- நம் நாட்டின் உயர்கல்வித் துறை 56,000க்கும் மேற்பட்ட கல்லூரிகள் - பல்கலைக்கழகங்களை உள்ளடக்கிய உலகளவிலான பெரும் அமைப்பாகும். இது சீனாவைவிட 16 மடங்கு பெரியது. உலக ஆராய்ச்சி - மேம்பாட்டில் அமெரிக்காவும் சீனாவும் இணைந்து 50% பங்களிக்கும்போது, இந்தியா 2.7% பங்களிப்பை மட்டுமே வழங்குகிறது. ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு அறிவியல் ஆராய்ச்சியும் கண்டுபிடிப்புகளும் இன்றியமையாதவை. வளர்ந்த நாடுகளின் வெற்றிக்குக் காரணம், அவை ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் காட்டுவதுதான். நாம் எங்கு தவறுகிறோம்?
தவறிய தரக்கட்டுப்பாடு
- பொதுவாக, உற்பத்தி பெருகும்போது தரக்கட்டுப்பாடு உறுதிசெய்யப்பட வேண்டும். கல்வி நிறுவனங்கள் அதிகமாக இருப்பதில் நமக்குப் பெருமைதான். ஆனால், வளர்ச்சியும் தரமும் இணைபிரியாமல் பயணித்தால்தான், நிலையான வளர்ச்சி உறுதியாகும். ஆனால், நம் நாட்டில் அப்படிப்பட்ட வளர்ச்சியை உறுதிசெய்ய விதை இன்னும் விதைக்கப்படவில்லை. ஒருவேளை, வித்திடப்பட்டிருக்கலாம்... முளைக்கவில்லை.
- தமிழகத்தில் 2019ஆம் ஆண்டு 126 பொறியியல் கல்லூரிகள், 225 முதுநிலைப் படிப்புகள் மூடப்பட்டன. நடப்புக் கல்வியாண்டில் 18 கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரம் தொடர்வதற்கு விண்ணப்பிக்கவில்லை, 37 கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட சேரவில்லை; 208 கல்லூரிகளில் 10%க்கும் கீழான மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. தரக்கட்டுப்பாடு முறையாகச் செயல்படாததால் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் வியாபார நிலையங்களாக மாறத்தொடங்கின. மாணவர்கள் விழித்துக்கொண்டார்கள்.
தரமான ஆசிரியர்கள் அவசியம்
- தரமான கல்விக்குச் சிறப்பான ஆசிரியர்கள்தான் அடித்தளம். நம் நாட்டில் கடந்த 20 வருடங்களாக உயர்கல்வித் துறையில் ஆசிரியர்களின் தேவை அதிகரித்துக்கொண்டே வந்திருக்கிறது. தற்போது அது விஸ்வரூபம் எடுத்து, 13 லட்சம் என்கிற அளவுக்கு உயர்ந்துள்ளது. காலி இடங்களைப் பூர்த்திசெய்ய பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளில் இரண்டு சலுகைகள் அறிவிக்கப்பட்டன. முதலில், முனைவர் பட்டம் பெற வெளியீடுகள் (Publications) தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது. பிறகு, ஆசிரியர் பணியில் சேர முனைவர் பட்டம் அவசியமில்லை என்ற அறிவிப்பு வெளியானது.
- ஆசிரியர்களாக அமர்ந்த பிறகு, அவர்கள் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட ஊக்கப்படுத்த வேண்டும். மாறாக, மேற்சொன்ன சலுகைகள் ஆராய்ச்சியில் ஈடுபடும் ஆர்வத்தைக் குறைக்கும். ஒரு சிலர், அந்த மூன்றெழுத்துப் பட்டத்துக்காகக் குறைந்தபட்ச சம்பிரதாயங்களைப் பூர்த்திசெய்து பட்டம் பெறுவார்கள். முனைவர் பட்டம் பெறுவது என்பது ஆராய்ச்சி வாழ்க்கையின் தொடக்கம். பலர் அதை முடிவு என்று கருதுகிறார்கள். யுஜிசி-யின் இந்த இரட்டைச் சலுகை ஒரு புதிர்.
- பணம் செலவழித்து ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடும் நெறிமுறையற்ற வழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தச் சலுகை என்று யுஜிசி-யின் தலைவர் ஜெகதீஷ் குமார் கூறுகிறார். இது ஆரோக்கியமான சிந்தனை என்றாலும், நமக்கு ஏற்றதா என்பதுதான் கேள்வி. நம் தேசத்தில் தரம், உண்மை, நேர்மை, உன்னதம், உழைப்பு போன்றவற்றுக்குப் பெரிய மரியாதையோ அங்கீகாரமோ கிடையாது. இப்படிப்பட்ட சலுகைகள் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
சுமைகளைக் களைய வேண்டும்
- முனைவர் பட்டம் பெறாத ஆசிரியர்கள் கல்வி நிலையத்துக்கு ஒரு சுமையாகிறார்கள். பட்டம் பெற்று ஆராய்ச்சியில் தீவிரம் காட்டும் ஆசிரியர்கள் புதையல் ஆகிறார்கள். வேறு சிலர், பதவி உயர்வுக்காக மட்டும் பட்டம் தேடுவார்கள். இம்மூன்று வகையான ஆசிரியர்களையும் உரிய முறையில் கையாளும் நுட்பத்தை வளர்த்தெடுக்க வேண்டும்.
- இங்குதான் நாம் தொடர்ந்து தோற்றுவருகிறோம். சுமைகளையும் சொத்துக்களையும் அடையாளம் காணும் பாங்கு நம்மிடம் கிடையாது. அவரவர் தகுதிகளைச் சரியாக அளவிட்டு, உரிய அங்கீகாரங்களையும் ஊக்கங்களையும் வழங்கத் தீர்க்கமான சட்டம் வேண்டும். சட்டத்தை முறையாகச் செயல்படுத்தும் திராணியையும் வளர்த்தெடுக்க வேண்டும். கல்வியின் தரம் செங்குத்தாக உயர இது வழிவகுக்கும்.
நல்ல நடைமுறைகள்
- உலகளவில் ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் தனித்துவமான நடைமுறைகள் இருக்கும். அவற்றை அடையாளம் கண்டு, நமது கல்வி நிலையங்களில் புகுத்த வேண்டும். எனது கல்விப் பணியில் பொறியியல் பல்கலைக்கழகங்களின் பல முனைவர் பட்ட ஆய்வறிக்கைகளை மதிப்பீடு செய்துள்ளேன். உத்தரவுக் கடிதத்துடன் மதிப்பீடு செய்வதற்கான வழிமுறைகள் இணைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் அவை சம்பிரதாயமான வழிகாட்டுதலாக இருக்கும்.
- அந்த விதத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மாறுபட்டது. ஆய்வறிக்கை மதிப்பீடு செய்யும் முறை எட்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வகையிலும் பல உள்பிரிவுகளுடன் மதிப்பீடு செய்வதற்கான, தெளிவான நேர்த்தியான வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த விதிமுறைகளைத் திருப்திப்படுத்தும் ஆய்வறிக்கை சர்வதேசத் தரத்தில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கிட்டத்தட்ட நூறாண்டு பழமையான அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் சாயல் ஏன் மற்ற பல்கலைக்கழகங்களில் விழவில்லை?
பலனற்ற நுழைவுத் தேர்வு
- நம் நாட்டில் கடும் போட்டி இருக்கின்ற ஒரே காரணத்துக்காக உயர்கல்விக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. நுழைவுத்தேர்வு கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு எவ்விதத்திலும் உதவாது. பல மேலை நாடுகளில் உயர்கல்வியில் அனுமதி எளிதில் கிடைத்துவிடும். ஆனால், பட்டப்படிப்பில் தேர்வுகள் உயர்தரமாக இருக்கும். முதல் பருவத் தேர்வுகள் பலருக்குச் சிம்ம சொப்பனமாகிவிடும்.
- அவரவர் தகுதியைத் தாமே அளவீடு செய்வதுதானே சரி. அவர்கள் தங்கள் தகுதிக்கு ஏற்ற பட்டப்படிப்பை மாற்றிக்கொள்வார்கள். இது ஒரு ஆரோக்கியமான அணுகுமுறை. ஐந்தாம் வகுப்பிலிருந்து நுழைவுத்தேர்வு வழியே பயின்று ஐஐடியில் சேரும் மாணவர்கள் இயந்திர மனிதர்களாக மாறிவிடுகிறார்கள். மனித இனத்துக்கும் கல்விக்கும் இதைவிட மோசமான சேதத்தை வேறுவழியில் ஏற்படுத்திவிட முடியாது.
- காலத்தை வெல்கின்ற சட்டங்களும் உறுதியான செயல் திட்டமும் அரணாக அமைந்து, சமுதாய வளர்ச்சியை உறுதிப்படுத்துகின்றன. உலக அளவிலான உன்னத நடைமுறைகளைத் திறந்த மனதுடன் தெரிவுசெய்து, அவற்றை நம் கொள்கைகளாக ஏற்றுச் செயல்படுத்துவோம். உயர்வான கல்வியும் உலகளாவிய ஆராய்ச்சியும் நம் தேசத்தில் நிகழ வழிசெய்வோம்.
நன்றி: இந்து தமிழ் திசை (10 - 11 – 2023)