TNPSC Thervupettagam

கோயில் நுழைவின் இறுதி லட்சியம்தான் என்ன?

May 27 , 2024 229 days 183 0
  • சமூகத்தில் காணப்படும் சாதி வேறுபாடுகளால் சோர்வுற்ற தலித் மக்கள், கடவுள்-மதம் தொடர்புடைய பண்பாட்டுத் திருவிழாக்களில் சமத்துவத்துக்கான புகலிடம் தேடிச் செல்கின்றனர். ஆனால், அங்கும் அவர்களுக்குப் பாகுபாடும் ஏமாற்றமும் வன்கொடுமைகளுமே மிஞ்சுகின்றன.
  • பெரும்பாலான கிராமங்களில் உள்ள கோயில்களில் தலித் மக்கள் உள்ளே நுழையவும் திருவிழாக்களில் பங்கேற்கவும் அனுமதி மறுக்கப்படுகிறது. பிற சாதியினருக்கு உரிமையுள்ள மண்டகப்படி, தேர்வடம் பிடிப்பது உள்ளிட்ட பிரதிநிதித்துவ உரிமைகள் தலித் மக்களுக்கு இன்றளவும் மறுக்கப்படுகின்றன.
  • பழனி முருகன் கோயிலில் பிற மதத்தினருக்கு அனுமதி இல்லை என்றொரு உயர் நீதிமன்றத் தீர்ப்பு அண்மையில் வந்தது. இந்துக்களுக்கும் பிற மதத்தினருக்கும் இடையே உள்ள இடைவெளி மதத்தின் பாற்பட்டது; அவர்களுக்கிடையே சமூக இடைவெளி என்பது இல்லை.
  • ஆனால் இந்துக்களுக்கும் தலித் மக்களுக்கும் இடையிலானது, மதம் அங்கீகரித்துள்ள சமூக இடைவெளியாகும். நவீனகாலச் சட்டத்தின் ஆட்சியால்கூட இச்சமூக இடைவெளியை இட்டு நிரப்ப முடியவில்லை. சமூகம் அங்கீகரிக்காததால் அரசமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ள சமூக, பண்பாட்டு உரிமைகளைக்கூட அனுபவிக்க முடியாத சூழலே தொடர்கிறது.

மதச் சிக்கல்:

  • தமிழ்நாட்டின் பல இடங்களில் தலித் மக்கள் கோயிலுக்குள் நுழைய முற்படும்போதெல்லாம் சாதி இந்துக்களால் அனுமதி மறுக்கப்பட்டு, அது உரிமைப் பிரச்சினையாக மாறி, தீர்வு காணப்பட முடியாததால் அக்கோயில்கள் பூட்டிவைக்கப்படுகின்றன.
  • இதனால் அங்கு இரு தரப்பினரிடையே பதற்றமே நீடிக்கிறது. ஆனால், இதற்கு மூலகாரணமாக இருக்கும் மதச் சிக்கல் குறித்து எவரும் விவாதிக்க முன்வருவதில்லை. தலித் மக்களும் இச்சிக்கலை உரிமை சார்ந்தும் உணர்வுவயப்பட்டுமே அணுகுகின்றனர்.
  • அரசு அலுவலகம், கல்வி நிலையம், பொதுப் பாதை, பூங்கா, பேருந்து, தொடர்வண்டி போன்றவற்றில் தலித் மக்களுக்குச் சம அனுபவ உரிமை இருப்பதுபோல, இந்துக் கோயில்களிலும் சம உரிமையை அனுபவிக்க முனையும்போது மட்டும் அது பிரச்சினைக்கு உரியதாகிறது.
  • ஏனெனில், சிவில் உரிமைகளில் பொது அனுபவத்தை ஏற்கும் இந்து சமூகம், கோயில், குடும்பம் ஆகிய அமைப்புக்குள் அவ்வாறே ஏற்பது தங்களைத் தாழ்த்திக்கொள்ள வழிவகுத்துவிடும் என உறுதியாக நம்புகிறது. காரணம் குடும்பம், கோயில் ஆகியவைதான் இந்து சமூகத்தின் சமூக அந்தஸ்தை நிலைநிறுத்துபவையாக இருக்கின்றன. இந்துக்கள் தங்களின் நம்பிக்கையைக் கைவிடத் தயாராக இல்லை என்பதால்தான் பாகுபாடுகள் தொடர்கின்றன.

அம்பேத்கர் முன்வைத்த கேள்வி:

  • இந்து சமூகத்தின் நம்பிக்கையை மாற்றுவதோ, அதற்காகக் காத்திருப்பதோ ஒடுக்கப்பட்ட மக்களின் வேலை அல்ல என்பதற்குப் பல வரலாற்று நிகழ்வுகளைச் சொல்ல முடியும். மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள காலாராம் கோயிலில் நுழைவதற்காக 15,000 மக்களைத் திரட்டி, 1930 மார்ச் 3 அன்று அம்பேத்கர் மாபெரும் போராட்டத்தை நடத்தினார். முதலும் இறுதியுமான அக்கோயில் நுழைவுப் போராட்டத்துக்குத் தலைமையேற்ற அம்பேத்கர், தர்க்கத்தின் அடிப்படையில் சில கேள்விகளை முன்னிறுத்தினார்:
  • “காலாராம் கோயிலில் நுழைவதால் மட்டுமே நம்முடைய உண்மையான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிடுமா? கோயில் நுழைவு என்பது இந்துக்களின் மனசாட்சிக்கு நாம் விடுக்கும் வேண்டுகோள்தான். சாதி இந்துக்கள் பல்லாண்டுகளாக நம்முடைய உரிமைகளைப் பறித்தார்கள்.
  • நம்மை நாய், பூனையைவிடக் கேவலமாக நடத்தினார்கள். தற்போது, நாம் எல்லாம் மனிதர்கள் என்கிற நிலையை அவர்கள் ஏற்கப் போகிறார்களா? இக்கோயில் நுழைவு மூலம் நம்மிடமிருந்து பறித்த மனித உரிமைகளைத் தர அவர்கள் தயாராக இருக்கிறார்களா?”
  • அந்தப் போராட்டத்துக்குப் பிறகு அக்கோயில் மூடப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று, அதன்மூலமும் தீர்வு எட்டப்படாததால் ஒரு சட்டவரைவு கொண்டுவரப்பட்டது. அதை அம்பேத்கர் ஆதரிக்க வேண்டும் என்று காந்தியார் வேண்டுகோள் விடுத்தார்; அம்பேத்கர் ஏற்க மறுத்தார். கோயில்களில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதை அச்சட்டவரைவு பாவகரமானதாகக் கருதவில்லை என்பதோடு, தீண்டாமையைச் சட்டவிரோதமானதாகவும் அது பிரகடனப்படுத்தவில்லை என்றார்.
  • பாவத்துக்கும் ஒழுக்கக்கேட்டுக்கும் பெரும்பான்மை மக்கள் அடிமைப்பட்டுவிட்டதாலோ, பெரும்பான்மை மக்கள் அவற்றைக் கடைப்பிடிப்பதாலோ அவை சகித்துக்கொள்ளக் கூடியதாகிவிடாது. தீண்டாமை பாவகரமானது, ஒழுக்கக்கேடான வழக்கம் எனில், அது பெரும்பான்மை மக்கள் ஏற்கத்தக்கதாக இருந்தாலும் எவ்விதத் தயக்கமும் இன்றி அழிக்கப்பட வேண்டும் என்பது, ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் கருத்து மட்டுமல்ல; நீதிமன்றங்களின் நிலைப்பாடும் இதுதான் என்று முழங்கிய அம்பேத்கர், இச்சட்டவரைவு அதைச் செய்யாததால் நிராகரித்தார்.

கோயில் நுழைவுதான் தீர்வா?

  • நகர்ப்புறங்களில் உள்ள கோயில்களில் தலித் மக்கள் உள்ளே செல்வதால் மட்டுமே அவர்கள் இந்து மதத்தின் ஓர் அங்கமாகக் கருதப்பட்டு, சாதிப் படிநிலையின் ஏறுவரிசையில் அவர்களுக்கு இடம் அளிக்கப்படுவதில்லை. அதாவது, கோயில் நுழைவு எந்த வகையிலும் அவர்களுடைய பிறவி இழிவை நீக்கிடவில்லை.
  • அதனால்தான், “இந்து சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக அந்தஸ்து உயர்வதுதான் கோயில் நுழைவின் இறுதி லட்சியமா? அல்லது இதுதான் முதல் படியா? இது முதல் படி எனில், இறுதி லட்சியம் என்ன? கோயில் நுழைவுதான் இறுதி லட்சியம் என்றால் ஒடுக்கப்பட்ட மக்கள் அதை ஒருபோதும் ஆதரிக்க முடியாது. அவர்கள் அதை நிராகரிப்பதோடு இந்து சமூகம் தங்களை நிராகரித்துவிட்டது என்று கருதி, தங்களுடைய எதிர்காலத்தைத் தாங்களே நிர்ணயிக்கும் உரிமை பெற்றுள்ளதாக எண்ணிக்கொள்வர்” என்றார் அம்பேத்கர்.
  • பல்வேறு சமூகத் தடைகள் இருந்தாலும் அரசமைப்புச் சட்டத்தால் சம உரிமையும் சுயமரியாதையும் பெற்ற தலித் மக்கள் உயர் கல்வி, வேலைவாய்ப்பு மூலம் தங்களை மேம்படுத்திக் கொள்வதோடு தற்சார்புடனும் சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பினார்.
  • கல்வியிலும் பொருளாதாரத்திலும் எவ்வளவுதான் முன்னேறியபோதும் சாதிப் படிநிலையில் உயர்வு கிட்டவில்லை என்பது தலித் மக்களுடைய ஆதங்கம். ஆனால், கோயில் நுழைவு கண்டிப்பாக அவர்களின் ஆதங்கத்தைத் தீர்க்காது. தலித் மக்கள் கோயிலுக்குள் நுழைவதன் மூலம் அவர்களுடைய உரிமை நிலைநாட்டப்படுவதாக வாதிடும் முற்போக்காளர்கள், அவ்வாறு செய்வதன் மூலம் அதற்கு நேர் எதிரான விளைவே ஏற்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளத் தவறுகின்றனர்.
  • தாழ்த்தப்பட்டவர் என்பதால் பொது இடங்களில் அனுமதி மறுக்கப்படும் ஒருவர், உரிமையைக் கோரிப்பெறும்போது சமமான மனிதனாகிறார். ஆனால் அவரே கோயிலில் அதே உரிமையைக் கோரிப் பெறும்போது, ‘தாழ்த்தப்பட்டவரும் கோயிலில் நுழைந்தார்’ என்று மனிதத்தன்மையை இழந்தவராகிறார்.
  • எனவே, தலித் மக்கள் இந்து சமூகத்தின் உள்ளார்ந்த - முழுமையான அங்கமாக மாறுவதற்கு உதட்டளவிலான உரைகளோ, கோயில் நுழைவுக்காக இந்துச் சட்டத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களோ போதாது. இந்து மதம் அவர்களுடைய மதமாக - சமூக சமத்துவத்தை ஏற்கும் மதமாக - மாற வேண்டும்.

தீர்வு யாரிடம்?

  • தலித் மக்கள் கோயிலுக்குள் நுழைவதில் இருக்கும் குழப்பங்களைப் போக்க, 94 ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர் எடுத்த நிலைப்பாடு, தலித் மக்களுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த சாதியச் சமூகத்துக்குமான வழிகாட்டும் நெறியாக இருக்க வேண்டும். சாதி இந்துக்கள் அகம்பாவத்தால் தங்களை நுழைய அனுமதிக்காதபோது, தங்களை அனுமதிக்கக் கோரி ஒடுக்கப்பட்ட மக்கள் ஏன் அவர்களிடம் பிச்சை கேட்க வேண்டும்?
  • ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்த அம்மக்கள் சாதி இந்துக்களிடம் சொல்ல விரும்புவது இதுதான்: “உங்கள் கோயிலைத் திறப்பதா வேண்டாமா என்கிற கேள்வியைப் பரிசீலிக்க வேண்டியது நீங்கள்தான். நாங்கள் போராட வேண்டிய அவசியம் இல்லை.
  • மனிதத்தன்மையை மதிக்காதது தவறான நடத்தை என்று நீங்கள் உணர்ந்தால் உங்கள் கோயில் கதவுகளைத் திறந்து, பண்பான மனிதர்களாக நடந்துகொள்ளுங்கள். ஒரு பண்பான மனிதனாக இருப்பதைவிட, ஓர் இந்துவாக இருக்கவே நீங்கள் விரும்பினால், உங்கள் கோயில்களின் கதவுகளை இறுக்கமாக மூடிக்கொள்ளுங்கள். நாங்கள் உள்ளே நுழையப் போவதில்லை.”

நன்றி: இந்து தமிழ் திசை (27 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories