TNPSC Thervupettagam

கொள்ளைநோயும் காலனிய அணுகுமுறையும்

August 19 , 2020 1617 days 1267 0
  • உலக நாடுகள் அனைத்துமே கரோனா என்னும் பெரும் சவாலை எதிர்கொண்டிருக்கின்றன. நோய்ப் பரவலைத் தடுக்க ஊரடங்கைப் பின்பற்றுவதோடு தடுப்பூசி மற்றும் மருந்துக்கான பரிசோதனைகளும் மும்முரமாக நடந்துகொண்டிருக்கின்றன.
  • ஒருசில முயற்சிகள் வெற்றிபெற்றும் வருகின்றன. தற்போதைய கொள்ளைநோய்ப் பரவலுக்குக் காரணமான இந்தக் கரோனா வைரஸ்தான் புதியதேயொழிய பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகள் காலனியக் காலகட்டத்திலேயே பின்பற்றப்பட்டவைதான்.
  • இன்றுபோல் அன்று பொதுவாழ்க்கை இவ்வளவு பாதிப்புக்கு ஆளாகவில்லை என்றாலும் கொள்ளைநோய்ப் பரவலைத் தடுக்க பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் மக்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
  • இன்னும் சொல்லப்போனால், கொள்ளைநோயை அறிவியல்பூர்வமாகக் கட்டுப்படுத்து வதற்கான முன்மாதிரித் திட்டம் ஒன்றையும் காலனி ஆட்சிக் காலமே நமக்கு அறிமுகப்படுத்தி வைத்தது.

பிளேக் காலத்துச் சட்டம்

  • கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக, மிகவும் கடுமையான முறையில் ஊரடங்கை நடை முறைப்படுத்துவதற்கு 1897-ல் இயற்றப்பட்ட தொற்றுநோய்த் தடுப்புச் சட்டத்தைத்தான் இந்திய அரசு கையில் எடுத்தது. இது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின்போது பிளேக் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இயற்றப்பட்ட சட்டம். 1896-ல் மும்பையில் பரவிய பிளேக் நோய், அதுவரையில் அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவையே மறுபரிசீலனை செய்ய வைத்தது. நோய்த்தடுப்பு என்னும் முற்றிலும் மனிதநேயக் காரணம் ஒன்றுக்காக பிரிட்டிஷ் அரசு இந்திய மக்களின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துச் சட்டமியற்றிய முதல் நிகழ்வு அதுதான்.
  • பிளேக் தொற்றுக்கு ஆளானவர் என்று சந்தேகத்துக்குரிய நபர் யாரென்றாலும் அவரைப் பொது இடங்கள், தொடர்வண்டி, கப்பல், வீடு என்று எங்கிருந்தும் அழைத்துச் சென்று சோதிக்கவும் தனிமைப்படுத்தவும் தொற்றுநோய்த் தடுப்புச் சட்டம் அரசு அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் அளித்தது. இந்தக் காரணங்களுக்காக அவர்களின் மீது எந்தச் சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது.

போக்குவரத்துத் துண்டிப்பு

  • இதற்கு முன்பு 1895-ல் இயற்றப்பட்ட புனித யாத்திரை கப்பல் சட்டமானது, பொது சுகாதாரக் காரணங்களுக்காகத் தெற்காசியாவிலிருந்து புனிதப் பயணம் மேற்கொள்வதைத் தடைசெய்திருந்தது. இந்தச் சட்டமானது புனித யாத்திரைக்குச் செல்லும் எந்தவொரு கப்பலையும் பரிசோதிக்கவும், நோய்த்தடுப்புக்காகத் தொற்றுக்கு ஆளானவர்களை நிறுத்திவைக்கவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளித்தது.
  • புனித யாத்திரை கப்பல் சட்டமும், தொற்றுநோய்த் தடுப்புச் சட்டமும் ஏழைகள், புலம்பெயர் தொழிலாளர்கள், யாத்ரீகர்களைத் தடுத்து நிறுத்தவும் தனிமைப்படுத்தவும் அரசு அதிகாரிகளுக்கு அதிகாரங்களை அளித்திருந்தன. அதன் விளைவாக, மும்பை மற்றும் புனே நகரங்களின் பிளேக் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த புலம்பெயர் தொழிலாளர்கள், பிச்சைக்காரர்கள் ஆகியோரின் தங்குமிடங்கள் முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டன.
  • தொற்றுநோய்த் தடுப்பு என்ற பெயரில் இப்படி விளிம்புநிலையினரை நகர்ப்புறங்களிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் 20-ம் நூற்றாண்டின் முதல் பகுதி வரையிலும் தொடர்ந்தது. பிளேக் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லவும் தடைவிதிக்கப்பட்டது.
  • மெக்காவுக்கான புனிதப் பயணம் செல்பவர்களைத் தடுக்கும் நோக்கில் குறிப்பிட்ட சில பகுதிகளில் ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. பிளேக் நோய் கட்டுப்படுத்தப்பட்டதும், நோய்த்தடுப்பின் பெயரிலான இந்த நடவடிக்கைகள் நிறுத்திக்கொள்ளப்பட்டுவிட்டன.

தடுப்பூசிச் சோதனைகள்

  • பிரெஞ்சு நுண்ணுயிரியியலாளரான லூயிஸ் பாஸ்டர் வெறிநோய்க்கு எதிராகத் தடுப்பூசியைக் கண்டுபிடித்துச் சில ஆண்டுகளே ஆகியிருந்தன. அனைத்து வகையான வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுநோய்களுக்கும் தடுப்பூசியைக் கண்டுபிடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையை லூயிஸ் பாஸ்டர் ஏற்படுத்தியிருந்தார்.
  • இந்நிலையில், மும்பையில் ஏற்பட்ட பிளேக் பரவலானது, காலனி நாடுகளில் மிகப் பெரிய அளவில் தடுப்பூசிப் பரிசோதனைகளைச் செய்துபார்க்கும் வாய்ப்பைப் பொது சுகாதாரத் துறைக்கு வழங்கியது.
  • விரிந்து பரந்த மும்பை நகரமும் விதவிதமான மனிதர்களும் சிறைச்சாலைகள், மருத்துவமனைகள், குடிசைப் பகுதிகள் போன்ற தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளும் இந்தத் தடுப்பூசிப் பரிசோதனைகளை நடத்த உகந்த இடங்களாக இருந்தன.
  • பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் மும்பைவாசிகளுக்கு ஆறு விதமான தடுப்பூசிகளைப் போட்டுப் பரிசோதனை நடத்தினார்கள். ஏ.லுஸ்டிக், எர்ஸின், பால் லூயிஸ் சைமண்ட் போன்ற ஐரோப்பிய நுண்ணுயிரியியலாளர்கள் தங்களது தடுப்பூசி முயற்சிகளுக்கு மும்பைதான் சரியான பரிசோதனைக் களமாக இருக்கும் என்று கிளம்பிவந்தார்கள்.
  • ரஷ்ய அறிவியலாளரான வால்டெமர் ஹாப்கின் மும்பையில் இருந்த தன்னுடைய சிறிய ஆய்வகம் ஒன்றில் சொந்தமாகவே தடுப்பு மருந்துகளைத் தயாரித்தார். ஒவ்வொரு தடுப்பூசிப் பரிசோதனைக்கும் ஆட்களைத் தேர்வுசெய்து அனுப்பும் வேலையை மும்பை அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர்.
  • இந்தத் தடுப்பூசிகள் எதுவும் மக்களிடம் பிளேக் நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்குவதற்காகப் போடப்படவில்லை, தடுப்பூசிகளைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக மட்டுமே போடப்பட்டன. இந்தப் பரிசோதனைகளைச் செய்வதற்கு மக்களிடம் சம்மதம் கேட்டதற்கான எந்தச் சான்றும் இல்லை. தடுப்பூசிப் பரிசோதனைக்கு ஆளானவர்களுக்கு எந்தவிதமான சட்டப் பாதுகாப்புகளும் இல்லை.

பரிசோதனை எலிகள்

  • 19-ம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் பரவியிருந்த காலனியாதிக்கமானது மிகப் பெரிய அளவில் மேற்கொண்ட தடுப்பூசி நடவடிக்கைகளின் ஒரு பகுதிதான் மும்பையில் நடந்த பிளேக் தடுப்பூசிச் சோதனைகளும். அதற்கு முன்பு, பெரியம்மைக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
  • 1853-ல் பிரிட்டனில் தொடங்கிய இந்தக் கட்டாயத் தடுப்பூசி முறையானது, விரைவில் காலனி நாடுகளிலும் நடைமுறைக்கு வந்தது. 1865-ல் கொல்கத்தாவிலும், 1876-ல் மும்பையிலும், 1884-ல் சென்னையிலும் அடுத்தடுத்து பெரியம்மை பரவியது.
  • அதையொட்டி மாகாண அரசுகள் கட்டாயத் தடுப்பூசிச் சட்டங்களை இயற்றின. மக்களைக் கட்டாயப்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ளச் செய்ததே அதற்கு எதிரான போராட்டங்களுக்கும் காரணமாயிற்று.
  • தடுப்பூசிகள் உடல்நலத்துக்கு மட்டுமின்றி மனித உரிமைக்கும் கேடு விளைவிப்பதாக ஐரோப்பாவிலும் வடஅமெரிக்காவிலும் எதிர்ப்புகள் எழுந்தன.
  • அங்கு, மக்கள் தங்களது தடுப்பூசிச் சான்றிதழ்களைக் கிழித்தெறிந்து போராட்டங்களை நடத்தினார்கள். இந்தியாவில், குழந்தைகள் குறிப்பாக விளிம்பு நிலையினரின் குழந்தைகள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து விவாதங்கள் எழுந்தன.
  • சிலரின் தனிப்பட்ட நலன்களைக் காட்டிலும் பெரும்பகுதியினரின் நலன்கள் முக்கியமானவையா என்று அப்போது நடந்த விவாதங்கள் இன்றைக்கும்கூட பொருத்தமானதுதான். மும்பை பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் இன்னும் முழுமையான அளவில் நிரூபிக்கப்படாத ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை கரோனாவால் பாதிக்கப்பட்ட குடிசைப் பகுதிவாசிகள், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்களுக்குப் பரிந்துரைத்திருக்கிறார்கள். எனில், காலனிய மனோபாவம் இன்னமும் நம்மைவிட்டு நீங்கவில்லையா?

நன்றி: தி இந்து (19-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories