TNPSC Thervupettagam

கோதாவரி - காவிரி இணைப்பு சாத்தியமா?

August 6 , 2021 1185 days 666 0
  • கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் 86 லட்சம் கோடி செலவில் செயல்படுத்தப்பட இருப்பதான அறிவிப்புகள் புருவத்தை உயர்த்தச் செய்துள்ளன. தென்இந்தியாவில் தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.
  • 2050-ல் தமிழ்நாட்டின் நீர்த் தேவை 57,725 மி.க.மீ. ஆக இருக்கும் என்று கணக்கிடப் பட்டிருக்கிறது. மாநிலத்தின் சராசரி மழை அளவு 925 மி.மீ. காவிரி, பாலாறு, பெரியாறு பிரச்சினைகள் தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினைகளாக உள்ளன.
  • தமிழ்நாட்டில் 3-ல் 2 பங்கு மாவட்டங்கள் இந்த மூன்று ஆறுகளை நம்பித்தான் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஆறுகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் தமிழ்நாடு வறட்சிப் பிரதேசமாக மாறிவிடும்.
  • உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்ட அடிப்படையில், தேசிய நதிநீர் திட்ட வளர்ச்சி அமைப்பு, கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்துக்கு வரைபடம் தயாரித்து சம்பந்தப் பட்ட மாநிலங்களுக்கு அனுப்பியது.
  • அதன்படி, கோதாவரியில் மிகையாக உள்ள நீரை ஜூன் முதல் அக்டோபர் வரை 143 நாட்களில் 247 டி.எம்.சி. வழங்கலாம் என்றும், இதில் வீணாகும் நீர்போக மீதமுள்ள 230 டி.எம்.சி.யில் தெலங்கானாவுக்கு - 65.8 டி.எம்.சி., ஆந்திரத்துக்கு - 79.92 டி.எம்.சி., தமிழ்நாட்டுக்கு - 84.28 டி.எம்.சி. நீர் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
  • தமிழ்நாட்டைத் தவிர, மற்ற மாநிலங்கள் இதனை ஏற்கவில்லை. இந்தியாவின் நீளமான நதிகளில் ஒன்றான கோதாவரி, மஹாராஷ்டிரத்தின் நாசிக் அருகில் திரியம்பகேஷ்வரில் தோன்றி மஹாராஷ்டிரம், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், ஒடிசா, ஆந்திரம் வழியாக 1,465 கிமீ பயணித்து, வங்கக் கடலில் சேர்கிறது.
  • கோதாவரி தெலங்கானாவின் நாகார்ஜுன சாகர், சோமசீலா அணைகள் வழியாக காவிரியுடன் குழாய்கள் மூலம் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
  • இது ஏதோ ஒரு வாய்க்கால் மடையை மாற்றிவிடுவதுபோன்ற விஷயமல்ல. கோதாவரி-காவிரி இணைப்பைப் பொறுத்தவரை, மஹாராஷ்டிரம்-சத்தீஷ்கர் எல்லையில் கோதாவரியின் துணை நதியான இந்திராவதியில் ஒரு அணை கட்ட வேண்டும்.
  • அதில் தேங்கும் நீர் தெலங்கானாவின் கண்ணேஷ்வர் அணை, ஆந்திரத்தின் போலாவரம் அணை, நாகார்ஜுன சாகர் அணை வழியாக கிருஷ்ணா நதிக்குக் கொண்டுசென்று, அங்கிருந்து நீரை சோமசீலா அணை மூலம் பெண்ணாறு வழியாகக் காவிரிக்குக் கொண்டு செல்வதே கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம்.
  • இவற்றை இணைப்பதற்கான சாத்தியக்கூறுகள், பயன்-இழப்பு மதிப்பீடு, அமைவிடம் போன்றவை குறித்து அறிவியல்பூர்வமான ஆய்வுகள் நடைபெற்றுள்ளதாகத் தெரிய வில்லை.

நதிகள் இணைப்பு

  • நதி என்பது நீர் மட்டும் சம்பந்தப்பட்ட ஒன்றல்ல. மாறாக, அது ஒரு உயிர்ச் சூழல் மண்டலம். ஒவ்வொரு நதிக்கும் ஒரு தன்மை உண்டு. ஆனால், அதை மற்றொரு நதியோடு இணைப்பதால் இயற்கையின் போக்கே மாறிவிடும்.
  • கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தில், கோதாவரி நீர் காவிரிக்கு வர வேண்டும் என்றால், பல குறுக்காறுகளை, அணைக்கட்டுகளை, மலைகளை, காடுகளை, குடியிருப்புப் பகுதிகளைக் கடந்து வர வேண்டும்.
  • சில இடங்களில் புவிஈர்ப்பு விசையுடன் இயைந்தும், பல இடங்களில் நீர் மேலேற்றம் செய்யப்பட்டும் கொண்டுவரப்பட வேண்டும்.
  • அதற்கான செலவு அதிகம் என்பதைவிட, அதை யார் ஏற்பது என்பதும் பிரச்சினைக்குரியதாகும்.
  • காடுகள், மலைகள் அழிக்கப்படுவதால், உயிர்ப்பன்மை மட்டுமல்லாமல் இயற்கைச் சூழல், பருவநிலை எனப் பலவும் பாதிப்புக்கு உள்ளாகும். புதிதாக ஏற்படுத்தப்படும் நீர்த்தடம் அதன் வழியிலுள்ள நீர்த் தேவையையும் பூர்த்திசெய்ய வேண்டும்.
  • இவ்வளவையும் கடந்து கோதாவரி நீர் கொண்டுவரப்பட்டால், அதைச் சேமிக்கும் ஏற்பாடும் வேண்டும்.
  • தமிழ்நாட்டில் 1,076 கிமீ நீளமுள்ள கடற்கரையில், எண்ணற்ற துறைமுகங்கள், அனல் மின்நிலையங்கள் உள்ளிட்ட வளர்ச்சி நடவடிக்கைகளால், கடலின் அலை உருவாகும் மறையில் மாற்றம் ஏற்பட்டு காவிரி டெல்டா பாதிப்புக்குள்ளாகிறது.
  • மகாநதி, கோதாவரியில் கடலில் கலப்பதாகச் சொல்லப்படும் மிகை நீரானது, பருவநிலை மாற்றப் பின்னணியில் அடுத்த 10-20 ஆண்டுகளுக்குப் பிறகு, இருக்குமா என்பது கேள்விக் குறியாக உள்ளது.
  • எப்படிப் பனிப்பாறைகள் உருகி இமயமலையின் கங்கோத்ரி சுருங்கியுள்ளதோ, அதே போல இந்த நதிகளின் ஆதாரங்களும் சுருங்கும் வாய்ப்பே உள்ளது.
  • உபரி நீரைப் பயன்படுத்துவது குறித்துத் திட்டமிடும்போது எதிர்காலத் தேவையையும், அந்தந்த ஆறுகள் பாயும் மாநிலங்களில் உள்ள வறட்சிப் பகுதிகளையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
  • ஆண்டு முழுவதும் நீர்வரத்து உறுதி செய்யப்பட வேண்டும். ஆறுகளை இணைக்கத் திட்டமிடும் போதே நீர்வளம், மேலாண்மை, சாத்தியக்கூறுகள் குறித்த அனைத்து அம்சங்களையும் ஆய்ந்தறிய வேண்டும்.
  • ஆறுகள் இணைக்கப்படுகிறபோது, அணைகள் கட்டப்படுகிறபோது அவற்றைப் பராமரிப்பதற்கான செலவினங்களும் திட்டமிடப்பட வேண்டும். கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தில், அது குறிப்பிடப்படவே இல்லை. ஆறுகள் இணைக்கப்படுகிற போது நாட்டின் அமைவிடமே மாறும் என்பதோடு, ஆற்றின் வழித்தடமும் பறிபோய், உயிர்ப்பன்மை பாதிக்கப்பட்டு, இயற்கைச் சூழலே மாற்றத்திற்கு உள்ளாகும்.
  • கோதாவரி-காவிரி இணைப்பின் சாத்தியக்கூறுகள் அரிதாக இருக்கும் வேளையில், இருக்கும் நீர் வளங்களைப் பாதுகாப்பது நம்முன் உள்ள கடமையாகும். தமிழ்நாட்டில் போதிய மழைப் பொழிவு இருந்தும் அண்டை மாநிலங்களைச் சார்ந்து இருக்க வேண்டியிருக்கிறது.
  • இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய சட்டப்படியான தண்ணீரை வழங்காமல், ஒப்பந்தங்களை அண்டை மாநிலங்கள் மீறுகின்றன.
  • கோதாவரி, கிருஷ்ணா வெள்ள மிகை நீரைத் தமிழ்நாட்டுக்குத் தருவோம் என ஆந்திரமோ, தெலங்கானாவோ இதுவரை கூறவில்லை.
  • அப்படியே அவர்கள் தருவதாக இருந்தாலும் வெள்ளக் காலத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெள்ள நீரையே வழங்க முடியும்.
  • அது வெறும் 50 டி.எம்.சி நீரே ஆகும். அதனால், நமக்குப் பயன் ஏதும் இருக்கப் போவதில்லை. தேசிய நதிநீர் இணைப்பால் தமிழ்நாட்டுக்குப் பெரும் பயன் இருப்பதாக எந்தப் புள்ளிவிவரமும் இல்லை.

நன்றி: தினமணி  (06 – 08 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories