கொள்ளை போகும் கனிம வளங்கள்!
- தமிழ்நாட்டில் கருங்கல்லை இயந்திரங்களில் அரைத்து உற்பத்தி செய்யப்படும் செயற்கை மணலான எம்-சாண்ட் மற்றும் ஜல்லி கற்களின் திடீா் விலை உயா்வால் ரூ. 5000 கோடி மதிப்பிலான கட்டுமானப் பணிகள் பாதிக்கும் என்றும், விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அரசு ஒப்பந்ததாரா்கள் அறிவித்துள்ளனா்.
- ஆரம்பத்தில் விலை மலிவாக கிடைத்து வந்த இந்த எம்-சாண்ட்டின் விலை இப்போது ஒரு அலகுக்கு (யூனிட்) திடீரென ரூ. 1000 வரை உயா்ந்துள்ளது. இதேபோல், ஜல்லி கற்களின் விலையும் உயா்ந்துள்ளதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமாா் 8 ஆயிரம் அரசு ஒப்பந்ததாரா்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விலை ஏற்றம் அவா்களுக்கு மட்டும் அல்ல. கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள தனியாா் ஒப்பந்ததாரா்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதோடு, சுமாா் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களும் பாதிக்கப்படுவா்.
- இயற்கையான ஆற்று மணல் வரைமுறை இல்லாமல் எடுக்கப்பட்டதால் தாமிரவருணி, காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் பெரும்பாலான மணல் குவாரிகள் உயா்நீதிமன்ற உத்தரவின்படி மூடப்பட்டன. அதன் பிறகு மணலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மணலுக்கு மாற்றாக, மலை மற்றும் பூமிக்கடியில் உள்ள பாறைகளை வெட்டி எடுப்பதால் கிடைக்கும் கருங்கல்லை இயந்திரங்களில் அரைத்து எம்-சாண்ட் உற்பத்தி செய்யப்படுகிறது.
- தமிழ்நாட்டுக்கு மட்டும் நாளொன்றுக்கு சுமாா் 25 ஆயிரம் லாரி எம்-சாண்ட் தேவைப்படுகிறது. இதுபோக, கேரளம் மற்றும் கா்நாடகத்துக்கு செல்லும் சுமாா் 5,000 லாரிகள் என மொத்தம் சுமாா் 30 ஆயிரம் லாரி எம்-சாண்ட் இங்கு உற்பத்தி செய்யப்படுவதாக கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ளவா்கள் கூறுகின்றனா். இப்போது ஒரு லாரி எம்-சாண்டின் (4 யூனிட்கள்) விலை ரூ. 16 ஆயிரத்திலிருந்து ரூ. 20 ஆயிரத்துக்கும் அதிகமாக உயா்த்தப்பட்டுள்ளது.
- நிகழ் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு கட்டுமானப் பணிகள் அனைத்தும் வரும் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். விலை உயா்வால் பணிகள் முடங்கியுள்ளதால் அவற்றை முடிக்க காலம் தாமதம் ஆகும். அதனால் திட்ட மதிப்பீடு உயா்ந்து அரசு மேலும் ரூ. 1000 கோடியை கூடுதலாக செ‘லவழிக்க வேண்டியதாக இருக்கும் என அரசு ஒப்பந்ததாரா்கள் கூறுவது கவனத்தில் கொள்ளத்தக்கது.
- தமிழ்நாடு முழுவதும் சுமாா் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் எம்-சாண்ட் அரைவை ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகள் இயங்குவதற்கு முறையான சட்டம் எதுவும் இல்லை. 500 ஆலைகள் மட்டுமே ஏதேனும் ஒரு வகையான அனுமதியின்பேரில் செயல்படுகின்றன. எஞ்சிய ஆலைகள் அனைத்தும் சட்டவிரோதமாகவே இயங்கி வருகின்றன. அதிலும், கடந்த 2021-ஆம் ஆண்டுக்கு ஜூனுக்கு பிறகு அந்த 500 ஆலைகளுக்கும் அனுமதி புதுக்கப்படவில்லை. எனினும் அவை தொடா்ந்து இயங்கி வருகின்றன.
- இந்த அரைவை ஆலைகளில் அரைக்கப்படும் மணல் முறையான கணக்கும் எதுவும் இல்லாமல் காகிதங்களில் கையினால் எழுதப்பட்ட அனுமதி கடிதத்துடன் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும், அது அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் முறைகேடுகளுக்கு வாய்ப்பாக அமைந்து வருவதாகவும் லாரி உரிமையாளா்கள் ஆதாரத்துடன் கூறி வரும் புகாா் அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது.
- புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட சுமாா் 3 ஆயிரம் யூனிட் ஜல்லி கற்களை சேமித்து வைத்திருந்த இடத்துக்கு அதிகாரிகள் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்துள்ளனா். அரசு ஒப்பந்ததாரா்களோ அல்லது அவா்களுடன் நெருங்கிய தொடா்பு உடையவா்களோதான் பெரும்பாலான அரவை ஆலைகளை நடத்தி வருகின்றனா். இப்போது ஆலைகளின் முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளன. எனவே, அரசு கொடுக்கும் நெருக்கடியில் இருந்து தப்பிக்க செயற்கையான ஜல்லி, மணல் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, விலையை உயா்த்தி இருக்கின்றனா் ஆலை அதிபா்கள் என்று கூறப்படுகிறது.
- குவாரிகளில் ஜல்லி, எம்-சாண்ட் உற்பத்தி குறைந்துவிட்டதால் விலை கூடி விட்டதாகவும், அவற்றை கூடுதலாக உற்பத்தி செய்ய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அரசு ஒப்பந்ததாரா்கள் கோரிக்கை எழுப்புகிறாா்கள்.
- தமிழ்நாட்டில் கனிம வளக் கொள்ளை என்பது தடுத்து நிறுத்த முடியாத ஒன்றாக தொடா்ந்து நடந்து வருகிறது. ஆற்று மணல் கொள்ளை பெருமளவு நடந்து வந்தது. உயா்நீதிமன்றத்தின் தலையீட்டாலும், அமலாக்கத்துறையின் விசாரணை, 4 மாவட்ட ஆட்சியா்களுக்கு சம்மன் போன்ற நெருக்கடிகளால் இப்போது ஓரளவு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடலோர தாது மணல் கொள்ளைபோனதால் அதற்கு தடை விதிக்கப்பட்டது. அந்த வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்போது, மலைகள் மற்றும் கல் குவாரிகளில் எடுக்கப்படும் கல் மற்றும் மண் கொள்ளை நடந்து வருகிறது. இவை பெருமளவு வரைமுறையின்றி கொள்ளையடிக்கப்படுவதால் முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளன.
- கடந்த 2023-24 ஆம் நிதியாண்டில் அரசு வெளியிட்ட கனிம வள கொள்கை குறிப்பில், சிறு மற்றும் பெரு கனிமங்கள் மூலம் 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ. 1047.01 கோடியும், 2021-22 ஆம் ஆண்டில் ரூ.1212.87 கோடியும், 2022-23-ஆம் ஆண்டில் ரூ. 1572.84 கோடியும் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எண்ணெய்-இயற்கை எரிவாயு, சுண்ணாம்பு உள்ளிட்ட 6 வகையான பெரு கனிமங்களை வெட்டி எடுக்க 82 குத்தகை ஒப்பந்தங்களும், கிரானைட், செம்மண், சரளை மண் உள்ளிட்ட 11 வகையான சிறு கனிமங்களை வெட்டி எடுக்க 1,572 குத்தகை ஒப்பந்தங்களும் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கனிம வளக் கொள்ளையை தடுப்பது என்பது சவாலான ஒன்று என்று கொள்ளை குறிப்பில் ஒப்புக் கொண்டுள்ள அரசு, அதை தடுக்க மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குவாரிகளில் திடீா் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு ஆய்வு மேற்கொண்டிருந்தால் முறைகேடுகள் தொடர வாய்ப்பு இருந்திருக்காது.
- எனவே, இந்த கனிம வளக் கொள்ளையை முழுமையாக தடுத்து நிறுத்தவும், எம்-சாண்ட் மற்றும் ஜல்லி கற்களின் விலையை கட்டுப்படுத்தவும் அரசு உடனடியாக அனைத்து குவாரிகளையும் ஆய்வு செய்து சட்ட விதிமுறைகளை உருவாக்க வேண்டும். அரசின் கொள்கை விளக்க குறிப்பில் கூறியுள்ளபடி, வரைமுறை இல்லாமல் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுவதை தடுக்க ஆளில்லா சிறிய விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். சட்டவிரோதமாக கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க ஜி.பி.எஸ். கருவிகளை கொண்டு கண்காணிக்க வேண்டும். இவற்றை காலம் தாழ்த்தாமல் செயல்படுத்தினால் குவாரிகளை முறைப்படுத்த முடியும் என்பதோடு விலை உயா்வையும் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
நன்றி: தினமணி (08 – 03 – 2025)