TNPSC Thervupettagam

கொழுப்புக் கல்லீரல் சமாளிக்கும் வழிகள்

August 27 , 2023 316 days 307 0
  • கல்லீரலே நமது உடலில் இரண்டாவது பெரிய உறுப்பு. ரத்தத்தில் உள்ள நச்சுகளை உடலிலிருந்து இதுவே நீக்குகிறது. உணவில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட அனைத்து ஊட்டச்சத்துகளையும் கல்லீரலே பிரித்தெடுக்கிறது.
  • முக்கியமாக, உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு ஊட்டச்சத்துகளைக் கல்லீரலே கொண்டுசெல்கிறது. நமது உடலில் நடைபெறும் 500க்கும் மேற்பட்ட செயல்பாடுகளுக்குக் கல்லீரல் உறுதுணையாக இருக்கிறது. நமது உடலில் முக்கியத்துவம் வாய்ந்த பல பணிகளை மேற்கொள்ளும் கல்லீரலை ஆரோக்கியமாகப் பார்த்துக்கொள்வது நமது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியம்.
  • கல்லீரலில் ஏதேனும் பிரச்சினை என்றால், அதனால் உடலுக்கு ஏற்படும் பாதிப்பு பெரும் ஆபத்தில் முடியக்கூடும். கல்லீரலுக்கு ஏற்படும் பாதிப்புகளில் முக்கியமானதாகக் கொழுப்புக் கல்லீரல் (Fatty Liver) உள்ளது. அமெரிக்கத் தேசியச் சுகாதார நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின்படி, கொழுப்புக் கல்லீரல் பாதிப்பு உலகம் முழுவதும் பரவலாக அதிகரித்துவருகிறது. உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 25 சதவீதத்தினர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

கொழுப்புக் கல்லீரல்

  • பொதுவாக, நமது கல்லீரல் செல்களில் குறிப்பிட்ட அளவு கொழுப்பு இருக்கலாம்; கொழுப்பின் அளவு கல்லீரலில் 5 முதல் 10 சதவீதத்துக்கும் கூடுதலாக அதிகரிக்கும்போதே, அது சில ஆபத்தான சூழ்நிலைகளுக்கு நம்மை இட்டுச்செல்கிறது.
  • கொழுப்புக் கல்லீரல்: பொதுவாக, நமது கல்லீரல் செல்களில் குறிப்பிட்ட அளவு கொழுப்பு இருக்கலாம்; கொழுப்பின் அளவு கல்லீரலில் 5 முதல் 10 சதவீதத்துக்கும் கூடுதலாக அதிகரிக்கும்போதே, அது சில ஆபத்தான சூழ்நிலைகளுக்கு நம்மை இட்டுச்செல்கிறது.
  • இதற்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது கடுமையான கல்லீரல் பிரச்சினைகளை ஏற்படுத்தும்; பெரும் ஆபத்துக்கும் வழிவகுக்கும். கொழுப்புக் கல்லீரல் ஏற்படுவதற்கான காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சை முறைகளை அறிந்துகொள்வது ஆபத்தை வெகுவாகக் குறைக்க உதவும்.
  • கொழுப்புக் கல்லீரல் என்பது நமது கல்லீரலில் தேவையற்றதாகவோ கூடுதலாகவோ கொழுப்பு இருப்பதால் ஏற்படும் ஒரு பாதிப்பு. கல்லீரலில் அளவுக்கு அதிகமான கொழுப்பு படிவதன் காரணமாக இந்நோய் ஏற்படுகிறது.
  • குடிப்பழக்கத்தால் ஏற்படும் ஆல்கஹால் கொழுப்புக் கல்லீரல் நோய் (AFLD), உணவு முறை அல்லது வாழ்க்கை முறையால் ஏற்படும்ஆல்கஹால் அல்லாத கொழுப்புக் கல்லீரல் நோய் (NAFLD) என இரண்டு வகைகள் உள்ளன. டைப் 2 நீரிழிவு, உடல் பருமன், இன்சுலின் எதிர்ப்பு நிலை போன்ற பல மருத்துவப் பிரச்சினைகளுடன் தொடர்புடையதாக இந்நோய் உள்ளது.
  • கல்லீரலில் கொழுப்பு படிகிற ஆரம்பக் காலகட்டத்தில் அது எந்தவித அறிகுறியையும் வெளிப்படுத்தாது. இதனால், அதை எளிதில் கண்டறியவும் முடியாது. கொழுப்புக் கல்லீரலின் ஆபத்து இதிலிருந்தே தொடங்குகிறது. கொழுப்புக் கல்லீரலுக்கு நீண்ட காலமாகச் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், கல்லீரல் அழற்சி அதிகரிக்கும்; முடிவில் கல்லீரல் பாதிப்பின் இறுதிக்கட்ட நிலையான சிரோசிஸ் ஏற்பட்டு கல்லீரல் செயலிழப்புக்கு வழிவகுக்கும்; இந்த நிலையில் உயிரிழப்பு ஏற்படும் ஆபத்தும் உண்டு.

அறிகுறிகள்

  • கல்லீரலில் கொழுப்பு இருப்பதற்கான அறிகுறிகள் பலருக்கும் வெளிப்படையாகத் தெரிவதில்லை. சொல்லப்போனால், தங்களுக்கு இந்த நோய் இருப்பதே பலருக்குத் தெரியாது. மது அருந்தாதவர்களுக்கு நோய் முற்றிய பிறகே அதன் தீவிரத்தன்மை தென்படத் தொடங்கும். பாதிப்பு அதிகரிக்கும்போது பின்வரும் அறிகுறிகள் ஏற்படலாம்:
  • # அதீதச் சோர்வு, பலவீனம்
  • # அதிகரிக்கும் கல்லீரலின் நொதி அளவுகள் (AST, ALT)
  • # இன்சுலின், ட்ரைகிளிசரைட்டின் அளவு அதிகரிப்பது
  • # கல்லீரல் வீக்கம்
  • # அடிக்கடி வாந்தி, பசியின்மை
  • # விரைவான எடை இழப்பு
  • # அடிவயிற்றின் மேல் பகுதியில் வீக்கம்
  • # கைகள், கால்களில் அரிப்பு ஏற்படுவதும் கொழுப்புக் கல்லீரலின் அறிகுறியாக இருக்கலாம். இந்த அரிப்புப் பிரச்சினை மாலையிலும் இரவிலும் அதிகமாக இருக்கலாம்.

காரணிகள்

  • # அதிக உடல் பருமன்
  • # டைப் 2 நீரிழிவு நோய் அல்லது உடலில் இன்சுலின் எதிர்ப்பு நிலை கொண்டவர்கள்
  • # அதிக அளவில் (சுத்திகரிக்கப்பட்ட) கார்போஹைட்ரேட்டுகளைச் சாப்பிடுவது
  • # சோடா அல்லது ஆற்றல் பானங்கள் போன்ற சர்க்கரை நிறைந்த பானங்களை அடிக்கடி அருந்துவது
  • # செரிமானக் குறைபாடுகள்
  • # ஹெபடைடிஸ் சி, மரபணுக்கள், சில மருந்துகளின் பக்க விளைவுகள்


https://static.hindutamil.in/hindu/uploads/common/2023/08/26/16930135612006.jpg

சிகிச்சை

  • கொழுப்புக் கல்லீரல் நோய்க்குப் பயனுள்ள சிகிச்சையாக அங்கீகரிக்கப்பட்ட எந்த மருந்தும் இல்லை என்பதே இன்றைய நிலை. கொழுப்புக் கல்லீரல் நோயைக் குணப்படுத்த உதவும் மருந்துகளை உருவாக்க ஆராய்ச்சிகளும் மருத்துவ ஆய்வுகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன.
  • இன்றைய சூழலில் கொழுப்புக் கல்லீரல் நோய் இருப்பது கண்டறியப்பட்டால், வாழ்க்கை முறை மாற்றங்களும், உணவு முறை மாற்றங்களுமே நோயைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளாகப் பரிந்துரைக்கப்படுகின்றன.

என்ன செய்ய வேண்டும்?  

  • முன்பெல்லாம் 40 வயதைக் கடந்தவர்களுக்கு மட்டுமே வரக்கூடியதாக இருந்த இந்தச் சிக்கல், இப்போது குழந்தைகளுக்கும்கூட வருகிறது. உடல் பருமன் கொழுப்புக் கல்லீரல் பிரச்சினையை மோசமாக்கலாம். தினசரி ஆரோக்கியமான உணவு முறையைப் பராமரிப்பது மிகவும் முக்கியம். இத்துடன், தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.
  • மது அருந்துவதையும் புகைப்பழக்கத்தையும் முற்றிலும் தவிருங்கள். இந்தப் பிரச்சினை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல; இது மற்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும் தீவிரப் பிரச்சினை. இருப்பினும், உடல் செயல்பாடுகளின் அளவை அதிகரிப்பது, ஆரோக்கியமான உணவைப் பின்பற்றுவது போன்ற நடவடிக்கைகளின் மூலம் அதிகப்படியான கல்லீரல் கொழுப்பைக் குறைக்கலாம்; எதிர்காலச் சிக்கல்களின் அபாயத்தையும் குறைக்கலாம்.

சேர்த்துக்கொள்ள வேண்டியவை

  • # முழு தானியங்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவு
  • # புரோக்கோலி, முட்டைகோஸ், கீரை வகைகள்
  • # சோயா புரதம்
  • # சால்மன், மத்தி போன்ற மீன் வகைகள்
  • # ஓட்ஸ் போன்ற முழு தானியங்கள்
  • # பால், குறைந்த கொழுப்புள்ள பால் பொருள்கள்
  • # கிரீன் டீ

தவிர்க்க வேண்டியவை

  • # குடிப்பழக்கம், புகைப்பழக்கம்
  • # இனிப்பு, சோடா, பழச்சாறுகள் போன்ற சர்க்கரை மிகுதியாக உள்ள குளிர்பானங்கள்
  • # வறுத்த உணவு வகை
  • # உணவில் அதிக உப்பு
  • # சிவப்பு இறைச்சி உள்ளிட்ட கொழுப்பு நிறைந்த உணவுப் பொருள்கள்
  • # வெள்ளை ரொட்டி, பாஸ்தா போன்ற மிகுந்த மாவுச்சத்தும், நார்ச்சத்து குறைபாடும் கொண்ட உணவுப் பொருள்கள்

நன்றி : இந்து தமிழ் திசை (27 – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories