- கச்சோடி என்றால், ராஜஸ்தான் கச்சோடிதான்; அதையும் கோட்டா நகரத்தில் நீங்கள் சாப்பிட வேண்டும் என்றார் சேட்டன் சர்மா. அப்படி என்ன விசேஷம் என்று கேட்டேன். சம்பல் நதி பாயும் பிராந்தியம் என்பதால், இங்கே கோதுமை, காய்கறி எல்லாமே தனி ருசியில் இருக்கும். கச்சோடியில் நீங்கள் அந்த ருசியைத் தனித்து உணர முடியும் என்றார். ராஜஸ்தானியர்கள் இப்படித்தான். ஊரை நமக்கு நெருக்கமாக்குவதில் கில்லாடிகள்!
- பயணங்கள் எப்போதுமே நம்முடைய எல்லைகளை விரிவாக்குகின்றன; சமூகங்களின் விரிவுகளையும் மக்களுடைய புதிய நகர்வுகளையும் நம் கண் முன் கொண்டுவருகின்றன.
- ராஜஸ்தானில் கொஞ்சம் விரிவாகப் பயணிக்கும் வாய்ப்பு என்னுடைய சமீபத்திய பயணத்தில் கிடைத்தது. மாநிலத்தின் முக்கியமான நகரங்களுக்கு மட்டும் அல்லாது, கிராமப் பகுதிகளுக்கும் சென்று வந்தேன். பல சுற்றுலாத் தலங்களும் இவற்றில் அடக்கம். ராஜஸ்தானியர்களிடம் ஆர்வம் ஈர்த்த முக்கியமான விஷயம், தங்களுடைய வரலாறு, பண்பாடு, ஊர்கள், விருந்தோம்பல் இவற்றில் அவர்கள் காட்டும் அக்கறை; அதை மேலும் மேலும் அவர்கள் செழுமைப்படுத்திக்கொண்டே செல்கின்றனர்.
- ராஜஸ்தானில் ஜெய்பூருக்கோ, ஜோத்பூருக்கோ சென்றிருப்பவர்களுக்கு இந்த விஷயம் தெரியும், ‘பிங்க் சிட்டி’ என்றழைக்கப்படும் ஜெய்பூர் நகரத்தின் பெரும்பான்மைக் கட்டிடங்கள் இளஞ்சிவப்பு நிறத்தைப் பிரதிபலிப்பவை; ‘ப்ளூ சிட்டி’ என்றழைக்கப்படும் ஜோத்பூர் நகரத்தின் கணிசமான கட்டிடங்கள் இளநீல நிறத்தைப் பிரதிபலிப்பவை; இரு நகரங்களிலுமே பழைய நகரத்தின் முக்கியமான வீதிகள், சந்தைகள், கட்டிடங்கள் புராதனத்தன்மையைச் சீரழித்துவிடாமல் நகரின் வளர்ச்சியை விஸ்தரிக்கின்றனர். மாநிலத்தின் உள்ளார்ந்த நகரங்கள், கிராமப்புறங்களில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களிலும் மக்களிடம் இந்த உணர்வைப் பார்க்க முடிந்தது.
- நிலப்பரப்பு அளவில் இந்தியாவின் பெரிய மாநிலம் என்றாலும், 3.42 லட்சம் சதுர கி.மீ. நிலத்தில் வளமான பகுதிகள் குறைவு; கணிசமான பகுதியைப் பாலையாகக் கொண்டது ராஜஸ்தான். பெரிய நிதி பலம் அற்ற மாநிலமான ராஜஸ்தான் தன்னுடைய வருவாயைப் பெருக்குவதற்கான வாய்ப்புகளில் இப்போது தீவிரக் கவனம் செலுத்திவருகிறது. அரசு இப்படி குறிவைக்கும் துறைகளில் ஒன்று சுற்றுலாத் துறை. ராஜஸ்தானில் வேளாண் துறை, ஜவுளித் துறைக்கு அடுத்து அதிகமானோருக்கு வாய்ப்பளிக்கும் துறை இது.
- ராஜாக்களின் நிலம் என்று பொருள்படும் பெயரைக் கொண்ட ராஜஸ்தானில் கோட்டைகள் மட்டுமே 250+ உண்டு. அரண்மனைகள் உண்டு. அரசர்கள் பயன்படுத்திய கவச உடைகளில் தொடங்கி அவர்கள் கையாண்ட பீரங்கிகள் வரை உண்டு. இந்தியா சுதந்திரம் அடையும் வரை கணிசமான பகுதி உள்ளூர் அரசாட்சியின் கீழ் இருந்த நிலம் இது. இந்தப் பின்புலத்தைப் பிரமாதமாகப் பயன்படுத்துகிறது ராஜஸ்தான்.
- மக்கள் கூடுமானவரை வெளியிலிருந்து வருவோரிடம் மிகவும் அன்பாகவும், இணக்கமாகவும் நடந்துகொள்கிறார்கள். விடுதிகள் குறைந்த வாடகையில் நல்ல வசதிகளை அளிக்கின்றன. விடுதிகளில் பரிமாறப்படும் உணவு தரமாக இருக்கிறது. தொல்லியல் சிறப்பு மிக்க இடங்கள் அதற்குரிய மேன்மையோடு இருக்கின்றன. சுவர்களில் ஆபாச எழுத்துகள், தூண்களில் சுரண்டல்கள் இல்லை. சீரமைப்புப் பணி என்ற பெயரில் பழைய கட்டுமானம் சிதைக்கப்படவில்லை. முக்கியமாக, சம்பந்தப்பட்ட இடங்களின் வரலாற்றோடு, ராஜஸ்தானியர்களின் பண்பாட்டை இணைக்கும் பாலத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
- மெக்ரன்கர் கோட்டைக்குச் சென்றால், கோட்டையின் நுழைவாயிலிலேயே இசைக் கலைஞர்களுக்கு ஓர் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது; அவர்கள் ராஜஸ்தானின் நாட்டுப்புற இசையோடு வரவேற்கிறார்கள். நான் தமிழ்நாட்டிலிருந்து வருகிறேன் என்பதை அறிந்துகொண்ட அவர்கள் 'வொய் திஸ் கொலவெறி' பாடலை இசைத்தார்கள்.
- கோட்டைக்குள் பணியில் அமர்த்தப்பட்டிருக்கும் காவலர்கள் ராஜஸ்தானின் பாரம்பரிய உடை, கூரிய மீசையுடன் அமர்ந்திருக்கிறார்கள். வளாகத்தில் நல்ல புத்தகக் கடை ஒன்று இருக்கிறது. கோட்டையின் வரலாறு தொடங்கி மன்னர்களின் வரலாறு வரை பேசும் பல நூல்கள் அங்கே கிடைக்கின்றன. உணவகத்தில் ராஜஸ்தானின் பாரம்பரிய சாப்பாடு வகைகளைப் பரிமாறுகிறார்கள்.
- ராஜஸ்தானின் பாரம்பரிய உடைகள், ஆபரணங்கள், காலணிகள் சகலமும் விற்கும் கடைகள் இருக்கின்றன; கைவினைக் கலைஞர்கள் நேர்ப்பட அவற்றின் சிறப்பை விவரித்து விற்கிறார்கள். விலை கூடக்குறைவாக இருக்கலாம்; தரத்தை அரசு உத்தரவாதப்படுத்துகிறது. புராதன வளாகத்தில் நவீனமும் கை கோத்திருக்கிறது.
- ஐரோப்பிய நாடுகளின் பாணியில் நல்ல காஃபிடரி. வெளிநாட்டு ஆய்வாளர்களோ, மாணவர்களோ வந்தால் எவ்வளவு நேரமும் உட்கார்ந்து கணினியை வைத்துக்கொண்டு எழுதலாம். காதலர்கள் சென்றால் மணிக்கணக்கில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கலாம்.
- அடுத்தகட்டமாக ராஜஸ்தானின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரு தலங்களைக் கண்டறிந்து மேம்படுத்தும் திட்டத்தைச் செயல்படுத்த முனைகிறது அரசு. ஜெய்பூர், அஜ்மீர், ஜெய்சால்மர், பன்ஸ்வாரா, ஆல்வார், ஜோத்பூர், கோட்டா, பில்வாரா இவற்றையெல்லாம் தாண்டியும் ராஜஸ்தானில் பார்க்க எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன என்று இங்கே வரும் வெளிமக்களுக்குக் காட்டவிருக்கிறோம் என்கிறார்கள். வனத் துறை, தொல்லியல் துறை, பொதுப்பணித் துறை, உள்ளாட்சி அமைப்புகள் என்று அரசின் முக்கியத் துறைகள் இணைந்து இந்தப் பணியில் ஈடுபடுகின்றன.
- வரலாற்றுச் சுற்றுலா, வனச் சுற்றுலா, பாலைவனச் சுற்றுலா, கலாச்சாரச் சுற்றுலா, ஆன்மிகச் சுற்றுலா என்று விரித்துக்கொண்டே செல்கிறார்கள். உணவுகளை முன்வைத்து ‘இனிப்புகளின் திருவிழா’, ‘காரங்களின் திருவிழா’ நடத்துகிறார்கள்; விலங்குகளை முன்வைத்து ‘யானைகள் திருவிழா’, ‘ஒட்டகங்களின் திருவிழா’ நடத்துகிறார்கள். சாலை விபத்தில் உயிரிழந்தவரைக் காவல் தெய்வமாகக் கருதி மக்கள் வழிபடலாகியிருக்கும் ‘புல்லட் பாபா கோயில்’ வரை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் எந்த விஷயத்தையும் ராஜஸ்தான் அரசு விட்டுவைக்கவில்லை. ஒவ்வொரு தலத்தையும் போக்குவரத்து வசதிகள் இணைக்கின்றன.
- கோட்டா கச்சோடியைச் சாப்பிட்டபோது அது தனித்துவமாகத்தான் தெரிந்தது. ஒவ்வொரு ஊருக்கும் இப்படி சில விசேஷங்கள் இருக்கின்றன. நீங்கள் ஜோத்பூரில் ‘தூத் பண்டார்’ பால் குடிக்க வேண்டும். ஊரில் எங்கே பால் குடித்தாலும் அப்படி ஒரு ருசியாக இருக்கும் என்றார் சர்மா. எப்படி என்று நான் கேட்கவில்லை; அதற்கு அவர் ஒரு கதை சொல்வார்.
- இந்தியாவிலேயே அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் தமிழ்நாட்டில் இப்படிச் செய்யவும் சொல்லவும் எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன? உறையூரில் தொடங்கி பூம்புகார் வரை ஏன் ‘சோழாஸ் மெட்ரோ ரயில் சேவை’யைத் தமிழக அரசு திட்டமிடக் கூடாது? பூம்புகாரை ஏன் கடல் கொண்டாட்ட நகரமாகக் கட்டமைக்கக் கூடாது? சென்னையில் ஏன் சேர, சோழ, பாண்டியர்களின் வரலாற்றைப் பேசும் தனித்த அருங்காட்சியகம் ஒன்றை அமைக்கக் கூடாது?
- இங்கெல்லாம் ஏன் நம்முடைய பாரம்பரிய கலைகள், உடைகள், ஆபரணங்கள், உணவுகளை அறிமுகப்படுத்தும் கடைகளை தமிழக அரசே நடத்தக் கூடாது? நம்முடைய விடுதிகள், வியாபாரிகள், உள்ளூர் மக்களுக்கு ஏன் சுற்றுலா பயணிகள் அணுக்கக் கலாச்சாரத்தையும் அதன் பின்னுள்ள பொருளாதார முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறக் கூடாது?
- இப்படி எவ்வளவு கூடாதுகள்? எப்போது செய்யப்போகிறோம்?
நன்றி: அருஞ்சொல் (13 – 12 – 2023)