TNPSC Thervupettagam

சட்டத்துக்கு அப்பாற்பட்ட தண்டனைகள் ஒழிக்கப்பட வேண்டும்!

July 18 , 2024 9 hrs 0 min 19 0
  • பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல் துறையிடம் சரணடைந்தவர்களில் ஒருவர், விசாரணைக்காக வெளியில் அழைத்துச் செல்லப்பட்டபோது மோதல் கொலையில் (என்கவுன்ட்டர்) சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது; ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான சந்தேகங்களையும் வலுவடைய வைத்துள்ளது.
  • கடந்த ஜூலை 5 அன்று சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங்கை கூலிப் படையினர் கொலைசெய்தனர். இதையடுத்துக் காவல் துறையிடம் 8 பேர் சரணடைந்தனர். மேலும், மூன்று பேரைக் காவல் துறை கைதுசெய்தது. இந்நிலையில், இவ்வழக்கில் சரணடைந்தவர்களில் ஒருவரான திருவேங்கடம் ஜூலை 14 அன்று தப்பிக்க முயன்றபோது ஏற்பட்ட மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் காவல் துறை அறிவித்தது.
  • ‘ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தைக் கைப்பற்றுவதற்காகக் காவல் துறை வாகனத்தில் திருவேங்கடம் அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்; போகும் வழியில் திருவேங்கடம் இயற்கை உபாதையைக் கழிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்; காவல் துறையினர் வாகனத்தை நிறுத்தியபோது தப்பிச் சென்றிருக்கிறார்; ஒரு தகரக் கொட்டகையில் புகுந்து, அங்கிருந்த துப்பாக்கியை எடுத்துக் காவல் துறையினரை நோக்கிச் சுட்டதை அடுத்து, காவல் துறையினர் அவரைச் சுட்டுக் கொல்ல நேர்ந்தது’ - காவல் துறையினர் அளித்திருக்கும் விளக்கம் இது.
  • ஆனால், ஆயுதங்களைக் கைப்பற்ற திருவேங்கடத்தை அதிகாலையில் அழைத்துச் சென்றது ஏன், அவருக்குக் கைவிலங்கு இடப்படவில்லையா, வாகனத்தை நிறுத்தியவுடன் காவல் துறையின் பிடியிலிருந்து திருவேங்கடம் தன்னை விடுவித்துக்கொண்டு தப்பி ஓடியது எப்படி எனப் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.
  • ஆம்ஸ்ட்ராங் கொலையில் திருவேங்கடம்தான் முதன்மைக் குற்றவாளி என்று காவல் துறை அடையாளப்படுத்தியிருக்கிறது. திருவேங்கடம் கொல்லப்பட்ட பிறகு, ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காணொளியை வெளியிட்டுள்ளது. ஆனால், சட்டத்துக்குப் புறம்பான வழியில் திருவேங்கடம் கொல்லப்பட்டிருப்பது தொடர்பான சந்தேகங்களை இது போக்கிவிடவில்லை.
  • இவ்வழக்கில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்று ஆம்ஸ்ட்ராங்கின் குடும்ப உறுப்பினர்களும் சில அரசியல் கட்சித் தலைவர்களும் சந்தேகம் எழுப்பினர்.
  • ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மைகளை மறைப்பதற்காக திருவேங்கடம் கொல்லப்பட்டிருக்கலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது உண்மையல்ல என்றால், அதை நிரூபிக்க வேண்டிய கடமை அரசுக்கும் காவல் துறைக்கும் உள்ளது.
  • பொதுவாக மோதல் கொலைகள், காவல் துறையினரின் உயிருக்கு ஆபத்து நேரும் சூழலில் தவிர்க்க முடியாமல் மேற்கொள்ளப்படுவதாகவே காவல் துறையினர் விளக்கம் அளிக்கின்றனர். ஆனாலும் தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட மோதல் கொலைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இவற்றைச் சாதாரணமாகக் கடந்துவிட முடியாது. மோதல் கொலைகளை அடுத்து நீதிமன்ற விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
  • ஆனால், இத்தகைய கொலைகள் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்கள், ‘மக்கள் சிவில் உரிமைக் கழகம் எதிர் மகாராஷ்டிர அரசு (2014)’ வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
  • இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 21, அனைத்துக் குடிமக்களுக்கும் வாழ்வதற்கான உரிமையை அளிக்கிறது. அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள இந்த உரிமையை மறுப்பதாகவே சட்டத்துக்கு அப்பாற்பட்ட கொலைகளைக் கருத வேண்டும். சட்டத்துக்கு அப்பாற்பட்ட எந்த வகையான தண்டனையும் நாகரிக சமூகத்தில் அறவே ஒழிக்கப்பட்டாக வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (18 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories