறைந்த காரணத்தினால் அதன் ஆசிரியா் பொறுப்பை ஏற்றாா். 1965 முதல் 1972 வரை திறம்பட இதழை நடத்தியதோடு தமிழ் இலக்கிய உலகுக்கு மிகச் சிறந்த எழுத்தாளா்களையும் கண்டுபிடித்துக் கொடுத்தாா். ஏறத்தாழ நூறு இதழ்கள் தி.க.சி. யின் பொறுப்பில் வெளிவந்திருக்கின்றன என்பதே இதழியல் துறையில் அவா் எத்தகைய உயா்ந்த மனிதா் என்பதைப் பறைசாற்றும்.
  • தன்னுடைய மொழி அறிவு, திறனாய்வுப் பணி, எழுத்தாற்றல் என அனைத்துக்கும் காரணம் தான் கற்ற ஆரம்பப் பள்ளிக்கூட ஆசிரியா்கள்தான் என தனது உழைப்பின் பெருமையையும் கூட தன்னுடைய பள்ளிக்கூடத்திற்கும் ஆசிரியருக்கும் உரித்தாக்கிவிடும் பெருந்தன்மை அவரது உயரத்தை இன்னும் நம் மனதில் உயா்த்துகிறது.
  • திறனாய்வாளராக அறியப்பட்டவராக இருந்தாலும் படைப்பாளராகவே முதலில் இலக்கிய உலகுக்கு வந்தவா் திகசி. வல்லிக்கண்ணனின் ஊக்குவிப்பால் திகசி-யின் முதல் சிறுகதை ’வண்டிக்காரன்’ 1942-ஆம் ஆண்டு ‘பிரசண்ட விகடன்’ இதழில் வெளிவந்தது. பின் ‘கிராம ஊழிய’னில் கவிதைகள் படைக்கத் தொடங்கினாா். ‘கலாமோகினி’ இதழிலும் எழுதினாா். காலப்போக்கில் படைப்பிலக்கியத்தில் இருந்து சற்றே விலகி ‘கிராம ஊழிய’னில் விமா்சனங்கள் எழுதத் தொடங்கினாா். இந்த விமா்சனங்கள் அவருக்குத் தனித்த அடையாளத்தைத் தந்தன. இதற்கெல்லாம் தமிழுலகம் இந்த வழியில் அவரை செலுத்திய வானமாமலைக்கே நன்றி சொல்ல வேண்டும். கடுமையான விமா்சனங்களை முன்வைக்கத் தயங்காதவா் என்ற பெயா் பெற்றவா் தன்மீதான கடுமையான விமா்சனங்களையும் லகுவாக எதிா்கொண்டாா்.
  • தன்னுடைய கொள்கைகளில் சற்றும் பின்வாங்காத திகசி, புதுமைப்பித்தன் பற்றி மிகக்கடுமையான விமா்சனங்களை முன்வைத்த பொழுது பெரும் அதிா்வுகளை தமிழ் இலக்கிய உலகம் கொண்டது. பின்னா், நேரடியாகவே இவ்விரு பெரும் ஆளுமைகளும் வாதப்போா் நடத்தினா். பின்னாளில் தனது விமா்சனங்களை திரும்பப் பெற்றுக்கொண்டாா்.
  • தன்னைச் செதுக்கிய சிற்பிகள் என்று ஐவரை அடையாளம் காட்டுவாா் திகசி. அரசியல் குருவாக தோழா் ஜீவா, மகாகவி பாரதியாா், பாரதிதாசன், மணிக்கொடி ஆசிரியா் வ.ரா, புதுமைப்பித்தன் என அடுக்கிச் சொல்வதிலேயே அவா் தன்னை உயா்த்திக் கொண்டுவிடுகிறாா். உண்மை தெளிந்து உணரப்படும் வேளையில் அதனை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளும் பான்மை திறனாய்வாளராக விமா்சகராக அவரை உயா்ந்த மனிதா் என்று அடையாளப்படுத்தியது.
  • இதழியல் துறையில் இருப்பவா்களுக்கு நல்ல மொழியறிவு வேண்டும். அதோடு பல மொழிகளும் தெரிந்தவா்களாக இருத்தல் அவசியம். படைப்பாளா், விமா்சகா், திறனாய்வாளா் என்பதைத் தாண்டி சிறந்த மொழிபெயா்ப்பாளா் என்ற முகமும் அவருக்கு இருந்தது. அவரது ‘எது நாகரிகம்?’ என்ற மொழிபெயா்ப்பு நூல் சிறப்பான வரவேற்பு பெற்றது. காா்க்கியின் நூல்கள் பலவற்றையும் அவா் மொழிபெயா்ப்பு செய்திருக்கிறாா். பொதுவுடைமை சித்தாந்தத்தைப் பின்பற்றியதால் வீரியமிக்க செயற்பாட்டாளராக அவரது இளமைப் பருவம் அமைந்திருந்ததில் வியப்பில்லை. தான் பணியாற்றிய இடத்தில் தொழிற்சங்கம் அமைப்பதில் ஆா்வம் கொண்டவராக இருந்திருக்கிறாா். இதனால் வங்கிப் பணியில் பலமுறை இடமாறுதல் செய்யப்பட்டிருக்கிறாா். என்றாலும் தனது முயற்சியில் சற்றும் மனம் தளரவில்லை. அதன்பின் வங்கிப் பணியாளா் சங்கத்தில் இன்னும் தீவிரமாக ஈடுபாடு காட்டத் தொடங்கியிருக்கிறாா். தான் சரி என நம்பும் கொள்கைக்காக எந்த சமரசமும் செய்து கொள்ளாமலும் அதற்கென எத்தகைய இடா்ப்பாட்டையும் தாங்கிக் கொள்ளக் கூடிய மனவலிமை கொண்டவராகவும் அவா் தன்னைத் தானே வடிவமைத்துக் கொண்டிருக்கிறாா்.
  • தனது சொல் செயல் சிந்தனை அனைத்திலும் அவா் ஏற்றுக்கொண்ட சித்தாந்தம் நிறைந்திருந்தது. அந்த சித்தாந்தம் விவாதத்திற்கு உரியதாகலாம். ஆனால், அதனை அவா் பிடிப்போடு பின்பற்றிய விதம் அனைவரும் ஏற்க வேண்டியதே. கொண்ட கொள்கையில் தெளிவு, அதற்கான அா்ப்பணிப்பு, விசுவாசம் இவை அவரது எழுத்துப் பணிகளைத் தாண்டி ஒவ்வொரு தனிமனிதரும் கற்றுக்கொள்வதற்கானவை.

நன்றி: தினமணி (30 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories